Monday 7 September 2020

ராம் கஞ்ச் மண்டி

 




12968 / ஜய்ப்பூர் சந்திப்பு – புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் அதி விரைவு வண்டியின் டிஜிட்டல் பெயர்ப்பலகையை கண்களை இடுக்கியவாறு  பார்த்துக் கொண்டிருந்தார் நடுத்தர வயது  தோத்திவாலா.

 

 

 அவரின் இள ரோசா நிற  தலைப்பாகையின் மீது வெயில் பட்டு பிளாட்பார தரை, ரயிலின் பெட்டி என நிற வட்டம் மினுங்கியது.  அங்கு உட்கார்ந்திருந்த செம்பழுப்பு நிற லம்பாடி குழந்தையின் மீது படிந்த இளரோசா வண்ண வளையம் இன்னும் அடர்ந்தது.   குடிநீர் குழாயருகே  சுருண்டு கிடந்த செவலை நாயொன்று  அரைக்கண்ணை திறந்து மூடியுவாறே சோம்பிக் கிடந்தது.

 

 

மூன்றடுக்கு  குளிர்சாதன படுக்கை வகுப்பிற்குள் நுழைந்து  தன் பொருட்களையெல்லாம் இருக்கைக்கு கீழ் வைத்து விட்டு நிமிர்ந்தவனின் தலையிலும் கழுத்திலும் மெலிதாக வழிந்திறங்கிய  குளிர் காற்றானது காந்தலை தணித்தது. கைப்பையையும் குடிநீர் புட்டியையும் பக்கவாட்டு மேலிருக்கையில் வைத்தான் ஷாஹுல்.

 

 

 நாற்பது டிகிரி வெப்பத்தை களைய மனமற்ற சந்தியாகாலத்து காற்று வெளியே பரபரத்துக் கொண்டிருந்தது.  கணப்பில் வேகும் ரொட்டியின் இளம்புளிப்பு வாசம்  ஷாஹூலின் நாசிக்குள் படிந்தது.  அவனைச்சுற்றிலும் ரொட்டி மணம் கமழவே  பெட்டியின் கண்ணாடியையும் இருக்கை ஓரத்தையும்  மூக்கை சுருக்கி இழுத்து வாசம் பிடித்தான். சந்தேகமேயில்லாமல் அது ரொட்டியின் இளம்புளிப்பு மணமேதான். தலையை திருப்பி திருப்பி பார்த்தவன் சற்று யோசித்து விட்டு தன் கமுக்கட்டை முகர்ந்து பார்த்தான். முகம் சுளித்து  அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

 

 

எதிரில் உள்ள  இருக்கைகளில் நால்வர் அடங்கிய குடும்பமொன்று இருந்தது. மீதமுள்ள இரண்டு இருக்கைகளில் ஒடியாகப்பா போலிருந்த மாறுகண்ணுடைய இளம் வயது சலவைக்கல் தொழிலாளியுடன் வயதானவரும் இருந்தார்.  சீராக பரவிய குளிர்காற்றில் மெலிதான  பூச்சி மருந்து நெடியடித்தது.

 

 


பெரியவருக்கு வயது அறுபதைக் கடந்திருக்க வேண்டும். பிசைந்து உருட்டிய  கோதுமை மாவின்  வெண்பழுப்பு நிறம்.  சதுர முகத்தில் ஒழுகிய வியர்வைச்சரடானது  கறுப்பு நிறச்சட்டக  மூக்கு கண்ணாடியின் உருப்பெருக்கத்தில் மினுங்கியது.  வாயிலை பாதி திறந்தவாறே நின்று கொண்டிருந்த துப்புரவுப் பணியாளரிடம், " ஏம்பா, ஒன்னு உள்ள வா அல்லாட்டி வளிய போப்பா. சொம்மாவே இங்க ஏசி இல்லே " . கையிலுள்ள ஹிந்தி  நாளிதழை விசிறியவாறே கிழவர் காய்ந்தார்.

 

 

 

 

அடர் உதட்டுச் சாயம் பூசின பெண் பச்சைக்கிளிக்குயிலொன்று துர்காபுரா ரயில் நிலையத்தில். ஏறி ஷாஹுலுக்கு கீழேயுள்ள இருக்கைக்குள் நுழைந்தது  . கூவப்படாத கூவல்களை வெற்றிலைச்சாறு போல கடைவாயில் ஒதுக்கிய  சாடை. கூடவே இடுப்பை நெளிக்கும் அவளது மென்தாடி இணையும்.

 

 

 

 

சிறிது நேரத்தில் அவனும் அவளும் இடுப்பு பட்டையை எடுத்து அணிந்தனர். முதுகு வலிக்கானது. நொறுக்கு தீனி பொட்டலத்தின் வெற்றுக்கூடுகளும் மென்பானக்குப்பிகளும் அவர்களின் இருக்கைக்கு கீழே உருளத்தொடங்கின.  நெஞ்சை நீவியவாறே நெடு ஏப்பமிட்ட கிளிக்குயில் “ படுக்க வேண்டும்”  என முனகியது. மென்தாடி அவனுக்கென ஒதுக்கப்பட்ட உள்பக்க மேலிருக்கைக்குள் விசுக்கென தாவிச் சென்று படுத்தான்.

 

 

 


வண்டியை எடுக்க அரைமணி நேரம் தாமதாயிற்று. “இங்க ஒன்னுமே சரியில்லே. சர்க்கார் சரியில்லே. ஆளுங்கோ சரியில்லே” என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்த முதியவர். திடீரென ஷாஹுல் பக்கம் திரும்பி “அங்கிள்! நீங்க எங்க போறீங்கோ?” என்றார்.

 

 



அங்கிள் என்ற ஒற்றை சொல்லுக்குள், வயதிறக்கமும் வயதேற்றமும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்த மாயத்தை எண்ணி எண்ணி ஷாஹுலின் மனது ஓய்ந்துதான் போனது. தனக்கு வயது ஐம்பத்திரண்டுதான் என்பதை மட்டும் சொல்லி விட்டு முகம் திருப்பிக் கொண்டான்.  கிழவர் தொண்டைச்சளியுடன் செறுமினார். அது   இளிப்பா? அல்லது உண்மையிலேயே செறுமலா? என சிறியதாக குழம்பியவன் கிழவரின் கேள்வியை குறித்து மீண்டும் எண்ணத் தொடங்கினான்.

 

 

 

 

அவரின் கேள்வி தோற்றப்பிழையினாலும் எழுந்திருக்கலாமோ? என மூளை தன்னியல்பாக  தத்துவ விசாரத்தை தொடங்கியது. உறுதிப்படுத்திக் கொள்ள கழிப்பறை அருகில் உள்ள கண்ணாடிக்கு முன்னின்று  கொண்டு உள்ளுக்குள் பொடுபொடுத்தான்.

 

 

 

 தன்னை பார்த்து , “ இது உன் அங்கிளா ஷம்மா? “ என மகளின் தோழி அவளிடம் கேட்ட காலத்தின் நினைவு திடுமென பொங்கி மனதை ஏக்கத்திற்குள் உருட்டியது. தலையை மேலுங்கீழுமாக மீண்டும் மீண்டும் கோதியவாறே இருக்கைக்கு திரும்பினான்.

 


பச்சையும் பழுக்காயுமான  ரப்பர் வளையங்களால் இறுக சுற்றப்பட்டிருந்த கிழவனாரின் ஆண்டு மாறிய செல்பேசிக்கு அழைப்பொன்று வந்தது.

 

 

 

 

தொண்டையின் தொங்கு சதையானது வான் கோழியின் கீழ்க் கொண்டை போல இழுபட்டு மேலெழும்ப மோவாய்க்கட்டையை உயர்த்தியவாறே, “ எல்லோ எல்லோ !  ஹா ஹா போல்!  ஜோர்ஸே போல்…. ஹாங் ஜீ ஹாங் ஜீ .. “  என மண்டையை மேலுங்கீழுமாக அசைத்துக் கொண்டிருந்தவர் பின்னர் முகம் மலர்த்தி ,: இப்போ சிட்டிங்க் ஜட்ஜாக இருக்கிற பிரபாகர் வைத்யா ஏடாகூடாமான ஆளு. டிஃபன்ஸ் தரப்பு வக்கீலுங்கோ பேச்ச பெருசா அவர் மதிக்கிறதேயில்ல. ஒண்ணும், கவலைப்படாதீங்கோ. வேற பெஞ்சுல நம்மாளுங்கோ இருக்காங்கோ பாத்துக்கிடலாம் “என்றபடி சுற்றும்முற்றும் கண் மினுங்க பார்த்துக் கொண்டே  சிரித்தார்,  தரையில் தேய்படும் தகரத்தின் ஓசைக்கு நிகர்த்த ஒலியது. சிரிப்பு அடங்கியதும்  இருக்கையின் ஓரத்தை உள்ளங்கையினால் தேய்த்து துடைத்தார்.  அந்த இடத்தில் வாயைக்குவித்து ஊதிய பின்   செல்பேசியை  வைத்தார்.

 

 

 

வக்கீல் கிழவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஷாஹூல் தன் இருக்கைக்குள் ஒதுங்கிக் கொண்டான்.  இடுப்பின் வேர்வை ஈரம் பட்டு கசகசத்துக் கொண்டிருந்த சாரத்தை நெகிழ்த்து விட்டு மல்லாக்க படுத்தான். குளிர் இதம்பதமாக பரவியது.

 

 

 

“கானா கானா தாலி கானா , தாலீ மே தால், பனீர்,  சப்ஜீ, தஹீ, பாப்பட், ரோட்டீ, மீட்டாய் அவ்ர் ச்சாவல்… “ என்றடுக்கியவாறே சென்றுக் கொண்டிருந்த  கேண்டீன்காரனை நிறுத்தி , ஒரு பிளேட்டு எவ்ளோப்பா  ? என வினவினார்.

 

 

 

 

“நூத்திருபது  ருப்யா ஸாப் “

 

 

 

“அச்சா. தால் ஃபிரையா? சாதாவா?”

 

 

 

 

“ ஃபிரைதான் ஸாப்”

 

 

 

 

“பட்டர்ல ஃபிரை பண்ணதுதானே?”

 

 

 

 

“தெர்லீங்க ஸாப்”

 

 

 

 

“ஹி ஹி தெர்லீங்கன்னா சாதா ஆயில்னுதான் அர்த்தம். அப்ப இன்னாத்துக்கு இவ்ளோ பைசா வாங்குறீங்கோ?”

 

 

 

 

 “நம்போ கூலிக்கார் ஸாப்” என கேண்டீன்காரன் முனகியவுடன்  பழம்பன்னாசு நோட்டுக்களாக தேடிப்பார்த்து  எடுத்த கிழவர் ஒரு கணம்  நிதானித்து விட்டு “சாப்பாடு தந்துட்டு பைசா வாங்கிக்கோப்பா “என்றவாறே மீண்டும் பணத்தாள்களை தன் பர்ஸுக்குள் மெல்ல மடித்து வைத்தார். சிரித்தபடியே கிழவரின் இருக்கை எண்ணை குறித்துக் கொண்டான் கேண்டீன் இளைஞன்.

 

 

 

 

தொண்டையை கனைத்தவாறே இருக்கையில் சம்மணங் கட்டி அமர்ந்தவர், தன் பாதங்களை நீள்வட்டமாக வருடிக் கொண்டே “ நா ராம்கஞ்ச் மண்டியில எறங்கணும். அது ராத்திரி பன்னிரெண்டர மணிக்கு வரும்போல, கஷ்டந்தான்” என புருவத்தை ஏற்றி இறக்கினார்.

 

 

 

 

 

“அதொன்னும் பிரச்னயில்ல சார் , நீங்க 139 என்ற ரயில்வே நம்பருக்கு  ஒங்க செல்லுலேருந்து  டயல் பண்ணி டிக்கட்ல உள்ள பத்து டிஜிட் பிஎன்ஆர் நம்பர பதிவு பண்ணுனா  எறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு அஞ்சாறு நிமிஷங்களுக்கு முன்னாடி அலர்ட் கால் ஒன்னு ஒங்க செல் போனுக்கு வரும்” என தனக்கு மட்டுமே தெரிந்ததாக அவன் எண்ணிக் கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பகிர்ந்தான் ஷாஹூல்.

 

 

 

 

 “ ஹெஹ்ஹஹ்ஹே…… நூத்தி முப்பதாவது எரநூத்தி நாப்பதாவது அடப்போங்க சார்! அந்த கவர்ன்மெண்ட் ஏற்பாடெல்லாம் வேலய்க்காகாது  அதெல்லாம் சொம்மா” என தனது கறுப்பும் பழுப்புமான குரு முளைத்த மூக்கை இடது உள்ளங்கையால் தேய்த்தவாறே கொட்டாவி விட்ட வக்கீலின் பல் வரிசை முழுக்க பீடாச்சாறு உறைந்திருந்தது.

 

 

 

 

 

“தொலஞ்சு போவன்டா ஜிப்பு வாயா நீ எறங்கு அல்லது எறங்காம ஒழி ” என மனதுக்குள் எரிந்தவாறே படுக்கையை போட்டான் ஷாஹூல்.

 

 

 

 

உடலின் மீது வருடங்கள் கடந்தோடுவது போல டங் டக்கடா டங் கிறீஈஈச் வீங்க்க்க் என்ற வெவ்வேறு அலைவரிசையில் உயர்ந்து தாழும் உராய்தல் ஒலிகளுடன் ரயில் சக்கரங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன.

 

 

எதிரே உட்கார்ந்திருந்த இளம் வயது குடும்பத்தலைவனிடம் பேச்சைப் போட்டார் வக்கீல் .

 

 

 

“எங்கே போறேப்பா?”

 

 

 

“சென்னக்கி”

 

 

 

“ ராஜஸ்தான்ல ஊரெங்கே?”

