Friday, 3 January 2020

முத்துதேவன்பட்டி வாத்தியார் -- நினைவேந்தல்




1989 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின்  நிதானமான  ஒரு காலைப்பொழுது.
அந்த சமயம் எனது ஆசிரியர்களில் ஒருவரான கொடிக்கால் ஷேஹ் அப்துல்லாஹ் ஊருக்கு வந்திருந்தார். அவருடன் அன்று நான் தஃவா பணிகளில் ஈடுபட்டிருந்த காலம்.

மருமகன்  இன்று தேனி வரய்க்கும் பயணம். ரெடியாகுங்க என்றார். மாமா நோம்பு நேரமாச்சே எப்படீ என சடைந்து இழுத்தேன்.போச்சே என்றார். இதற்கு மேல் அவரிடம் பேச்சு கேட்க துணியாதவனாய் பயணத்திற்கு ஆயத்தப்பட்டேன்.


காலை 10:00 மணிக்கு மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஏறினோம். பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடுத்த வண்டியை பிடித்து  தேனிக்கு போய் சேர்ந்தோம். மாலை 04:30 மணி ஆகி விட்டிருந்தது. ஒரு நகரப்பேருந்தை பிடித்து முத்து தேவன்பட்டி போய் சேரும்போது மாலை 05:15 மணி.

பேருந்து நிறுத்தத்தின் எதிரே மருங்கு .சில மீட்டர் தொலைவிற்கு இரு பக்கமும் சீமை உடை மரம் நிறைந்த ஒற்றையடிப்பாதையில் சென்றோம். நாய்கள் மௌனமாக எங்களை பார்த்து விட்டு சோம்பலில் வேறு பக்கம் தங்கள் தலைகளை திருப்பிக் கொண்டன.

 ஆடுகளும் கோழிகளும் பக்கத்தில் நின்று மேய்ந்து கொண்டிருந்தன. மாட்டுச் சாணமும் மூத்திரமும் வைக்கோலும் விரவிய  வாடை வீசிக்கொண்டிருந்தது. எனக்கு அதுதான் முதல் கிராமப்பயணம். வித்தியாசமாக இருந்தது. அத்துடன் நான் நோன்பு பிடித்து கொண்டு சென்ற முதல் வெளியூர் பயணமும் அதுதான்.

பாதையின் முடிவில் ஒரு சுண்ணாம்பு பூசிய வெள்ளை நிற வீடொன்று நின்றிருந்தது. முன்னறை , படுக்கையறை , பண்டக அறை என மூன்று அறைகள் கொண்டஅந்த வீட்டின் பக்கவாட்டில்  இரண்டு அறைகள் கட்டப்பட்டிருந்தன.

விறகு அடுப்பின் புகையானது ஒரு சமயல் கட்டின் பக்கவாட்டு சுவரின் மேல் இடைவெளியில் இருந்து கசிந்து வெளியேறிக்கொண்டிருந்தது.

சார் என குரல் கொடுத்தார் கொடிக்கால் மாமா.

உள்ளேயிருந்து 40 வயது மதிக்கதக்க ஒரு மனிதர் வீட்டின் சுற்றுச்சுவரின் உள் பக்கம் நின்று கொண்டு எட்டிப்பார்த்தார். அவரது சாரங் (லுங்கி) , சட்டை , தொப்பியுடன் வெள்ளையும் சள்ளையுமாக  இருந்தார். . நெஞ்சு வரை கையை உயர்த்தி எங்களை பார்த்து மெல்லிய புன்னகையுடன் ஸலாம் சொல்லி வாங்க என்றார்.

அவர்தான் ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ். பலவருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றவர். சாதி மதம் கடந்து முத்து தேவன் பட்டி மக்களால் அன்புடன் வாத்தியார் என அழைக்கப்படுபவர்.
ஒரு வயதான பெண்மணியும் நடுத்தர வயது பெண்மணியும் அந்த வளாகத்திற்குள் நடமாடிக்கொண்டிருந்தனர். மூதாட்டி வாத்தியாரின் தாயார். மற்றவர் பெண் கொடுத்த மாமியார். அவரின் ஊர் பட்டுக்கோட்டை பக்கம்.

உள்ளே போனதுதான் தாமதம். புது இடம் என பார்க்காமல் முன்னறையில் உள்ள பாயில் போய் தொம்மென்று விழுந்து படுத்தேன். நோன்பின் அசதி , தீரா தாகம் , பயணக்களைப்பு என எல்லாம் ஒன்றாக சேர்ந்து என்னை துவைத்து போட்ட துணி மாதிரி ஆக்கி விட்டிருந்தது. தலையை கிளப்பவே முடியவில்லை.
கொடிக்காலும் வாத்தியாரும் தஃவா தொடர்பாக உரையாடிக்கொண்டே இருந்தனர். அவை அனைத்தும் எனக்கு   நீருக்குள் மூழ்கி கிடப்பவனுக்கு கேட்பது போல கேட்டு கொண்டே இருந்தது.

மஃரிபிற்கான அதான் ஒலித்ததும்  நோன்பு திறந்து விட்டு தொழுகைக்காக மஸ்ஜித் நோக்கி விரைந்தோம். கீற்றாலான எளிமையான அந்த பள்ளியில் தொழுகை நிறைவடைந்த பின் மீண்டும் வாத்தியார் வீட்டை நோக்கி படையெடுப்பு.

பாயில் சென்று அமர்ந்தோம். வாத்தியார் உள்ளறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் கையில் பாண்டங்களுடன் திரும்ப வந்தார். அவற்றில் வெண் ஆவி பறக்கும் இட்லி , எண்ணெய் , பொடி , தேங்காய் துவையல் , காய் சாம்பார் இருந்தது.

காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல புகுந்து விளாசித்தள்ளினேன். இந்த படையலுடன் நெய் தோசை , நாட்டுக்கோழி கறியும் புது வரவாக வந்து சேர்ந்தது. இறுதியாக வறுத்த கொட்டை மணம் நிறைந்த டிகிரி காஃபி. சர்க்கரை நிறைவாக போட்டிருந்தது.

எனது வயிறும் மனமும் நிரம்பி வழிய நல்ல உணவும் அன்பான உபசரிப்பும்  கிடைத்த நிறைவில் மொத்த அசதியும் பறந்து விட்டது.
```````````````````````````````````````````
ஸார் என்றும் வாத்தியார் என்றும் அன்புடன் அழைக்கப்படும் ஆசிரியர் ஹிதாயத்துல்லா அவர்கள் காலத்தின் துணுக்குகளில் கலந்து இன்றுடன் 08 வருடங்களும் 20 நாட்களும் ஆகி விட்டது. ஒரு சாலை விபத்தொன்றில் மெல்லிய நீரோடை போன்ற அவரது வாழ்க்கை நிறைவு பெற்று விட்டது.

மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்கள் போன்று சமமானவர்கள் என்ற வரிகள் தஃவா முகாம் தோறும் அவரது உரைகளில் தவறாமல் ஒலிக்கும்.
வேலை பார்த்தது என்னவோ அரசு பள்ளியில். ஆனால் சொந்த தொழில் உள்ளவரைப்போல பொது வாழ்விற்கு நேரம் ஒதுக்கியவர். ஆசிரியர் பணியையும் குறைவில்லாமல் செய்தவர்.

தஃவா   பணி , புதிதாக இஸ்லாத்தில் இனைந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் , , மஸ்ஜித் கட்டுமானம் , ஏழை குமர் திருமணம் , இயக்க நிகழ்ச்சிகள் , சக மனிதர்களின் சுக துக்கங்கள் என ஏதாவது ஒன்றினை ஒட்டியே அவரது பயணங்கள் பெரும்பாலும் அமைந்திருக்கும்.

அவருக்கு தமிழகம் , கேரளம் என பரவலாக அன்பர்கள் நம்பிக்கையாளர்கள் வட்டம். ஒரு தடவை நான் அவரைப் பார்க்க போகும்போது சாலை விபத்தில் இறந்து போன ஒரு சிறுவனின் இழப்பீட்டிற்காக பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

வாத்தியார் முத்து தேவன் பட்டியில் இஸ்லாத்தில் இணைந்த முதல் அணியை சார்ந்தவர்.  அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் எளிமையாகவும் இனிமையாகவும் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டில்தான் அறிவகம் என்ற பயிலகம் தவழும் குழந்தையாக தனது செயல்பாட்டை தொடங்கியது.

இரவும் பகலும் ஆட்கள் வந்து போகும் பரபரப்பான சூழல் , காலையிலிருந்து மாலை வரை விறகின் புகையுடன் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு என்ற அறிவகத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கேற்ப தனது அமைதியான வீட்டு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டவர்.

தஃவா தொடர்பான கலந்தாலோசனை அமர்வுகளுக்கு கையில் சாக்லேட் நிற தோல் பையுடன் வந்து இறங்குவார். அதில்தான் அவரது சகல ஆஸ்திகளும் இருக்கும்.

ஒரு தடவை சூறாவில் ஒரு விஷயம் தொடர்பாக அவரது கருத்தை ஏன் தெரிவிக்கவில்லை என கேட்கப்பட்டபோது பஷீர் எங்க என்ன பேச விட்டான் என சொன்னாராம்.

 அவர் சொன்னது உண்மைதான் சூறாவில் அவரது முறை வரும்போது கருத்தை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வார். இதனால் சலிப்புக்குள்ளாகி அவர் பேச தொடங்கும்போதே இடைவெட்டி அவரது பேச்சை நான் நிறுத்தி விடுவேன். ஆனால் எனது முரட்டு நடவடிக்கைக்காக அவர் ஒரு நாளும் என்னிடம் கோபப்பட்டதில்லை.

இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு குறும்புக்காரர். தஃவா இடைவெளிகளில் நகைச்சுவை ததும்பி வழியும்.

அவருக்கு நானும் பொறியாளரும் எழுத்தாளருமான இனிய நண்பர் எம்.எஸ்.அப்துல் ஹமீதும் ஒரு நாள் ஒரு கடிதம் எழுதினோம்.
சார் ! நீங்க அடுத்த தடவை சென்னைக்கு வரும்போது வீட்டு பால் கணக்கு  டைரி ,  நூறு ரூபாய்க்கு பொடி சில்லறை , மளிகை கணக்கு  நோட்டு என இவையனைத்தையும் கொண்டு வரவும். ஒரு கண்டிஷன் அவற்றை கையில் எடுத்து வரக்கூடாது. உங்களது சட்டைப்பையில்தான் போட்டு எடுத்து வர வேண்டும்.

நாங்கள் இப்படி எழுதியதற்கு ஒரு காரணம் உண்டு. அவரின் சட்டைப்பையானது கங்காருவின் பை போல எப்போதும் துருத்திக் கொண்டு தொங்கும்.

அப்படி என்னடா பைக்குள் இருக்கிறது என பார்த்த போது வெற்று கண்ணாடிக் கூடு , கண்ணாடி , பழங்கணக்கு டைரி , துண்டு காகிதங்களின் கொத்து , பழைய பேருந்து பயணச்சீட்டுகள் , பேனா . காகிதமாகவும் சில்லறையாகவும் கொஞ்சம் பணம் , போதா குறைக்கு சுருட்டி செருகப்பட்ட கைக்குட்டை என பட்டியல் நீண்டது.

அவரது சாக்லேட் நிற பயண பையில் இடம் கிடைக்காத பல பொருட்கள் தங்களுக்கான புதிய இடத்தை கண்டு கொண்டதின் விளைவு இது .
இவற்றில் சில பொருட்கள் நினைவில் இருந்து விடுபட்டு விட்டது.
எங்களின் கிண்டல் உட்பட எதையும் எளிதாக இயல்பாக எடுத்துக் கொள்பவர்.

 அவரது பேச்சு , பார்வை , நடை எல்லாவற்றிலும் இனம் புரியாத நிதானமும் அமைதியும் நிறைந்திருந்தது.

. அவரது வீட்டுக் கதவுகள்  எப்போதும் தட்டப்பட்டுக்கொண்டே இருந்தன .  முத்து தேவன் பட்டி மக்கள் தங்களின் தேவைகளுக்காகவும் குடும்ப ஆலோசனைகளுக்காகவும் உடனே அவரைத்தான் நாடிச்செல்வர். அவர் தனக்கென  மிக குறைவாகவே வாழ்ந்தவர் . எனவே வாழ்க்கையை துரத்திப்பிடிக்கும் அவசரம் எதுவும் அவருக்கில்லை . அதுவாகவே அவருக்கு பின்னே செல்ல விலங்கு போல பணிந்து பின் தொடர்ந்து சென்றது.

அரசு பணியில் உள்ள இஸ்லாமியவாதிகளை இனங் கண்டு உளவுத்துறையும் அதிகார வர்க்கமும் வேட்டையாடிய காலகட்டம் அது. அதிகாரத்தினுடைய   அடக்குமுறை கரங்களின் நிழல்கள் தன்னை தீண்டுவதற்கு முன்னரேயே ஆசிரியப் பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று விட்டார்.

வாத்தியார் விருப்ப ஓய்வு பெற்ற நேரத்தில் அவருக்கு பொருளாதார பின்புலம் என எதுவும் பெரிதாக இருக்கவில்லை. பொது பணத்தை மிக சரியாக கையாண்ட நேர்மையாளர். வாழ்வின் இறுதி வரை தன் வாழ்விற்கு தன் கை உழைப்பைத்தான் சார்ந்து இருந்தார்.

தஃவா களத்தில் விதிவிலக்காக நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் நிழல் கூட அவர் மீது பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ இறைவன் விரைவில் அவரை வாழ்க்கை பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குள் அழைத்து சென்று விட்டான்.

```````````````````````````````````````````````````````````````````````````````````````````
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தங்க சாலை சந்திப்பு அருகே நான் சென்று கொண்டிருந்தேன். எதிர்த்தாற் போல ஹிதாயத்துல்லாஹ் சார் வெள்ளையும் சள்ளையுமாக இளமையாக நடந்து வந்து கொண்டிருந்தார். 

அது ஹிதாயத்துல்லாஹ் வாத்தியாரின் விழுது. அதுதான் அவரின் ஒரே தலைமுறையான மகன் அபூ. அப்படியே வாத்தியாரை பார்த்த மாதிரி இருந்தது.
வழமையான அளவளாவல்களுக்குப்பின் இப்பம் அம்மா உன்னோடயா இருக்கிறாங்க என கேட்டேன். அதற்கு அவன் நான்தான் அம்மாவோட இருக்கிறேன் என்றான்.

வாழ்க்கை சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள கண்ணி ஒன்று தனக்கு முன்னர் உள்ள கண்ணியை பற்றிய முழுமையான புரிதலோடு சொன்ன சொற்கள் அவை . அவளில்லாமல் நானில்லை என்பதுதான் அந்த விடையின் உள்ளடக்கம்.
இன்று அவன் அம்மாவுடன் அவனுடன் இல்லை. அவர் 05 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அவரின் வயது 56.

வாத்தியாரும் தனது 56 ஆம் வயதில் இதே மார்ச் மாதம்தான் மரணமடைந்திருந்தார். வாத்தியாரின் பிரிவிற்குப்பின்னர் அந்த நினைவுகளினாலாயே உடல் நலம் நலிந்திருந்தார் அவரது துணைவியார்.
பிணைக்கும் அன்பிற்கு ஏது வாழ்வும் மரணமும் ?

````````````````````````````````````````````````
என் வாழ்வின் தடத்தில் உடன் பயணித்த சக தோழனின் நினைவுகளை பதிவதற்கு எட்டாண்டுகள் தாமதம்.
இது நல்ல தோழமைக்கான லட்சணமில்லை.  மன்னித்துக் கொள்ளுங்கள் ஹிதாயத்துல்லா சார் !!!

. 23/03/2014

1 comment:

  1. இனிய நினைவுகள்.
    நீண்ட காலத்திற்குப் பின் ஹிதாயத்துல்லாஹ் சாரோடு நாங்களும் பயணித்தது போலிருந்தது உங்கள் எழுத்துக்கள். அல்லாஹ் நம் அனைவரையும் மறுமையில் நல்ல நண்பர்களோடு சேர்த்து வைப்பானாக ஆமீன்.

    ReplyDelete