Tuesday 28 January 2020

பைத்தியக்காற்றும் நிலவறை மன்னனும்









இன்று காலை ( 28/01/2020 செவ்வாய்கிழமை ) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ஹிந்தி மொழி பயிற்சியில் வாசிக்கப்பட்ட பாடக்கதை.

இந்தக்கதையை படித்த பிறகு மேற்படியான் நினைவுக்கு வந்தால் நானும் வானொலியும் பொறுப்பில்லை.



இசை, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள் மட்டுமே அந்த அரசனுக்கும் அவனது அவைக்கும் பிடித்தமான ஒரே விஷயம்.

ஒரு நாள் எளிய ஆனால் தூய்மையான ஆடையணிந்த சோதிடரொருவர் அரசவைக்குள் நுழைந்து ஆருடம் சொன்னார்.

சரியாக இன்றிலிருந்து ஆறு மாதங்களில் இதே நாளில் ஒரு காற்று வீசும். அது யார் மீதெல்லாம் கடந்து செல்கின்றதோ அவர்களனைவரும் பைத்தியமாகி விடுவர் என சொல்லி விட்டு சென்று விட்டார்.

நிலவறையொன்றை கட்டினால் தானும் தனது அவையினரும் பைத்தியக்காற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என உறுதியாக நினைத்த மன்னன் உடனே பாதுகாப்பானதொரு நிலவறை கட்டவும் ஆணையிட்டான்.


கூர் மதியுள்ள தலைமையமைச்சர்,  “ மன்னா! நாம் நம்மை பாதுகாப்பது சரி. நம் நாட்டின் மொத்த மக்களையும் எப்படி பாதுகாப்பது? “ எனக் கேட்டதற்கு “ அட முட்டாள் அமைச்சரே! அரசனும் அவையினரும் பாதுகாப்பாக இருந்தால்தானே நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பர். இது கூட உங்களுக்கு தெரியவில்லையே? என அவரைப்பார்த்து அரசனும் ஏனைய அமைச்சர்களும் எள்ளி நகையாடினார்களாம்.


பைத்தியக்காற்று பற்றிய செய்தி நாடெங்கும் காற்று போலவே பரவியது. நிலவறையைக் கட்டிக் கொண்டிருந்த தொழிலாளிகளும் “ இவ்வளவு பெரிய  நிலவறையைக் கட்டும் நமக்கோ இதில் ஒரு விரலளவுக்கு கூட இடம் கிடையாதே என நினைத்து கண்ணீர் விட்டனர்.


நிலவறையை கட்டி முடித்தாகி விட்டது. பைத்தியக்காற்று வீசும் என சோதிடர் குறிப்பிட்ட அந்த நாள் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அரசனும் அவையயினரும் நிலவறைக்குள் புகுந்து கொண்டனர்.


குறிப்பிட்ட அந்த நேரமும் வந்தது. நிலவறைக்கு வெளியே ஒரே மக்கள் கூட்டம். தாங்கள் பைத்தியமாவதை நினைத்து அவர்களனைவரும் கதறியழுதனர். நிலவறைக்குளிருந்த மன்னர் குழாமின் காதுகளிலும் இது விழுந்தது. சிறிது நேரத்தில் மக்களின் அழுகை நின்று பேச்சுக்குரல்கள் கசமுசக்கத் தொடங்கின. 


இதையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அரச குழாம்,  பைத்தியக்காற்று போய் விட்டது என முடிவு பண்ணி நிலவறையை விட்டு வெளியே வந்தனர்.


வெளியே கூடியிருந்த மக்கள், அரச குழாமைப் பார்த்தவுடன் , “ ஹே பைத்தியம் ஹே பைத்தியம் என ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். கோபமடைந்த மன்னர் முழங்கத் தொடங்கினார், “ ஏ முட்டாள் பைத்தியங்களே! நான்தான் உங்கள் அரசன். கொஞ்ச நேரத்தில் இதைக்கூடவா மறந்து விடுவீர்கள்?”


மீண்டும் மக்கள், ஹே பைத்தியம்   நீதான் பைத்தியம்  என முன்னை விட வலுவாக கூச்சலிடத்தொடங்கினர்.


கோபம் தலைக்கேறிய மன்னன், தனது படையினரைப்பார்த்து மக்களை சிறைப்பிடிக்க ஆணையிட்டான். ஆனால் படை வீரர்களோ ஏற்கனவே மக்களின் பக்கம் சேர்ந்து விட்டனர். எனவே அரசனின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.


இந்நிலையில் வசீகரமும் ஒளிர்வும் பொருந்திய இளைஞனொருவன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டான். மன்னரையும் அவனது பரிவாரங்களையும் நோக்கி , “குழிக்குள்ளிருந்து வந்த நீங்கள்தான் பைத்தியம். எனவே நீங்கள் மீண்டும் குழிக்குள்தான் செல்ல வேண்டும்” எனக்கூறி விட்டு மக்களைப் பார்த்து “அவர்களை பிடித்து குழிக்குள் அடையுங்கள்” என ஆணையிட்டான்.

மன்னனும் அவனது பரிவாரமும் மீண்டும் நிலவறைக்குள் புகுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். மன்னனை பரிதாபமாக நோக்கிய தலைமையமைச்சர், “ மன்னா! நாம் மக்களை விட்டு விலகக் கூடாது என எச்சரித்தேனே!” என்றாராம். மன்னனிடமோ  மறுமொழியேதும் இல்லை




No comments:

Post a Comment