Wednesday 23 December 2020

புத்தகமற்ற.... என்று ஒன்று உண்டா?



என்னதான் அக, புற அழுத்தங்களும் நெருக்கடிகளும் இருந்தாலும் சரி, அறிய வரும் புதிய புத்தகங்களை கண்டவுடன் கையுடன் மனமும் பரபரக்கின்றது. அந்த புத்தகங்களை வாசிக்கின்றோமோ இல்லையோ, வாங்கி பேழைக்குள் சேர்க்காத வரைக்கும் மனம் அடங்குவதில்லை.

நான் வாங்கி சேகரித்த, சேகரித்து வரும் புத்தகங்களில் வாசிக்கப்படாதவற்றை பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கின்றது. காலமும் ஆயுளும் எந்த அளவிற்கு விட்டுத்தருகின்றனவோ தெரியவில்லை.
நம் கையில் இல்லாத வாழ்வின் சுழலுக்கு நடுவே வாசிப்பென்பது குறைவாகவே நடக்கின்றது. இருந்த போதிலும் அரிய அந்த புத்தகங்கள் அச்சில் இல்லாமலானவுடன் எங்கு போய் வாங்குவது? அந்த பதட்டம்தான் வாங்கி குவிக்க சொல்கின்றது. வாங்கவியலாமை உண்டுபண்ணும் தீரா ஏக்கம் கொடுமையானது. விண்மீன்கள் கைக்கு அருகில் வரும்போதுதான் தொட்டுக் கொள்ள இயலும்.
எளிமையாக நாட்டு மொழியில் சொல்வதென்றால் , " பொஸ்த்வத்துக்கு வாக்கப்பட்டாச்சு வாங்கித்தானே ஆக வேண்டும்.
-------------------------
கடந்த சில நாட்களில் வீடேகிய பொஸ்தகானார்களின் பட்டியல்:
உலக நாதா என நான் அன்போடு அழைக்கும் புலம் பதிப்பகம் லோக நாதன் அனுப்பித்தந்தவை.
1. யதார்த்தவாதம் -- தோப்பிலின் பிரதிகளுடனான வரைவு -- மனோகரன்( மறு பதிப்பு காண வேண்டிய நூல் )
2, 3. அண்டை மாவட்டத்துக்காரரும் அன்பு நண்பரும் எழுத்தாளருமான மீரான் மைதீனின் ' ஒச்சை', ' ஒரு காதல் கதை '
4. ' கமலி ' -- சி.மோகன்
---------
5. கவிஞரும் ஆவணப்பட இயக்குனரும் கலைப்பித்தரும் இனிய நண்பருமான ரவி சுப்பிரமணியன் அனுப்பித்தந்த அவரின் புதிய கவிதை தொகுப்பான ' "நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்" ( போதிவனம் ' பதிப்பகம் )
-----
6. நூலை வாங்குவதானாலும் சரி நூலுக்குரிய பணத்தை அனுப்புவதிலும் சரி எளிமையான வழிகளை தவிர்க்கும் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவிடம் போராடி வாங்கிய " இந்திய இசை - ஓர் அறிமுகம்.
7. கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா வின் படைப்பில் நல்லதம்பி அவர்களின் ஆற்றொழுக்கான நடையில் எதிர் வெளியீடாக வந்திருக்கும் ' யாத் வஷேம் ". நாவல். . வெறுப்புக்கும் போருக்கும் எதிராக கதையாடும் இந்த நாவலை காலத்தின் கட்டாயம் கருதி ஒரே மூச்சில் படித்து முடித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
----------------------
வீடு வந்து சேர காத்துக் கொண்டிருக்கும் நூல்கள்:



மெய்ப்பொருள் சீர்மை பதிப்பக வெளியீடுகள:

ஷஹீத் செய்யித் குதுப்பின் " அல் குர்ஆனின் நிழலில் " ( மொழியாக்கம்: ஷா உமரி ) -- தொகுதி 1& 2

இறுதி நபியின் வாழ்வில் இறை நினைவும் பிரார்த்தனையும் -- முஹம்மத் அல் கஸ்ஸாலி

இஸ்லாத்தில் சமூக நீதி -- ஷஹீத் செய்யித் குதுப்



முஸ்னது அஹ்மது( நபி மொழி தொகுப்பு )-- தொகுதிகள் 1& 2 ( ஆலிம் பதிப்பகம் )
மரப்பாலம் -- கரன் கார்க்கி ( உயிர்மை வெளியீடு )
மகரங்கோ எழுதிய வாழ்க்கை பாதை. தொகுதி 1& 2 -- பாரதி புத்தகாலயம் வெளியீடு

No comments:

Post a Comment