 

 

 

“நாகவ்ர் ஜில்லா”

 

 

 

“அங்கே?”

 

 

 

“பர்லி”

 

 

 

“ஓஹ்”

 

 

 

“மம்மி மம்மி கையப்பாரும்மா” என்ற மென்குரல் குறுக்கிட்டது.

 

 

 

அந்த தம்பதியரின்  வெண்ணிற புஸ் புஸ் ஆண் குழந்தைக்கு ஐந்து ஐந்தரை வயதிருக்கும். இருக்கையின் பக்கவாட்டு இரும்பு ஏணி நுனியை பிடித்துக் கொண்டு அரை நொடிதான் ஊஞ்சலாடியிருக்கும். அதற்குள் ஹம்மென என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆவலாதியோடு தன் இரு மென்பஞ்சு உள்ளங்கைகளையும் அம்மாவிடம் விரித்துக் காட்டியது. வெண்மேட்டில் மெல்லிய கோடாய்  இளஞ்சிவப்பு தீற்றல்கள். அம்மாவின் தடையையும் மீறி அடுத்த கணமே அந்த  புஸ் புஸ், தனது  அரை நொடி ஊஞ்சலைத் தொடர்ந்தது.

 

 

 

 

“சர் நேம்?”

 

 

 

“பிரஹ்மண்”

 

 

 

“கோத்திரம்’?”

 

 

 

“வஷிஸ்டா”

 

 

 

“அப்போ மிஸ்ரா சர்மா திரிபாதி திரிவேதினு பெயருக்கு பின்னாடி போடறவங்கெல்லாம் ஒங்காட்களா?”

 

 

 

 

துரிதகதியில் தலையசைத்து மறுத்த கணக்காளர் “அவங்கெல்லாம் பிரஹ்மண்தான். ஆனா நாங்கோ அவங்கோளட கொஞ்சம் ஒஸ்தி. அப்புறம் சர்மாங்கறத நாங்கோ மட்டும் போட்றதில்லே இப்போ ராஜ்புத் கார் கூட போடுறாங்கோ”

 

 

 

 

“அது சரி அதானே பாத்தேன்”

 

 

 

 

 

“சென்னயில என்ன பண்றீங்கோ?”

 

 

 

 

 

“தனியா அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸ் போட்டிருக்கேன்”

 

 

 

 

“அப்டியா?”

 

 

 

 

“அங்கல்லாம் வெயில் எப்டீ?”

 

 

 

 

“ஸ்ஸ்ஸ் அப்பா, வருஷத்துல ஒம்போது மாசமும் வேத்து வேத்து ஊத்தும்”

 

 

 

 

“சென்னயில ஹிந்தில பேச மாட்டாங்களாமே?”

 

 

 

 

“ஹி  ஹி. அது ஒரு ப்ராப்ளமேயில்ல”

 

 

 

 

“எப்டி சமாளிக்கிறீங்கோ?”

 

 

 

 

 

“தோடா ஹிந்தி   தோடா அங்க்ரேஜி   தோடா டமில் இருந்தாக்க போதும் மிக்ஸ் பண்டி ஓட்லாம்”

 

 

 

 

 

“ஃபிரெஷ் காய்கறிங்கள்லாம் கெடிக்குதா?”

 

 

 

 

“ஓஹ்! தாஜா சப்ஜீல சென்னக்கி நம்பர் ஒன். ஆலு, மட்டர், டமாட்டர் அல்லாம் கெடிக்குது ”

 

 

 

 

“படிப்பெல்லாம் எப்டீ?”

 

 

 

 

“மார்வாடி ஸ்கூல் காலேஜூலாம் நெறய இருக்கு”

 

 

 

 

“பிசினஸுல யார் டாப்பு?”

 

 

 

“அவங்களும் இருக்காங்கோ ஆனா பிடிமானம் பக்காவா ராஜஸ்தானிங்கோ                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        கைய்லேத்தான்" .

 

 

 

 

 

“அதானே பாத்தேன்” என்றவாறே கிழவர் தன் வலது உள்ளங்கையை நீட்ட கணக்காயர் அதில் தனது உள்ளங்கையால் ‘சளப்’ என ஓசை கிளம்ப தட்டினார்.

 

 

 

 

 

“டெவலப்பர்ஸ்லயும் நம்பாளுங்கதானே இருக்கணும்?”

 

 

 

 

 

“அதுல என்ன டவுட்டு ஜீ , அல்லாத்துட ரெண்டாம் நெம்பர் பைஸாலாம் ஒன்னு கோல்டுக்கு போவணும் அல்லாட்டி நம்பள் கிட்டத்தானே வந்தாவனும்”

 

 

 

 

கிழவரின் தொந்தி மட்டும் வட்டமாக சில நொடிகள் வரை குலுங்கி ஓய, தொடர்ந்தார் கணக்காளர்.

 

 

 

 

 

“என்னோட மெயின் கிளையண்ட்ஸே டெவலப்பர்ஸ்தான்”

 

 

 

 

“அச்சா அச்சா”

 

 

 

 

“லேண்ட் ரேட்லாம் எப்பிடி போகுது?”

 

 

 

 

“ஓஸ்த்தி வெல ஜீ . அசல் மார்க்கட் ரேட்ட விட டபுள் மடங்கு கொடுத்தாத்தான் வாங்க மிடியும்”

 

 

 

 

 

கெக்கலித்த வக்கீல், “நம்பாளுக்களுக்குத்தான் பைஸா ஒரு பிரச்னையே இல்லியே” என்றார்.

 

 

 

 

 

கணக்காள தம்பதிகள் நீட்டிய  சுட்ட  எள் அப்பளத்தை  வாங்கி துணுக்கு துணுக்காக உடைத்து தன் இடது உள்ளங்கையில் குவித்தவாறே சுவைத்துக் கொண்டிருந்த கிழவர் கொஞ்ச நேரம் தன் ஹைக்கோர்ட் மகாத்மியங்களை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்.

 

 

 

 

 

 பால் தயிர்  நெய் மாடு விளைச்சல் என அவர்களின் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி வந்து கொண்டிருக்க பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டிருந்த தொக்கின் துணுக்கை ஆட்காட்டி விரலின் நகத்தால் நோண்டியெடுத்து மீண்டும் வாய்க்குள் போட்டு தொண்டைக்குள் இறக்கினாள் கணக்காளரின் மனைவி. அதே விரலை  மூக்கில் வைத்து இருமுறை புரட்டி முகர்ந்து விட்டு எதிர் இருக்கையில் இருந்த கருத்த கம்பளியில் மேலும் கீழுமாக  ஓட்டி துடைத்தாள்.

 

 

 

 

“கரம் சூப் குடிக்கணும் போல இருக்கு. சாய் சாப்பிட்டு சாப்பிட்டு வாய் கெட்டுப்போச்சு” என்றபடியே இருக்கையிலிருந்து கிளம்பிய வக்கீல் கழிப்பறைக்கு சென்றார். கணக்காளரின் மனைவி, குழந்தையை மடியில் போட்டவாறே தாலாட்டத் தொடங்கினாள். எதிர் திசையில் ரயிலொன்று பிளிறலுடன் கடந்து சென்றது. பெரு விலங்குகள் ஒன்றையொன்று கண்டுணர்ந்த குதூகலத்தின்  களியோசை.  

 

 

 

 

 

கொஞ்ச நேரத்தில் காவி முண்டாசு கட்டிய  அவல் பொரிக்காரன் வந்தான். அவனைத் தொடர்ந்து  “சூஊஊப்” என்றவாறே கேண்டீன்காரர் வந்தார். சூப், மிளகு, ரொட்டி வாசனையானது கலவையாக  அவரைச்சுற்றிலும் பரவியது.

 

 

 

 

 

தனக்கும் தனது மனைவிக்கும் என இரண்டு கோப்பைகள் சூப்பை வாங்கிய கணக்காளர், அவற்றை உண்ணும் பலகை மீது வைத்து விட்டு சட்டைப்பையிலிருந்து பணத்தை  உருவியவாறே “இன்னொரு ஆளுக்கும் சூப் வேணும். அவ்ரு டாய்லட்டுக்கு போயிருக்காரு இப்ப வந்திடுவாரு  நீங்க இந்த பெட்டியிலேயே இருங்கோ” என்றார்.

 

 

 

 

 

இரு கைகளையும் பிசைந்து துடைத்தவாறே கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த கிழவரிடம் “நீங்க போனதும் சூப்காரர் வந்தார்” என கணக்காளர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘அப்படியா” என வாயைப்பிளந்தவாறே பெருத்து விரிந்த புட்டம் நசுங்கிப்பிதுங்க அமர்ந்தார்.

 

 

 

உண்ணும் பலகையில் அமர்ந்திருந்த இரண்டு குவளை சூப்புகளையும் மாறி மாறி உற்றுப் பார்த்து விட்டு தள்ளி இருந்ததை வெடுக்கென எடுத்து “ச்சக்… ச்சக்” என ஓசை கிளம்ப குடிக்கத் தொடங்கினார் கிழவனார்.

 

 

.

 

கணக்காள தம்பதியர் கமுக்கமாக பேந்த பேந்த முழித்தனர். பின்னர் சங்கடத்துடன் மெல்ல சிரித்த மனைவி, கணவனின் காதில் முணுமுணுத்தாள்.

 

 

 

 

 

சூப்காரர் எந்த பக்கம் போயிருப்பார் எனத் தடுமாறிய கணக்காளர், உத்தேசமாக வலப்பக்க பெட்டிகளுக்குள் சென்றார். இருக்கையின் முனையில் அரைகுறையாக அமர்ந்திருந்த மனைவி. பத்து நிமிடங்கள் கழித்து வந்த கணவனின் கையை பார்த்தவுடன்  மறுபக்க பெட்டிகளின் பக்கம் கையை காட்டினாள்.

 

 

 

 

 

 

உதட்டை பிதுக்கியபடி திரும்பி வந்த கணவனை சோர்வுடன் பார்த்தாள்.  இரண்டு பேரும் குசுகுசுத்துக் கொண்டிருக்க. அதே நெடில் கூவலோடு  சூப்காரர் வந்து சேர்ந்தார். ஒரு குவளை சூப் வாங்கப்பட்டு உண்ணும் பலகையில் வைப்பதற்காக கொண்டு செல்லப்படும்போது  மூக்கை நீட்டி அந்தக் குவளையை உற்றுப் பார்த்த வக்கீல் நாவால் தன் இரண்டு உதடுகளையும் துளாவத் தொடங்கினார்.

 

 

 

 

 

கணக்காளரின் மனைவி கையிலிருந்து வீழ்ந்த தட்டின் ஓசையில் கிழவரின் கவனம் திசைதிரும்ப டக்கென  சூப் குவளையை மேல் இருக்கையில் தூக்கி வைத்தார் கணக்காளர் . மனைவியின் கண்கள் ஒளிர்ந்து பின் இயல்பாகின.  தட்டிலிருந்து மீண்ட கிழவனார் இங்குமங்கும் மும்முரமாக தலையை சுழற்றி மெல்ல முகம் தொய்ந்தார். தன் தொடை மீது இடது கையால் இருமுறை தட்டியவர், திடமாக கனைத்துக் கொண்டே கண்களை தீவிரமாக்கி கேண்டீன்காரரை பார்த்தார்.

 

 

 

 

 

“ஏய், என்னாபா சூப் குட்த்தே? அளவும் சரியில்லே ஒன்னுஞ் சரியில்லே. சுட்தண்ணிய குட்ச்சா மாதிரியில்ல இருக்குது”   வக்கீலின் குரல் உயர்ந்தது, போகப்புறப்பட்ட சூப்காரர் ஒரு கணம் திகைத்து, “ஓங்க கப்ப தாங்க ஜீ” என வாங்கி மீண்டும்  நிரப்பிக் கொடுத்தபின் கும்பிட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாக இடத்தை விட்டகன்றார். தன் பர்ஸை பற்றியபடியே குவளைக்குள் நாக்கால் துளாவிக் கொண்டிருந்தார் வக்கீல்.

 

 

 

 

 

வண்டி சவாய் மாதோப்பூர் நிலையத்தில் பத்து நிமிடங்கள் நின்றது. பிளேட்பாரத்தில்  ரயில் வாசலை ஒட்டியவாறே  வைக்கப்பட்டிருந்த பிரம்பு தாங்கியின் மேல் வட்டத்தட்டில் சமோசாவும் உருளைக்கிழங்கு துண்டங்களுடன் செங்கல் நிற உரப்பு ஆணமும்  நிரம்பியிருந்தன. ஈ விரட்டியிலிருந்து கிளம்பிய புகையில், மட்டமான நெடி வீச “ கரம் சமோசா சமோசா”  என்ற  பெருந்தொண்டைக்குரல் பிளாட்பாரத்தை நிறைத்தது.

 

 

 

எஞ்சினை மாற்றி மாட்டிய பிறகு ரயில் எதிர்திசையில் நகரத்தொடங்கியது. உறங்கும் நேரம் வரவே அவரவர் படுக்கைகளை உதறி படுக்க முயல வக்கீல் மட்டும் அவர் பாட்டுக்கு  சாப்பிட்ட தனது  எச்சில் தட்டை படுக்கையில் வைத்தவாறே யாரையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எல்லோரும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். படுக்கைக்காக காத்திருந்தவர்களில் ஒரு கைக்குழந்தையும்அடக்கம்.

 

 

 

இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஷாஹூலுக்கு மண்டைக்குள் சூடாக நிரம்புவது போல இருந்தது.. “யோவ் எழுந்திருய்யா”  என்ற சொல்லானது தட்டி விடப்படும் விசைக்காக காத்திருக்கும் ரவை போல தொண்டைக்குள் விறைத்தது. அந்தந்த  சீட்காரர்களே அமைதியாக இருக்கும்போது நமக்கெதற்கு வம்பு என மொத்த சூழ்நிலையையும் கணக்கிலெடுத்து மனம் தீர்ப்பளிக்க, அமைதி காத்தான்.

 

 

 

 

 

நடு படுக்கையை தூக்க விட முடியாதவாறு வழிந்திறங்கும் தொந்தியை கீழிருக்கையில் சாய்த்தவர் தனது செல்பேசியிலிருந்து ஒலித்த “பஜ்ரங்கு பலீ மேரி நாவு  ச்சலீ “ என்ற பஜனை வரிகளுக்கேற்ப சீரான தாளகதியில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். அந்த படுக்கைக்கு சொந்தக்காரனான ஒடியாகப்பா இளைஞன் கொஞ்சம் தள்ளி காலியாக  இருந்த மேல் படுக்கையில் வேறு வழியின்றி போய் படுத்தான்.

 

 

 

 

 

வக்கீல் தனது புட்டத்தை ஒருக்களித்து கிளப்ப  “ டர்ர்ர்…. “  ஓசையுடன் ஏசியின் கனத்த குளிர்காற்றுக்குள் கரிம நெடி சுழன்றடித்தது. “ஹே பக்வான்” என்றவாறே தன் உள்ளங்கையால் வயிற்றை தடவிக்கொண்டிருந்தார்.

 

 

 

 

 

ஒரு மணி நேரம் கழித்து ஏதோ ஒரு நிலையத்தில் வண்டி நின்றது. வண்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக செல்கிறது என சொல்லிக்கொண்டே பெட்டியினுள் நுழைந்த ஒருவர் மேல் படுக்கையில் வாயைப்பிளந்து தூங்கிக்கொண்டிருந்த ஒடியாகப்பாவை  படபடவென தட்டி எழுப்பி , “உத்தரோ!  யஹ் மேரா  சீட் ஹை!”  என்றார்.  பதறி விழித்தான் அவன்.  புறங்கையால் எச்சிலொழுகிய வாயை துடைத்தபடியே இறங்கிய ஒடியாகப்பா தூக்க கலக்கத்தில் கால் தவறி கீழே விழுந்த பின் சுதாரித்து  முனகியவாறே எழுந்து  இருக்கை சட்டகத்தின் மீது சாய்ந்து கொண்டு இடுப்பை நீவிக் கொண்டிருந்தான்.

 

 

ரயில் தன் முதுக்குக்கப்பால் விட்டுச் சென்ற ஏதோ ஒரு ஊரிலுள்ள  ஒலிபெருக்கியிலிருந்து  கிளம்பிய ஓசை  கண்ணாடி தடுப்பையும் தாண்டி பெட்டிக்குள் வந்து வந்து மடங்கியது.

 

 

 

 

 

பெரும் பெரும் கொப்பரைகளில் செம்மஞ்சள் நிறத்தில் திரவம் தளதளத்துக் கொண்டிருந்தது. தகித்துக் கொண்டிருந்த தழலும் திரவத்தின் நிறத்திலேயே கொப்பரையை தழுவியபடி காற்றினுள் நெளிந்தவாறே எதையோ பிடிக்க முயன்று முயன்று தீர்ந்து கொண்டிருந்தது.

 

 

 

 

குவளை வடிவில் எண்ணற்ற வாய்கள் உதடுகளற்று வட்டச்செப்பு போலிருந்தன. மொத்த வாய்களும் கொப்பரையை சுற்றிலும் மிதந்தலைந்தன. அந்தரக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப்போன்றதொரு ஒழுங்கில் அனைத்து வாய்களும் செங்குத்தாய் எண் ஒன்றின் வடிவத்தில் விறைத்து நிமிர்ந்தன. கபகபவென பெருஞ்சிரிப்பொலியொன்று கேட்டது. எண் ஒன்றின் கால் பாகத்திலிருந்து பூப்புள்ளிகளாய் சறுகி உதிர்ந்த கோப்பை வாய்கள் கொப்பரைக்குள் முழ்கின.

 

 

 

 

உள்ளிறங்கிய கோப்பைகள் ஒவ்வொன்றாய் குதித்து மேலெம்புவதும் தாழ்வதுமாய் இருந்தன. அவற்றிற்குள் அத்திரவம் நிரம்பியிருந்தது. வட்டச்செப்பு போலிருந்த குவளைகள் இப்பொழுது வெந்து நீண்டு ஜாடி போல் ஆகியிருந்தன.  தீத்தழல் அவிந்து  ஆறியபின்  நுங்கும் நுரையுமான வெண் அடர் பாலாக பெருகி ஓடத்தொடங்கி ஷாஹுலின் கால் விரல்களை தீண்டியது. அதன் குளிர்மையானது  விரல்கள் கெண்டைக்கால் தொடைகளின் வழியே தலையை நோக்கி ரகசிய அரவம் போல ஊர்ந்தது.

 

 

 

“யே இதர் ரக் உதர் ரக்” என்ற கூச்சலில் கண் விழித்த ஷாஹூலுக்கு யானையின் முதுகைப்போல பெட்டிக்குள் நிறைந்து ஊர்ந்த அம்பாரம் அம்பாரமான அட்டைப்பெட்டிகள் மட்டுமே தெரிந்தன. மூச்சு முட்டுவது போல இருந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டான். பெட்டிகளினடியிலிருந்து “அத அங்க வை இத  இங்க  வை” என்ற அதட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

 

 

 

 

அட்டைப்பெட்டிகளின் நடுவிலிருந்து திருகிய மீசையுடன் செம்பரட்டை தலையும் கடுக்கன் காதுமாய் ஒருவன் வெளிப்பட்டான். கடுகெண்ணெய் வாடை கலந்த குளிர் நெடி பெட்டிக்குள் வீச்சுடன் நுழைந்தது . அவனுக்கு பின்னால் இளம் வயது பெண்ணொருத்தியும் கைக்குழந்தையொன்றும் வந்தனர். அம்பாரக்குவியலின் உடைமையாளர்களான அவர்கள் அடுத்த நாள் மாலையில் வரக்கூடிய  ஹிங்கன்காட் என்ற ரயில் நிலையத்தில் இறங்குகின்றார்களாம்.

 

 

 

கடைக்கான சரக்குகளா? என ஷாஹுல் செம்பரட்டை தலையனிடம் கேட்க அவன் “இல்லயில்ல வீட்டுக்குள்ளது” என அசடு பொங்க சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ அரேபாய் ! ராம்கஞ்ச் மண்டி ஸ்டேஷனா இது? “என்ற வக்கீலின் தொள தொளத்த குரல் கேட்டது. யாரோ “ஆம் “ என்றவுடன் ஏதோ கூக்குரலிட்டார். சொற்களற்ற அக்கூக்குரல் கதவிடுக்கில் நசுங்கிய தவளையின் அபய விளி போல இருந்தது.  இதற்குள் வண்டி கிளம்ப மேல் படுக்கையில் இருந்த பயணியொருர் அபாயச் சங்கிலியை இழுக்க  வண்டியின் வேகம் மட்டுப்பட்டு  நின்றது.

 

 

 

 

ஒரு கையில் ஒற்றை ஷூ , மறு கையில் நைலான் பை என வெளிறிய முகத்தோடு படுக்கை விரிப்பு தரையில் இழுபட தட்டுத்தடுமாறி பதறியவராக இறங்கினார் வக்கீல்.

 

 

 

 

வண்டியின் தாலாட்டிற்கேற்ப  வலமும் இடமும் குலுங்கியபடியே கணக்காளரும் அவரது மனைவியும் தங்கள் பிள்ளைகளை அணைத்தவாறே ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.   தனது தலையை நோக்கி ஊர்ந்த பாலின் குளிர்மையானது தனது கனவிலிருந்து வெளியேறி எங்கு சென்றது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தவாறே உறக்கத்திற்குள் மீண்டான் ஷாஹூல்.

 

 

 

 

ஒற்றைப்பக்க கண்ணாடிச்சில்லும் காதும் நொறுங்கிய நிலையில் கறுத்த மூக்குகண்ணாடி ஃபிரேம் நடைபாதையில் கிடந்தது. வண்டியின் குலுக்கலில் ஆடி ஆடி அது கதவோரம் ஒதுங்கியது. அதன் உடைந்த சில்லுகளில் இரவு விளக்கின் நீல வெளிச்சம் எண்ணற்ற துணுக்குகளாய் எதிரொளித்துக் கொண்டிருக்க , இரவுக்கு மேல் ரயிலின் சக்கரம் இரும்பு மணத்துடன் உருண்டோடிக் கொண்டிருந்தது.

 

 

 

 

உறக்கம் வராமல் நடு இருக்கையில் ஒருக்களித்து படுத்திருந்த ஒடியாகப்பாவின் மாறுகண் விழிகளில் செல்பேசியின் வெண் நீலஒளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. செல்பேசியை தன் தொடையில் அமர்த்திப் பிடித்தவாறே எழுந்து முதுகையும் தலையையும் வளைத்தபடி இருக்கைக்குள் அமர்ந்தான்.  அவனது  நாக்கில் பொரித்த வேர்க்கடலை பருப்புகள் மிதக்கும் கார சூப்பொன்றை குடிக்கும் ஆசை எறும்பைப்போல ஊரத்தொடங்கியிருந்தது.

 

 

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment