Wednesday 10 March 2021

மருமகன் மூஸா -- வஃபாத்


 துபையில் பணிபுரிந்து வந்த என் மனைவி வழி மருமகன் மூஸா நெய்னா ஒருவார உடல் நலக்குறைவிற்குப்பிறகு இன்றிரவு 08:15 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டான்.


அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளுகின்றோம்

அமைதி கூடிய கடும் உழைப்பாளி. பெற்றோர் வழி மனைவி வழி குடும்பத்தினர் மீது ஆழ்ந்த ஈடுபாடும் கரிசனையும் கொண்டவன். என் மீதும் என் பிள்ளைகள் மீதும் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவன். 2019 ஆண்டின் இறுதியில் நான் மீள இயலாமல் தவித்த ஒரு சிக்கலிலிருந்து என்னை விடுவித்தவன். துயருறுபவர் யாரானாலும் கேட்காமலேயே உதவுபவன்.

திருமணமாகி பதினேழு வருட வாழ்க்கையில் கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில்தான் ஆறுமாதங்களுக்கும் மேலாக ஊரில் குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்பு அவனுக்கு அமைந்தது. வடிவும் மதிக்கூர்மையுமான ஒரு பெண் ஒரு ஆண் மக்கள். மகளுக்கு வீட்டைக் கட்டி புதுமனை புகுவிழாவை எளிமையாக நடத்தினான். தன் வீட்டார் மீது அவன் மழையாகி பொழிந்த அன்பைக்கண்டு நாங்கள் நிறைந்திருந்த சமயத்தில் நுரையீரலில் ஏற்பட்ட அழற்சி இறுதியில் அவனைக் கொண்டே போய் விட்டது.

தனது மருத்துவமனை படுக்கையிலிருந்து அவன் மூச்சு திணறலுக்கிடையே அழுதுக் கொண்டே வட்ஸப்பில் பேசியிருந்தான். போன வியாழக்கிழமைதான் அவனது பிறந்த நாள். அதற்காக அவன் அனுப்பிய செய்திதான் அவனது கடைசிச் செய்தி.

உற்றாருக்கு சிறிய உடல் நலிவென்றாலும் துடித்து போகும் அவனது உடல் நலன் குறித்து எவ்வளவோ அறிவுறுத்தியும் அதை கணக்கிலெடுக்கவேயில்லை. இறுதியில் இறப்பு அவனை தன் கணக்கில் சேர்த்துக் கொண்டது.

அவனாகவே இருக்கும் அவனது மகனின் முகத்தைப் பார்க்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

No comments:

Post a Comment