Monday 4 January 2021

கடன்

 



 

  பொய்யும் மோசடிகளும் கொலைகளும் தற்கொலைகளும் மானக்கேடும் சமூகத்தினுள் பெருகுவதற்கு திருப்பிச்செலுத்தப்படாத கடன்களும் அதைத்தொடரும் கொடும் வட்டிகளும்  ஒரு  வகையில் காரணமாகி விடுகின்றன.

 

இதனால்தான் இறைத்தூதர் அடிக்கடி இந்த பிரார்த்தனையை தானும் பிரார்த்தித்து வந்ததோடு உலகிற்கும் இதை போதித்தனர்.

 

“இறைவா!  வருங்காலத்தைப் பற்றிய) கவலையிலிருந்தும் (நடந்து விட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்”

 

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி). நூல்: ஸஹீஹூல் புகாரி—2893, 5425.

 

கடன் வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும் காரணிகளை சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதோடு கடனுடன் வரும் அவலங்களை குறித்து எச்சரித்து அவற்றிலிருந்து  பாதுகாப்புக் கோரலையும் சேர்த்தே இந்த துஆ வழங்குகின்றது.

 

தவிர்க்க முடியாத சூழலில் கடன் வாங்கும்  நெருக்கடி நிலை ஏற்பட்டாலோ

 

 

“உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்”.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 2390, முஸ்லிம் 3003)

என கடனை நல்ல முறையில் திருப்பிச்செலுத்துவதை ஊக்குவிக்கின்றார்கள் நபிகளார் .

 

கடனாளிக்கு ஏற்படும் மன உளைச்சலை யாரிடமும் பங்கு வைக்க இயலாது. நெஞ்சுக்குழிக்குள் மாட்டிக் கொண்ட நெருப்புருண்டை போல கடன் தொல்லை உறுத்தும்போது  இறுதித்தூதர் முஹம்மது ( ஸல் ) அவர்கள் பின்வரும் பிரார்த்தனையை கற்றுத்தருகின்றார்கள்.

 

‘ இறைவா உன்னால் விலக்கப்பட்டவற்றை விட்டு விட்டு நீ அனுமதித்தவற்றின் மூலமே என் தேவையை நிறைவு செய்வாயாக!

உன் அல்லாத பிறரிடமிருந்து தேவையாவதிலிருந்து உன் அருட்கொடையின் மூலமே தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!!

 

 நூல்: திர்மிதி - 3486,  முஸ்னத் அஹ்மது—1250

 

இந்த பிரார்த்தனையில் பொதிந்திருப்பது கடனை திருப்பி அடைப்பதற்கான இறை உதவிக்கான வேண்டல் மட்டுமல்ல. அந்த இறை உதவியை அடையும் தகுதியைப்பெற கடன் வாங்குபவரிடம் சில குண நலன்களையும் , ஒழுக்கங்களையும் ஏற்படுத்த நாடுகின்றது.

 

இறைவனால் தடுக்கப்பட்டவைகள், நமக்கு உரிமையல்லாத பொருட்கள் ஆகியவற்றை நாம் விரும்புவதையும் அவற்றைக்கொண்டு நம் தேவைகளை நிறைவு செய்வதையும் இந்த பிரார்த்தனை தடுக்கின்றது.பிறரிடம் தேவையாகாமலிருக்கும் தன்மானத்தையும் போதிக்கின்றது.

 

 

 

 சிலர் கடன் நெருக்கடியிலிருந்து தப்பிக்க தன்னை மாய்த்துக் கொள்கின்றனர்.   இறப்பின் வழியாகவும் கடனை திருப்பி செலுத்தும் கடமையிலிருந்து தப்பிக்க இயலாது என்ற உண்மையை உரைப்பதின் வழியாக  இழுத்தடிக்காமல் வாழும்போதே விரைந்து கடனை அடைப்பதின் அவசியத்தை கீழ்க்கண்ட ஹதீஸ்  உணர்த்துகின்றது.

 

"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த உயிர் கொடையாளிக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 3498

 கொடுக்கப்படும் கடனின் பாதுகாப்பையும் உத்திரவாதத்தையும்  உறுதிப்படுத்தும் இஸ்லாம்,  நீதமான கடனாளிகளுக்கான ஆறுதலையும்  சேர்த்தே வழங்குகின்றது.

 

“யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2387.

 

“ஒருவர் இறந்துவிட்டார். ( மண்ணறை கேள்வி கணக்கின்போது ) அவரிடம்  'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை திரும்ப  பெறும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்' என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.”

 

அறிவிப்பாளர் : ஹூதைஃபா ( ரழி ) நூல்: ஸஹீஹுல் புகாரி --2391.

 

தலைமுறையினர், உறவினர்  என எவரும் இல்லாத நிலையில் ஒரு கடனாளி இறந்து போனால் அவரது கடனை ஆட்சியாளராகிய தான் பொறுப்பு என்ற பொது  பிரகடனத்தையும் நபிகளார் செய்தனர்.

 

இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, தம் மீது கடன் இருக்கும் நிலையில் அதனை அடைப்பதற்கான ஒன்றையும்விட்டுச் செல்லாமல் இறந்துவிடுபவரின் கடனை அடைப்பது என்னுடைய பொறுப்பாகும். (இறக்கும் போது) ஒரு செல்வத்தைவிட்டுச் ஒருவர் விட்டுச் செல்வாராயின் அது அவரின் தலைமுறையினர்களுக்குரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

அறிவிப்பாளர்.:அபூ ஹுரைரா(ரலி) நூல்: ஸஹீஹுல் புகாரி : 6731

 

கடனை உண்டாக்கும் காரணிகளை அடையாளங்காட்டி விழிப்படையச்செய்தல், வாங்கிய கடனை நேர்மையாக  திருப்பிச்செலுத்துவதற்கான கட்டாயத்தை அறிவிலும் மனத்திலும் உண்டுபண்ணுதல், , கடனாளிகளிடம்  இரக்கத்துடனும் விட்டுக் கொடுப்புடனும் நடப்பதன் வழியாக மீளவே முடியாத மண்ணறை வாழ்வின் நெருக்கடியிலிருந்து கடன் கொடுத்தவர் விடுவிக்கப்பெறுதல் என ஓர் அழகான ஒத்திசைவு சங்கிலியை கடன் மேலாண்மை வழியாக  நபிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டுகின்றனர்.

 

கடனாளியையும், கடன் கொடுத்தவரையும் பாதுகாத்தல், தற்சார்பு வாழ்க்கை, நேர்மை, இழிவிலிருந்தான பாதுகாப்பு, இரக்கம், சலுகை, தனியாள் பொறுப்பு, மக்கள் நலன் அரசின் பொறுப்பு என இவையனைத்தையும் இறை நம்பிக்கை என்ற ஒற்றை சூத்திரத்தின் வாயிலாக சாதித்து விடுகின்றது இஸ்லாம். 

No comments:

Post a Comment