இலக்கியத்திற்கான
2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசை வென்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் விருது
ஏற்புரையின் ஒரு பகுதி
“ எங்களிடம்
அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி:
ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்?
எழுவதற்கு
உள்ளார்ந்த தேவை இருப்பதால் நான் எழுதுகிறேன்.
மற்றவர்களைப்போல
என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன்.
நான் எழுதுவதைப்
போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன்.
உங்கள் அனைவரின்
மீது, எல்லாரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன்.
ஒரு தனியறையில்
அடைத்து கொண்டு நாளெல்லாம் எழுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன்.
இஸ்தான்புல்லில்,
துருக்கியில் எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம்
என்பதை மற்றவர்கள், நம்மெல்லாரும் , மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன்.
பேப்பர்,
பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன்.
வேறு எதனையும்
விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால்
எழுதுகிறேன்.
அது ஒரு பழக்கம்,
ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன்.
நான் மறக்கப்பட்டு
விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன்.
எழுத்து அழைத்து
வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன்.
தனியாக இருப்பதற்காக
எழுதுகிறேன்.
உங்கள் அனைவரின்
மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்
கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம்.
நான் வாசிக்கப்பட
வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால்,
அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
எல்லோரும்
நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன்.
நூல்களின்
சாஸ்வதத்தை பற்றியும் , அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு
ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன்.
வாழ்க்கையின்
எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன்.
ஒரு கதையை
சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன்.
நான் போக
வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால் ஒரு கனவில் வருவதைப்போலவே – அங்கே என்னால் அடையவே
முடியாதிருக்கிறது என்ற துர்ச்சகுனத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன்.
என்னால் எப்போதுமே
சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன்.
சந்தோஷமாக
இருப்பதற்காக எழுதுகிறேன். “
--நூல்: கனவுகளுடன் பகடையாடுபவர் (
சர்வதேசச் சிறுகதைகள் நோபல் உரைகள்/கட்டுரைகள் ) , தமிழில்: ஜி.குப்புசாமி. வெளியீடு:
நற்றிணைப் பதிப்பகம்.
----------------------------
இந்த நூலை எனக்கு பரிசளித்த நண்பரும் குட்டி ஆகாயம்
இதழின் ஆசிரியரும் குழந்தைகள் செயற்பாட்டாளருமான வெங்கட் நிழலுக்கு அன்பும் நன்றியும்
No comments:
Post a Comment