Wednesday 30 December 2020

லேகயுடே மரணம் -- ஒரு ஃபிளாஷ் பேக் , கரே பைரே -- திரைக்கண்



லேகயுடே மரணம் -- ஒரு ஃபிளாஷ் பேக், மலையாளத் திரைப்படம் ( லேகாவின் இறப்பு -- ஒரு மீள்பார்வை)

கலைத்துறையானது  எல்லா மனிதர்களையும் ஆற்றுப்படுத்தலாம். அருமருந்தாகக் கூட திகழலாம். ஆனால் அக்கலை தன்னை நிகழ்த்தும் அனைத்து கலைஞர்களிடமும் அப்படி நிபந்தனையின்றி  இரக்கத்தையும் கருணையையும் கையளிப்பதில்லை.



திரைத்துறையின் இருள் பீடங்களில் பலியிடப்பட்ட  ஒரு நடிகையின்  துயரக்கதை. மறைந்த இயக்குனர் பாலு மஹேந்திராவின் காதலியான நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டதை அடிப்படையாக  வைத்து எடுக்கப்பட்ட  மலையாளப்படம்.


" சென்னையின் சினிமா உலகம் சொர்க்கம் " என்ற ஆசை சொற்கள் அவளின் தலைக்குள் பிறரால்  திணித்து ஏற்றப்பட்டு  நடிப்பு ஆசைகளை சுமந்து கொண்டு சென்னைக்கு புறப்படுகின்றாள். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள அவளுக்கு நடனமும் கொஞ்சம் தெரியும்..


அதன் பிறகு அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி தக தகத்தாலும் அந்த தீய்ந்த மணம் மட்டும் தவறாது வீசிக் கொண்டே இருக்கின்றது.


1983 ஆம் ஆண்டு  இயக்குனர் கே.சி.ஜோர்ஜினால் எடுக்கப்பட்ட இப்படம், திரையுலகம் எப்போதுமே பெண் கலைஞர்களுக்கு தன் கொடு முகத்தை காட்டாமல் இருந்ததேயில்லை என்பதற்கு மற்றுமொரு நிரூபணம்.


திரைத்துறை மட்டுமல்ல அவளின் உறவுகளும் கூட அந்த தீய்க்கப்பட்ட ஆன்மாவை அவளுடைய வாழ்வின் இறுதித்துளி வரை இரக்கமின்றி உறிஞ்சுகின்றனர்.


தன்னைத்தவிர அனைத்து மனிதர்களின் விருப்பங்களுக்காக மட்டுமே சிதைக்கப்பட்ட ஒரு பெண் கலைஞரின் கதை.

---------------------------


கரே பரே , வங்காளத்திரைப்படம் ( வீடும் உலகமும் )




1916 ஆம் ஆண்டு கவி ரபீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட நாவல் கரே பரே. அதை  1984 ஆம் ஆண்டு சத்யஜித் ராய்  அதே பெயரிலேயே திரைப்படமாக எடுத்துள்ளார்.



வங்கப்பிரிவினையை ஒட்டி  முன்னெடுக்கப்படும் அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான உரத்த விளிகள்.  அனைத்து வித வசீகரங்களுடன் நகரும் அந்த  இயக்கத்தின் சத்திய ஆவேசத்துடன் ஊடாக நச்சரவமாக இழையும்   முஸ்லிம் வெறுப்பும், புனிதங்களைக் கொண்டு வசீகரிக்கப்பட்ட கொலை வெறியும். 

.

இலட்சியங்களுக்கும் அதன் தலைமைக்குமிடையேயான  அறுவறுப்பான இடைவெளி.  குண மேன்மையுடன் நிலப்பிரபு, இரு முனைக்காதலில் தத்தளிக்கும் அவர் மனைவி என நகர்கின்றது கதை.


நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த  நாவலில் வரும் அந்நியத்துணி புறக்கணிப்பு இயக்கத்தின் அந்த கபட தளபதியை பார்க்கும்போதெல்லாம்  கரே பைரே கதை அதன் ஒவ்வொரு எழுத்திலும் இன்று எவ்வாறு  சுடும் நிஜமாக நம்முன் எழுந்து நிற்கின்றது என்பதை  அச்சத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.



 

No comments:

Post a Comment