Thursday 25 June 2020

பழைய சைக்கிளும்……


பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறும்போது ஓரங்கட்டப்பட்ட சைக்கிள். மழையிலும் வெய்யிலிலும் நனைந்து தன் இறுதி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருந்தது. கூடவே என் இளைய மகனின் கால் வண்டியும்.


பழைய வீட்டைத் துப்புரவாக்கும்போது இந்த சைக்கிள்களை விற்று விடுவோம் என நானும் மனைவியும்  ஐந்து மாதங்களுக்கு முன்பு முடிவு செய்து விட்டோம்.


முடிவை செயல்படுத்துவதற்குள் நாடடங்கு காலம் தொடங்கி விட்டிருந்தது.


கால வரையின்றி தொடரும் நாடடடுங்கு காலமானது  தொழில் சேமிப்பு எல்லாவற்றையும்  துழாவித்   துடைக்க துடைக்க  செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டிய கட்டாயம்.


செய்தித்தாளை நிறுத்தியது


தின்பண்டங்களை நிறுத்தியது


பெரு நாள் ஆடைகள் வாங்காமை


மடிக்கணினி இணைய சேவை துண்டிப்பு


ஹார்லிக்ஸை  நிறுத்தியது


என செலவுகளை வெட்டிச்சுருக்கியதோடு மாற்று ஏற்பாடுகளையும் தொடங்கியாகி விட்டது


கேப்பை பானம்


 தோட்டத்தில் உணவு மரக்கறிகளை பயிரிட்டிருப்பது


பற்பொடி  தயாரிப்பு


இந்த வரிசையில் பைக்கிற்கான எரிபொருள் செலவை குறைக்கும் விதமாக நீள் துயிலில் உறைந்து கிடந்த சைக்கிளுக்கும் புத்துயிரூட்டியாகி விட்டது.



சைக்கிளுக்கான பழுது நீக்கும் செலவு  ரூ680/=. மகனின் கால் வண்டியை விற்ற வகையில் மஃபாஸ் சைக்கிள் மெய்தீன் மாமா  ரூ600/= தந்தார். கூடுதலாக ரு.80/= ஐ கையிலிருந்து போட்டு வீட்டிற்கு சைக்கிளை அழைத்து வந்தாகி விட்டது. பழைய வீட்டிலிருந்து தற்போதைய வீட்டிற்கு மிகத்தாமதமாக   குடிபெயர்ந்த ஆள் என்ற சிறப்பும் சைக்கிளுடன் ஒட்டிக் கொண்டது,



அவசர வேலைகளுக்கும் வெய்யில் நேரங்களிலும் பைக். மற்ற நேரங்களில் சைக்கிள் என நேரப்பிரிவினையும் ஆகிவிட்டது.



நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு  நேற்றிரவு சைக்கிளில் முதன் முறையாக  நான் ஏறி அமர்ந்ததைப் பார்த்த என் இளைய மகன் . “ இப்பத்தான் நீங்க பழைய வாப்பாவா ஈக்கிறியோ “ என்றான்.



பழைய சைக்கிளுடன் பழைய வாப்பாவும்  மீளக்கிடைத்திருப்பது இரட்டிப்பு பெறுதல்தானே!!!                 





 













1 comment: