Friday, 23 October 2020

ஏ.தர்வேஷ் முஹம்மத்-- நினைவேந்தல்


காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளில் ஒருவருமான அல்ஹாஜ் . தர்வேஷ் முஹம்மத் இன்று ( வெள்ளிக்கிழமை 23/10/2020 ) காலை விடை பெற்றுள்ளார்.

 

கொரோனா பாதிப்பிற்காக மருத்துவமனை சென்றவர் பின்னர் அதிலிருந்து மீண்டு விட்டார். எனினும் உடல் சில உபாதைகளை தொடர்ந்து சந்தித்து வந்தது. இன்று காலை 06:30 மணியளவில் உயிர் பிரிந்திருக்கின்றது.

 

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளில் ஒருவரான அவர் அதன் முழு நேரப்பணியாளராக தன்னை ஒப்புக் கொடுத்தவர். கல்வி உதவித்தொகை கேட்டு வரும் விண்ணப்பதாரர்களை கனிந்த முகத்துடன் வரவேற்கும் அவர் அலுவலக ஆவணங்களை பராமரிக்கும் அழகும் நேர்த்தியும் தனி.

 

அவர் ஒரு இரவுப்பறவை. அதிகாலை வரை விழித்திருந்து இக்ரஃ அலுவலகத்தில் பணியாற்றுபவர். அதனாலேயே அவருக்குள் நீரிழிவு நிரந்தரமாக குடி கொண்டு விட்டது. கொரோனாவிலிருந்து மீண்டாலும் உயர் அளவிலான நீரிழிவின் தாக்கத்தினால் கொரோனாவின் பின்விளைவுகள் அவரைத் தின்று விட்டன.

 

 நேரில் சந்திக்கும்போதெல்லாம் அவரிடம் நான் சொல்வது “ இரவு கண் விழிக்காதீர்கள். இரவை ஒரு போதும் பகலைக் கொண்டு ஈடு கட்டவியலாது. இப்படி செய்தால் ரொம்ப நாள் பணியாற்றவும் முடியாது “ என சொல்லும்போது இளம் புன்னகையுடன் அவர் சொன்ன மறுமொழி “ அமைதியான சூழலில்தான் பணி செய்ய முடிகின்றது “

 

கல்விப்பணிக்கு வருவதற்கு முன்னர் அவர் வளைகுடாவில் நல்ல ஊதியத்தில் இருந்தவர். வளை குடா வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னரே அவர் ஒரு சுயேச்சை ஊடகவியலாளர் & எழுத்தாளர். அல்ஹிதாயா மாத இதழில்  தொடர்ந்து எழுதியவர்.

 

விடியல் வெள்ளி மாத இதழில் நான் இருந்த நேரம். வளை குடாவிலிருந்து ஒரு கனத்த உறை அலுவலக மேசையில் கிடந்தது. விடியலுக்காக அவர் அனுப்பிய கட்டுரையாக்கம். துக்ளக் சோ வின்  வல்லடி வழக்கொன்றிற்கு தர்வேஷ் எழுதிய மறுமொழி. அதைப் படித்துப் பார்த்த விடியல் வெள்ளியின் நிறுவனரும் அன்றைய ஆசிரியருமான மு.குலாம் முஹம்மது “ கச்சிதமான ஒழுக்கு “ என வியந்தார் .அந்த மாத இதழில் அந்தக்கட்டுரை முழுவதுமாக வெளியிடப்பட்டது.

 

பன்முகத்தன்மை கொண்ட அவர் இக்ரஃ கல்விச் சங்க பணிக்கு வந்த பிறகு தனது மற்ற திறன்கள் அனைத்தையும் மயில் தன் தோகையை சுருட்டுவது போல சுருட்டிக் கொண்டார். அவரின் அனைத்து ஆற்றல்களையும் கல்விச்சங்கம் என்ற மையப்புள்ளியில் மட்டுமே  குவித்து பணியாற்றினார்.

 

நாங்கள் எழுத்துமேடை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது “ மிக ஆசையாக இருக்கின்றது. என் மனத்திற்கு மிக நெருக்கமான நிகழ்ச்சியும் கூட. ஆனால் வர முடியவில்லையே “ என வருந்தினார். நான் மிகவும் வற்புறுத்தியதன் பேரில் ஒரு நிகழ்விற்கு வந்து அதை நடத்தியும் தந்தார்.

 




என்னை விட இரண்டு மாதங்களே இளையவர். ஆனால் என்னை காக்கா என்றே அழைப்பார். எப்போது கண்டாலும் அமைதியும் கனிவும் கொண்ட அவரின் முகத்தைப்பார்த்தவுடன்  ஒரு மலரைப்போல மலரும். பொது வேலை தொடர்பான ஆலோசனைகளுக்கு சிறந்த முறையில் வழிகாட்டுவார். அதே போல் அவர் செய்நேர்த்தி மிக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டாளரும் கூட.

 

இன்று காலை அவரின் ஜனாஸாவைப்பார்க்கப் போயிருந்தேன். அவர் முகத்தில் இரட்டை அமைதி.  அவர் வீட்டிற்கு நான் போவது இது இரண்டாம் தடவை. முதல் தடவை போனது அவர் வீடு கட்டியபின் எங்களுக்கெல்லாம் அவர் தந்த தேநீர் விருந்திற்காக.

 

நான் வடகம் செய்து விற்றுக் கொண்டிருக்கும்போது அதன் விளம்பரத்தை பார்த்து என்னை தொடர்பு கொண்டார். அதுதான் நான் அவரிடம் கடைசியாக பேசியது.

 

ஓர் இரவுப்பறவையைப் போல புலர் வேளையில்  பறந்து சென்று  விட்டார்.


 

No comments:

Post a Comment

நிலத்து மழை