Friday, 3 July 2020

மஹ்லறா நகர் முதல் காட்டு மொஹ்தூம் பள்ளி வரை....




தலைப்பை பார்த்து விட்டு ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்கா முதல் கங்கை வரை’ மாதிரி என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்ற பொறுப்பு துறப்புடன் தொடக்கமாகின்றது.


ஒரு மழை நாளின் அடுத்த நாள் புலர் வேளையில்  நமக்கு பிடித்தமான  நிலப்பரப்புகளுக்கு போய் பார்ப்பதென்பது ஒரு தனி களிகூரல்தான்.

சில  நாட்களுக்கு முன்னர் பொறுக்க  அடித்த மதிய மழையில் தாகங்கொண்டு கிடந்த  நிலம் விடாய் தீர்ந்தது.  மூன்று மாத எரிகோடைக்குப்பிறகு கிட்டிய விண்பேறு.

சைக்கிள் கையிலிருக்கும் தெம்பில் சுபஹ் தொழுகைக்குப்பிறகு மஹ்லறா நகரிலிருக்கும் எனது வீட்டிலிருந்து  05:20 மணிக்கு   கிளம்பினேன்.  கறுந்திரவமடங்கிய பெருங்கலப் பரப்பின் மீது ஒளிக்கிரணங்கள்  பால் துளிகளாய் சொட்டிக் கொண்டிருந்தன.

சைக்கிளுக்கான ஒவ்வொரு மிதியிலும் முட்டி வலித்தது.  என்றும் இளமையாகவிருக்க முட்டிகளுக்கொன்றும் தனித்த வரமேதுமில்லைதானே. முஹ்யித்தீன் பள்ளியைக்கடந்து சதுக்கையை நெருங்கும்போது மரப்பாங்கில்  புகாரி மாமா தொந்தி சரிய கிடந்தார். அது இருப்பல்ல  கிடப்புத்தான். கிழவனார் அந்த கால் வெளிச்சத்திலும் என்னை அடையாளங்கண்டு விட்டு  ஓங்கி ஸலாம் சொன்னவர், “ என்னா சாள மாப்ளே ! பம்பைக்கு போவய்லியா”? என்றார். பாவம் அவரின் முக்காலமும் மும்பைக்குள்தான் உறைந்திருக்கின்றது. சென்ற காலத்தில் மட்டுமே வாழும் மனிதர். முழுக்க  பழம் நினைவுகளின் அசை போடுதலின் வழியாக முதுமை தன்  நிகழ் கணத்தை கழித்துக் கொள்கின்றது. 

கொடிமர சிறு நெய்னார் பள்ளி, ஆறாம்பள்ளி, அல் ஜாமிவுல் அஸ்ஹர் ,தாயிம்பள்ளி என பள்ளிச்சந்திகளைக்கடந்து திருச்செந்தூர் சாலைக்குள் நுழையும்போதுதான் ஈர நிலத்தை தழுவியெழும் காற்று தீண்டுகின்றது. அமுங்கிய மண் வாசனை வீசிக் கொண்டிருந்தது. முதலிரவு  பெண்ணின்  நிறத்தீற்றலுடன் நிலம் சிவந்து அடங்கி கிடந்தது. மழைக்கு பிந்திய நாட்களில் மட்டுமே கிடைக்கும் நுகர்வு.

நிறைய இளைஞர்கள் வியர்வை ஒழுக   நிலம்  மிதித்துக் கடந்தனர். கிழமெய்வதுவதற்கு முன்னருள்ள விழிப்பு நல்லதுதான். காட்டு மொஹ்தூம் பள்ளி வளாகத்தினுள் நுழையும்போது சரியாக இருபத்தியிரண்டு நிமிடங்கள் கடந்திருந்தன.

பெருந்தொற்று எச்சரிக்கை அறிவிப்புகளோடு ஆழ்ந்து கிடந்தது வளாகம். அஷ்ஷஹீத் (ஈகியர்) முத்து மொஹ்தூம் மதனீ  { கி.பி. பத்தாம் நூற்றாண்டு காலத்தவர்} அவர்களின் அடக்கவிடத்தில் ஒருவர் ஓதிக் கொண்டிருந்தார்.  புலரியின் ஒளிக்கவிழ்வில் குளம் கறுத்துக் கிடந்தது. இந்தக் குளத்தை வைத்துதான் என்னுடைய தொடக்க கால “மண் மிட்டாய் “ சிறுகதையை எழுதியிருக்கின்றேன்.

இரண்டு வேப்ப மரங்களில் ஒன்று வாடிக்கிடந்தது. வளாகத்தில் தங்கியிருந்த முதிய மாதொருவர் கிளம்பி வந்து அடக்கத்தலத்திற்கு நேராக சில நொடிகள் நின்றார். பின்னர் பாதணி ஒலி கிளம்ப எங்கோ கிளம்பிச் சென்றார்.

பாதுகாப்புக்கருதி குளத்தை சுற்றி கம்பி வேலியிட்டு  இரும்பு வாயில் போட்டு பூட்டியிருந்தனர். உள்ளே குளக்கரை முழுவதும் சிமிட்டித் தரை. மழைக்காலங்களைத்தவிர மற்ற காலங்களில் குளத்தை தொட வேண்டுமென்றால் உள்ளேதான் குதிக்க வேண்டும்.  குளமென்பது அதனுள் உறையும் நீரினால் மட்டுமல்ல  அதன் கரைகளைக் கொண்டும்தான் பொலிவடைகின்றது. குளத்திலுள்ள மீன் உள்ளிட்ட உயிரிகள், மண் விண்ணுடன் மனித தீண்டல்களும்தான் ஒரு குளத்தை நீர் நிலைகளை முழுமையடையச்செய்கின்றது. குளத்தின் விரிந்த பரப்பு உண்டாக்கும் பிரமிப்பு அதன் சிமிட்டி தரைகளைப் பார்க்கும்போது கலைந்து போய் விடுகின்றது.


அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு மறு புகழாக நாயகத்திருப்புகழ் பாடிய  வரகவி காசிம் புலவர் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு காலத்தவர் . இவரது நினைவிடம் காயல்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளிவாசலையொட்டியுள்ளது  “ மக்கப்பதிக்கு… “ என்ற அடிகளுக்குப்பிறகு  சுணக்கம் ஏற்படவே இந்தக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு வரிகளைத்தேடினார்கள். அப்போது நாயகம் ( ஸல் ) அவர்கள் “ உயர் சொர்க்க பதிக்கும் “ என்ற அடியை எடுத்து கொடுத்ததாக ஒரு தொன்மம் உண்டு.






இரும்பு வாயிலினருகே உள்ள பழைய அறையின் கூரையில் அமர்ந்திருந்த புறாக்கள் மீண்டும் தரையில் வந்தமர்ந்தன. வளாகப் பணியாளர் தரை விரிப்பை சுவற்றிலடித்து உதற அதன் ‘படார்’ ஒலியில் என்னுடன் புறாக்களும் சேர்ந்து திடுக்கிட்டன. ஈடாக பெரும் தரை விரிப்பை உதறினால் எழும் பேரோசைக்கு நிகர்த்த ஓசையை எழுப்பிக் கொண்டு மீண்டும் அவை அந்த ஒற்றை அறையின் கூரையிலும் கொடிமரத்தின் மேடையிலுமாக போய் அமர்ந்தன. நூற்றுக்கணக்கான இறக்கைகளின் ஓசை ஒத்திசைவு.

வேப்ப மரத்தின் உச்சியையும் தாண்டி குரலெழுப்பிக்கொண்டு பறந்த ஒற்றைக்கிளியானது   இன்னும் நான்கைந்து கிளிகளைச் சேர்த்துக் கொண்டு கொடிமர மேடையில் இறங்கி புறாக்களுடன் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.

இளம் பருவத்தில் அதாவது கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளிருக்கும். என் மூத்த காக்கா, கால் நடையாக ஊரிலிருந்து இங்கு என்னை நடத்தி அழைத்து வருவார். அமைதியும் புன்னகையும் ஒருங்கேறிய ஆஸாத் தெரு நூருத்தீன் காக்காவின் மரக்கூண்டு கடை. அங்கு கிடைக்கும்  சூடான வெங்காய போண்டாவுடன்  ஏலக்காய் மணக்கும் தேநீர். நூருத்தீன் காக்கா மண் மறைந்து ஆண்டுகள் எத்தனையோ? ஆனால்  நினைவின் ஆழத்தினுள் அவருடன் போண்டாவிற்கும் தேநீருக்கும்  நிரந்தர இடமுண்டு.

இந்த வளாகம் சலவைக்கற்களைக் கொண்டு புதுப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஓட்டுக்கூரைக்  கூடத்துடன்  திண்ணையயொன்றுமிருந்தது. வேப்பிலைகளின் பசிய மணத்துடன்  எழும் காலைக்குள் ராஹத் விரவியிருக்கும்.

