Monday, 29 June 2020

குற்றிக்குள் மழை

என் சிறு வயதில் எங்கள் வீட்டில் வருடந்தோறும் மழை நீரடங்கிய குற்றி இருக்கும். வெற்று ஹாலிக்ஸ் குற்றிகளை இதற்கெனவே உம்மா சேர்த்து வைத்திருப்பார்கள். எப்போது மழை பெய்தாலும் சரி,   வாயில் வெள்ளைத்துணி கட்டப்பட்ட அகன்ற வாயுடைய அடுக்கு சட்டி உடனே மொட்டை மெத்தைக்கு சென்று விடும்.


அவ்வப்போது வரும் மழையை உம்மா விடுவதில்லை என்பதால் வருடம் முழுக்க  எங்கள் வீட்டில் மழை நீர் குற்றி இருப்பிலிருக்கும்.ஒடுக்கத்து புதன் உள்ளிட்ட சிறப்பு நாட்களுக்கும், நோய் மருந்துகளுக்கும் கையிருப்பு மழை நீர் பயன்பட்டுக் கொண்டேயிருக்கும்.


திண்ணை அலமாரிதான் மழை நீர் குற்றியின் இருப்பிடம். தேன், குந்திரிக்கம், குமஞ்சான், சந்தனக்குச்சி வரிசையில் இதுவும் இருக்கும். அலமாரியைத் திறந்தவுடன் எல்லாம் கலந்த கலவை மணம். சிறு வயதில் எனக்கு அந்த மணம் ஒரு வித ஒவ்வாமையை உண்டாக்கும்.


இன்றைய ஊர் மழையினால்  நாசிக்குள் சுற்றும் அந்த கலவை மணத்திற்குள் என் மொத்த உம்மா வீடும் மீண்டெழுகின்றது. பழைய ஒவ்வாமையில்லை.


காட்சி, சுவையுடன் மணமும் கடந்து போன காலங்களின் உறை படிமங்கள்தான். ஈஸா நபியின் அழைப்பிணங்கி மண்ணறையிலிருந்து எழுந்து வந்த உக்கிய எலும்புகளைப்போல இறந்த காலம் நிகழ் கணத்திற்குள் புத்துயிர்க்கின்றது.



இரண்டு மாதங்களாய் காய்ச்சியெடுத்த வெய்யிலிலிருந்து விடுவித்ததன் கைம்மாறாக  இன்று  பொழிந்த விண் நீரை நான் குற்றிக்குள்  பிடித்து வைத்துள்ளேன். கால் வாசி குற்றி நிரம்பியுள்ளது.  வாராது வந்த மாமணி என்பதற்காக மட்டுமில்லை அதற்குள் இருப்பது என் உம்மா   என்பதற்காகவும்தான் குற்றிக்குள் மழையை பொதிந்து வைத்திருக்கின்றேன்..    

1 comment: