Monday 27 January 2020

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறு வீட்டில் பசியில்லையே.......



‘ ஒரு வீட்டின் சமையல் அடுத்த வீட்டின் பசியை அணைக்கும்’ என்ற வரிகள், ‘ பண்டங்கான்டொரு நாடுண்டார்ந்தே’ (அன்றங்கே ஒரு நாடிருந்ததே)  என்ற   வாழ்வியல் பாடலில் இடம் பெற்றவை. இந்த வரிகளின் வாழும் சாட்சியை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் நினைவகம் காண்பதற்காக நவம்பர்2019இல் கேரளம் சென்றபோது அதன் செயலாளர் தோழர் டி.ஆர்.அஜயனை சந்தித்தேன்.  அவரைப்பார்க்க சென்ற போது இன்னொருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இலக்கியம் தொடர்பான உரையாடலது.

தான் வாசித்து முப்பத்தோரு வருடங்களாகி விட்டதாக வந்த ஆள் சொல்லிக் கொண்டிருந்தார். தினசரி வாசிப்புத்தான் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் என அவருக்கு அஜயன் அறிவுறுத்தினார். பல திசைகளிலும் சுழன்ற பேச்சு இறுதியாக குடும்ப வாழ்விற்குள் நுழைந்தது.

“ நவீன வாழ்க்கையானது கூட்டு குடும்ப அமைப்பை சிதறடித்து ஒற்றைத்தனிக் குடும்பமாக மாற்றி விட்டது. எல்லோரும் சேர்ந்து உணவருந்தும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பிரச்னைகளும் இன்பங்களும் பகிரப்படும். ஒற்றைத்தனிக்குடும்ப முறையால் இவைகள் எல்லாம் இல்லாமல் போய் பெரும்பாலான தனி மனிதர்களுக்கு நீரிழிவு, குருதியமுக்கம் என நோய்கள் பெருகி விட்டன.

என் மகள் விதவையாகும்போது அவளுக்கு வயது முப்பது. அவளுக்கு ஒரே ஒரு மகன். இணையை இழந்து உள்ளம் நொறுங்கியிருந்தாள். நான் அவளுடன் உரையாடி உரையாடி  மெல்ல மீட்டெடுத்தேன். இன்று அவளும் என் பேரனும் நல்ல நிலையிலிருக்கின்றனர்.

அண்டை வீட்டிலிருந்து உதவிக்குரல் எழுந்தால் அது இன்று யார் செவிகளிலாவது விழுமா?

எனது தந்தை தந்தை டி.கே.ராமன்  தெற்கு மலபாரில் பொதுவுடைமை கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். அவரைத்தேடுகின்றோம் என்ற சாக்கில் அடுக்களைக்குள் நுழைந்து என் அம்மாவையும் அடித்து விட்டு அரிசி உலையையும் காவல்துறையினர் நொறுக்கிவிடுவார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் பட்டினி கிடந்ததில்லை. காரணம், அண்டை வீடுகளிலிருந்து எங்களுக்கு உணவு வந்து விடும் “.

உரையாடல் பெருகிக் கொண்டேயிருந்தது. அஜயனிடமிருந்து விடைபெற்று கிளம்பும்போது மதியவேளை கடக்கத் தொடங்கியிருந்தது. எனக்கு உணவை ஏற்பாடாக்க முனைந்தவரிடம் மறுத்து விட்டு கிளம்பி விட்டேன். எத்தனை முறைதான் உண்பது?








No comments:

Post a Comment