Wednesday 6 January 2021

செயலாக முதிரும் நம்பிக்கை

 “ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் யாரென்றால் அவர்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்;  மூடர்கள் அவர்களுடன்  பேசிட முற்பட்டால் , “ ஸலாம் “ ( அமைதியுண்டாகட்டும் என்று )  சொல்லி  விலகி விடுவார்கள்.

 

இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை சிரம் பணிந்தவர்களாகவும் , நின்றவர்களாகவும்  இரவில் வழிபாட்டில் இருப்பார்கள்.

 

இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையமாக்கமாட்டார்கள்; குறைக்கவுமாட்டார்கள்- எனினும் இரண்டுக்கும் நடு நிலையாக இருப்பார்கள்.

 

அன்றியும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு  நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்: இன்னும் , அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நீதமின்றிக் கொல்லமாட்டார்கள். விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்.

 

அன்றியும் அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும், அவர்கள் வீணான செயலின் பக்கம்  செல்ல நேர்ந்தால் கண்ணியமானவராக ( ஒதுங்கி ) சென்று விடுவார்கள்.

 

இன்னும் அவர்கள் , தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் , செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள்.

 

நிலை குலையாத தன்மையுடன் இருந்த காரணத்தால் இவர்களுக்கு ( சுவனத்தில் ) உன்னதமான மாளிகை நற்கூலியாக வழங்கப்படும். வாழ்த்தும் , ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக்கப்படுவார்கள்” 

 ---( அல் குர் ஆனின் அல் ஃபுர்கான் அத்தியாயம் )

 

 

இறை நம்பிக்கையானது  ஓர் ஆன்மாவின் அந்தரங்க ஆசுவாசமாக சுருங்கி விடுவதிலிருந்தும்   லௌகீக கறைகளுக்கு மேல் பக்தி மணமேற்றி  மயக்கும்  கண நேர விடுவிப்பாகவும் ஆகி  விடக்கூடாது என்பதிலும்  இஸ்லாம் எச்சரிக்கையாக இருக்கின்றது.

 

 

வாசனைத்திரவிய ஜாடியிலிருந்து பரவும் நறுமணம் போல  இறை நம்பிக்கை என்ற  வழி நடத்தும்  பொறியிலிருந்து நல்வாழ்விற்கான வழிகாட்டுதல் சுகந்தமாகி கசிந்து இறங்குகின்றது.

 

 

 பணிவு, வீணிலிருந்து விலகுதல், இறைவனுடனான அந்தரங்க உரையாடல்,  விரையத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான பிரிகோடு,   மூடர் தவிர்ப்பு,,  ஓரிறைக் கொள்கை, அக்கிரமக்கொலையிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்துமான  காப்பரண்,, பொய்சாட்சியத்துக்கு எதிர்ப்பு, கண்ணியமான நடத்தை , குருட்டுத்தனமான இறை நம்பிக்கை குறித்த சுட்டிக்காட்டுதல் , வாழ்வின் சோதனைகளில் இடர்ப்பாடுகளில் நிலைகுலையாத தன்மை என நல்லறங்களையும் நற்குணங்களையும் வரிசைப்படுத்தி இவற்றின் தர்க்க முடிவாக நல்வாழ்வின் இறுதியான நிலையான வெகுமதியாக மறுமையில் கிடைக்கவிருக்கும் சுவனத்தைக் கொண்டு வாக்களித்து ஆர்வமூட்டுகின்றது இஸ்லாம் .

 

 

 

ஒரு நாளின் அல்லது ஒரு வாரத்தின் குறிப்பிட்ட காலத்துளிகளில் இறைவனுக்கு கொடுக்க வேண்டியதை  பொன் பொருள் காணிக்கையாகவோ அல்லது சில சடங்குகளின் வடிவிலோ செலுத்திவிட்டு வாழ்வின் மீதி நேரங்களில் இச்சை என்ற தேவனிடம் சரண்டைவதை  நெறி பிறழ்வாக ஒழுங்கவிழ்வாக குற்றமாக பார்க்கின்றது இஸ்லாம்..

 

 

மனிதர்கள் தனக்கு முற்றாக அடிபணிய வேண்டும் என்று விரும்பும் இறைவன் அந்த அடிபணிதலானது  குருட்டுத்தனமான பக்தியாக  தாழ்ந்து விடாமலிருக்கவும்  அறிவுறுத்துகின்றான்.

 

பொன் சரட்டில் கோர்க்கப்பட்ட மணிமாலை போல இறை நம்பிக்கையின் ஒளியில் வழி நடத்தப்படும் அன்றாட வாழ்வின் நடைமுறை அறமானது  சுவனத்தில் போய் நிறையும் வகையில்  அழகிய  ஒத்திசைவுடன் கூடிப் பிணைகின்றது.

 

இறை நம்பிக்கையின் விரிந்து பரந்த மறைவான பகுதியை தனது எளிய அறிவு கொண்டு அளக்க முயலும் மனிதன் புறக்கண் கொண்டு  அறிந்தால் மட்டுமே  இறையை இறைமையை ஒப்புக் கொள்வேன் என அடம் பிடிக்கின்றான்.

 

இந்த தற்காலிக உலகின் நல்ல தீய செயல்பாடுகள் குறித்து வழிகாட்டி அதற்கேப  வெகுமதி,   தண்டனைகளை இவ்வுலகிலும் மறுவுலகிலுமாக வழங்குவதின் வழியாகவும் புலன்களுக்குட்பட்டவற்றிற்கும் மறைவானவற்றிற்கும் இடையேயும்  தொடர்புகளை மறுக்கவியலாத இயல்பு எனவும் நிறுவுகின்றது இஸ்லாம்.

 

 

1 comment:

  1. 👌 மறுமையில் கிடைக்க விருக்கும் சுவனம் குறித்த நற்செய்தி க்கான வாக்களிப்பை போலவே

    நரகம் குறித்த எச்சரிக்கை வாக்களிப்பையும் மிகவும் வலியுறுத்துகிறது இஸ்லாம்.

    சொர்க்கம் குறித்த ஆசை காட்டலின் காரணமாக

    இம்மை வாழ்வில் மனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதை விட

    நரகம் குறித்த அச்சுறுத்தலின் காரணமாககாரணமாகவே மனிதன் இம்மையிலும் ஒழுக்கம் பேணுகிறான் என்பதே யதார்த்தம்.


    பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆன பின்னர் ஆற்றிய உரைகளின் போது ஒருமுறை இவ்வாறு கூறினார்...

    நரகம் குறித்த குர்ஆனின்- இஸ்லாத்தின் எச்சரிக்கைகள்

    என்னை அது குறித்து சிந்திக்க தூண்டின. இறைவன் மீதான ஈர்ப்பு என்னுள் ஏற்ப்பட்டது

    ஒருவேளை எனது மரணத்துக்கு பின்னர் கேள்வி கணக்கு நடந்து நான் நரகவாசிகள் பட்டியலில் இடம்பெற நேரிடுமோ .... என்னுள் எழுந்த அச்சம், என்னை லாயிலாஹ இல்லல்லாஹு என்று உறுதி மொழி கூற செய்தது

    ReplyDelete