Saturday 10 October 2020

தபாலாபீஸ்





அக்டோபர் 10,  தேசிய அஞ்சல் தினம்

 

கொல்கத்தாவின் சாந்தினி சௌக்  அஞ்சலக முத்திரை குத்திய  மஞ்சள் நிற  அஞ்சல் உறையொன்று எனது உம்மா வீட்டு முற்றத்தில் அஞ்சல்காரர் பாண்டியனின் வீச்சில்  வாரமொரு முறை வந்து விழும்.

 





இது போன்று கடிதங்களை வீசுவதாலும் முகவரியிலுள்ள பெயர்களை ஒருமையில் கூப்பிடுவதாலும்  பாண்டியன் இடம் மாற்றம் செய்யப்பட்டது தனிக்கதை.

 

 

இலங்கை மாத்தளையில் படித்து வளர்ந்து கொல்கத்தாவில் தொழில் செய்யப்போன இடத்தில்  வந்த காய்ச்சலில்  மூளை பிசகிப்போன  மாத்தளை ஹபீப்  அனுப்பும் கடிதம்தான் அது. எழுத்துக்கள் ஒரு வெள்ளைத்தாளில் ஏறு இறங்கு வரிசையில் இருக்கும். இப்படியாக பத்து பதினைந்து பக்கங்களிருக்கும் சினைக்கடிதம்.

 

 

வாப்பாவிடமிருந்து கொழும்பிலிருந்து வரும் வானஞ்சல், மாமாவிடமிருந்து ஹாங்காங்கிலிருந்து வரும்  சிப்பம் எனத்தொடங்கி வாசிப்பும் வானொலி கேட்பும் தொடங்கிய வயதிலிருந்தே  கடிதமெழுவதும் பணவிடை அனுப்புவதுமாக அஞ்சலகத்துடனான எனது உறவு தீவிரமாகி விட்டது எனலாம். 

 

 

எனது சண்டைக்கார உறவினொருவரை பலிவாங்குவதற்காக எங்கள் வீட்டு திருமண அழைப்பிதழை அஞ்சல்தலை ஒட்டாமல் அவரின் முகவரியெழுதி  அஞ்சலில் போட்டு விட்டேன். மூன்றாம் நாள் அந்த அழைப்பிதழ் கடிதம் எங்கள் வீட்டிற்கே திரும்பி வந்தது. நீங்கள் தண்டக் கட்டணம் செலுத்த வேண்டும். என்றார் அஞ்சல்காரர். நாங்கள் ஏன் செலுத்த வேண்டும்? என எதிர்வாதம் புரிந்தேன். நீங்கள் தண்டம் செலுத்தாவிட்டால்  அஞ்சல் நிலைய சுவற்றில் தொங்க விடுவோம் என்றார் அவர். நான் எறிந்ததை நான்தானே சுமக்க வேண்டும். அசிங்கத்திற்கு அஞ்சி தண்டப்பணம் செலுத்தி அதை திரும்ப பெற்றேன்.

 

 

அகில இந்திய வானொலி,  தமிழ் ஒலிபரப்புக்களை வழங்கிய / வழங்கி வரும்  அயலக வானொலிகளான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரேடியோ பாக்கிஸ்தான், , மாஸ்கோ வானொலி , பெய்ஜிங் வானொலி, பிபிசி, வெரித்தாஸ் வானொலி இவைகளுக்கு  மே/பா ( மேற்பார்வை ) என போட்டு அந்தந்த தூதரக முகவரிகள்  அல்லது அவர்கள் அறிவிக்கும் உள் நாட்டு அஞ்சல் பேழை எண்களுக்கு கடிதம் எழுதி அங்கிருந்து வரும் நாட்காட்டி, வண்ண அட்டைகளுக்காகவும்,  தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபா, நடுவண் ஹிந்தி இயக்குனரகம்  ஆகியோர் அனுப்பும் பாட நூல் தொகுதிகளுக்காகவும்  கிட்டதட்ட அஞ்சலகக் காத்திருப்பு என்பது அன்றாடமாகிப்போனது.

