Friday, 20 December 2019

பே ஓட்டம்





மனிதர் 1

பொறித்த உருளைகிழங்கில் செய்யப்படும் குச்சி போன்ற தின்பண்டமும் , திராட்சைப் பழமும் தின்ன அவருக்கு கொள்ளை ஆசை. ஆனால் ஒன்றிரண்டு துண்டங்களுக்கு மேல் அவர் அதை தின்னக்கூடாது என மருத்துவரின் கண்டிப்பான கட்டளை. காரணம் அவருக்கு சிறு நீரகங்கள் இரண்டும் பழுதாகி போயிருந்தன .

தின்ன ஆசைப்பட்ட அந்த மனிதருக்கு வயது 65 இருக்கும். ஊர் ராமநாதபுரம் பக்கம்.  அவருக்கு 2 ஆண் மக்கள். நல்ல குண சாலிகள் . மலேஷியாவில்  பெரிய பல்பொருள் அங்காடிக்கு உரிமையாளர். வாழ் நாளில் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவர். தன் வாழ்வின் கடைசி காலத்தில் மருத்துவத்திற்காக தமிழகம் வந்திருந்தார்.


ஊண் , உறக்கம் மறந்து கோக்கோ கோலாவையும் உருளைகிழங்கு குச்சி பொரியலையும் மட்டுமே பல வேளைகளில் கொறித்து மாடாய் உழைத்து அந்த பெரும் பல்பொருள் அங்காடியை உருவாக்கியிருந்தார். அவர் நினைத்ததை விட சிறப்பாக அங்காடியும் உருவாகிவிட்டது . ஆனால் மென்பானமும் நொறுக்குத்தீனியும் ஓய்வு உறக்கமின்மையும் அவரது இரண்டு சிறு நீரகத்தையும் கெடுத்து விட்டது.

.. பல்பொருள் அங்காடியின் வாயிலாக வந்த கொழுத்த பணத்தின் வாயிலாக அவருக்கு சிறந்த மருத்துவம் நடந்தது.
தொடர்ந்த சீரற்ற சிறு நீர் ஒழுக்கு  , அதிக கோபம் , கைகால் வீக்கம் , உடல் வலி என்பவற்றுடன் கடைசியில் அவர் இறந்தே போனார்.

மனிதர்கள்  2, 3


இந்த மனிதர்கள் நமதூரை சார்ந்தவர்கள்.

இந்த  2 ஆம் மனிதர் ஹாங்காங்கில் முதலில் மாணிக்க வணிகம் செய்து வந்தார். வணிகத்தில் ஏற்பட்ட சரிவும் நலிவும் அவரை அலுவலக உதவியாளராக , பணியாளராக , காவலாளியாக கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் அவர் குடும்பத்திற்குள் நடந்தவைகள் :
ஆண் மக்கள் நல்ல தொழிலில் நிலையான வருவாயில் உள்ளனர். பெண் மக்களுக்கு திருமணம் முடித்து கொடுத்தாகி விட்டது. மருமக்களின்  நிறைவான வருமானம். பேரனும் படித்து முடித்து விட்டு வேலையில் சேர்ந்து விட்டான்.

இப்போது அவருக்கு வயது எழுபதை நெருங்குகின்றது .மனிதர் நிம்மதியாக இனி ஊரில் வீட்டில் ஓய்வெடுக்கலாம். ஆனால் அவர் மாத சம்பளத்தில் பணியாளராக ஹாங்காங்கில் இன்னும் நீடிக்கின்றார். இந்த ஆண்டு படித்து முடித்து விட்டு  வேலை தேடும்போது  அவரது பேரனுக்கு ஏற்பட்ட எதிர்கால வாழ்வு மீதான பதட்டத்திற்கு சற்றும் குறையாத பதட்டத்துடன் அவர் அந்த வேலையில் நீடிக்கின்றார். அவரால் கலகலப்பாக இருக்க முடிவதில்லை. ,மனம் விட்டு சிரிப்பதுமில்லை.

 03 ஆம் மனிதனும் ஊர் ஊராக அலைந்து திரிந்து வணிகம் செய்பவன். வாரத்திற்கு தொலை தூரமான மூன்று ஊர்களுக்கு சுற்றி வருபவன். எந்த ஊருக்கு சென்றாலும் அந்தந்த ஊர்களின் புதினங்களையோ சுற்றுலா இடங்களையோ பார்க்க போகவே மாட்டான். கேட்டால் எனக்கு வியாபரத்த உட்டா வேற சிந்தனையே இல்ல என்பான்,

பல கோடிக் கணக்கில் வரவு செலவு. மூன்று மாதம் கழித்து ஊர் சென்றவன் இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் வீட்டில் தங்கவில்லை.

ஏன் மச்சான் ஊரிலிருந்து சீக்கிரம் வந்துட்டா என ஒருவர் கேட்டதற்கு குடும்பத்தோடு மனைவியோடு இருந்தா பணம் கிடைக்குமா?  என கேள்வி கேட்டவரைப்பார்த்தே திரும்ப இவன் கேட்கின்றான்.

இவனின் இந்த போக்கினால் வீட்டை நிலை குலைய வைக்கும் பலத்த அதிர்வுகள்  சில நிகழ்ந்தன. கையை பிசைந்து கொண்டு நண்பர்களிடம் இவன் கண்ணீர் விட்டான்.

கண்ணீரின் ஈரம் காய்வதற்கு முன்னரே தனது முடிவற்ற தொழில் வலசை என்ற பே ( ய் ) ஓட்டத்தை தொடங்கி விட்டான்.

வாழ்வின் எதிர்மறையான ஆளுமைகளை பற்றி மட்டுமே நான் இங்கு கூடுதலாக எழுத ஒரு காரணமிருக்கின்றது.

எதிர்மறையான ஆளுமைகளும் போக்குகளும் நமக்கு முன் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றது.

எது அதிகமாக பெரும்பான்மையாக இருக்கிறதோ அதுதான் உண்மையான வாழ்க்கை என அனைவரையும் நம்ப வைப்பதில் அந்த எதிர்மறை போக்கு வெற்றி பெற்றுள்ளது. பிறழ்வுகள் பொது விதியாக்கப்பட்டு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவர் மீதும் திணிக்கப்படுகின்றது.

இப்படி வலிந்து உருவாக்கப்பட்ட பொது விதியை மீற நினைப்பவர்களுக்கு ஏராளமான இலவச நல்லுரைகள் அள்ளி வழங்கப்படுகின்றது. அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவும் வினோதமானவர்களாகவும் பொது சமூகத்தால் பார்க்க்ப்படுகின்றனர்.

இந்த பிறழ்வு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் உயர்ந்த மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் பெருங்கடலின் நடுவே மிதக்கும் வெண்ணெய் படலம் போன்றவர்கள். வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை அவர்களுடையது.

 

தீவில் பிறந்த பெரு நிலம்

அந்த தோப்பில் இரண்டு மரங்களுக்கிடையே கயிறிலானல் பின்னப்பட்ட  வலை ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. வானத்தை பார்த்துக் கொண்டு அதில் ஹாயாக குழந்தைக்குரிய குதூகலத்துடன் கிடந்தபடி மெதுவாக ஆடிக்கொண்டிருக்கின்றார் 76 வயது முரய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்.
நடுவண் அரசின் மீன்வளத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அரசு துறை என்றவுடன் பெரும் பதவி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்., அருங்காட்சியக உதவியாளராக மட்டுமே பணியாற்றிவர். ஓய்வு பெறும் வயது வரை அதில் ஒட்டிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றவர்.

தன் வாழ்வின் சாரத்தை இழையை ஒட்டி பயணிப்பதற்கு அரசு வேலை தடையாக இருந்ததால்தான் அவர் இந்த முடிவை எடுத்தார்.

எளிமையான மாத ஊதியத்தில் தனது நான்கு மக்களையும் வளர்த்தவர் . முறை சார்ந்த கல்விக்கூடங்களுக்கு அவர்களை அனுப்பாமல் தனது வீட்டிலேயே வைத்து அவர்களுக்கு கல்வி புகட்டி ஆளாக்கியவர்.

அவருக்கென சொத்து பத்துக்கள் எதுவுமில்லை. பணப்பாதுகாப்பும் இல்லை.
அரசு ஊதியத்தில் வாங்கிய கொஞ்ச நஞ்ச நிலங்களையும் தனது மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு ஓய்வூதியத்தில் தன் வாழ்க்கையை கழிக்கின்றார்.

அவர் ஒரு இயற்கை அறிவியலாளர் . அத்துடன் கப்பல் கட்டும் கலை , தற்சார்பு வாழ்வியல் , கட்டிடக்கலை , மொழியியல் , கல்வி , பொறியியல் தொழில்  நுட்பம் , கடல் உயிரியல் , கடல்சார் ஆய்வு , புவிபரப்பியல் , வானியல் , வேளாண்மை , ,சூழலியல் போன்றவற்றிலும் தனது தடங்களை பதித்தவர்.

இந்த அபாரமான அபூர்வமான திறமைகளை வைத்துக் கொண்டு அவர் ஒருபோதும் செல்வத்தை குவிக்க முயற்சித்ததே இல்லை. கல்வியும் திறமைகளும் வயிற்றைக்கழுவ மட்டுமே என்ற மூட நம்பிக்கையும் அவருக்கில்லை.

இறைவன் வழங்கிய இந்த திறமைகளை வைத்து மனித வாழ்வை இன்னும் எப்படி எளிமையாக கையாள்வது என சிந்தித்தவர். அதற்காக தனது சொந்த வாழ்க்கையையே சோதனைக்களமாக மாற்றி சோதித்து அறிந்தவர்.
லட்சத்தீவில் பிறந்து தமிழகத்திலும் கேரளத்திலும் வளைகுடாவிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிந்தவர். ஆழ்கடலின் மௌன அலைகள் வீசும் தீவின் தனிமையோடு தன்னை முடக்காமல் பெரு நில நதியாக பாய்ந்தவர்.

முடிவிலா சுழல்


இவனுக்கு வயது 40 . தாய் வழி உறவினரான இளம் மனைவி. அவர்களின் அன்பான இல்லறத்திற்கு சாட்சியாக வருடந்தோறும் வரிசை பிள்ளைகள். அண்டை மாநிலத்தில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வந்தான். வயிற்றுக்கும் மானத்திற்கும் ஒரு குறைவுமில்லை. திடீரென சொந்தமாக கல் வீடு கட்டும் ஆசை வந்தது.

கடையை மூடினான். ஆசிய நாடொன்றுக்கு ஆகாய கப்பலேறினான். போன கையோடு குடியேற்ற விதி முறைகளை மீறியதற்காக தடுத்து திரும்ப அனுப்பப்பட்டான். இவன் விடா முயற்சிக்காரன். மீண்டும் அய்ரோப்பிய நாடொன்றுக்கு பயணித்தான். கை நிறைய பொருள் தேடினான். ஆசைப்பட்டமாதிரி கல் வீட்டைக் கட்டி முடித்தான்.

நிமிர்ந்து பார்த்தான். குடும்ப தொடுதல் இல்லாமல் அய்ந்து வருடங்கள் பறந்து விட்டன. இப்போது ஊருக்கு வந்துள்ளான். எவ்வளவு நாள் விடுமுறை என அவன் நண்பன் கேட்க 06 மாதங்கள் என்றான். அதன் பிறகு என்ன திட்டம் என்றதற்கு மீண்டும் அய்ரோப்பிய பயணம்தான் என எந்த தயக்கமும் இல்லாமல் தெளிவாக அவனிடமிருந்து விடை வந்தது.

கேட்கவே பாரமாக இருந்தது. எழுதி விட்டேன்.

-----------------------------------
04/11/2014

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka