Friday, 3 January 2020

“சஈது நூர்ஸியும் ரிஸாலாயே நூரும் சமகாலத்துருக்கியில் இஸ்லாத்தின் ஒர் அம்சம்” நூலாய்வு




இஸ்தான்புல்லின் மலைக்குன்றில் அமைந்துள்ள எயூப் மையவாடியிலிருந்து நகரத்தை நோக்கிய ஸஈத் நூர்ஸி மரணம் கல்லறைகளில் மட்டுமல்ல மாநகரிலும் கூட உள்ளது என உணர்ந்தார். 
                                         { மேற்கண்ட நூல் பக்கம்-18.}

பொதுவாக ஊடகங்களிலும்,அறிவு ஜீவிகள் நடுவேயும் மதம் தொடர்பான உரையாடல் வரும்போதெல்லாம் அடிப்படைவாதம் என்ற பழிச்சொல்லும் கூடவே வரும். என்னமோ அடிப்படைவாதம் என்பது மதங்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்பது போல.

ஆனால் வரலாறு இதற்கு எதிராக சில உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

அய்ரோப்பியர்களால் நோயாளி என்று எப்போதும் இகழப்படும் துருக்கியின் வரலாற்றை சற்று புரட்டிப்பார்த்தோமானால் இது விளங்கும்.
 மேற்குலகை இறைவனாக ஏற்று மதச்சார்பின்மையை வணங்கும் ஒரு தேசமாக  துருக்கியைக்காணலாம்.

 இன்று இஸ்லாமிய வாதியான அர்தூகானின் ஆட்சிக்குப்பிறகே இந்த மதச்சார்பின்மை வழிபாடு சன்னஞ்சன்னமாக மாறி வருகின்றது.
துருக்கியானது  இஸ்லாமிய கிலாஃபத் பல்லாண்டுகள் நின்று நிலைத்த பூமியாகும்.

கிறிஸ்தவ பரப்புரை ( மிஷனரி) நிறுவனங்களும், சியோனிச நிழல் அமைப்பான மாஸோனியர்களும்(FREEMASONS),அய்ரோப்பிய காலனியாதிக்க சக்திகளும் ஒருங்கிணைந்து மதச்சார்பின்மையை முன்னிறுத்தி துருக்கியின்  கிலாஃபத் ஆளுகைக்கு கீழுள்ள பரந்து பட்ட முஸ்லிம் நிலப்பரப்புகளையும் இயற்கை வளங்களையும் துண்டு துண்டாக சிதறடித்து  தங்களுக்குள் பங்கு போட்டு விட்டன.

கிட்டதட்ட 80 ஆண்டு காலம் முஸ்தஃபா கமால் அதா துருக் (கி.பி 1881---1938) என்ற மாஸோனிய வார்ப்பில் வந்த கைக்கூலியை முன்னிறுத்தித்தான் துருக்கியின் பொது வாழ்வில் படிந்திருந்த ஈமானிய உணர்வுகளை துடைத்தெறிந்தனர்.

இந்த கமால் அதா துருக் என்பவன் இஸ்லாத்தை ஒழுக்கங்கெட்ட அரபுகளின் இறையியல் கொள்கை என வர்ணித்தான்.

குர் ஆனை அரபி மூலத்தில் வாசித்து பொருள் விளங்கக்கூடிய அளவிற்கு மார்க்க அறிவு மிக்க முஸ்லிமாக இருந்த முஸ்தஃபா கமாலை அந்த அளவு இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுள்ளவனாக மாஸோனிய சக்திகள் மாற்றியிருந்தனர்.

கிலாஃபத்தையும்,இஸ்லாமிய சமூக வாழ்க்கையையும் ஒழித்துகட்ட  மாஸோனிய சக்திகள் அன்று துருக்கியில் செய்த, குருதி சிந்தும் கொலைகள்,ராணுவ புரட்சிகள் போன்ற சதித்திட்டங்கள்,கீழறுப்பு வேலைகளை இன்று தயங்காமல் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றனர்.

இந்த மாபெரும் சதித்திட்டத்தில் இத்தலி,ஸ்பெயின்,ஃப்ரான்ஸ் நாட்டு மாஸோனிய சக்திகளும் பங்கெடுத்தன.

முஸ்லிம் உலகத்தின் தலைமைப்பீடத்தை மதசார்பின்மை இருள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவ்வி பிடித்திருந்தது.
எனினும் துருக்கிய மக்களின் இதய நாளங்களிலிருந்து இஸ்லாமிய துடிப்பை அவர்களால் நிறுத்திட இயலவில்லை.

மாஸோனிய பிடியின் காலம் கரைந்தது. இஸ்லாமிய வாதிகளுக்கு காலம் கனிந்தது.

இன்று அர்தூகானின் தலைமையிலான இஸ்லாமிய கட்சி துருக்கியின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கிறதென்றால் அதற்கான விதையை அன்று விதைத்தவர்களின் முதன்மையானவர் பதியுஸ்ஸமான் சயீத் நூர்ஸி (கி.பி. 1873—1960) ஆவார்.

ஷேஹ் அஹ்மத் ஸர்ஹிந்தி(ரஹ்), ஷேஹ் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) போன்றோரின் செயலூக்கம் மிகுந்த ஸுஃபிச போதனைகளில் உருவாகியவர் சயீத் நூர்ஸி. ஆனால் எந்த ஸூஃபிஸ தரீக்காக்களிலும் தன்னை இணைக்காதவர். தனக்கென தனியாக தரீக்காவையும் நிறுவாதவர்.
குர் ஆனுடனும் ,இறை தியானத்துடனும் தன்னை பிணைத்துக்கொண்டவர்.

விசாலமான மார்க்க அறிவுடன், நவீன அறிவியல், கல்விக்கலைகளையும், மேற்கத்திய சடவாதத்தையும்,பண்டைய கிரேக்க சிந்தனையையும், தேசீய வாதத்தையும் ஆழ்ந்து கற்று தேர்ந்தவர்.

விவாத திறனும்,அபாரமான உடல் வலுவும் கொண்டவராகவும் விளங்கினார்
இத்தகைய  ஆழமான பின்னணியைகொண்ட நூர்ஸி அவர்களால் இஸ்லாமிய துருக்கியில் புகுத்தப்பட்ட மதச்சார்பின்மை என்ற இறை நிராகரிப்பை பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியவில்லை. 

குர் ஆனில் தோய்ந்த தனது ஆழ்ந்த சிந்தனைகளை புயல் வேகத்தில் உருவாக்கி பரப்பினார். ஆனால் இதை செய்வதற்கென அவர் ஆள் அம்புகளை உருவாக்கவில்லை.இயல்பாக அவரது சிந்தனை வீச்சினால் ஈர்க்கப்பட்ட மக்கள் பெரும் திரளாக தானாகவே உருவாகினர்.

 நூர்ஸியிடம் அமைப்புமில்லை,நிறுவனங்களுமில்லை.அவர் வளர்த்ததெல்லாம் ஒரு குர் ஆனிய சிந்தனையினால் கட்டி எழுப்பப்பட்ட அகச்சமூக வெளியைத்தான். அதாவது மனித மனங்களை குர் ஆனிய சிந்தனையை கொண்டு நிரப்பினார்.

. எனவேதான்  கமால் அதா துருக்கின் இரும்புக்கரங்களினால் அவரது சிந்தனையின் பரவலை ஒன்றும் செய்யவியலவில்லை.

இந்த நிகழ்வைப்பார்க்கும் போது,  “ வேலிக்கு வெளியே தலையை நீட்டும் என் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே! வேலிக்கடியில் ஓடும் என் வேர்களை என்ன செய்வாய்?” என்ற கவிக்கோவின் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றது.
துருக்கியில் ஷரீஅத்தே செயல்பட முடியாமலிருக்கும்போது தஸவ்வுஃபை முன்னிலைப்படுத்த மறுத்தார்  நூர்ஸி . ஷரீஅத்திற்குப்பிறகுதான் தஸவ்வுஃப் என்பதில் தெளிவாக இருந்தார் (பக்கம்:41).

நூர்ஸி அவர்களிடம் அவரைத்தவிர ஒன்றுமில்லை.ஆனால் வெறும் கைகளால் அந்த மனிதர் சாதித்ததைப்பாருங்கள்.

 அவர் சமய அறிவியலையும்,நவீன அறிவியலையும் பாடத்திட்டமாகக்கொண்ட, நவீன அறைகூவல்களை எதிர் கொள்ளக்கூடிய ஒரு ஆலிம் தலைமுறையை வார்க்கும் நோக்கில் மத்ரஸா ஒன்றை நிறுவ முயற்சியெடுத்தார் ( பக்கம்:17).
மையவாடியிலும், மரத்தில் கட்டப்பட்ட பரணிலும் தனித்து தியானித்த இந்த மனிதர்  துருக்கியின் மீதான ரஷிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பல முறை போர்க்களம் கண்டுள்ளார்.

ஒரு கையில் ஆயுதந்தாங்கி போராடிக்கொண்டே மறுகையால் குர்ஆனுக்கு தஃப்ஸீரும் எழுதியுள்ளார் (பக்கம்: 17).

சுருங்கக்கூறின், அவர் ஸூஃபி இல்லை ஆனால் ஸூஃபி மரபில் தோய்ந்தவர்.
அவர் அமைப்பைக்கட்டவில்லை, அணிகளை வளர்க்கவில்லை. ஆனால் அவரைப்பின்பற்றவும் அவர் ஆணையிட்டால் போரிடவும் ஒரு கூட்டமிருந்தது.
அவர் அரசியல் பிரகடனத்தை செய்யவுமில்லை,ஆட்சி அதிகாரத்தைக் கோரவுமில்லை.துருக்கிய படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை ஆதரிக்கவுமில்லை.

ஆனால் துருக்கிய மதச்சார்பின்மை ஆட்சியாளர்கள்அவரை சிறைப்பிடித்தார்கள்,நாடு கடத்தினார்கள். ஆனால் அவரது சிந்தனைகள்தான் துருக்கியின் தற்கால இஸ்லாமிய கட்சியான நீதி,மேம்பாட்டுக்கான கட்சியை [AKP PARTY] ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய கால் கோள் சக்தியாக  விளங்குகின்றது.

இன்றைய துருக்கியில் ஸஈத் நூர்ஸியும், முஸ்தஃபா கமால் அதா துருக்கும் உயிரோடில்லை. இன்னுஞ்சொல்லப்போனால்  நூர்ஸியின் அடக்கத்தலம் எங்கிருக்கின்றது என்று கூட யாருக்கும் தெரியாது.
ஆனால் முந்தையவரின் சிந்தனை வாழ்கின்றது வளர்கின்றது. பிந்தையவரின் சிந்தனையோ மரணப்படுக்கையில் மூச்சிழுபட்டுக்கொண்டு கிடக்கின்றது .

துருக்கியில் இஸ்லாத்தை மதச்சார்பின்மையைக்கொண்டு ஒழிக்கப்பார்த்தது என்பது மொத்தத்தில் ஒரு வலுவான, ஆழமான, ஆற்றல் படைத்த. மிகப்பரந்த பின்னணியை கொண்ட ஒரு சதித்திட்டமாகும் .

இந்த மலை போன்ற செயல் திட்டத்திற்கெதிராய்  தீச்சுவாலை போல் ஈமான் கொழுந்து விட்டெரியக்கூடிய, சொல்லும் செயலும் ஒன்றென வாழும், பற்றற்ற சுய மரியாதையுடன் கூடிய ஒரே ஒரு ஆளுமை இருந்தால் போதும்.

எத்தனை காலம் ஆனாலும் அந்த பாரிய சதித்திட்டங்கள் அனைத்தும் கரைந்து சேறாய் போகும் என்பதற்கு சஈத் நூர்ஸி அவர்களின் வாழ்வும் பணியுமே சாட்சி.
அவர் எதுவுமாகம் இல்லை. ஆனால் எல்லா பரிமாணங்களிலும் பரிமளித்திருக்கின்றார்.

அவர் எந்த கூண்டிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமலும் அதே வேளை தன்னையும் முன்னிறுத்தாமலும் ஒரு மாபெரும் லட்சிய வாழ்வை வாழ்ந்து நிறைவு செய்துள்ளார்.

சஈது நூர்ஸியின் மொத்த இஸ்லாமிய வாழ்வைப்பற்றி எல்லாக்கோணங்களிலிருந்தும் விமர்சன பார்வையில் இந்த சிறிய நூலில் அழகாக அலசியுள்ளார் முனைவர்.ஹமீத் அல்கர்.

முனைவர்.அல்கர் அவர்கள் ஸஈத் நூர்ஸியின் நல்ல பல விஷயங்களை ஆய்வு செய்து எடுத்துரைக்கும் அதே  நேரத்தில் அவரது மாணவர்கள் நடுவே நூர்ஸியின் இறப்பிற்கு பிறகு ஏற்பட்டுள்ள  அபாயகரமான தனி மனித கொண்டாட்ட மன நிலை நிலையையும் பதிவு செய்யத்தவறவில்லை.
அர்தூ கான் சொன்னது போல நூர்ஸி ஒரு சுரங்கம். அவர் இன்னும் தோண்டப்பட வேண்டும். இந்த சிறிய நூல் ஒரு அறிமுகமே.

அவரைப்பற்றி இன்னும் விரிவாக தமிழில் நூல்களை மெல்லினம் பதிப்பகத்தார் கொண்டு வர வேண்டும்.

நாம் நம் இந்திய/தமிழகச்சூழலில் கொள்கை,சிந்தனைப்பிரிவு,இயக்கம் என்பனவற்றிற்குள் நம்மையும் குறுக்கி நம்மைச்சுற்றியுள்ள உலகையும் அதற்குள் சிறை வைக்கப்பார்க்கின்றோம். நமது இந்த சிக்கலான மன நிலைக்கு நல்ல மருந்திடுகின்றது இந்நூல்.

எனவே தமிழக முஸ்லிம் செயலாளிகள்,அறிவு ஜீவிகள் என அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்


 07/07/2012




No comments:

Post a Comment