வேலூர்
மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை கூட்டுறவு பண்ணை
ஒன்றிற்கு ஓய்விற்காக நண்பருடன் அண்மையில் செல்ல நேரிட்டது .
கிட்டதட்ட
இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மலையடிவார பண்ணையில் நிறைந்திருந்த ஏகாந்தத்தின்
பின்னணி இசையாக பறவைகளின் இடைவிடாத இசைக்கச்சேரியானது பகல் முழுக்க நடந்து கொண்டே
இருந்தது.
அந்த பண்ணையை
கவனித்துக் கொள்ள வயதான இணையர் இருந்தனர்.
அவர்களின்
உடைமைகளாக அங்கு இருந்தவை ஒரு சில கலங்கள் , ஒரு கட்டில் , போர்வை , இரண்டு தலையணை
, ஒரு ஜெர்ஸி கறவை பசு , இரண்டு ஆடுகள்
மட்டுமே.
அங்கு வேயப்பட்டிருந்த
சிறிய கொட்டாயில்தான் அவர்களுடன் நாங்களும் தங்கினோம்.
எங்களுக்கு
மதிய உணவாக நொய்யரிசிச் சோறும் வறுத்த
நிலக்கடலை பிரட்டலுடன் கூடிய முருங்கைக்கீரையும்
சாம்பாரும் பரிமாறினர். நிலக்கடலையும் முருங்கைக்கீரையும் அங்கேயே
விளைந்தவை.
பகல் முழுக்க
நிலத்தில் ஆடு மாடுகளுடன் உழைப்பு . மதியம் பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு.
அவ்வப்போது சிறு ஓய்வு. மாலை ஐந்தரை மணி வாக்கில் இரவு உணவை சமைத்து சாப்பிட்டு
விடுகின்றனர். இரவு உணவில் மிஞ்சுவது மறு நாளைய காலை உணவாக தேறுகின்றது.
முதியவரின்
வயது எழுபதை தாண்டியிருக்கும். அண்ணாத்துரை இறப்பு , எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கு
என அவர் சென்னைக்கு தன் வாழ்நாளில் இரண்டுதடவைகள்தான் வந்து போயிருக்கின்றார்.
அந்தி
சரிந்தவுடன் படுக்கைக்கு செல்பவர்கள் மறுநாள் கதிரவனின் முதல் கீற்று தோன்றும்
வைகறையின் தொடக்க கணங்களிலேயே கண் விழித்து விடுகின்றனர்.
அவர்கள்
தங்கும் கொட்டாயில் மின்வசதி இல்லை. அந்த பண்ணைக்கு மிக அருகிலேயே உலோக
நட்டுவாக்காலிகள் போன்ற கோபுரங்களின் தலை வழியே விரல் ரேகைகள் போல தொய்ந்து நீளும்
மின் கம்பிகள் பல மெகாவாட் மின்சக்தியை சுமந்து செல்கின்றன.
கதிரவனின் , பறவைகளின்
நேர அட்டவணைப்படி கழியும் ஆரவாரம் இல்லாத எல்லாம் நிறைந்த வாழ்க்கை. சொற்ப
உடைமைகளுடன் எளிய உழைப்பில் தன் பிள்ளைகளையும் கரையேற்றி விட்டு தங்களின்
மேலதிகமான வாழ்வை இங்கு கழிக்கின்றனர் இந்த இணையர் .
அந்த
பண்ணையின் நுழைவு வழி அருகே வட்ட வடிவ அரங்கு ஒன்று இருந்தது. கிட்டதட்ட 2000 சதுர
அடியில் நிற்கும் இந்த அரங்கை களிமண் சுவர் , பனை மரத்தடி , துண்டுக்கட்டைகள் , தென்னங்கிடுகு
போன்றவற்றைக் கொண்டு மரபு சார் முறையில் கட்டியிருந்தனர். நாங்கள் பார்ப்பதற்காக அரங்கின் கதவை திறக்குமாறு
அந்த முதியவரின் மனைவியிடம் கேட்டேன்.
“ அந்த பங்க்ளா சாவியா கேக்குறீங்க “ என எங்களிடம்
திரும்பக் கேட்டார் அந்த பெண்மணி .
குக்கிராமவாசியின்
பார்வையில் அந்த மண் கிடுகு அரங்கானது பங்களாவாக தெரிகின்றது. உண்மையான பங்களாவை
கண்டால் அந்த முதிய பெண் என்ன பெயர் சொல்வாரோ ?
--------------------------------------------------------------------------
புள்ளிகளின்
இடம் பெயர்ச்சிகளில் பணம் நடனமாடும் மும்பையின் தலால் தெரு. பங்கு சந்தையின் அதி
வேக சுழல் மையம். அங்கு ஒரு உணவகம்உள்ளது . அதன் வாடிக்கையாளர்கள் பங்கு சந்தை வணிகர்கள் . அவர்களின் இடைவிடாத
பணவழிபாடு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கழிப்பறையில் கூட சந்தை நிலவரங்களை
காட்டும் தொலைக்காட்சி திரை பொருத்தப்பட்டிருக்கின்றது.
````````````````````````````````````````````````````````````````````
·
மின்னொளி / நுகர்வு பண்பாட்டின் வலை வீச்சிலிருந்து முழுவதுமாக விலக்கப்பட்ட
நிலத்துளி .
·
மனிதனின் எல்லா தருணங்களிலும் வெளிச்சம் பாய்ச்சி அந்தரங்க வேளை என்ற ஒன்றை
இல்லாமலாக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய பணம் இறைக்கும் பரபரப்பு.
எதிரும்
புதிருமாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த இரண்டு வாழ்க்கை மாதிரிகளின் கூறுகள்
நம்முள் வாழ்க்கை பற்றிய மதிப்பீட்டின் எல்லைக்கற்கள் , அளவு கோல்கள் பற்றிய பல
கேள்விகளை ஓயாமல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
இந்திய நகரங்களில்
உள்ள சில லட்சம் பேரின் நவீன வசதிகளுடன்
கூடிய பரபரப்பு வாழ்க்கை முறையுடன் மோத இயலாமல் கோடிக்கணக்கான எளிய இந்தியர்களின்
வாழ்க்கை முறையானது வீதியில் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல
புறக்கணிக்கப்படுகின்றது.
நாட்டின்
சிறிய எண்ணிக்கையிலான மக்களின் சொகுசு வாழ்க்கை வகை மாதிரியைக் கொண்டு ஒட்டு மொத்த நாட்டின் வாழ்க்கை ,வறுமை, வசதி , வளர்ச்சி, முன்னேற்றம்
பற்றி வரையறுக்க முயலும்போதுதான் சிக்கலே தொடங்குகின்றது.
வருடாவருடம்
இந்திய பயணம் செல்லும் கார்ப்பரேட் / தேசீயத்தின் சாய்மானம் கொண்ட புனைவு
எழுத்தாளர் ஒருவர் இமயமலையின் இண்டு இடுக்குகளில் வாழும் தொல்குடிகளின் வாழ்க்கை
முறையைப் பார்த்து விட்டு தன் மன ஓட்டத்தை பின்வருமாறு பதிவு செய்கின்றார் .
“ இவர்களின் வாழ்வு மிகவும் மந்தகதியில் ஊர்வதோடு வறுமையால்
நிரம்பியதாகவும் உள்ளது. நாம் அனுபவிக்கும் .வளர்ச்சிக்குள் இவர்கள் கொண்டுவரப்பட
வேண்டும். சுற்றுலா தொழில் இங்கு ஊக்குவிக்கப்படவேண்டும் “ .
. வாழ்க்கையின்
ஓட்டத்திற்கும் தங்களின் தனித்தன்மைக்கும் இடையே ஒரு அற்புதமான ஒத்திசைவை நெய்து
எடுத்து அதன் பாதையில் தவழும் அந்த மலை
நில ஆதிகுடிகள் இந்த எழுத்தாளரிடம் தங்களை மீட்க மனு கொடுத்தது போல பாவித்துக்
கொண்டு அறிவுரை கூறுகின்றார்.
இது போன்ற
படைப்பளிகளின் குரல்கள் புத்தன் காலனியாதிக்க யானையின் வரவை அறிவிக்கும் மணியோசை
போன்றவை .
காலனியாதிக்கத்தின்
புதிய பெயர் கார்ப்பரேட் வணிகம் . பெயர்களை பலவாறாக மாற்றிக்கொண்டாலும் அடிப்படை
என்னவோ வரைமுறையற்ற ஆதாயத்தை குவிப்பது ஒன்றுதான் நோக்கம். இவர்களின் இந்த கொள்ளை ஆதாய வெறியானது மிகை உற்பத்தியையும்
மிகை உற்பத்தியானது இயற்கை வளங்களை வரைமுறையின்றி சுரண்டுவதிலும் கொண்டு வந்து
சேர்க்கின்றது.
அத்துடன் அதன்
தொடர் விளைவாக கொள்ளை ஆதாய வெறியானது தங்களது உற்பத்தியை நுகரும் மனதையும் , இயற்கை
வளங்களின் சுரண்டலை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றது.
தங்களின் இந்த
விபரீத விளையாட்டிற்கு தேவையான மனங்களையும் மனிதர்களையும் உண்டு பண்ணுவதற்கு
முன்பு வாழ்க்கை பற்றிய நெடும் பண்பாட்டு
மரபின் சட்டகங்களை ஆதாய வெறியானது தகர்த்து எறியும். அதன் பின்னர் தன் வசதிக்கும்
நோக்கத்திற்கும் ஏற்ப புதிய வரைவிலக்கணங்களை பல கவர்ச்சிகரமான விளம்பர பரப்புரை
உத்திகளின் வழியாக நிறுவிக்கொள்ளும்.
தங்களின் உண்மையான
அடையாளத்தையும் நோக்கத்தையும் இது போன்ற உள் நோக்கம் கொண்ட சக்திகள் முதலில்
நேரடியாக இனங்காட்டுவதேயில்லை
. “ வறுமை
ஒழிப்பு “ என்ற முழக்கத்தை முன்னிறுத்திக்கொண்டு வாழ்க்கை , வறுமை பற்றிய தங்கள்
நோக்கங்களுக்கு இசைவான புதிய வரையறையை முதலில் முன் வைப்பர். பின்னர் அதையே உலகம்
ஏற்கும்படியும் செய்வர்.
புகழ் பெற்ற “
பதேர் பாஞ்சாலி “ யின் ஆசிரியரான பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாய் உருவாக்கிய மற்றொரு பங்காலி மொழி புதினம் “ ஆரண்யக
“ . நகரமயமாக்கத்தின் விளைவாக தெற்கு பிஹாரில் பாரிய அளவில் நடந்த காடழிப்பை மையமாகக் கொண்ட கதை அது.
“ஆரண்யக” புதினத்தில் உலாவும் கதை மனிதர்கள் தனிமை
விரும்பி , கடும் வறுமையிலும் மாணவர்களுக்கு உணவிட்டு கல்வி புகட்டுபவர் , காடு
வளர்ப்பை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் , உயிர் உடலில் தங்குவதற்கு தேவையான அளவு
மட்டும் உழைத்து உண்டு குடும்பத்தைக் காப்பாற்றி மீதி நேரம் ஏகாந்தத்திலும்
தியானத்திலும் வாசிப்பிலும் கழிப்பவர் , சிறிது நேரம் குடும்பத்தலைவனாகவும் மீதி
நேரம் துறவியாகவும் வாழ்பவர் என காட்சியளிப்பதைக்
காண முடியும்.
சோற்றுக்கு
வழியின்றி கடும் பசியினால் வேப்பம் பழத்தை தின்ற தலித் சிறுவர்களுடன் சேர்ந்து
தானும் அதை உண்ட மகாகவி பாரதியால்தான் அந்த கொடிய வறுமையின் மீது ஏறி நின்று
கொண்டு
“
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
சித்தினை
அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
அத்தனை
உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்! “
பல பல நல்லழகுகள் சமைத்தாய்! “
என்று
பாட முடிந்தது.
மிக
எளிதாகவும் தங்கள் மனதிற்கு பிடித்த வழியிலும் வாழ்வதை கதை மனிதர்கள் வழியாக உருவகிப்பது என்பது
படைப்பாளிகளின் அதி தீவிர மன நிலை தேர்வு என ஒதுக்கி விட முடியாது. படைப்பாளிகளின்
உருவாக்க தளம் ஆதி மன நிலையிலிருந்துதான் பீறிடுகின்றது.
இன்றும்
பஸ்தரிலும் வடகிழக்கிலும் வாழும் இந்தியத் தொல்குடிகளில் பலர் தங்களுக்கென நிலம்
வைப்பதையும் தேவைக்கு மேலாக எதையும் சேகரிப்பதையும் பெரும் பாவமாக கருதுபவர்களும்
உண்டு. அதன் நீட்சியைத்தான் வேலூர் மாவட்டத்தின் தனித்த மண் பரப்பிலும் காண
முடிகின்றது.
படைப்பு
மனமும் அடி நிலை மனிதனும் ஒன்றிக்கலக்கும் புள்ளியானது பெருவாரியான மானுடச்சரடின்
பிரிக்க முடியாத கண்ணிகள் என்றே முடிவிற்கு வர முடிகின்றது.
ஒரு
சமூகமானது , நாங்கள் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்ந்து கொள்கின்றோம் என மரபணு
தொடர்ச்சியாகவே முடிவெடுப்பது என்பது அந்த இனக்குழுவின் பண்பாட்டுச்செழுமையையும்
அக வலிமையையும் எளிதில் நிறையும் அவர்களின் மனப்பேற்றையுமே சுட்டிக் காட்டுகின்றது.
இந்த
நிறைந்த மன நிலையானது இறை நம்பிக்கை , தொன்மங்கள் , பிரபஞ்சத்தின் ஒரு துளியாக கருதும்
உணர்வு நிலை போன்றவற்றின் வழியாக அந்தந்த
சமூகங்களுக்கு மரபுத்தொடராக கையளிக்கப்படுகின்றது . இதன் விளைவாக பொறாமை ,ஆதாயக்
கொலைகள் , விரக்தியின் இறுதி புகலிடமான தற்கொலை போன்ற பிறழ்வு நிலைகளுக்கு
இடமில்லாமல் போகின்றது.
தமது சந்தை நோக்கத்திற்காக இன்னின்ன வசதிகள்
இருந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என நவீன வறுமை ஒழிப்புச் சட்டகத்தை
குடிமக்களின் மனதில் ஆணியடித்து நிலை நிறுத்துகின்றனர் சந்தையாளர்கள்.
கார்ப்பரேட்
நிறுவனங்கள் தங்கு தடையின்றி கனிம வளங்களை சுரண்டுவதற்காக பழங்குடியினரும்
விவசாயிகளும் கடலோடிகளும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து
துரத்தியடிக்கப்படுகின்றனர்.
அவர்களின்
மீது வலுவாக திணிக்கப்பட்ட கதியற்ற வாழ்க்கையையே புதிய வறுமைக்கான விளக்க
சித்திரமாக மாற்றி அதன் மூலம் இந்திய பொது மகனின் மனதை தங்களுக்கு தோதுவாக
வசப்படுத்துகின்றனர் கார்ப்பரேட்டுகளின் ஊடக லாபியினர்.
பழங்குடியினரின்
தன்னிறைவான முந்தைய வாழ்க்கைக்கு ஆதரவாகவும் தற்போது அவர்கள் மீது திணிக்கப்பட்ட
கையறு வறுமை நிலைக்கு எதிராகவும் குரல் குரல் கொடுப்பவர்கள் மீது “ மாவோயிஸ
ஆதரவளர்கள் “ , “ நாட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள் “ “ அன்னிய கைக்கூலிகள் “ என்ற முத்திரைகளை
கார்ப்பரேட் ஆதரவு லாபியினர் ஓயாது பதிக்கின்றனர்.
இதன்
விளைவாக சராசரி மனிதனின் மரபார்ந்த தன்னிறைவான வாழ்வியல் பண்பாடு அவனிடமிருந்து
துடைத்து நீக்கப்படுகின்றது . அந்த மரபு பண்பாட்டின் ஆக்க விளைவான மன வலிமையும்
நிறைவும் சன்னம் சன்னமாக முடமாக்கப்பட்டு அவன் புதிய வறுமையின் எளிய இரையாக
ஆக்கப்படுகின்றான்.
இந்த
புது வறுமையை போக்க கூடுதலான பொருள் உற்பத்திதான் தீர்வு என தன்னல நோக்க சக்திகள்
மீண்டும் மீண்டும் சொல்லி தங்களின் இலக்கை எளிதாக நிலை நிறுத்தி விடுகின்றனர்.
புதிய
பொருளாதார பாதையின் நல்ல விளைவாக இருபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த வேலையில்லாத
திண்டாட்டத்தை இன்று பார்க்க முடியவில்லை என்பது உண்மையே.
ஆனால்
பெருவாரியான மக்களிடையே வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தியதுடன் பணப்புழக்கத்தையும் தாரளமாக
ஏற்படுத்தி மங்கள இசையாக ஒலிக்கும் இந்த வளர்ச்சியானது பிஹார் , ஜார்க்கண்ட் ,
மேற்கு பெங்கால் . ஒடிஸா காடுகளில் கொடூரமான சுருதி பேதமாக மாறி ஒலிப்பதை தவிர்க்க
முடியவில்லை .
நேற்று
வரை கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஸைபர் கூலிகள் இன்று ஈவிரக்கமில்லாமல்
ஆள் குறைப்பின் பேரில் தூக்கி எறியப்படுகின்றனர்.
புதிய
வளர்ச்சியின் நேற்றைய பலியாடுகள் விளிம்பு நிலை மனிதர்கள் என்றால் இன்றைய
பலியாடுகள் நடுத்தர வர்க்க மக்களாக இருக்கின்றனர்.
சந்தை
இயக்குனர்கள் ,கார்ப்பரேட்டுகள் ஆகியோரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப
வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை வசதி , வறுமை பற்றிய ஒற்றை அளவு கோலை தூக்கி அந்தப்
பக்கம் வைத்து விட்டு நம் நாட்டின் அனைத்து குடிமக்களையும் தழுவிய நலன் சார்ந்த
புதிய அளவு கோல் சமைக்கப்பட வேண்டும்.
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
No comments:
Post a Comment