 

 

புலிகளின் குரல் தலைமறைவு வானொலி/ இதழுக்கான கடித முகவரி சென்னையில் இருந்தது.  உயர்தர தாளில் புலிகளின் இலச்சினை பொறித்து மாவீரர் சாவு உள்ளடக்கமாக வண்ண வண்ண படங்களுடன் கூடிய  போர் முனை செய்திகள், புலிகளின் அரசு நிர்வாக சாதனைகள் என நிரம்பிய பக்கங்கள். நான் எழுதும் கடிதங்களுக்கு அவர்களும் அஞ்சலட்டையில்தான் மறுமொழி போடுவர்.

 

 

அகில இந்திய வானொலியின் ‘ வானொலி ‘ இதழின் சந்தாதாரர் நான்.  வெண் கருக்குடன் இதழ் வந்து சேரும்  இதழின் அழகே தனிதான்.

 

 

 வீட்டிற்கு வரும் முன்னரே  கடிதங்களை  அஞ்சலகத்தில்  காத்துக் கிடந்து வாங்குவதென்பது தட்டுக்கு வரும் முன்னரே சட்டியில் உண்ணப்படும் கறிக்கு நிகர்த்த சுவைக்கொப்பாகும் .



தினத்தந்தியின் தாக்கத்தில்,  சாகசமென்றெண்ணி அஞ்சல் நிலையத்திற்கு சிவப்பு மையில் மிரட்டல் கடிதம் அனுப்பி அதை அவர்கள் கட்டெடுக்கும் வரைக்கும் காத்திருந்து நானும் தம்பியும் ஏமாந்து திரும்பி வந்தது.  இணக்கத்தோடு ஒட்டியதுதானே பிணக்கமும்.

 

 

அஞ்சல் நிலைய வலது முடுக்கின் கடைசி சாளரத்தினருகில்தான்  அஞ்சல்காரர்களின் கடித பிரிப்பு மேசை போடப்பட்டிருக்கும்.  அதில் கூடுதல் ஹாங்காங்கிலிருந்து வரும் பழுப்பு உறை பொதிகள், அரபு நாட்டிலிருந்து வரும் பொதிகள் தவறாமல் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் போய் விடுவேன். கொட்டிக்கிடக்கும் கடிதத்தை அந்தந்த அஞ்சலகக்காரரின்  வினியோக முறை வட்ட வாரியாக பிரிப்பர். அது வரை சாளரத்தின் கீழ் கதவு அடைபட்டிருக்கும். 

 

 

ஒவ்வொரு அஞ்சல்காரருக்குமான கடிதங்கள் ஒதுங்கிய பிறகு அவர் அவற்றை தெருவாரியாக அடுக்குவார். அந்த சமயத்தில்தான் கீழ் சாளரம் திறக்கப்படும்.  அதுவரைக்குமெல்லாம் பொறுமை காக்கவியலாமல்  சாளர திண்டில் ஏறி நின்று எட்டிப்பார்த்துக் கொண்டே இருப்பேன்.

 

 

மின்சார அடுப்பில் காய்ச்சப்படும் அரக்கின் மணம் அஞ்சலகம் முழுக்க பரவியிருக்கும். அரக்கு காய்ச்சினாலும் காய்ச்சாவிட்டாலும் அந்த மணம் அங்கு வீசிக் கொண்டிருக்கும்.  அன்றைய காலகட்டத்தின் அஞ்சலக மணம். அந்த மணத்தின் கிறக்கத்தில் ஏறி நிற்றலின் வலியை கால் உணராது.

 

 

சாளரத் தொங்கலில்  நான் மட்டுமில்லை. என்னுடன் எங்களின்  அம்பலமரைக்காயர் தெருவைச் சேர்ந்த பெரியவர் வாப்பா நெய்னாவும் தன் முதுமையையும் பொருட்படுத்தாமல் ஏறி நிற்பார்.

 

 

ஒரு நாள் காலை நான் மட்டும்தான் ஏறி நின்றேன். வாப்பா நெய்னா வரவில்லை. கீழ் சாளரம் திறந்த பிறகு “ வாப்பா நெய்னா நேத்து கூட தபால் பாக்க வந்தாரே” என  அஞ்சல்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர் அன்று அதிகாலைதான் இறந்திருந்தார்.


 

-------------------------------------

 

 

கிடு கிடு நடை ஷம்ஷுத்தீன், கருப்பைய்யா,  ஐந்து நொடிகளுக்கு ஒரு தடவை உதடு வலிக்கும் அய்யர், நெய்னா முஹம்மது, நெட்டை யூஸுஃப் பாய் உள்ளிட்ட ஊழியர்கள், அலுவலர்களின்பெயர்  முகங்களும், அஞ்சல்காரர்களில் வேல், ராமச்சந்திரன், அப்பன் என்ற பெயர் முகங்கள் மட்டுமே  நினைவில் இருக்கின்றன.

 

 

எங்கள் வட்டமுறை அஞ்சல்காரராக இருந்த வேலை அண்மையில் சந்தித்தேன். ஆள் மெலிந்திருந்தார். ஆனால் நலமுடனிருக்கின்றார். இவரைத்தவிர  பழைய அஞ்சல்காரர்கள் எல்லோரும் மண் மறைந்து விட்டனர்.

 

 

இந்தக்கூட்டத்தில்  ஒரு அஞ்சல்காரர் இருந்தார். அவரின் தந்தையும் காயல்பட்டினம் அஞ்சலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  தந்தைக்கு பாக்கு பிள்ளை  என்று செல்லப் பெயர் உண்டு . இலங்கையில் வணிகம் புரிந்த ஊர்க்காரர்கள் இப்போது போலெல்லாம் மாதங்களுக்கு சில முறை என தாயகம் வருவதில்லை. தொழில் பார்த்து விட்டு சில வருடங்கள் கழித்தே ஊர் வருவர்.  தங்களது உழைப்பின் சேமிப்பை இலங்கையில் பாதுகாக்க இயலாது என்பதால்  தங்கத்துணுக்குகளாக ,மாற்றி நாரைப்பாக்குக்குள் மறைத்து பொதிவஞ்சலில் அனுப்புவார்கள். இதை எப்படியோ அறிந்திருந்த பாக்குப்பிள்ளை தங்கத்தை நேக்காக உரிந்து விட்டு  நாரைப்பாக்கை பாதுகாப்பாக உரிய முகவரிகளுக்கு கொண்டு சேர்த்து விடுவார்.

 

 

இந்த பாக்கு பிள்ளையை அவரது முதுமையின் நாட்களில் நான் பார்த்திருக்கின்றேன். இடக்கண் பார்வையை இழந்து விட்டிருந்தார். செங்குழியாகி இருந்தது கண். அந்த சமயம் அவர் வணிக நிறுவனமொன்றையும்  நடத்தி வந்தார்.  அந்த கனிந்த வயதிலும் அவர் பேச்சில் ஒரு வெக்கையடிக்கும். அவர் இறக்கும்போது தன் சொத்துக்களை பிள்ளைகள் பெரில் எழுதாமல் வேறு யாருக்கோ எழுதி வைத்து விட்டார்.

 

 

ஒவ்வொரு நாளும் தன் வீட்டுக்காரரிடம்  இருந்து கடிதத்தை எதிர்பார்த்திருந்த ஒரு பெண்மணி பாக்குப்பிள்ளையின் மகனிடம் “ தவால் வந்திருக்குதா?” என நாள் தவறாமல் கேட்பார். இவரும் இல்லையென்ற அமங்கலச் சொல்லை  தவிர்த்து  “ நாளய்க்கி பாப்போம்மா” என கையை ஆட்டி விட்டு போய் விடுவார்.

 

 

ஒரு நாள் அஞ்சல்காரரின் “ நாளய்க்கி பாப்போம்மா”  என்ற வழமையான மறுமொழியைக் கேட்ட அந்த பெண்மணி உள் புகைச்சலில் “ ஹயாத்தழிவான் எப்போம் கேட்டாலும் இல்லயில்லன்டுதானே சொல்றான் “ என காய்ந்திருக்கின்றார்.  “ ஒங்க ஹயாத்தழிவான் எழுதி அனுப்பினாத்தானே இந்த ஹயாத்தழிவான் தருவான் “ என்றிருக்கின்றார் இவர் .

 

 

 

இந்திய அஞ்சல்  கட்டளை பணிச்சாளரத்தில்  தேவர் சமூகப் பெண்மணி ஒருத்தி இருந்தார். அஞ்சல் கட்டளை  வாங்கும்போது எனக்கும் அவருக்கும் பிணக்கு ஏற்பட்டு நான் அவரை கேவலமாக திட்டி விட்டேன். அவரும் விடாப்பிடியாக மறுவசை பாடினார். பின்னாளில் அவரை திருவைகுண்டத்தில் சந்திக்கும்போது பழையது அனைத்தையும் மறந்தவராக மிகவும் அன்புடன் உரையாடினார்.

 

  -------------------------------------



எங்கள் வீட்டினருகில் ஜாவியா மத்ரஸாவிற்கு எதிரே சிறுநெய்னார் பள்ளி மையவாடி சுவற்றில் அஞ்சல் பேழை பதிக்கப்பட்டிருக்கும். அதில் கட்டு எடுக்கும் நேரம் மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் என நினைக்கின்றேன்.  கடைசி நேர கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கும் என் வாப்பா அஞ்சல் ஊழியர் வந்து அதை திறக்கும் வரைக்கும் கண்காணிக்கும்படி என்னிடம் சொல்வார்கள்.

 

 

அஞ்சல் ஊழியர்  பேழையை திறந்து தனது ஊதா நிறப்பையில் கடிதங்களை அள்ளிப்  போடுவதற்குள் நான் கடிதத்தை அவர் கையில் கொடுத்து விடுவேன்.  தவறும் பட்சத்தில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது  அஞ்சல் நிலையம் சென்று போட வேண்டி வரும்.  கடிதத்தை என் கையில் தரும் முன்னர் கூடவே வழமையான ஓர் அறிவுரையும் வாப்பாவிடமிருந்து வரும் “ டேய்! மறந்து போய் ஸ்கூலுக்கு போற அவசரத்துல கடிதத்துக்கு பதிலா கைல உள்ள ஸ்கூல் புக்கை கொண்டு போய் தபால் பெட்டியில போட்டுறாதே “ 


.

 

 

இந்த அறிவுரைக்கான காரணமாக உள்ள உண்மை நிகழ்வொன்றையும் வாப்பா சேர்த்தே சொன்னார்கள்.

 

 

ஒரு மேலைநாட்டுக்கனவான்  பெரு மழை பெய்த நள்ளிரவில் குடையுடன் வீடு திரும்பியிருக்கின்றார். சிறிது நேரங்கழித்து ஏதோ ஆள் அரவம் கேட்கவே திருடன் வந்து விட்டான் என அஞ்சிய அவரது மனைவி கையில் துப்பாக்கியுடன் விளக்கை எரிய விட்டு பார்த்திருக்கின்றார். ஓசைக்கு உடைமைக்காரர் வேறு யாருமில்லை. அவரது கண்மணிக் கணவர்தான். மனிதர்  குடை  வைக்கும் தாங்கியில்  போய் குடையைப்போலவே விறைப்பாக  நின்றிருந்திருக்கின்றார். குடையை எங்கே? எனத் தேடினால் அதை அவர் தன் படுக்கையில் அழகாக தூங்கப் போட்டிருந்தாராம்.

 

 

இன்று சதுக்கைத்தெருவிலிருக்கும் சதுக்கையில் இயங்கும் கிளை அஞ்சலக அஞ்சல் பேழையில் யாரும் கடிதங்கள் போடுவதில்லை,  வானொலிக்காக நான் எழுதும் அஞ்சலட்டையை அங்குள்ள பேழையில் போடப்போகும்போது  கிளை  பொறுப்பாளர், “பெட்டியில போடாதீங்க. கையிலேயே தந்துருங்க. நான் ஆஃபிசில் போய் கொடுத்துர்ரேன் “ என்பார்.

 

 

இப்போது எந்த தெருவிலும் அஞ்சல் பேழைகள் இல்லை. மெயின் ரோட்டில் உள்ள அஞ்சலகத்திலும் மாலை நான்கு மணிக்கு மட்டுமே கட்டு எடுக்கின்றனர். முன்னர் மாலையுடன் சேர்த்து காலை பத்து மணிக்கு ஒரு கட்டெடுப்பு , காலை மாலை அஞ்சல் வினியோகம் என இருந்தது.

 

 -------------------------------------



எங்கள் வீட்டிலுள்ள பிலிப்ஸ் குமிழ் வானொலிப்பேழைக்கான உரிமக்கட்டணத்தையும் அஞ்சலகத்திலேயே செலுத்த வேண்டும்.  கட்டணம் செலுத்தியதற்கு அத்தாட்சியாக அகில இந்திய வானொலியின் இலச்சினை பொறித்த  முத்திரை வில்லை அதில் ஒட்டப்படும். அன்றைய வருடக்கட்டணம் பத்து ரூபாய்கள் என நினைவு.

 

 

தந்தியடிக்க, வெளி நாட்டு தொலைபேசியழைப்புகளுக்கு பதிவு பண்ணி காத்திருக்க என அன்றைய நாட்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாகவே அஞ்சலகம் இருந்திருக்கின்றது.

 

 

கல்லூரியில் படித்திருந்த என் காக்காமார்கள் சென்னை போய் சேர்ந்ததற்கும் அங்கிருந்து புறப்பட்டதற்கும் “ அரைவ்ட் சேஃப்லி. ஸ்டார்டிங்க் டுடே “ என இரு சொற்கள் அடங்கிய தந்திகள். கல் வணிகர்கள் தங்களின் கல் தொகைகளை வட நாட்டிலுள்ள ஊர் தரகர்களுக்கு/ வணிகர்களுக்கு  காப்பீட்டு அஞ்சலில் அனுப்பி விட்டு காத்திருப்பர். “ ஃபைனல் ஆஃபர் …. “ என ஒரு தொகை குறிப்பிடப்பட்டு தந்தி வரும். பெரும்பாலும் ஆஃபர் ஓகே என்ற மறு தந்தியில் வணிகம் நடந்து விடும்.

 

 

தந்தியின்  கட் கடா ஓசை எல்லா நேரமும்  அஞ்சலகத்தின் தன் நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்கும். தந்திக்கான மோர்ஸ் சங்கேதக்குறியீடு தெரிந்த எங்கள் அஞ்சலகத்தின் கடைசி ஆளான திரு.சந்திரசேகர் அண்மையில்தான் பணி நிறைவு பெற்றார்.



 

 

வெளி நாட்டு தொலைபேசியழைப்புக்களுக்காக பதிந்து விட்டு காத்திருக்கும்போது, அதற்கான நடப்பு நிலையை பணியிலுள்ள அலுவலர் அவ்வப்போது தெரிவிப்பார். அழைப்பு இப்போதுதான் மதுரைக்கு கடந்திருக்கின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்வார் அழைப்பு மதுரையிலிருந்து வெளி நாட்டுக்கு கடந்திருக்கின்றது. அதிலிருந்து பல நிமிடங்கள் கழித்தே தொலைபேசி இணைப்பு கொடுக்கப்படும். ஓரிரண்டு மணி நேரமெல்லாம் காத்திருக்க வேண்டி வந்திருக்கின்றது.  

 

 

தொலைபேசி பேசுவதற்கான ஆளுயர மரக்கூண்டொன்றும் இருந்தது. அந்த மரக்கூண்டு வந்த புதிதில் அதற்குள் ஆள் நுழைந்த உடனேயே  மின்விசிறியும் விளக்கும் எரியும்படிக்கு அதன் அடியில் விசைப்பலகையொன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

 

------------------------------------- 

 

அஞ்சல் வில்லை, அஞ்சல் உறை விற்பனைக்கப்பால் சிறுசேமிப்பு முகவர்களாலும் தனியாட்களாலும்   எப்போதும் பரபரப்பாக இருக்கும் மற்றொரு பணிச்சாளரம்  அஞ்சலக சிறுசேமிப்பிற்கானது. 

 

 

காயல்பட்டினம் அஞ்சலகத்தில் இன்லண்ட் லெட்டர் கார்டு, அஞ்சல் உறை, வானஞ்சல்  போன்றவை விற்கப்பதில்லை.  இந்திய அஞ்சலக கட்டளை வசதியெல்லாம் இருப்பது போலத்தெரியவில்லை, பணவிடை , காப்பீட்டஞ்சல் போன்றவைகளை கிட்டத்தட்ட பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.

 

 

இங்கு தற்சமயம் அஞ்சல்தலைகளுடன் அஞ்சலட்டை விற்கின்றனர். அஞ்சல் வினியோகத்துடன் பொதியஞ்சல், அஞ்சலக செலுத்து வங்கி,  ஏடிஎம் அட்டை , இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலிருந்தும் எந்தவொரு அஞ்சலக சேமிப்புக்கணக்குகளில் பணமெடுக்கவும் செலுத்துவதற்குமான வசதி உள்ளடக்கிய  சிறுசேமிப்பு பிரிவுகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.


இந்திய அஞ்சல் துறை இணைய தளம்

 

 காயல்பட்டினம் மெயின் ரோட்டில் இயங்கும் அஞ்சலகக் கட்டிடம் தனியாருக்கு சொந்தமானது. பல வருடங்கள் நடந்த வழக்கில் கட்டிட உரிமையாளர்கள் வென்று விட்டனர். பொதுமக்களின் நலன் கருதி அஞ்சல் துறையினரை வெளியேற்றாமல் விட்டு வைத்துள்ளனர்.  நகராட்சியானது அஞ்சலகத்திற்கான  போதிய இடப்பரப்புள்ள மாற்றிடத்தை  பொதுமக்களுக்கு வசதியான ஓரிடத்தில் அமைத்துக் கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

  

-------------------------------------


அஞ்சல்காரர் மக்களின் வாழ்வில் இன்றியமையாத உறுப்பு என்பதை விளக்கிடும் “ போஸ்ட்மேன் இன் த மவுண்டன்ஸ்”  என்ற திரைப்படமொன்றை பார்த்தேன். அஞ்சலகமும் அஞ்சல்காரரும் சமூகத்தின் நாளம் போன்றவர்கள். உணர்வென்ற பெருந்தாரையின் உள் வடிவு அஞ்சல் துறை என்பதை மிக அணுக்கமாக அறிய இயலும்.


 

 

வானொலியுடனான எனது சிறு பருவ நட்பை புதுப்பித்தது போல அஞ்சல் துறையுடனான உறவையும் மீட்டுள்ளேன். அஞ்சலக சிறுசேமிப்புக்கணக்கு வைத்துள்ளேன். வானொலிக்கு எழுதற்காக அஞ்சலட்டைகளையும் பதிவுப்பொதியையும்  பயன்படுத்துகின்றேன். புத்தக பரிமாற்றத்திற்கும அஞ்சலக சேவைகளையே பயன்படுத்துகின்றேன். தவிர்க்க இயலாத காரணங்களுக்கு மட்டுமே தனியார் தூதஞ்சல் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றேன்.

 

தனியார் தூதஞ்சல் சேவையானது நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் செயல்படுவதில்லை. அத்துடன் அவர்களின் கட்டணமும் ஊர் வாரியாக மாநில வாரியாக என பார்த்து பார்த்து கூடுதல் கட்டணங்களைப் பெறுகின்றனர்.

 

 

பக்கத்து வீட்டுக்கோ  மணிப்பூர எல்லைக்கோ ஆனாலும் சரி. இந்தியாவின்  எல்லா கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் நகரங்களுக்கும்  அஞ்சல் துறை வாங்குவது ஒரே சீரான நீதமான கட்டணம்.

 

 

பெருந்தொற்று முடக்கு காலத்தில் மருத்துவமனைகளே செயல்பட அஞ்சியபோது ஒரு நாள் கூட தவறாமல் இந்திய அஞ்சல் துறை தனது சேவையை தொடர்ந்தது.

 

 

------------------------------------- 

 

அஞ்சல் துறையானது  தொடக்கத்தில் அஞ்சல்&தந்தி துறை என்ற பெயரில் இருந்து பின்னர் தொலைத்தொடர்பு துறையாக மாற்றம் பெற்றது.  அஞ்சல்காரர்கள் காக்கி நிற சீருடையை அணிந்திருந்தனர். பின்னர் அதுவே செம்பழுப்பு நிறமாக மாறியது. இப்போது சீருடை அணிந்த பணியாளர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை.

 

 

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ஜிபிஓ தலைமை அஞ்சலகம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்குகின்றது. அத்துடன் அங்கு சிறுகடையொன்றும் பின்னாட்களில் திறந்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்னர் அக்கடையில்  பொதுத்துறை நிறுவனமான  ஹெச் எம் டியின் விதம் விதமான கைக்கடிகாரங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.  

 

அக்கடையில் நான்  சீனத்தயாரிப்பான கதிரொளி மின்னேற்ற தொங்கு விளக்குகளை வாங்கியிருக்கின்றேன்.

 

  

-------------------------------------

 

 

பெட்டிக்கடை வாழைப்பழத்தைப்போல எல்லா  பொதுத்துறைகளை நிறுவனங்களையும்  தனியாருக்கும்  பெரு நிறுவனங்களுக்கும்  விற்று வரும் ஃபாஸிஸ நடுவணரசு , அஞ்சல் துறையை இன்னும் எத்தனை நாட்களுக்கு   விற்காமல் / மூடாமல் வைத்திருக்கப்போகின்றதோ?

 

இன்று தேசிய அஞ்சல் நாள் என்பதே நேற்று திருவனந்தபுரம் வானொலியைக் கேட்டபோதுதான் தெரிய வந்தது. தேசிய அஞ்சல் நாளையொட்டி அஞ்சல் துறையினர் அரை மணி நேர திரையிசை நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.  அந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலுக்கும் இடையே இந்திய அஞ்சல் துறை பற்றிய தலையாய குறிப்புக்களை ஒலிபரப்பினர். அணுக்கமானவர்களுக்குத்தான் அணுக்கத்தின் அருமை தெரியும் போல.



படங்களில் உதவி: சாளை முனவ்வர் ஸாஜித்


 

 

 

 








 

4 comments:

  1. உங்கள் பதிவு உங்கள் தமிழ் அருமை.

    ReplyDelete
  2. அருமைங்க அண்ணா

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி ,நானும் பிபிசி , வெரித்தாஸ் வானொலி , பீகிங் சீன வானொலி , அகில இந்தியா வானொலி ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் . அஞ்சல் மூலம் கவிதைகளை அனுப்பி வைத்து விட்டு பதிலுக்காக காத்திருந்து இருக்கிறேன். இந்தக் கட்டுரை என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது நன்றி

    ReplyDelete