Thursday 28 January 2021

நாகூர் சீனித் தொவை

 

 


அன்றைய வருடங்களில் நான் வாழ்ந்திருந்த களப்பணி வாழ்க்கை என்பது  காற்றைப்போல  நிலையற்றது. எந்த ஊருக்கு சென்றாலும் அது கொடைக்கானலாக இருந்தாலும் சரி உதகமண்டலமாக இருந்தாலும் சரி கால் தரிபடுவதில்லை.  உடனே அடுத்த ஊர் அடுத்த ஆள் என கரை காண விரும்பாத பயணம்.

 நிலம், நீர், அருவி,,மலை,காடு, வாழ்க்கை முறை என தென்படும் அரியன எதையும் கண்களோடு மட்டுமே நிறுத்திக் கொள்வேன. ஆட்களை சந்தித்தல் என்பதை மட்டுமே ஒற்றை இலக்காக்கி மூளைக்குள் சுமந்தலைந்த நாட்கள்.

 இன்று அந்த அவசரங்கள் என்னை விட்டு  உதிர்ந்து விட்டன. ஒரு தேனீயைப்போல  மலர்களுக்குள் இறங்கும் அவகாசம் கிடைத்துள்ளது.

 பழைய வாழ்க்கையில் நான் தவற விட்ட பட்டினங்களில் நாகூரும் ஒன்று. கால்பாவாத  பயணம் ஒரு பக்கமென்றால் அன்றைய அதீத தூய்மைவாத சாய்மானத்தினாலும் நான் நாஹூரை அதன் வண்ணங்களை அதன் மனிதர்களை தவற விட்டிருக்கின்றேன். நாகூரைப்பற்றிய  பின்னாளைய  வாசிப்புக்களில் அறிந்து கொண்ட விஷயங்கள் நாகூர் மீதான விருப்பத்தை வளர்த்தெடுத்தது.

 கேரள மாநிலம் கோழிக்கோடு, குற்றிச்சிறவிற்கு செல்லும்போது  அங்குள்ள எண்ணூறு வருடங்கள் பழமையான  முச்சந்தி பள்ளிவாசலில் நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்கள் கல்வத்தில் ( தனிமை தியானம் ) இருந்தார்கள் என்ற செய்தி கிடைத்தது.விடாது ஒளிரும் நிலவைப்போல நாடலைவு வாழ்க்கையின்  எல்லாவித இடர்களையும் தாண்டி  கல்வத்தை சுமந்து நின்ற அதி மனிதனின் மேல் மனம் விழுந்தது.

 நாகூரின் மீதான எனது விருப்பத்திற்கான பல காரணங்களில் தலையாயது மூன்று.  ஒன்று  ஷாஹுல் ஹமீத் நாயகம் என்கின்ற சுடர்மிகு ஆளுமை . பிறிதொன்று எனதூருக்கும் நாகூருக்குமான இரத்த உறவு. மூன்றாவது நாஹூரின் களஞ்சியங்களில் ஒருவரான பாடலாசிரியரும் கவிஞருமான காதர் ஒலி காக்கா.

 ஷாஹூல் ஹமீது நாயகமவர்கள் உத்திரப்பிரதேச மாநிலம் மாணிக்கப்பூரில் பிறந்து  தமிழக கேரள இஸ்லாமிய கேந்திரங்களுக்கும், கடல் கடந்தும் சென்று இறைப்பணியாற்றி நாகூரில் வந்து நிறைந்துள்ளனர்.

 அவர்கள் தமிழகத்தில் பணி செய்த சமகாலத்தில்தான் கோவா தொடங்கி இந்தோனேஷியா மலாக்கா நீரிணை வரை போர்த்துக்கீசியரின் காலனியாதிக்க வதையும்  நடந்திருக்கின்றது.

 போர்த்துக்கீசியருக்கெதிராக பொருதிய சாமுத்திரி மன்னனின் நாயர்களும் முஸ்லிம்களும் அடங்கிய கூட்டுப்படையின் தளகர்த்தர்கள் குஞ்ஞாலி  மரைக்காயர்களாவர்.  அரிசி வணிகர்களும் கடலோடிகளுமான  குஞ்ஞாலி மரைக்காயர்களின் தாயகம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியான சோழ மண்டல கடற்கரை அல்லது ஷீத் ரஸ்தா (சேது வீதி ) பகுதிதான் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக நாகூர் அல்லது காயல்பட்டினமாகத்தான் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 சாமுத்திரி அரசையும் கடற் போராளிகளான குஞ்ஞாலிகளையும்  ஒருங்கிணைத்ததில்  இறை நேசர் ஜைனுத்தீன் மக்தூம் அவர்களுக்கு இருந்த பங்கைப்போலவே இறை நேசர் ஷாஹுல்ஹமீத் நாயகம் அவர்களுக்கும் பங்கிருந்ததாக  செவி வழிச்செய்திகள் நிலவுகின்றன.

 இந்த செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்புகள் கூடுதல். காரணம் இறை நேசர் ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் இந்தப்போர்களும் நடைபெற்றிருக்கின்றன. நாகூரிலும் போர்த்துக்கீசியர்கள் தங்களுடைய அழிச்சாட்டியத்தை நடத்தியுள்ளனர். போர்த்துக்கீசியருக்கெதிரான போர் கேந்திரங்களாக விளங்கிய  பொன்னானி, குற்றிச்சிறா பகுதிகளில் அன்னார் வருகை புரிந்துள்ளனர். போர்த்துக்கீசிய காலனியாதிக்கத்துக்கெதிரான இந்த போரை வடிவமைத்தவர்களில் ஒருவரான  அஷ்ஷேஹ் ஜைனுத்தீன் மஹ்தூம் இரண்டாமவரை நாஹூர்  நாயகமவர்கள் சந்தித்துள்ளனர். குஞ்ஞாலி மரைக்காயரின் பெயரால் நாகூரில் ஒரு தெருவும் அமைந்துள்ளது.

 பதினாறாம் நூற்றாண்டில் இலட்சத்தீவிலுள்ள  அமினித் தீவில் போர்த்துக்கீசியர் படையெடுத்து அக்கிரமம் புரிந்தனர். அந்த சமயத்தில் நாகூர் ஷாஹுல்ஹமீத் நாயகம் அவர்கள் அந்த தீவு மக்களுக்கு பின்வருமாறு அறிவுறுத்தினார்களாம்:

                                    (அமினித்தீவில் நடக்கும் நாஹூர் கந்தூரி)

 “ வலிமை பொருந்திய போர்த்துக்கீசியர்களோடு நாம் பொருதினால் ஊரே அழிந்து விடும். எனவே அவர்களை நட்பாக்கி எதிர் கொள்ளுங்கள் “

 இந்த அறிவுறுத்தலின்பேரில் அமினித்தீவு  பகுதி மக்கள் போர்த்துக்கீசியருக்கு தடபுடலான விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதை உண்ட ஒரு போர்த்துக்கீசிய பரங்கி கூட மிஞ்சவில்லை. விருந்தில் பாம்பின் நஞ்சு கலக்கப்பட்டிருந்தது.

 மேற்கண்ட இந்த நிகழ்வை தனது உரையொன்றில் நினைவு கூர்ந்த மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் இதற்கான நினைவுச்சின்னம் அமினித் தீவில் இருப்பதாகவும் தானே அதை நேரில் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 நினைவிடம்  தொடர்பாக இலட்சத்தீவுக்காரரும் இயற்கை அறிவியலாளருமான  எண்பத்தியிரண்டு வயது பெரியவர் பத்மசிறீ அலீ மனிக்ஃபான் அவர்களையும் இலட்சத்தீவு அரசு நிர்வாகத்தினரையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அதை உறுதிப்படுத்தினர். 

 


“காழி (நீதிபதி) அபூபக்ர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கி.பி  1549/ ஹிஜ்ரி 966 ஆம் ஆண்டில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்தனர்.

 இங்கு  கிடைக்கும் உலகத்தரம் வாய்ந்த கயிற்றினால் ஈர்க்கப்பட்ட போர்த்துக்கீசியர் கி.பி.1530 இல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெறும் கல்லையும் கம்பையும் கொண்ட எதிர்ப்பாளர்களிடமிருந்து இலட்சத்தீவை கைப்பற்றினர்.

 தங்களது ஆட்சிக்காலத்தில் அமினித்தீவில் கோட்டையொன்றைக் கட்டிய போர்த்துக்கீசியர் அங்கு படையினரை நிறுத்தினர். அன்றைய காலகட்டத்தில்  அவர்களது  ஆட்சி  குறிப்பிட்டு சொல்லும்படியான கொடூரத்தினாலாகியிருந்தது.

 இந்த கொடூரத்திலிருந்து தங்களை  விடுவித்துக் கொள்வதற்காக சிறக்கல் அரச தூதுவரின் ஆலோசனையின் பேரில் தீவுவாசிகள் விருந்தில் பாம்பு நஞ்சு கலந்தனர்.

 இந்த நஞ்சு அருகிலிருந்த பள்ளிவாசலில் தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்த பள்ளிவாசலை பாம்பு பள்ளிவாசல் என அழைத்தனர். மொத்த போர்த்துக்கீசிய படையினரும் அழிக்கப்பட்டனர்.

 இந்த செயலுக்கு வழிகாட்டியவர்கள் நன்னெறியாளர் காழி அபூபக்ரும், ஓமனப்பூ என்ற பெண்ணுமாவர். ( பக்கத்து தீவான ) கத்மத்திலிருந்து தீவில் வந்திறங்கிய  போர்த்துக்கீசியர் மேற்கொண்ட குருதி தோய்ந்த பழிவாங்கலில் நானூறு உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களில் காழி அவர்களும் அடக்கம். இந்த எதிர்ப்பின் விளைவாக போர்த்துக்கீசியர் ஒருபோதும் இலட்சத்தீவை  காலனியாக்க முயலவில்லை. “

 (பாம்பு பள்ளிவாசல், அமினித்தீவு)

தோப்பில் அவர்களின் கூற்றும்  நினைவுச்சின்னக் குறிப்புக்களும் வேறுபடுவதுபோலத் தோன்றினாலும் இத்திசையில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது  முரண்கள் நீங்கும் வகையில் புதிய வெளிச்சங்கள் கிடைக்கக் கூடும்.

நாகூரில் நான் கால் வைத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. பழைய தோழர்களை சந்திக்கும் பெரு விருப்பமும் கூடி இந்த தகவல்கள் அனைத்தும் என் தலைக்குள் அழுத்திக் கொண்டிருந்தன.எல்லா பருவங்களிலும் எல்லாக்கனிகளும் காய்த்துக் கனிந்து விடுவதில்லை.  இளம்  நண்பரும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான அகமது ரிழ்வான் தனது  திருமணத்திற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார்.வாயில் திறந்தது.

 திருச்செந்தூரிலிருந்து இரண்டு அரசு பேருந்துகள் வேளாங்கண்ணிக்கு  இயக்கப்படுகின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த கிழக்கு கடற்கரைச்சாலை இல்லை இப்போது,  சீரான சாலைகள். சொந்த ஊர்தியில் சென்றால் ஏழு ஏழரை மணி நேர  பயணத்தில் பெரிய அலுப்பின்றி  நாகூர் போய் சேர்ந்து விடலாம். அரசு பேருந்தில் சென்றால் பத்து மணி நேர ஓட்டம்.  நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையே அரை மணி நேர தொலைவுதான்.  இரவு உறக்க பங்கத்தை  எண்ணி  திருச்செந்தூர்- சென்னை தொடர்வண்டியில் தஞ்சாவூர் வரை போக வர பதிவு பண்ணி விட்டேன்.

 பெருந்தொற்றுக்காலத்தில்  சரியாக ஒரு வருடங்கழித்து தொடர்வண்டிப்பயணம்.  எனது  இருபது வயதில் நான் மேற்கொண்ட முதல் தொடர்வண்டி பயண வாழ்க்கையிலிருந்து  இதுவரை இப்படியொரு இடைவெளி வந்ததில்லை.

 தஞ்சாவூர் வந்திறங்கும்போது இரவு மணி  மூன்றே முக்கால். மென் தூறல். நிலையத்திற்கு வெளியே முக்கால் இருளுக்குள் கிடந்தது வெளி. கொட்டாரத்திடலின் விரிவு.அங்குள்ள ஆவின் அருந்தகத்தில் “ கூந்தல் கருப்பு  ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோசாப்பூ “  என டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும்  ஆளுக்கொன்றாக இழுத்துக் கொண்டிருந்தனர். காஃபிக்குப்பிறகு பேருந்தைப்பற்றி  விசாரித்தேன். நாகூருக்கு நேரடி பேருந்து கிடையாது. நாகப்பட்டினம் போய்த்தான் மாற வேண்டும் என்றனர்.

 கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு தேநீர்க்கடைக்காரரிடம் பேருந்து நிறுத்தம் பற்றிக் கேட்டபோது    நான் அங்கு நின்றிருந்த அரை மணி நேரத்தில் அவர்  மூன்று வகையான வழிகள் சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு குடும்பம் வந்தது. தேநீர் வாங்கினர். இப்போது மெதுவாக சென்று கடைக்காரரிடம் வழி கேட்டேன். ஒரு வகையாக சரியான இடத்தைக்காட்டினார்.சங்காநடை  நடந்து அங்கு போய் சேர்ந்தால் அது  ரயில் நிலையத்தின் வெளி முகப்பு. இருட்டில் மலை கூட விளங்காது.  வீண் அலைச்சல்.

 சிறிது நேரத்தில் அப்பா மனைவி பிள்ளை என மூவரணி  வந்து சேர்ந்தனர். நான் வந்த தொடர்வண்டியில் வந்தவர்கள். திரு நெல்வேலிக்காரர்கள். தமிழர்கள்தான். ஆனால் தங்களுக்குள் இந்தியில் பேசிக் கொண்டனர். புதியதாக மும்பை கிம்பையில் குடியேறியிருப்பார்களாக இருக்கும்.  தோண்டி விசாரிக்கும் மன நிலையில்லை.  அலைக்கழிப்பும் காத்திருப்பும்  சோர்வில் ஆழ்த்தியிருந்தது.

 பத்து நிமிட காத்திருப்புக்குப்பிறகு அள்ளிப்போட்டுக் கொண்டு  அதிரும் பாடல்களுடன்  தனியார் பேருந்து வந்தது. மன்னார்குடி வரை கிட்டதட்ட ஒரு மணி நேரம் நின்றபடி பயணம். அமர்ந்தபடியும் நின்றபடியும் உறக்க வெறியில்  பலருக்கு  முன்னும் பின்னும் வலது இடதுமாக  வெட்டியிழுத்து தலையாட்டம்.  இரண்டே முக்கால் மணி நேர பயணத்திற்குப்பிறகு கொட்டும் மழையில் நாகப்பட்டினம் வந்தது. பேருந்து நிலையத்தினருகிலுள்ள திடலில் பாஜக தோரணங்களும் மோதியின் படமுமாக நனைந்து தனியாக கிடந்தன.

 நண்பர்கள் யூசூஃப் அலீ, இஸ்மாயீல் , அகமது கபீர் ரிஃபாயி ஆகியோர்  சென்னையிலிருந்து  நாகூரை  வந்தடைந்திருந்தனர்.

 எல்லாவற்றையும் மறக்கக் கோரும் நவீனத்தின் ஆட்சியிலும் நாகூர் தன் பழமையை பிடித்து வைத்திருந்தது.  சாய்ப்பிறக்கிய திண்ணையுள்ள வீடுகளின் கூரைகளில் மேயப்பட்டிருந்த  கரும் பழுப்பு ஓடுகள்  மலையைப்போல தரை நோக்கி சரிந்து கொண்டிருந்தன.  நீர் ஒழுகி பழுத்து போன  பாறை முதுகுகள். ஒரு காலத்தில் கடல் வாணிபம் உச்சத்தில் இருந்த ஊர்.  மலேஷிய,மியான்மர் மரத்தடிகளுக்கு பஞ்சமில்லை.  நிறைய வீடுகளில் மரம் தாராளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.



நாகூர் மனோராக்களின் சுற்றுப்புறத்தில் அதனை விட உயரமான கட்டிடங்கள் எதுவும் எழுப்ப வேண்டாம் என எழுதப்படாத சட்டமொன்று இருக்கிறது.. எப்படியோ தன் மணத்தையும் நிறத்தையும் இழக்காமல்  நாகூர் இருப்பது ஆறுதல்.

 


 கான்கிரீட் கட்டிடங்கள், விரைவு வழிச்சாலைகள், காட்சி & சமூக ஊடகங்களின் வருகைக்குப்பிறகு  ஒவ்வொரு ஊரினதும் பேச்சு வழக்கு, உடையழகு,  சிறப்பு உணவுகள்  என எல்லா  தனித்தன்மைகளும் அழிந்து ஒற்றையாக திரள்கின்றன.  நாஹுரையும் இந்த ஒற்றையடி வெள்ளம் அடித்துக் கொண்டு போகாமலிருக்க வேண்டும்.

 நாகூர் தர்காவிற்கருகில்தான் நாங்கள் தங்கியிருந்த விடுதி இருந்தது.   நானூற்றி அறுபத்தி நான்காம் ஆம் ஆண்டு கந்தூரி விழாவிற்கான கொடிமரம் ( மனோராக்காளில் பாய்மரம் ) ஏற்றுவதற்கான முன் பணிகள் நடந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒடுங்கிய மலைப்பாம்பைப்போல மனோராவிற்கும் தரைக்குமாக வடங்கள் கிடந்தன.

 மழை ஈரத்துடன்  சேர்ந்து கொண்ட சாக்கடையும்  அழுக்கும் குப்பைகளும்  வீரியமாகியிருந்தன.  மாற்றமில்லாத அதே குறுகலான சந்துகள்.  இந்தியாவின் புனித, ஆன்மீக, வரலாற்றுத்தலங்கள் அனைத்திற்கும் நாற்றமும் தூய்மைக்கேடும் பொது விதி போல.வந்து போகும் மக்களின் பொறுப்பற்ற தன்மை, அரசு, நிர்வாகத்தின் அசமந்தம்  இவை எல்லாம் சேர்ந்து துப்புரவுக்கேட்டை இறுகலாக்கியிருக்கின்றன.

 மக்கள் கூடுதல் வந்து போகும் இடமென்பதால் அரசும் ஏராளமான காணிக்கை வருமானத்தைக் கொண்ட தர்கா நிர்வாகமும் கொஞ்சம் முயன்றால் போதும். தூய்மை மீட்கப்படும்.

 தர்கா வளாகத்திலும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். முப்பதாண்டிற்கு முந்திய எனது நாஹூர் வருகையின் போது  கைகளிலும் கால்களிலுமாக ஆட்கள் வழிந்து நிறைவதைப் பார்த்திருக்கின்றேன். நோயச்ச காரணமாக இருக்கலாம்.

 காலை பதினோரு மணிக்கு கவிஞர் காதர் வலீ நானா நேரம் தந்திருந்தார். அவரது வீட்டிற்கு  ஏற்கனவே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின்  எஸ்.என்.சிக்கந்தர் அவர்கள் தன் உள்ளூர் சகாக்களுடன் வந்திருந்தார். சிக்கந்தர் அவர்களை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தெரியும். அவரது பொது வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளில் முதன்முறையாக சந்தித்தேன். கருந்தாடி இளைஞராக இருந்தவரில் காலம் தன் வரிகளை எழுதிச் சென்றிருக்கிறது.



கவிஞரின் வீட்டுக்கு போன சிறிது நேரத்தில் உவைசிம் ஷாஹ் உமரீயும் வந்து இணைந்து கொண்டனர்.

 நாகூரின் நெடிய கவி மரபின்  தொடர்ச்சி கவிஞர் காதர் வலீ நாநா. பிரபலமான நிறைய இஸ்லாமிய பாடல்களின் வரிகள் இவருக்குரியவை.

 நாகூர் ஈ.எம்.ஹனீஃபா அவர்களின் வெளிவராத பாடல்கள் உள்ளடக்கிய அரிய இசைக்களஞ்சியம்  காதர் வலீ அவர்களிடம் உள்ளது.. எனது பால்ய கால நினைவுகளை அள்ளிக் கொண்டு வரும்  ‘ எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர்” என்ற பாடலை நான் முப்பது வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன். அத்தேடல் முடிவடைந்தது கவிஞர் காதர் வலீ அவர்களிடம்தான். இந்தப்பாடலை பாடியவர் மறைந்த  வடகரை(தஞ்சை)  ஏ.எம்.தாலிப் அவர்கள்.  ஏ.எம்.தாலிப் அவர்களின் சில பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசையமைத்திருக்கிறார். சேலத்தை வேராகக் கொண்ட இலங்கை வானொலி புகழ் காலஞ்சென்ற முகியித்தீன் பெய்க்கின் பாடல்களும் இவரது சேகரத்தில் உண்டு.

 இந்த இசைநிதி   வெளியில் எங்கும் கிடைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவை அனைத்தையும் காதர் வலீ அவர்கள் வலையொளியில் பதிவேற்றியுள்ளார்.GAVNINGA TV 

நாகூரில் நிலை நின்ற,  தற்சமயம் மறைந்து வரும் கலை பண்பாட்டு வடிவங்கள், அசைவுகளை எடுத்துரைத்தார் கவிஞர்.  தர்காவோடு பின்னிப்பிணைந்த ஏனைய சமூக மக்களின் உறவுகளைப்பற்றியும் விரிவாகச் சொன்னார்.கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கொளுத்தி எறியப்பட்ட  ஃபாஸிஸத்தீ  நாகூரை சுட்டாலுங்கூட நாகூர் மண்ணின் நல்லிணக்க சுவை அந்த நெருப்பை அவித்து தன்னை மீட்டுக் கொண்டது என்றார்.

 ரிழ்வானின்   வீட்டிற்கு   சென்றோம்.  அவரின் மாணவ நண்பர்கள் புடை சூழ வீடே வண்ணத்துப்பூச்சிகளின் கூடாரமாகியிருந்தது.

நண்பர்களுடனான குதூகல அளவளாவல் தொடர்ந்தது.  முக நூல் தம்பி ரிவின் பிரசாத்துடனான அறிமுகம், பிறகு சகாக்களுடன் ஊர் எள்ளல்கள்.  பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தனது மகனுடன் வந்து சேர்ந்தார்.

 வயிறு குத்பா ஓதத் தொடங்க உணவும் வந்து சேர்ந்தது. மூன்று பேர் கொண்ட ஸஹன்( தாலம் ). நெய்ச்சோறு, தாளிச்சா, தனிக்கறி. தனிக்கறியில் நல்ல கால் சந்து. வெந்து பழமாகியிருந்தது. நிறைவில் ஃபிர்னி( இனிப்பு கஞ்சி )  வந்தது . பாலும் நெய்யும் உலர்பழமும் செறிந்தது.  இலங்கை கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நண்பர் சிராஜ் மஷ்ஹூர் வீட்டில் சாப்பிட்ட அதே  இனிப்பு கஞ்சி. அங்கு அவர்கள் அதை  ருவான் கஞ்சி என்கின்றனர். ருவான் என்பது சிங்களச்சொல். அதற்கு ரவை என்று பெயர்.மறு நாளைய வலிமாவில் (திருமண விருந்து) புலவுச்சோறு, தாளிச்சா, இறைச்சி குருமா, தனிக்கறி, பிரெட் ஹல்வாவுடன் அடித்து உரித்தாகி விட்டது.

    



திருமணத்திற்கு பிந்திய நாள் விருந்தோம்பல்களில் சீனி தொவை பரிமாறப்படும் என ரிழ்வான் சொன்னார்.  சீனி தொவை என்பது சர்க்கரை, எலுமிச்சை,தயிர்,  நீர், மஞ்சள் நிறக்கலவையுடன் வாழைப்பழத்தையும்    நெய்ச்சோற்றின் முதல் கவளத்தில்  பிணைந்து உண்ணப்படுவது.

காயல்பட்டின வலிமாவில் நெய்ச்சோற்றுடன்  தயிர்,வாழைப்பழம், சர்க்கரை அடங்கிய சிட்டி வழங்கப்படும். உணவின் இறுதி கவளத்துடன் இந்த கலவையை பிசைந்து உண்பர். செரிமானத்திற்கும் ஏற்றது.முந்திய காலங்களில் நடைமுறையில் இது இருந்திருக்கிறது. தமிழகத்தின்  கிழக்கு கடற்கரையோர ஊர்கள் தொடங்கி கேரளம், கொங்கண கடற்கரை, இலங்கை, இந்தோனேசியா வரை நிறைய உணவு, உடை, மொழி வழக்கு ஒற்றுமை இருக்கின்றன.

 நாகூரின் கொய்யாக்கா அகமது நெய்னா சந்து, சாமுதம்பி மரைக்காயர் தெரு,  தெற்கு தெரு, புதுமனைத் தெரு,  பொதுவாக சொன்னால் தெற்குத் தெரு முஹல்லா போன்ற பகுதிகளில் காயல்பட்டினம், கீழக்கரைவாசிகள் நிறைய  குடியேறியுள்ளனர். ஒரு வகையில் பெரும்பான்மையான நாகூரே இந்த இரண்டு ஊர்களின் குடியேற்றம்தான் என்ற கருத்தும் உள்ளது.

 நாகூரோடு  சுமத்ரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுடன் பெருமளவு  வணிகத் தொடர்பு இருந்திருக்கின்றது.  அரிசி, சங்கு , மிளகு  துணிவகைகள் ஏற்றுமதியாகியிருக்கின்றன.பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள், வாசனை திரவியங்கள் இறக்குமதியாகியிருக்கின்றன. கிழக்கு மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும்  நாகூருக்குமான வணிகத்தொடர்பு வலுவாக இருந்திருக்கின்றது. போர்த்துக்கீசிய, டச்சு, ஃப்ரெஞ்சு, ஆங்கில காலனியாதிக்க வாதிகளின் ஆக்கிரமிப்பில் இந்த வணிக வள வாழ்க்கை நசித்து  விட்டது.

 நாஹுரில் நடந்த  பெருத்த ஏற்றுமதி இறக்குமதிதான் இந்த குடியேற்றங்களுக்கு காரணம் என கவிஞர் காதர் வலீ அவர்கள் சொன்னார். வணிகம் மட்டுமே இந்தக் குடியேற்றங்களுக்கு காரணம் என   மட்டிறுக்க இயலாது எனத் தோன்றுகின்றது. நாகூர் நாயகமவர்களின் அண்மைக்கான விருப்பமும்  பிற ஊர்க்காரர்களின்  குடிவரவிற்கான தலையாய காரணமாக இருந்திருக்கிறது.





மஃரிப் (சந்திக்காலம்) தொழுகைக்குப்பிறகு நாகப்பட்டினத்தில் வைத்து ரிழ்வானின் திருமணம். திருமணத்திற்கு முன்னரும் பின்னருமாக நிறைய நேரமிருந்தது. ஷாஹ் உமரியின் ஜின் அதி கதைகள், யூசூஃப் அலீயின் ஊர்க்கதைகள்,  நகரமயமாக்கல் பற்றி ஆய்ந்து வரும் இளம் ஆய்வாளரின் தரவுகள், தூதஞ்சல் துறையில் உள் வளைவுகள் பற்றி அகமத் கபீரின் கதைகள்  என  அன்றிரவு  நிரம்பியது.

 மறுநாள் சுபஹு (வைகறைத்தொழுகை)க்குப்பின்னர் தர்காவை காணச்சென்றோம்.  பல ஊர்க்காரர்கள்,வெவ்வேறு மத இன மொழிக்காரர்களின் பங்களிப்புகள்  பல கட்டிடங்களாக உள்ளே எழுந்து நிற்கின்றன. பல்வேறு மண்டபங்களுக்கிடையேயான ஆழ் அமைதிக்குள் புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது முடிவிலியின் வெளி.


ஒருவர் தன் இரு கைகளையும் இறுகப்பிடித்தவாறே  கண்களை  பொத்திக் கொண்டு மண்டப வளைவுகளில் சுழன்றுக் கொண்டிருந்தார். நாகூரிலிருந்த இரண்டு நாட்களிலும் அவரைப்பார்க்க முடிந்தது. மனிதர் என்னவிதமான சுமையைக் கொண்டுவந்தாரோ?  தஞ்சாவூரிலிருந்து நாகூருக்கு என்னுடன் பேருந்தில் பயணித்தவர் அவர்.

 தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள், யாருடனும் பங்கு வைக்க இயலாத துயரங்களையும் மன வலிகளையும் சுமந்தவர்கள், நோய்வாய்ப்பட்ட உறவினரை கிடத்தி விட்டு ஆறுதல் செய்திக்காக அருகில் காத்திருக்கும் உறவினர்கள், வாழ்வியல்  நெருக்கடிகளுக்கான விடுதலையையும் தீர்வையும் பெற்று விட்டே செல்வது என்ற தீவிரம் கண்களில் பொங்க அமர்ந்திருப்பவர்கள் என தர்கா வளாகத்தில்  ஒழுகும் மானிடப்பெருக்கு.



தர்காக்களில் துயிலும் நாதாக்கள், இறை நேசர்கள், நல்லடியார்கள் எந்த ஓரிறையை முறுகப்பற்றி தாங்கள் இன்றிருக்கும் நிலையை அடைந்தார்களோ அந்த வழி மட்டுமேதான் எல்லோருக்குமான விடுதலை வழி.ஆனால் இறைவனைப்பற்றி, அவனின் குணங்களைப் பற்றி விரிவான அறிதல் இல்லாமையும், மண் மறைந்து வாழும் மகான்களின் மீதான அதீத பற்றும் எல்லாவற்றையும் சுருக்க வழியில்  அடையும் விழைவுமே இது போன்ற மக்கள் திரளை தர்கா எனப்படும் நினைவிடங்களில் கொண்டு வந்து குவிக்கின்றன.

இந்த கோட்பாட்டு தர்க்கங்கள் முரண்கள் இணக்கங்களுக்கு அப்பால் தர்காக்களில் பல ஒழுக்குகள் கொண்ட  சமூக பண்பாட்டு மானிடவியல் அசைவுகள் உள்ளன. இவற்றை புரிந்து கொள்ள மறுப்பதென்பது  மயிலிறகிலிருந்து வண்ணங்களை பிய்த்துப் போடுவதற்கு சமம்தான்.

 



சமூகத்தின் கூட்டுணர்வில்  குமிழிடும்  கொண்டாட்ட வேட்கை, சமுகத்தின் ஒவ்வொரு இழையிலும் பின்னப்பட்டிருக்கும் வண்ணப்பண்பாட்டு முயக்கங்கள் என அனைத்தும் பெருக்கெடுத்து பின் ஆற்றுப்படுவது தர்கா போன்ற  பல் அரங்க வெளிகளில்தான்.

 


தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை தமிழகத்து பள்ளிவாசல்களில்  இருந்த  வழிப்போக்கர்கள், சிறு வணிகர்களுக்கான தங்கும் வசதிகள்  இன்று முற்றாக இல்லை.

 நான் முழு நேரப்பணியாளனாக இருந்த தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் சில வருடங்கள்  சுற்றியலைந்திருக்கின்றேன். அரிதாக ஓரிரண்டு நிகழ்வுகளைத் தவிர விடுதிகளுக்கு போகும்படி நேர்ந்ததில்லை.  அனைத்து தங்கல்களுமே  பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும்தான் .

 பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகான சூழல்களை காரணங்காட்டி காவல்துறை ஏற்படுத்திய நெருக்கடியின் விளைவாக இந்த வசதிகள் மறுக்கப்படுகின்றன. எல்லா மஸ்ஜிதுகளிலும் கண்காணிப்பு கேமிராக்களின் வழியாக அரசு வேண்டாத கண்ணாக இருந்து நம்மை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறது.

மனிதர்களால் கைவிடப்பட்ட மனிதர்கள், வழிப்போக்கர்கள், ஊருக்கு புதியவர்களுக்கு கொஞ்ச நேரம் அமர்ந்து இளைப்பாறவோ மதிய வெயிலின் ஆங்காரத்திலிருந்து தலை சாய்க்கவோ நாகூர்,ஏர்வாடி,ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட பிரபலமான  நினைவிடங்களைத்தவிர வேறு ஓரிடமும் இல்லை.

 அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுவதற்காகவும்,  மனிதர்களுக்கான ஆறுதல் கேந்திரங்களாகவும் கட்டப்பட்டுள்ள  மஸ்ஜிதுகளின் ( பள்ளிவாயில்கள் ) வாசல்கள் அரசின் கெடுபிடிகளால்  சராசரி மனிதர்கள் அண்ட முடியாத அரண்மனைக் கபாடங்களாக அகாலங்களில் மாற்றப்பட்டு விடுகின்றன.  

 முற்றதிகாரத்தின் சந்தேக  நோயுடன்  பெருந்தொற்றின்  விலகலும் சேர்ந்து மனிதர்களை மனிதர்களிலிருந்து தொலைவிலாக்கிக் கொண்டே போகிறது. முற்றதிகார ஃபாஸிஸ ஆட்சியின் அடிக்கட்டுமானம் பொதுமக்களிலிருந்தும் மக்கள் நிறுவனங்களிலிருந்தும்தான் நம்மையறியாமலேயே இவ்வாறு கட்டி எழுப்பப்படுகின்றன. இந்த பெரு நச்சு வளையத்தின் ஒரு கண்ணியை பள்ளிவாசல் கதவுகளை திறப்பதின் வழியாக முறிக்கத் தொடங்க  வேண்டும்.

 அதிகம் கவனிக்கப்படாத இடமொன்றை தர்கா உலாவில் காண நேர்ந்தது. நாகூர் நாயகத்தின் தலைமாட்டுக்கு வெளியே மூலிகை நந்தவனமொன்றுள்ளது. அன்னார் தலை சிறந்த மருத்துவராகவும் விளங்கியுள்ளனர். இந்த தோட்டத்தில் விளைந்த மூலிகைகளையும் தனது பிரார்த்தனைகளையும் கலந்து சாதி மன மொழி வேறுபாடுகளின்றி தன்னை நாடி வருவோர்க்கு சிகிச்சையளித்துள்ளனர்.நாகூர்  ஷாஹுல் ஹமீது நாயகத்தின் நானூறு ஆண்டு கால  அருவ அரசாட்சியின் அடிக்கற்கள் இவை. எடுத்துக்கட்டி நிறுவப்படாத அரசுகளின் ஆயுள் நெடியது.

 புத்தகங்கள் வாங்கலாமெனப் பார்த்தால் கடைகள் சரிவர திறக்கப்படவில்லை. தர்காவின் தலைவாயிலில்  துண்டுகளைப் போர்த்திக் கொண்டு ஆதீனங்கள் அமர்ந்திருக்கின்றனர். ஷாஹூல்ஹமீது நாயகத்தின் மண்ணறையைச் சுற்றி  எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 

 புனித ஹஜ் பயணத்தை நிறைவு செய்து விட்டு கேரளம், முஹல்லத்தீவு ( மாலத்தீவு ),  இலங்கை வழியாக  தமிழ் நாட்டுக்கரையான காயல்பட்டினத்தில் இறங்கிய ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் அங்கிருந்து   கால்நடையாகவே  பொதிகை மலை,  தென்காசி, தேங்காய்ப்பட்டினம், மேலப்பாளையம், ,கீழக்கரை, நத்தம், ஆயக்குடி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் என  என தன்னுடன் ஏராளமான ஃபக்கீர்களையும் அழைத்துக்கொண்டு பயணித்து நாகூரை வந்தடைந்திருக்கிறார்கள்.இந்தப்பயணம் முழுக்க அவர்கள் மக்களை நெறிப்படுத்தியதோடு அவர்களின் அக புற துயரங்களிலிருந்து நெருக்கடிகளிலிருந்து அச்சங்களிலிருந்து   விடுவித்துள்ளார்கள்.

 உத்திரப்பிரதேச மாநிலத்தின் மாணிக்கப்பூரில் பிறந்த அன்னார், அங்கிருந்து  மக்கத்துக்கு ( மக்கா ) வெளிக்கிளம்பியவர்கள், அதன் பிறகு தான் பிறந்த மண்ணுக்கு திரும்பவேயில்லை. தன்னுடன்  நானூற்றி நான்கு பேர்களையும்  ஊர் ஊராக  நாடு நாடாக அழைத்துக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள்  வலசை சென்றவர்கள் நாகூரில் வந்து நிறைந்திருக்கின்றார்கள்.

 முறையான சாலை வசதிகளோ உணவு விடுதிகளோ வைத்தியசாலைகளோ என எந்த உத்திரவாதமுமில்லாத இன்றிலிருந்து நானூற்றி ஐம்பது வருடங்களுக்கு முந்திய காலகட்டத்தில் ஒரு குக்கிராமத்தையே மூட்டையாக்கி தன்னுடன் சுமந்து திரிந்த ஷாஹுல் ஹமீத் நாயகத்தின் அந்த பெரும் பணியை கொஞ்சம் காட்சிப்படுத்திப்பார்க்கும்போதே அதன்   ஆழ அகலத்தை நாம் மனங்கொள்ள முடியும்.

 இன்று  நான் போகும் வணிக பயணமாக இருந்தாலும் சரி, இது போன்ற விருப்ப பயணங்களாக இருந்தாலும் சரி போக வர என பயணச்சீட்டுக்களை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் ஏறக்குறைய எல்லா வித அத்தியாவசியங்களையும் உறுதிப்படுத்திக் கொண்டுதான்  வீட்டிலிருந்தே இறங்குகிறேன். பயணத்தின் நடுப்பகுதியை அடைந்தவுடனேயே திரும்ப வேண்டும் என்ற பதட்டம் மண்ணுளிப்புழுவாகி உள்ளங்காலிலிருந்து ஊர்ந்து தலைக்கேறுகின்றது. என் எல்லாப்பயணங்களிலும் ஒரு மருவின்  அளவிலேனும் நினைவில் வீடுள்ள மனிதனாகத்தான் இருக்கிறேன்.

 நிலத்தில் வாழும் நிலமற்றவர்களின் வாழ்க்கை  அல்லது நிலமிலிகள் என வேண்டுமென்றால் பெரு மகன்களின் இத்தகைய வாழ்க்கை முறைக்கு  பெயரிடலாம். இந்தப்பெயரும் கூட அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தை முழுமையாக சுட்டும் சொற்களல்ல. சொற்களுக்குள் அடங்கும் வாழ்க்கையல்ல அவை .

 சில ஆண்டுகளுக்கு நான் பெங்களூரு தப்லீக் மர்கஸில் (தலைமையகம்) ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் போய் இறங்கினேன்.  சுபஹிற்குப்பின்னர் (வைகறைத் தொழுகை) அந்த மஸ்ஜிதில் வட்டம் வட்டமாக  ஆட்கள் அமர்ந்திருக்கின்றனர். வெவ்வேறு  நெறித்தலைப்புக்களில் ஹல்கா (போதனை அமர்வுகள்) நடைபெற்றுக் கொண்டிருந்தன. பள்ளிவாசலுக்கு வெளியே திங்கள் கிழமைக்குரிய எல்லா படபடப்பு பதற்றங்களுடனும் உலகம் மூச்சு முட்டிக் கொண்டிருந்தது

 எனக்கு தப்லீக் இயக்கத்தின் செயல்பாடுகளின் மீது கரிசனம் போலவே கடுத்தமான விமர்சனங்களும் உண்டு. அது ஒரு அரசியல் நீக்கப்பட்ட அமைப்பு. தங்கள் செயல் முறைகளில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே சகோதரத்துவம் பேணுபவர்கள். ஆனால் இந்த எதிர்மறைகளுக்கப்பால் தான் நம்பும் ஒரு விஷயத்திற்காக  உலகின் பெரும்போக்கினர் நம்பும் வாழ்வின் தராதரம் பற்றிய பார்வைகளுக்கு முதுகைக் காட்டியவாறு பாலைவன ஒட்டகம் போல பயணிக்கும் அவர்களின் மன்ப்போக்கிற்காக எனக்கு அவர்களை பிடிக்கும்.

 அன்றைய நாகூர் ஷாஹுல் ஹமீது  நாயகத்தின் தீன் நெறி பயணக்குழுவினர், உலகின் பல பகுதிகளில் அன்றும் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்,  ஸுஃபிய ஜமாஅத்தினர்,   இன்றைய தப்லீக் இயக்கம், நலன்புரி அமைப்புக்கள்  என  இவர்களனைவருமே  பொது நலன் என்ற   காணிக்கைப்பேழைக்குள் தன்னையே காணிக்கையாக்கி விழுபவர்கள்.  பெரும் சுழல் அச்சின் ஆரம் அவர்கள். இது ஒரு  தனி மன நிலை.எதிர் அலையின் மீது நடக்கும் பயணம்.

 அன்றாடங்களுக்குள் அப்பிக் கொண்டிருக்கும் பெரும் போக்கு உலகத்தினரால் இவற்றை  புரிந்து கொள்ளவே இயலாது. அப்படி புரியாமல் விமர்சிப்பது என்பது நாழி  கொண்டு கடலை அளக்க முற்படும் மூடத்தனம்தான்.

 தங்களிடம் கையளிக்கப்பட்ட கருணையின்  சேகரத்தை நேர்வழியை  நல்தடத்தை சக மனிதரிடம் கை மாற்றி தீர வேண்டும் என்ற முடிவற்ற வேட்கைதான் ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களையும் அவர்களுடன் இருந்த ஃபக்கீர்கள், சீடர்கள் குழாமையும் சொந்த மண்ணை மொழியை உறவுகளை சிறியதும் பெரியதுமான மகிழ்ச்சிகளை பிட்டத்து மண்ணை உதறுவது போல உதறி விட்டு வர வைத்திருக்கின்றது.

 “ ஊர சுத்துனா படிப்பினை கெடய்க்குங்கறதுலாம் சரித்தான். இப்பிடியே சுத்திக்கிட்டே இருந்தா இதுல கெடய்க்கிற  படிப்பினையைக்கொண்டு எப்பந்தான் வாழுறதுவோய் ?” என ஒரு பயணத்தில் என் நண்பனொருவன் கேட்டான். 

                                                     ஊர்போய் சேருவதில்

                                                ஒன்றுமே இல்லை

                                                                    பயணமே

                                                                பரவசமாகிறது

                                                        வாழ்க்கைப் பயணத்தில்

 

-  அமீர் அப்பாஸ்

 தர்கா உலாவை முடித்து விட்டு எனது நெடு நாள் நண்பன் அக்குஹீலர் செய்தஹ்மதுவை பார்க்க காரைக்காலுக்கு பயணமானோம். அவனைப்பார்த்து விட்டு காரைக்கால் கடற்கரைக்கு சென்றோம். எதையும் சரியாக பார்க்க முடியாதபடிக்கு மழை பொடுபொடுத்துக் கொண்டிருந்தது.




வங்காள விரிகுடாவில் நிலை கொண்ட காற்று மண்டல தாழமுக்கத்தினால்  கடல் பித்தேறி நிலையழிந்துக்  கொண்டிருந்தது.காரைக்காலிலிருந்து திரும்பியவுடன் ஒவ்வொருவராக ஊரைப்பார்த்து கிளம்பத் தொடங்கினர்.

 என் சமூக வாழ்வில் நான் சந்தித்த மிளிர் கற்களில் ஒருவரான அமானியின் வீட்டிற்கு பயணத்தின் இறுதியாக சென்றேன்.  தனது வாழ்வின் பொன்னிளம் வருடங்களை பொது நோக்கத்திற்காக செலவழித்து அதற்காக கடும் விலை கொடுத்தவர். இன்று அமைதியான ஒரு குடும்ப வாழ்வில் கழிகின்றார்.  அரிய சில புத்தகங்களை எனக்கு பரிசளித்தார். தஞ்சை வீடுகளின் பிரிக்கவியலா பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றான ஊஞ்சலில் ராஹத்தான அந்தர ஆட்டம். 




அவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் மண்டிய புதர்களுக்கு அப்பால் கடல் ஓரக்கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது. ஆழிப்பேரலையின்போது தன் வீட்டின் பின் வளவிலெல்லாம் சடலங்கள் ஒதுங்கியதாக அமானி நினைவு கூர்ந்தார்.


தஞ்சாவூருக்கு நாகப்பட்டினத்திலிருந்து வண்டியேறினேன். மோசமான சாலை. இந்தப்பகுதி முழுக்கவே சாலைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லையாம். ஆளுங்கட்சிக்கு வாக்குகள் விழாத பகுதிகளில் அரசு இம்மாதிரி தண்டிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தஞ்சை தொடர்வண்டி நிலையத்தில் பயணிகளைத்தவிர யாரையும் நுழைய விடாத பெருந்தொற்று கெடுபிடி. கால் மணி நேர சுணக்கத்திற்குப்பிறகு வண்டி வந்தது. நெடு நேரம் வரை நாகூர் உள்ளுக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

 ஊர் நிலையத்தில் ஆட்டோக்காரர் ஒருவரைக் கூப்பிட்டேன். முகத்தை உற்றுப்பார்த்தால் அவன் முத்து மொகுதூம். என் மூன்றாம் வகுப்பு தோழன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகான சந்திப்பு. “ நீ பஷீர்தானே?” என்றான்.


 நாகூர் ஒளிப்படக்கோவைகள்:

நாஹூர் திருமணம்

நாஹூர் தர்கா, நகரம்

நாஹூர் கவிஞர் காதர் வலீ

செய்யது அஹ்மது & காரைக்கால் கடற்கரை

நாஹூர் அமானி & வீடு


படங்களில் உதவி: பத்மசிறீ அலீ மனிக்ஃபான், இலட்சத்தீவு நிர்வாகம், நாகூர் அமானி, அகமது ரிழ்வான்

 காணொளி : நாகூர் அமானி

3 comments:

  1. பதிவை முழுமையாகப் படித்தேன். பல சிறப்பான வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொண்டேன். பயணம் குறித்தான உங்கள் பார்வை அலாதியானது. வாழ்த்தகள் தோழர். சூரிய.நாகப்பன், ஐயோவா நகரம்

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை உங்கள் இலக்கு மேலும் பெருகும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறப்பான எழுத்தாக்கம்
    நாஹூரைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete