Sunday 22 November 2020

மெழுகு மணி

கொழும்பிலிருந்து வந்திறங்கும்  வாப்பாவின்  பயணப்பொதியை உம்மா உடைக்கும்  வரைக்கும்  தெரு விளையாட்டு , சங்கத்து கிணற்றுக்குளிப்பு  என எல்லா களிகளும் காலவரையரையின்றி  ஒத்தி வைக்கப்படும். பயணப்பொதியை  திறந்து பங்கிடுவதற்கு   எங்கள் ஊர் மொழியில் சொல்வதென்றால்  ‘ உடைப்பது’.

தகர டின் நிறைய கன்டோஸ் கோகோ வில்லைகள்,, ஒவ்வொருத்தரின் கால் அளவையும் கடிதத்தில் அனுப்பி அளந்து வாங்கிய டிஎஸ்ஐ தோல் செருப்புகள், மர  நுரை குந்திரிக்கம், ராணி, லக்ஸ் , சன்லைட் சோப்புக்கட்டிகள், பறந்திறங்கும்  இலைப்படம் கொண்ட  அட்டைப்பேழைக்குள் இருக்கும் ஓடிக்குலோன், கிராம்பு , கருவாப்பட்டை, தேயிலைத்தூள், சோவியத் ஒன்றிய ராதுகா பதிப்பக சிறார் படக்கதை புத்தகங்கள், எம்.டி.குணசேன  சிங்கள தமிழ் மொழி பயிற்சி நூல்கள் – உடைக்கப்பட்ட பொதியில்  போட்டி அறவே இல்லாதது புத்தகங்களுக்கு மட்டும்தான்.

 ஒரு  கொத்து கன்டோஸு ம் கதை புத்தகங்களும்தான் எனது ஈவு. அதன் பின்  மாடி வாச தொடக்கம். கன்டோஸை தின்று முடிப்பது, புத்தகத்தை வாசித்து முடிப்பது, மாடியிலிருந்து இறங்குவது என எல்லாமே ஒரே புள்ளியில் நடக்கும் . 

 அது கிராம்பும் கறுவாவும் கலந்து  மணத்துக் கொண்டிருந்த படக்கதை புத்தகம்.‘ஆந்த்ரேவின் பூனை “.  கோட்டுச்சித்திர படம். அலெக்சாந்தர் ரஸ்கின்  எழுதியது.  மழையை  உண்டு மயங்கிக் கிடந்த மதிய வெளிச்சத்தில் அதன் அட்டை பளபளத்தது.  இருளையும் அதற்குள் மர்மங்களையும் சேகரித்து வைத்திருக்கும் குகையின் வாயில் திறந்தது. வெளிச்ச நிரையிலிருநது விடுதலை.  ஒளி கசிந்து கிடந்த அதன் வாய் மருங்குகளில் காட்டுச் செடிகள் துளிர்த்திருந்தன.  

 கதிரவனை  விழுங்கிய முதலையை தடியால் அடித்து அதன் வாயைப்பிளந்து விடுவிக்கும் செந்நாக்குடைய  மூத்த கரடிக்கு சமமாக எனக்கு மிகவும் பிடித்தது  மணியையும் பூனையையும்தான்.

 பூனைக்கு மீன் கொடுக்கும் சிறுவன். அவன்தான் கீற்றுக்கண் கொண்ட ஆந்த்ரே. அவன்  கையில் மணியொன்று இருந்தது. மணியை  கயிறு அல்லது கம்பியால் கட்டித்  தூக்கியிருந்தான். அது  ஓசைகளின் கனத்தில்  இடப்பக்கமாக சரிந்திருந்தது. அவனருகில் குத்த வைத்து உட்கார்ந்திருந்த பெரிய மீசை பூனை  முழு மீனைக் கவ்வியிருந்தது. ஆந்த்ரே, அவன் கை மணி, மீசைப்பூனை,, அதன் வாய் மீன் என  அனைத்துமே புத்துருக்கு  வெண்பனியால் செய்யப்பட்டவை. கண் கூச வைக்கும் வெண்மை.  எத்தனையோ வெய்யில் காலங்கள் கடந்தும் அவை எதுவும் உருகாமல் அதே வெண்மையுடனேயே  இருந்தன.

 என் வாப்பா  வீடு  இரட்டை வீடுகளைக் கொண்டது. அதில் ஒரு வீட்டின் சமையலறையில் எப்போதுமே சமையல் செய்யப்படுவதில்லை. காரணம்,சமையல் பொருட்களுக்கான  களஞ்சிய, தளவாட  அறை அது. மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டிருக்கும்  அந்த மௌன சமையலறையின் புகை போக்கி. வான் வழி  சங்கதிகளுக்கான தொடர்பு  கோபுரம்.

 மணியென்றால் சைக்கிளில் உள்ள கிண்கிணி மணி. அந்த மணி தந்த  மோகத்தில் மெயின் ரோட்டிலுள்ள முருகன் சைக்கிள் மார்ட்டில் போய்  பழைய மணியொன்றை  வாங்கி நானும் என் வீட்டு  சமையலறையின் புகைக் கூண்டுக்கருகில்  நின்று கொண்டு  தரையில் தட்டி  ஒலியெழுப்பினேன்.

 அதன் முதலோசையானது  வெறுவாக்கட்டை முழியும் முகரையுடன்  அன்னியனாகி தள்ளி  நிற்கும்  நட்பும் பகையுமற்றது.  மீண்டும் மீண்டும் மணியை தட்ட தட்ட அது சொல் பணிந்து  இளகி இளகி மெழுகுத்திரள் உருக்கொள்ளும். எழும்பிய ஒலிக்குள்ளிருந்த கிண் கிணுப்பை  எடுத்துக் கொண்டு காற்று சுழன்றது. அது ஒரு மென் சுழல்.   கண்ணைத்திறந்து பார்த்தால் அது தலைக்கு மேல் புகைச்சுருளாகி உயர்ந்து உயர்ந்து சென்றுக் கொண்டிருந்தது.

 புகை வந்திராத அந்த பகை போக்கியின்  துளைகளின் வழியாக பனிபடர்ந்த சோவியத்துக்கு மிதந்து போய் விட  இயலும். அந்த புகை போக்கிக்கு நேராக வரும்  மேகங்களனைத்துமே   என் பயணத்திற்கான வானூர்திகள்தான்.

 ஆந்த்ரேவின் பூனையின் பக்கங்களில் உள்ள படங்களை புரட்டிப்பார்த்த பிறகுதான் ஒவ்வொரு நாளும் இந்த விளையாட்டு  தொடங்கும். 

 மழை உரசும்   இராக்கணங்களில்   வீட்டுத்திண்ணையில் மாட்டப்பட்டுள்ள இங்கிலாந்து  சுவர்க்கடிகாரத்திலிருந்து எழும் மணியொலிதான் எல்லாமுமாக இருக்கும். அதன் முகப்பு எண்கள்  உருகி  ஊசலில் மணியோசையாய்  வழிந்து பின் அவிழ்ந்து பரவி சுருண்டு சுருண்டு இருளுக்குள்  மணமாகி  கரைந்தழியும்  நேரப்புகை

 சைக்கிள் மணி போதாது என்று தோன்றிய வயதில் புதியது வந்து சேர்ந்தது. கறுப்பு வெள்ளை முகப்புள்ள   வட்ட வடிவ மேசை  கடிகாரம். வில் விசையில் இயங்குவது.  பழுதானதால் என் வசமாயிற்று. விசையேற்றி மீண்டும் மீண்டும் அலாரத்தை ஒலிக்க விட்டு அதையே பார்த்துக் கொண்டிருப்பேன். விசை குறைய குறைய “குனு குனு” என ஓசையாக குன்றி நீர் கோர்த்து ஒலிக்கும்,  இரும்பாலான அதன் பின் மூடியில் எப்போதும் படர்ந்து பிடித்திருக்கும். மெல்லிய துருப்படலம். மழைக்காலத்தில் ஈரத்துடன் அந்த துரு கலந்து   நாசிக்கு கீழாக மணக்கும்.பழுப்பேறிய அதன் எண் முகப்பிற்குள்  வெள்ளைக்கார  இடைச்சி  மர வாளியுடன் திசையற்று  நடந்து கொண்டிருக்கின்றாள்.

 பள்ளிக்கூடம் சென்று அஸருக்கு வீடு திரும்பும் வரைக்கும்  பிடி உடைந்த  அலுமினிய ஸ்கூல் பெட்டியில்தான் கடிகாரத்துக்கு உறக்கம்.. வீட்டுக்கு வெள்ளையடிக்க வந்த ஓடக்கரை இராமலிங்கம் கை தவறுத;லாக அந்த பெட்டியை கீழே போட்டு உடைக்கும் வரைக்கும் அந்த வாசம் நீடித்தது. பதறிப்போன இராமலிங்கத்தை வாப்பா ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்த்த இராமலிங்கம்  மாவு இசக்கியம்மன் கோயிலில் கடிகார கனத்திற்கு அரிசி மாவில் ரொட்டி சுட்டுக் கொடுத்ததாக சொன்னார்.

 ஓட்டை  அலாரத்தின் சம காலத்தவர் என சிறிய பட்டியலொன்று உண்டு. சண்டையென்றால் நாக்கை மடித்து கண்ணை உருட்டும்  சக மாணவன் கறுப்பு அப்துல்லாஹ் , மூன்றாம் வகுப்பு  கால் சுழாட்டி நாராயணன்  சார், மெலிந்த வெள்ளை பிளாஸ்டிக் குழாய்க்குள் பாதி ஏறியிருக்கும்  மஞ்சளும் பழுப்புமான மழை நீர், இவற்றுடன் எனது ஓட்டை  அலாரமும்  சேர்ந்து  நினைவிற்கு வரும்போதெல்லாம் அது சிறுனா பள்ளியில் கந்தூரி விழா  நடக்கும் காலமாக இருக்கும்.  பெரு மழை பெய்த பின் வரும் மறு நாள் காலையில் அடியில் வெளுத்தும் தலையில் கறுத்தும் நிற்கும் வானமானது  ஒரு மூடுவண்டிக்குள் இந்த நினைவுகள் அனைத்தையுமே  மொத்தமாக தவறாமல் ஏற்றி வரும்.

 பால்ய  நினைவுகளுடன்  நெடுந்தொடர்ச்சியைக் கொண்ட  ஓட்டை அலாரத்தின் துளைகளில்  சிறு சிறு மின் கம்பிகளை  முன் பின்னாக மாட்டி பார்க்கும்போது அது ஓர் அறிவியலாளனுக்கான கனவாகி கபாலத்தின் ஒரு மூலையில் மின்னும்.  கணக்கு பாடம் வராதவன் அறிவியலாளனாக முடியாது என்ற பேருண்மைகளெல்லாம் உறைக்கும் முன்னருள்ள  நினைப்பு அது. ஆனால் புகை போக்கி வழி  சோவியத் பயணக்கனவைப்போல அந்த நினைப்பு  அத்தனை சுவை மிக்கதாகவும் கிளர்வூட்டுவதாகவும் இல்லை என்பதும் உண்மை.

 பள்ளி நாட்களுக்குப்பிறகு எழுந்த  வாழ்க்கையின் உலை தகிப்பு மணியையும் என்னையும்  வெவ்வேறு மூலைகளில் ஒதுக்கி நிறுத்தியது.

 புயல் மழை கடந்து வாழ்வின் தலையாய நிறங்களில் ஒன்றாக எழுத்து ஆகிய போது மூச்சு விடுவதற்கான நிதானம் கிட்டியது. புதிய தேர்வுகளும் விருப்பங்களும் பெரு மழையின் பொழிவாகி  உள்ளுக்குள் வந்து  தேங்கின.

 ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓர் இளந்தூறல் நாளில் புளிச்சோற்றுடன்  பொறித்த கறியையும் பொட்டலங்கட்டிக் கொண்டு  நண்பர்களுடன்  திருவனந்தபுரம் நாலஞ்சிறாவில் உள்ள கட்டிட காந்தி  லாரி பேக்கர் இறுதியாக வாழ்ந்த வீட்டை  போய்ப்பார்த்தோம்.

 அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தவுடன்  கயிற்றில் தொங்கும் அழைப்பு மணிதான் முதலில் கண்ணில் பட்டது. இது பற்றி நான் சிற்றிதழொன்றுக்கு  எழுதிய கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டுவது ஒன்றும் பிழையில்லை. கதைக்குள் கட்டுரையின் வரவு மன்னிக்கத்தக்க அளவில் இருக்கலாம் என்பது புதிய கதை இலக்கணவாதியின்   வரையறை.  

 .… “ அந்த சிவந்த வீட்டின் முகப்பில் உலோக மணி ஒன்று கயிற்றில் கட்டப்பட்ட கருத்த  வவ்வாலாகி தொங்கிக் கொண்டிருந்ததுகடந்த காலத்திற்குள் இலயித்த  உறக்கம். கயிற்றை இழுத்தபோது அது தன் உறக்கம் கலைத்து. ‘ டிங்க்’  என்ற நாதத்தின் முதல் துளியை வீட்டிற்குள் அனுப்பியதுமுதல்  நாதத்தின் தொடர்  ரீங்காரத்தை மணி தனக்குள்ளேயே சுழல விட்டது. அதன் இதத்தில்  மீண்டும் கடந்த காலத்திற்குள் சென்று மெய் மறக்கத்தொடங்கி விட்டது.  அழகிய ஓசையை விதம் விதமாக எழுப்பினாலும் மின்சாரத்தில் இயங்கும் அழைப்பு மணியின் ….. “

 இது வரைக்கும் போதும். மணி தொடர்பாக கட்டுரையின் வரிகள் இன்னும் மீதமிருக்கின்றன. எனினும் நமது கதைக்கு அவை தேவைப்படாது.

 லாரி பேக்கர் வழியாக மணியானது  எனக்குள் மீளும் முன்னர் சிறு கால வரவாக அறிதுயில் போல  அது எனக்குள் மீண்டு போன நிகழ்வொன்றும் உண்டு.

 சென்னை சவுக்கார் பேட்டையில் தொழில் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. துளசிங்கம் தெரு கடைசியில்தான்  அந்த மார்வாடியின் கடை இருந்தது. அந்தக் கடையின் முன் வாசலுக்கருகில் எப்போதும் மடி பெருத்த ஒன்றிரண்டு மாடுகள்  நின்றபடியோ உட்கார்ந்தபடியோ இருக்கும். சாணிக்குழம்பிலும் மாடுகளின் மூக்கிலுமாக ஈக்கள் மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தன.

 மார்வாடி சரக்கு கேட்கின்றார் என ஒருநாள் காலையில்,  தரகர் தொலைபேசினார். தெருமுனையில் எனக்காக காத்திருந்த அவர் “ ஏன் இவ்ளோ லேட்டு?” என்றார்.

 “ எலக்டிரிக் ட்ரெயின்ல நல்ல கூட்டம் அதுனாலத்தான் “

 “ ஆமா தம்பி. பொருள பாதுகாக்குறதுதான் முக்கியம். வாங்க போவோம் “

  “சேடு மெட்ராஸ்  வந்து முப்பது வருஷமாச்சு “ என மெல்லிய மூச்சிளைப்போடு பீடி நாற்றமும் இழையோட  சொன்னார்  தரகர் பொட்டி முத்து .

 பாவம் பொட்டி முத்து. அவர் இந்த சந்தைக்கு வந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகி விட்டதாம். அன்றன்றைக்குள்ள அப்பத்தை மாலையில்  வீட்டம்மா பறித்து விடுவதனால் தனக்கென்று ஒன்றும் மிச்சமில்லை என தணிந்த குரலில் சொன்னார்.  எதிரே அவரது மனைவியே நிற்கும் பாவனை.

 கடைக்குள் ஏறினோம்.  சந்தனத்திரியின் மணமானது  குளமாக நிறைந்திருந்தது . சுவற்றிற்கும்  தரை மெத்தைக்கும் வேறுபாடு தெரியாத  தூய வெண்மை.

 வாசலருகில் மெத்தைக்கு மேல் கரு ஊதா விரிப்பு போடப்பட்டிருந்தது இடது சுவற்றின் மரத்தாங்கில்  பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது  அகண்ட பாரத வரைபடம்.

 “ ஆவ் ஜீ நமஸ்தே “ என கைகளைக் கூப்பியவாறு கண்களால் அளந்து சிரித்தார்  வினய் அகர்வால் . ஒற்றைக்கண்ணிலிருந்து மட்டுமே அவர் சிரித்தததாக  நினைவு.

 கதவைத்திறந்து நுழைந்தவுடன் வெளிக்காற்றுப்பட்டு  நீலக்கறுப்பு நிறத்தில்  குஞ்சலங்கட்டிய  ஃபெங் ஸுயி மணி ஒலி எழுப்பியது. சிறு குழந்தை, குட்டி நாய், குட்டிப்  பூனையின்  சிணுங்கல்.

 அவரிடம் , “அண்ணே ! இத எங்க வாங்கினீங்க? எனக்கு ஒன்னு வேணுமே “என்றேன்.

 “ நம்போ சொக்கார்தான் விக்றார்பா  காசி செட்டித்தெருவுலே.  ஓணும்னா வாங்கித்தர்றேன் பாய் “

 “ தேங்க்ஸ் அண்ணே!  காசத்தந்தர்றேன் “

 “  அர்ரே பாய் !  பைஸா கியா ? பைஸா? பைஸா கி பாத் சோடோ பாய் . கொண்டு வந்த சர்க்கு காட்டு பாய் “

 துகில் மெத்தையில் அமர்ந்து  கல் மடிகளை ஒவ்வொன்றாக பிரித்துக் காட்டினேன். தலையை மெல்ல ஆட்டியவாறே ஒவ்வொரு மடியாக பிரித்துப் பார்த்தார் வினய் அகர்வால். பொட்டி முத்து தன் தோள் துண்டை சரி செய்தவாறே என்னைப்பார்த்து புன்னகைத்தார்.

 தான் அளிக்கும் மசாலா  கூட்டிய ஒரு  குவளை தேநீருக்காக   கடைக்கு சரக்கு கொண்டு வரும் வாடிக்கையாளர் அதை குறைந்த விலைக்கு விற்று விடுவார் என்பதில் அபார நம்பிக்கை உள்ளவர் வினய் அகர்வால். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் எனக்கு அந்த மணியை காசி செட்டித் தெருவிலிருந்து வாங்கி தந்தார்.   நானும்  அதற்கான காசைக் கொடுத்து விட்டேன். ஆனால் கொண்டு போன சரக்கை அவரின் நம்பிக்கைப்படியோ அல்லது  எனது எதிர்பார்ப்புபடியோ ஆக மொத்தத்தில்  எப்போதுமே விற்க இயன்றதில்லை

 மார்வாடி மூலம் வாங்கிய அந்த ஃபெங் ஸுயி மணியை எனது சென்னை அறையில் தொங்கப்போட்டிருந்தேன். . அதன் இனிமையெல்லாம்  கொஞ்ச நாளைக்குத்தான். காரணம் நோஞ்சானின் காலாகி ஒன்றுக்குள் ஒன்றாக பின்னி ஒரு ஓசையிலும் உருப்படியில்லை.  சில  மாதங்களிலிலேயே தூசு அப்பி அது ஆண்டு மாறிப்போன பிறகு மணியின் மீதான  விருப்பமும் நாட்டமும் சொல்லாமல் கொள்ளாமல் போயே விட்டது.

 அதன் பிறகு வழமை போல மணிக்கும் எனக்குமான உறவில் நீண்ட இடைவெளி. வயிற்றுக்காக வேண்டி  நாள் வாரம் தெரியாத ஓட்டம். எனது நேரத்தின் மீதான இழு கயிறு என் கைக்கு வருவதற்காக சில வருட காத்திருப்பு.

 எனக்கான பக்கங்களில் நான் எழுதத் தொடங்கிய நாட்களிலிருந்து  ஒரு நாளில் ஆளியாறில் உள்ள அன்றில் காட்டுப்பள்ளிக்கு போயிருந்தேன். அதன் வளாக  முகப்புக் கூரையில் பழைய  இரும்பு மணியொன்று  அதன்  நாக்கில் பிணைக்கப்பட்ட   பறவையின் இறகொன்றுடன் தொங்கிக் கொண்டிருந்தது.   காக்கை, மயில் அல்லது ஏதோ  வானத்து உயிரி ஒன்றின் இறகு. மண் மறைந்த கவிஞனின்  தீரா இலக்கணத்தில் ஒன்று மற்றொன்றின் மீதும் அவை இரண்டும் சேர்ந்து, அங்கு  வருகின்ற  மனிதர்கள் மீதும் தீர தீர அசைந்தும் இசைத்தும் கொண்டிருந்தன.

 சிறகு மணியும் அன்றில்  காட்டுப்பள்ளியில் சிதறிக்கிடந்த பழுத்த  ஆலிலைகளும்  நீர்ச்சரமாகி புதிய வழிகளை உண்டாக்கியபடி  நினைவின் முடிவிலி தடங்களுக்குள்  இறங்கிக் கொண்டேயிருந்தன. ஆளியாறு  பயணம் முடிந்து சென்னைக்கு சென்று சேரும் வரைக்கும் மணியும் ஆலிலையுமே  எல்லாமாகி நின்றன.

 ஒரு வார சென்னை தங்கலுக்குப்பிறகு   ஊர் திரும்பினேன்.  அப்போது என் இளைய மகனுக்கு ஆறேழு வயதிருக்கும்,. சில மாதங்கள் கழித்து நான் சென்னைக்கு  திரும்ப புறப்படும்போது  வீட்டுப்படியில் நின்றுக் கொண்டு  “ வாப்பாஹ்  போய்ட்டு வாங்கோஓஓ “ என்றான்.  இரவின் தொடக்க வேளையில் அவனது  குரல் மட்டும் எஞ்சியது. நீண்ட நாட்களுக்கு பிறகான சென்னை பயணம். கண்கள் வழியாக மனது வழிந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது.  ரத்தினாபுரியை ஆட்டோ தாண்டும்போது  ஆண்டர்ஸன் சிஎஸ்ஐ தேவாலயத்திலிருந்து எழுந்த மணியோசை  ஒளியாகியது. ஆயிராமாயிரமாண்டுகளுக்கு பின்னிருந்து கிளம்பிய ஆதி தொனியானது  கனிந்து ஆதுரமாகியது.

 கொஞ்ச நாட்கள்தான். நல்ல வேளை. .அதற்கு பிறகு மணிக்கும் எனக்குமான உறவு மீளலுக்கு நீண்ட காலமொன்றும் எடுக்கவில்லை.

 பெருந்தொற்றின் காலத்தில் மீண்டும் மணியின் மீதான விருப்பம் பெரு விருப்பமாகியது.  அன்றிலில் பார்த்தது போல  காற்றுக்குள்ளிருக்கும் மணியொன்றை செய்ய வேண்டும் அல்லது வாங்க  வேண்டும் என மனம் உரத்தது .

 லோக்கல் ஃபண்ட் ரோட்டிலுள்ள பழைய மரக்கடைக்கடையில் பங்காளியாக இருந்தவர்.  திருட்டு முழியின் காரணமாக மட்டுமே அதிலிருந்து அவர் விலக்கப்பட்டார் என்ற எனது  எண்ணத்திற்கு வலு சேர்க்கும்  அளவில் கள்ளச்சிரிப்பையும் கூடுதல் தகுதியாகக் கொண்டிருந்தவர். தழைய தழைய  பொங்கல் இலவச வேட்டியை  அரசின் முத்திரை வெளியில் தெரியும்படி கட்டும் கசமுத்து , ஆள் விவரமானவர். எல்லா எழவும் தெரியும். கூலக்கடை பஜார் அமிர்தா பேக்கரிக்கருகில்  ஒரு மஃரிப் வேளையில் எதிர்ப்பட்டார். மணியைப்பற்றி கேட்டேன்

 “ அதா ? இங்க,  திஸ்ஸந்தூர்லய்லாம் கெடய்க்காது காக்கா ”

 “ ஏன் கோயில் ஊர்ல கெடய்க்கணுமே முத்தே ”

 “ சொன்னாக்கேளுங்க.  அங்கய்லாம் கெடய்க்காது. அங்க போய் வீணா அலஞ்சு சீரழியுறதுக்கு பேசாம ஏரலுக்கு போங்க. வேண்டிய மாதிரி பழசாட்டும் புதுசாட்டும்  வாங்கலாம் “ என்றார்.

 அடுத்த நாள் காலையிலேயே பைக்கை எடுத்துக் கொண்டு ஏரலுக்குப் போய் விசாரித்த வகையில் பழைய மணியெல்லாம் கிடைக்காது. பாத்திரக்கடைகளில் பழைய மணியை விற்று  பண்டமாற்றாக புது மணியை வாங்கிக் கொள்ளலாம்  என்றார்கள்.

 சிவன் நாடார், தங்கவேல் நாடார்  ராமகிருஷ்ணன் நாடார்  என நீண்ட பெயர்களில் பாத்திரக்கடைகள் வலமும் இடமுமாக மின்னின. கடையிலும் தெருவிலும் வாடிக்கையாளர்களே இல்லை. வழமையான ஏரலாக இல்லை. ஒரே ஒரு கடையில் மட்டும் கூட்டம்.  கூட்டமுள்ள கடைதான் சிறந்த கடை என்ற பொது நினைவு உந்த  சட்டென நுழைந்தேன்.  நடுத்தர அளவில்  ஒரு மணியை எடுத்தேன். “ இத விட பெருசா வேணுமே தம்பி “ என்றேன் கடைக்கார பையனிடம்.

 “ கோயில் மணிதான் வரும் “

 “ அப்ப இதே இரிக்கட்டும் “

 “ எவ்ளவ்?”

 “ பித்தளையில்லா . எடை போட்டுத்தான் சொல்லனும்”

 கையில் வைத்திருந்த மணியில் நிறம் குறைவாக இருப்பது போல பட்டது. மணிக்குவியலிலிலிருந்து  நல்ல மஞ்சள் நிற மணியாக  பார்த்து  எடுத்துக் கொண்டேன்.  தங்கப்பொன் நிறம். அதன் இரும்பு நாக்கால் மணியில் தட்டினேன்.  ‘ டங்ங்ங்” மணியை கரைத்துக் கொண்டு ரீங்காரம் அதன் உச்சி வரை ஏறியது. கடை  ஆடியது.

 நானூறு  ஐந்நூறு ரூபாய்கள் வருமென பார்த்தால்  மணியின் எடை நூற்றி தொண்ணூற்று ஐந்து கிராம். விலை நூற்றி எழுபது ரூபாய்கள்தான்.  மிஞ்சியதில்  சர்வோதய சங்க கதர்  சாரமொன்று  தேறி விட்டது. எதிர் வீட்டு நோனா மஹ்மூதின்  நிக்காஹுக்கு புது சாரமொன்று தேவைப்பட்டுக் கொண்டிருந்தது.

 கோனார் கடையில் கட்டியான பருத்திப்பால் குடித்த கையோடு  தொங்கு  சங்கிலியையும் வாங்கி விட்டு  ஊரிலுள்ள  கொல்லாசாரி பட்டறைக்கு போய் சங்கிலியில் மணியை கோர்த்தேன்.  வீட்டு கூரையின் பத்தடி உயரத்தை கணக்கில் கொண்டு ‘எஸ்’ வடிவிலான கொக்கியையும் அடித்து வாங்கியாகி விட்டது.  

 எனது படுக்கையறையில் தொங்கிக் கொண்டிருந்த லாந்தர் விளக்கை கூடத்திற்கு   இடம் மாற்றி விட்டு  மணியை தொங்க விட்டேன்.  சுவர் கடிகாரத்தின் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான எண்களை மறைத்தவாறே  சங்கிலிப் பாம்பு  நிலங்கொள்வது போல  தலையெடுத்து தொங்கியது.    

 இரண்டு சாளரங்கள், இரண்டு வாயில்களின் கதவுகளையும் காற்றுக்காக திறந்தாகி விட்டது. ஆனால் என் புதிய தங்கப் பொன்மணி  விறைப்பாகவே தொங்கிக் கொண்டிருந்தது. அசைவில்லை. ஆட்டமில்லை.  டிங்கும் இல்லை டங்கும் இல்லை..  மின் விசிறியையும் முழு வேகத்தில் ஓடவிட்டும் பார்த்தேன்.  சொல்லி வைத்தாற் போல சங்கிலியும் மணியும் சேர்ந்து  வலமும் இடமுமாக மட்டுமே அசைந்து  மறுகின . டிங் டங் ம்ஹூம்.  என்ன எழவு பகையோ? பிணக்கத்தின் முழு சாரத்தில் காற்றும் மணியும் தள்ளி தள்ளியே  நின்றன.

 “அடி முட்டாளே! கனமான உலோகத்தை காற்று எப்படி அசைக்கும்?“ முதலிலேயே இதை யோசித்திருக்க வேண்டும்.  எழுதினால் புத்தி வருமென்பதெல்லாம்  நவீன மூட நம்பிக்கையேதான். மணி கொள்முதலுக்குப்பின்னரான மூளைக் கொள்முதல். அன்றிலில் பார்த்த மணி ஏற்கனவே இற்றுப்போய் தன் கனத்தை இழந்திருந்தது.  போக்கற்று காற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கின்றது.

 “ அந்த வியாக்கியனமல்லாம்  கெடக்கட்டும். உடுறா. போனது போவட்டும் ஆனது ஆவட்டும்  ஆசப்பட்டு செலவு பண்ணி அலஞ்சு திரிஞ்சு மணிய வாங்கியாச்சுலே . என்ன ஆனாலும் சரி அடிடா அடி “

 அறைக்குள் வரும்போது போகும்போதெல்லாம்  மணியடிப்பது என்றாகி விட்டது. ‘ கிண் கிணி’ என நாதம் பிச்சிப்பூவாக உதிர்ந்தது. அதிகாலையில் மட்டும் மணியடிப்பதில்லை. காரணம் புலர்வேளையானது அந்த நாளின் இளங்குழந்தை. அதனை தொந்திரவுபடுத்துவதற்கில்லை.  வறண்டு போகும் நாளின் மீதிப்பகுதியை மணியடித்து  நனைத்துக் கொண்டிருந்தேன்.

 “ ஆமா சும்ம சும்ம காத்துல அதுவா அடிச்சுட்டு கெடந்தாலும் தூக்கமும் கெடும்தானே “ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இந்த  வலிந்த  ஒரு பக்க சமாதானத்திற்குப்பிறகும் கூட காற்றானது எனது  பொன் மணியுடன் சமரசம் செய்து கொள்ளவேயில்லை.

 மணியை மாட்டிய பிறகு எனது அறைக்கு முதன் முதலில் வந்த ஏர்வாடி காதர்   “ என்ன காக்கா எந்த கோயில்லேர்ந்து மணிய எடுத்துட்டு வந்தியோ? “ என்றான்.

 “ ஏம்பா! ஒன்னப்போலவே அது நீட்டமா தொங்குதுங்குற பொறாமையா?”

 பச்சை சிரிப்பொன்றை சிரித்தான் அவன்.

 அதன் பிறகு யார் எனது அறைக்கு வந்தாலும் நானாகவே முந்திக் கொண்டு  எனது புத்தக பேழைக்கு மேலே வைக்கப்பட்டுள்ள சிறிய ராட்டை ( தில்லி காந்தி நினைவகத்தில்  வாங்கியது )  ,  பல  நிற கண்ணாடிக் குப்பிகள், அவற்றினுள்ளிருக்கும் குன்றி மணி, கடல் மணல், பச்சையாற்றுக் கற்கள்,  கடலில் குளிக்கும்போது கிடைத்த பல வகை கடல்  சங்குகள் இவற்றின் வரிசையைக் காட்டி மணி பற்றி கேள்வி எழாமல் பார்த்துக் கொள்வேன்.  ஓருவேளை அந்த கேள்வி அவர்களுக்குள்ளிருந்தாலும்  பஞ்ச பூத பிரதிநிதிகளின்  இருப்பில் மணி பற்றிய கேள்வி சிறுத்து கரைந்து மறைந்து மறந்தே போய் விடும்.

 புது மாட்டை குளிப்பாட்டிய கதையாக  முதல் நாளில் இரவு பகல் என அடித்து தீர்த்தேன். அந்த அடியில் ஒரு மருத்துவ அதிசயம் நடந்தது. கேளாமைக்கு அது மருந்தாகவும் மாறியது. பத்து முறை கத்தினால் ஒரு முறை மட்டுமே காது கேட்கும் என் உறவுக்கார பெண்ணொருத்தி என் வீட்டில் தங்கியிருக்கின்றாள்.  தீரா சளித்தொல்லை அவளின் கேள்வித்திறனை  பாதித்திருந்தது, மணியடிக்கும்போதெல்லாம்  நான் கூப்பிடுவதாக நினைத்து என் மனைவியை  திரும்ப திரும்ப கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  நான் நடப்பை எடுத்து சொல்லும் வரைக்கும் இந்த சிக்கல் நீடித்தது.

 மணி விஷயத்தில் நான் நினைத்தது நடக்காமல் ஆனவுடன் மனமெல்லாம் தளரவில்லை. அரிச்சுவடி பாடத்தை திரும்பத்  தொடங்கினேன். ஆறாம்பள்ளித்தெரு  எஸ்ஸெம்டி சைக்கிள்  கடையிலிருந்து  ஐந்து ரூபாய் கொடுத்து பழைய மணியொன்றை வாங்கி வந்து மாடத்திலுள்ள இரும்பு கிராதியில்  கட்டிப்போட்டேன். என்ன பிரச்னையோ? அதற்கும் காற்றுடன் ஒத்துப் போகவில்லை . கல் மாடு போல போட்ட இடத்திற்கு நம்பிக்கையாக ஆடாமல் அசையாமல் கிடந்தது.

 வழமையாக காலை மதியம் இரவு  வேளைகளில் என்னிடம் வரும்  பேத்திக்காக அந்த மணியை இழுத்து இழுத்து அடிப்பேன். பேத்திக்காக என வெளியில் சொல்லிக் கொண்டாலும் அது எனது தோல்விக்கான ஓர் ஆறுதல். மணிகளின் முரட்டு பிடிவாதத்தின் மீதான கல்லெறிதல்  என்பதுதான் முழுக்க சரியும் உண்மையும் கூட .

 பேத்திக்கான அடி முடிந்த  பிறகு அது மண்ணாங்கட்டியாகி விடும். அசைவுமில்லை ஓசையுமில்லை. தனிமையில் தன்னிரக்கத்தின் குட்டையில் அது ஊறிக்கிடப்பது போல ஒரு மதிய வேளையில்  தோன்றியது. வட்டக் கண்ணு  கூஸ் தோட்டத்தில் பொறுக்கிய  மயிலிறகு ஒன்றை மணிக்கும் கிராதிக்கும் இடையில்  செருகி வைத்தேன். சிறகின் மென்மையிலாவது  சமாதானம்  கிடைக்கட்டுமே என்று. நான் தூத்துக்குடி போயிருந்த ஒரு காலை வேளையில் வீட்டு  வேலைக்கு வந்த நாடாத்தியக்கா மயிலிறகு துர்ச்சகுனம் என  அதை எடுத்து  வீசி விட்டாள்.

  ஞாயிற்றுக்கிழமை மதியம் என்னிடத்தில் வந்த  பேத்திக்காக வழமை போல அந்த மணியை இரும்பு கிராதியில் மூன்று முறை தட்டி ஒலியெழுப்பினேன். தன் அணில் பற்களால் அதைப்பார்த்து சிரித்தாள் அவள்.  அவளின் பல் ஈறு சிவப்பு கொய்யாவைப் போலவுமிருந்தது. மணியை எடுத்து தன் கன்னத்தில் வைத்தாள். குளிர்ச்சியில் அவள் முகம் மலர்ந்தது. மணிக்குள்ளிருந்த பேக்காலி எறும்பொன்று அவள் மூக்கின் மேல் ஓடித்தடுமாறி கீழே விழுந்தது.

 விளையாட்டு முடிந்து அவளும் தூங்கப் போய் விட்டாள். பள்ளமொன்று  அறைக்குள்  குழிந்தது. வெறுமையின் பள்ளம். ‘க்ளுக்’ .  நாசியின் வழியாக கபாலத்துக்குள் சுள்ளென உறைத்துக் கொண்டு ஏறியது குழித்திரவம்..மணியின் சாறு.  மையத்தில் காலை உதைத்து மேலேறினேன்.  சுவர்க்கடிகாரத்தில் மணி  மூன்று.  வானொலி நாடகத்திற்கான நேரம். அண்ணாமலை பாண்டியனின் தயாரிப்பில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த வரலாற்று நாடகத்தில் சேடிப்பெண்ணிடம் சோழமாதேவி கடிந்துக் கொண்டிருந்தாள்.   “ டங் “  ஒலி கிளம்பியது. பத்து கோபத்திற்கு சேர்த்து ஒரு டங்.   நாடகத்திலும் மணியடிக்கவில்லை. நான் வெளியில் யாரோ எதையோ தட்டுகிறார்கள் போல என நினைத்துக்  கொண்டேன். நாடகத்தில் மும்முரமானேன்.

 கொஞ்ச நேரத்தில் மீண்டும் ‘ டங் ‘ . வானொலியின் ஒலியளவைக் குறைத்தேன். கடையக்குடி  தேவாலய  ஒலி பெருக்கியிலிருந்து  “ கர்த்தருக்குள் பிரியமானவர்களே” வந்து கொண்டிருக்கும்போதே  மீண்டும் ஒரு ‘டங்’.  இரும்பு கிராதி மணிதான்.  காற்றின் சின்ன அசைவில்  ஒரு  ‘ டங் ‘.

 ‘ டங் ‘ இன் கிளர்ச்சியில் அதன் ஆழ்பொருளை  தேடிக் கொண்டிருக்கும்போது  மீண்டும் ஒரு மணி ஒலி. ஆனால் இம்முறை அது ஒரு மரக்கட்டை மீது மோதியிருக்கும் போல.   ‘ நங்க் காகி  ஒலித்தது..  எப்படியும் அதற்கு தொண்ணூறு வயதிருக்கும்.

------------------------------------------------

 

19/11/2022 சனிக்கிழமை அன்று அகில இந்திய வானொலியின் திருவனந்தபுரம் நிலையத்தின் ' தமிழ் சொல் மாலை ' நிகழ்ச்சியில் ஒலிபரப்பான மெழுகு மணி சிறுகதையின் வானொலி வடிவம்










 

 

No comments:

Post a Comment