ஓட்டு மண்டபத்தின் உள்ளும் புறமும் கைவிடப்பட்ட மனிதர்கள், உள நோயாளிகள், நேர்ச்சையாளர்களினால் நிறைந்து காணப்படும். ஸியாரத்திற்கு வருவோரின் தர்மங்களினால் பாதிப்பேரின் அன்றாட பசி  தீர்ந்து விடும்.

 இவ்வளாகத்தில் இன்று அப்படி கூட்டமொன்றுமில்லை.. ஒருவேளை தொற்றச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம். இரவில் ஆட்கள் வந்து தங்கி சொல்வதாக சொன்னார்கள். நேர்ச்சை நிமித்தம் வருபவர்களுக்கான தங்கும் அறைகளை கட்டி விட்டிருக்கின்றனர். அறை வாடகையாக சிறு தொகை பெறப்படுகின்றது.

கட்டிட புதிப்பித்தலின் போது  வருகையாளர்களுக்கும் அங்குள்ள சூழலுக்குமிடையே நிலவிய ஒத்திசைவு  காணாமலாக்கப்பட்டிருக்கின்றது. எல்லா வழிபாட்டு , நினைவிடங்களுக்கும் மனிதன் செய்யும் பெருங்கேட்டு வழமை இது. வழிபாட்டுத்தலங்களையும் நினைவிடங்களையும் பராமரிப்பவர்களுக்கு பற்றுடன் கூடவே  அந்த தலம் சார்ந்த நுண்ணுணர்வும் சூழலமைவு அறிதலும் இன்றியமையாதது. இந்த அறிதலற்றவர்களால் நிர்வகிக்கப்படும் எவ்வளவு பெரிய பழைய வரலாற்று இடங்களானாலும் சரி அந்த தலங்களின் தொன்மை நினைவுகள் அழித்து நீக்கப்பட்டு விடும் .

 நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் வரும்போது கூட  நினைவிடத்தின்  வடமேற்கு மூலைக்கு அப்பால் பின்புறமாக சில  கீற்று குடில்கள் இருந்தன. அவற்றிற்கு மின்னிணைப்பும் இருந்தது. எனக்கு தெரிந்த  ஊர் முதியவொருவர்  குடும்ப முரண்களின் காரணமாக இங்கு வந்து ஒதுங்கியிருந்தார். அவருக்கான முவ்வேளை உணவும் இரு வேளை தேநீரும் அடக்க விலையில் அருகிலிருந்த ஒரு வீட்டாரால் சமைத்தளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அந்த குடில்கள் இருக்கின்றனவா? என தேடிப்பார்த்தபோது ஒன்றும் தட்டுப்படவில்லை. 

காட்டு மொஹ்தூம் பள்ளியில் அறிதலற்றவர்களால் தொடப்படவியலாமல் அங்கு இருக்கும் ஒரே விஷயம் ஏகாந்தம் மட்டும்தான். அங்கு உறையும் நாயகரின் இருப்பினால் மட்டுமே அது தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பகல் பொழுதின் எந்த வேளைகளில் இங்கு வந்தாலும் தன் முழு இருப்பையும் எந்த விட்டுக் கொடுப்புகளுமின்றி நிலை நாட்டிக் கொண்டிருக்கும் பெருந்தனிமையின் வெளியில் நாமும் மனதும் வேண்டிய அளவிற்கு  இளைப்பாறிக்கொள்ள முடியும்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு தோரண வாயிலைக்கடந்து சாலையேறும்போது இடது பக்கமிருந்த உடை மரக்கிளையில் அமர்ந்திருந்த மைனா ஆங்காரத்துடன் கிறீச்சிட்டது. காக்காவுடன் நான் நடந்து வந்த நாட்களை ஒரு வேளை அது நினைத்து பார்த்திருக்கக் கூடும். சாலையின் தார் மணமும் உடங்காட்டு  மணத்துடன் ஏற்கனவே காற்றில் கலந்திருந்த பனை வாசத்தையும் ஒரு சேர நாசிக்குக்குள் இழுத்து நிறைத்தேன். நாற்பதாண்டின் மணம் சிறிதும் குறைவுபட்டிருக்கவில்லை.

காட்டு மொஹ்தூம் பள்ளியிலிருந்து மஹ்லறா நகருக்கு இன்னும்  நான்கு கிலோ மீற்றர் மிதித்து போக வேண்டும்.








1 comment: