Monday 7 September 2020

ஒரு கத்தரிக்காயுடன் ஒரு வாழைக்காயும்……

 

அவர்கள் இரண்டு பேருமே வணிகத்தில் பங்காளிகள். ஒரே ஊர்க்காரர்களும் கூட.

 

 கர்நாடக மாநிலம் உடுப்பியை தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுக்கவும் ஆந்திரம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் போய் சுற்றியலைந்து  உணவு நறுமணப் பொருட்கள் வணிகம் புரிந்து வருகின்றனர்.

 

கொள்முதலிலும் விற்பனையிலும் சூரர்கள். சுருக்கத்தில், வணிகத்தில் கெட்டிக்காரர்கள் என்ற  பெயர்  ஊரில் இவர்களுக்குண்டு. ஆனால் நெருங்கிப்பார்த்தால்தான்  அந்த பெயரில்  சிறிய மாற்றங்களும் உண்டு என்பதை புரிந்து கொள்ள இயலும்.

 

“ என்னங்க இது ஏலக்காய்லாம் சூத்தயா ஈக்குதுனு “ ஒரு தடவையும் இன்னொரு தடவை “ கிராம்புல பூஞ்சனம் பூத்திருந்தது “ என ஒவ்வொரு தடவைக்கும் புதியது புதியதாக ஒன்றை சொல்லி பொருளை அடித்து வாங்குவர்.

 

விற்கும்போதோ ஒரே விலைதான். பேரத்திற்கு வேலையே இல்லை. என்ன நட்சத்திரம் தலைக்கு மேல் சுற்றியதோ தெரியவில்லை? வணிகம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

 

ஊரில் இவ்விரண்டு பேரும் குடியிருக்கும் தெருவில் உள்ள சிறிய பழைய வீடுகள் அனைத்தையும் தங்களுக்கு தோதுவான விலைக்கு வளைத்து போட்டு பதிவு பண்ணுவதிலும் இவர்களிருவரும்  வம்பன்கள்தான்.

 

இன்றைய நிலவரப்படி இரண்டு பேரின் சொத்து மதிப்பும் கோடிகளைத் தாண்டி விட்டது. இருபது வருடங்களாக இரண்டு பேரும் நல்ல ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர்.

 

இந்த இரண்டு பேரில் ஒருவன்  நல்ல தொழில் நுணுக்கம் தெரிந்தவன். மற்றொருவரோ கொஞ்சம் போடு கத்தரிக்காய்தான். தனது போதாமையின் அந்த சிறு  இடைவெளியை  நிரப்ப அவர் மேற்கொள்ளும் உத்திதான் கஞ்சத்தனம்.

 

இனிமேல் இருவருக்கும் பெயர்களை சூட்டிக் கொண்டால்தான் கதை சொல்ல எளிதாக இருக்கும்.

 

ஒருவரை  ஏற்கனவே போடு கத்தரிக்காய் என அழைத்துள்ளதால் அடுத்தவருக்குத்தான் பெயர் சூட்ட வேண்டும். 

 

ங்கே  ங்கே  வாயன்.

 

இந்தப்பெயரை சும்மாவொன்றும் வைக்கவில்லை. வாங்கும் போதும் விற்கும்போதும் இந்தாளின் ங்கே ங்கே குரலின் சல்லியத்துக்கும் வாய்ச்சாலாக்குக்கும்  அஞ்சியே எதிரில் உள்ளவர் பணிந்து விடுவார்.

 

ங்கே ங்கே வாயன் & வீட்டுக்காரியின் கதையை  தனி சிறுகதையாகத்தான் எழுத வேண்டும். தான் வீட்டில் உண்ணும் அரிசி உப்பு முதல் சொந்தமாக அணியும் தங்க அணிகலன் வரையிலும் உள்ள வீட்டின் அன்றாட அத்தியாவசியங்களிலும் இரண்டு ரூபாய்களாவது சரி ஆதாயம் பார்த்து விடுவாள் அந்த அம்மணி .

 

இனி போடு கத்தரிக்காயின் கதையை தொடர்வோம்.

 

உடுப்பியில் இவர்களைப்போலவே ஊர்வாசிகள் சிலரும் நெய், ஊறுகாய் உள்ளிட்ட இன்னோரன்ன வணிகம் புரிந்து வருகின்றனர்.  இவர்களனைவரும் ஆண் தனியர்கள். எனவே அன்றன்றைய சமையலுக்கான பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு எல்லோரும் கூட்டாகவே செல்வர். 

 

நம் பங்காளிகளில் போடு கத்தரிக்காய்க்குத்தான் சந்தை வாங்கல் பொறுப்புடன் சமையல் பொறுப்பும் கூடவே கொடுக்கப்பட்டிருக்கின்றது. சொல்லப்போனால் சமையல் பொறுப்பை போடு கத்தரிக்காய்தான் பங்காளியிடம்  வலியுறுத்தி கேட்டு வாங்கினாராம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவலொன்றும் உண்டு.

 

அது தொலையட்டும். விஷயத்துக்கு வருவோம்.

 

கூட வந்தவர்கள் வாங்கும் வரைக்கும் போடு கத்தரிக்காய் தான் எதுவும் வாங்க மாட்டார். இதை மறைப்பதற்கும் அவர் சிறு தந்திரமொன்றை செய்வார். அதாவது அவர்களுக்கு நல்ல மரக்கறிகளை பொறுக்குவதில் உதவுவார். போடு கத்தரிக்காயின் வழமையான மினுங்கும் புன்னகையுடன் மேலதிகமாகவும் சேர்ந்து கொள்ளு ம். இளிப்பு என சொல்லி விட முடியாத  ஒரு பசப்பல்.

 

எல்லோரும் வாங்கி முடித்த பிறகு உரிமையோடு கூட வந்தவர்களின் கூடைகளிலிருந்து ஒரு மாங்காய் ஒரு வாழைக்காய் ஒரு கத்தரிக்காய் ஓர் அது ஓர் இது என எடுத்துக் கொள்வார். அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே “ ஆமா நான் ஓராள்தானே. இதுக்குன்டு  நிறுத்து வாங்கவா முடியும். அநியாயத்துக்கு காய்கறிலாம் அழுவிப்போய்ருமே” என சொல்லி முடித்ததும் முடிக்காததுமாக  தனது  நச்சி புச்சி தனத்தை மறைப்பதற்கு அவரே வேறெதாவது ஊர்க்கதையையும் தொடங்கி விடுவார். அதுவும் இதுவரை யாரும் கேள்விப்படாத புது நடப்பாகத்தான் இருக்கும்.

 

கூட வருபவர்கள் போடு கத்தரிக்காயின் அற்ப தந்திரங்களை அறிந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் போடு கத்தரிக்காய் தனது ஒரு மாங்காய் வாழைக்காய்  தந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு   முந்திய கணத்தில் அவர்களின் கவனம் ஏதாவது ஒரு திசையில் திரும்பி விடும்.  எதை எறிந்து உடன் வரும்  ஊர்க்காரர்களின் முகங்களை கட்டுகின்றாரோ ? தெரியவில்லை.

 

எண்ணெய்,உப்பு,புளி, சமையல் எரிவாயு இதுக்கெல்லாம் என்ன செய்வார்?

 

இது போல அவரின் அறியப்படாத கதைகள் நிறைய இருக்கலாம். நான் கேள்விப்பட்டது என்னவோ ஒன்றிரண்டுகள்தான். அந்த ஒன்றிரண்டைச்  சொன்னாலே எல்லாவற்றையும் சொன்னது மாதிரித்தான்.

 

ஒரு தடவை நமது போடு கத்தரிக்காய் ஊர் சந்தைக்கருகில் உள்ள சைக்கிள் கடையில்  தனது சைக்கிளுக்கு காற்றடிப்பதற்காக நின்றிருக்கின்றார். சைக்கிள் கடைக்காரருக்கும் போடு கத்தரிக்காய்க்கும் நடந்த வாக்குவாதத்தில் உயர்ந்த ஓசைதான் இந்த நிகழ்விற்கு அங்கு நின்றிருந்த பலரை நேரடி சாட்சிகளாக உருவாக்கி விட்டது.  இனி போடு கத்தரிக்காயின் நெருங்கிய உறவினரும்  நேரடி சாட்சிகளில் ஒருவருமான ஒருவரின்  நேரலை வர்ணனைக்குள் செல்வோம்.

 

சைக்கிள் கடைக்காரர்  போடு கத்தரிக்காயின் சைக்கிளின் பின் சக்கரத்திற்கு காற்றடித்து விட்டு முன் சக்கரத்திற்கு அடிக்க முனைந்திருக்கின்றார். மறந்து விடாமலிருக்க ஓர் இடைத்தகவல். இரண்டு சக்கரங்களிலும் காற்றடித்த பிறகே இரண்டு ரூபாய் நாணயத்தை பச்சை நிற சிங்கப்பூர் பெல்ட்டிலிருந்து கவனமாக தடவிப்பார்த்து வெளியிலெடுப்பார் போடு கத்தரிக்காய்.

 

முன் சக்கரத்திற்கு காற்றடிக்கப் போன கடைக்காரை தடுத்து நிறுத்தி “ நீ என்னப்பா பின் சக்கரத்துக்கு சரியா காத்தடிக்கலியே?”

 

“ அடிச்சிட்டனே காக்கா”

 

“ காத்தடிச்ச ஒரு வாரத்திலயே காத்து போய்ருது அதுனாலத்தான் சேத்து ஒழுங்கா அடிக்கச் சொல்றேன்”

 

“ காக்கா இதுக்கு மேல காத்தடிச்சா டியூப் வெடிச்சுரும்”

 

  நான் என்ன சும்மாவா ஒங்கிட்ட காத்தடிக்கிறேன் துட்டுத்தானே தர்றேன் வாப்பா ” என கண் சுருக்கி பல்லிளித்தார் போடு கத்தரிக்காய்.

 

மறுசொல் எதுவும் சொல்லாமல் சைக்கிள் கடைக்காரரும் ஏற்கனவே காற்றடித்த பின் சக்கரத்திற்கு மீண்டும் காற்றடித்தார்.

 

“ப்புட்” என்ற பெரு ஓசையுடன் சன்னமான புழுதியைக் கிளப்பியவாறே  வெடித்தது  போடு கத்தரிக்காயின் சைக்கிள் பின் டயர் &  ட்யூப்.

 

அதற்கு பிறகு என்ன நடந்தது? என இந்த நிகழ்வை விவரித்த நேரடி சாட்சியத்திடம் கேட்டேன்.

 

“அதப்பாக்குறதுக்கு தைரியமும் சிரிக்கிறதுக்கு சக்தியும் எனக்கு இல்ல மச்சான்” என்றார் அவர்.

 

அவரே கூடுதலாக வேறொரு தகவலையும் சொன்னார்.

 

போடு கத்தரிக்காய்க்கு தடுமல் காய்ச்சலென்று  திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். பரிசோதனைகளின் முடிவு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

 

ஒரு நாளைக்கு ஆகும் செவிலியருக்கு மட்டும் ஆகும் செலவு இருபதினாயிரம் ரூபாய்களாம். சிகிச்சை முடிந்து ஆள் வீடு திரும்பி விட்டார். மொத்த செலவு ஐந்து லட்சங்கள். ஆனால் இந்த செய்தியை  போடு கத்தரிக்காயிடம் அவரது மகன் இன்னும் தெரிவிக்கவில்லையாம்.

 

ஒரு வேளை தெரிய வந்தால் அவர் ஆற்றும் எதிர் வினைகள் எப்படியிருக்கும்? என்பதை இக்கதையின் வாசகர்களின் முடிவிற்கே விட்டு விடுவதான் நல்லதொரு குறுங்கதைக்கு அழகும் இலக்கணமும் கூட.

 

 

 

 

No comments:

Post a Comment