Tuesday 2 March 2021

மருத்துவர் ஈரோடு வெ.ஜீவானந்தம்

 சிறந்த மொழிபெயர்ப்பாளரும் தமிழக பசுமை இயக்கத்தின் தலைவருமான மருத்துவர் ஈரோடு வெ.ஜீவானந்தம் அய்யா அவர்கள் இப்போது நெடும்பயணமொன்றில்.....





28/01/2018 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் கொடிக்கால் மாமா அவர்கள் குதாயே கித்மத்கார் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில் மருத்துவர் அய்யா அவர்கள் உரையாற்றிய பிறகு எனது உரைக்கான சமயம். நான் உரையாற்றி அமர்ந்த பிறகு என்னிடம் என் உரை தொடர்பான சில விளக்கங்களை மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு கருத்தரங்கின் இடைவேளைகளில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். இந்த கருத்தரங்கில்தான் மருத்துவர் அய்யா அவர்களை நான் முதன் முதலாக சந்தித்தேன்.


அதன்பிறகு ஓரிரு தடவை அய்யாவுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். திண்டுக்கல்லின் காந்திகிராம பல்கலைக்கழகத்தை பற்றி விசாரிக்கும்போது " இதுவும் பத்தோடு பதினொன்றுதான். கேரளத்தில்தான் நல்ல காந்திய பல்கலைக்கழகம் இருக்கின்றது" என சோர்ந்த குரலில் சொன்னார். இந்த மூன்று வருட காலத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் மூன்று அல்லது நான்கு தடவைகள் மட்டுமே வாட்சப் நிலைத்தகவல் போட்டிருக்கின்றார். அதுவும் தட்டச்செல்லாம் செய்ய மாட்டார். ஒரு தாளில் நான் நினைத்ததை கைப்பட எழுதி அதை அப்படியே படமெடுத்து போடுவார்.


"பறவைக்கும் கூடுண்டு அனைவருக்கும் வீடு -- லாரி பேக்கரின் கனவு" என்ற எலிசபத் பேக்கரின் ஆங்கில நூலானது மருத்துவர் அய்யா அவர்களின் மொழியாக்கத்தில் தடாகம் பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூலின் முன்னுரையாக கௌதம் பாட்டியா அவர்களின் ஆங்கில நூலிலிருந்து நான் தமிழாக்கிய பகுதியும் இடம்பெற்றிருந்தது. நம் கால பெரு மனிதனொருவரின் பணிகளின் ஓர் ஓர தூளியாய் இருக்க முடிந்திருக்கின்றது.


புதிய தடங்களின் மீது மட்டுமே கண் பதித்து தான் நிறைவேற்றிய பணிகளை முதுகுக்கு பின்னே விட்டு விட்டு ஓசையிலி மென்பாத எட்டுக்களாக கடந்து செல்வதென்பது மருத்துவர் அய்யா அவர்களைப்போல கொஞ்சம் பேருக்குத்தான் சாத்தியம்.


மருத்துவர் அய்யா அவர்கள் பசுமை , மருத்துவ துறைகள் சார்ந்து மட்டும் இயங்கியவரல்ல. முஸ்லிம் இஸ்லாம் தொடர்பான ஆழ்ந்த கரிசனமும் அக்கறையும் கொண்டவர். ஜனவரி2020 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இன் சார்பாக ' இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும் ' நூலை மொழியாக்கம் செய்திருக்கின்றார் மருத்துவர் அய்யா.


தன் வாழ்வின் பக்கங்களை மிச்சம் மீதி வைக்காமல் நிரப்பி விட்ட துணிவில் விடைபெற்றிருக்கின்றார் .

தொடர்புடைய இணைப்பு:

No comments:

Post a Comment