Saturday 1 February 2020

வைகறை ஹோமியோ மருத்துவமனை





எனக்கு தேவையான மருந்து பொட்டலங்களை வாங்கி விட்டு திருநெல்வேலிக்கு அடுத்த பேருந்து எத்தனை மணிக்கு? என செயலிட முகப்பில் ( கவுண்டர் ) இருந்தவரிடம் கேட்டேன்.


" சார்! இங்கே பஸ் நிக்குறது கொறவு. வழமையா பேஷண்டுகளை தருவைக்கு கார்ல கொண்டு விடுவோம். அங்க எல்லா பஸ்ஸும் நிக்கும்.  வெள்ளிக்கிழமை மட்டும் கார் வெளியே போய்டும். ஒன்னும் பிரச்ன இல்ல, ஆட்டோ ஏற்பாடு பண்றோம்”



எனசொல்லிக் கொண்டே அவர் தன் செல்பேசியில் எண்களை அமுக்கினார்.


கொஞ்ச நேரத்தில் ஆட்டோ வந்து சேர்ந்தது. ஆட்டோவிற்கான கட்டணத்தையும் அவரே செலுத்தி விட்டார்.


-------------------------------


கடந்த மூன்று வருடங்களாக பாளையங்கோட்டை – அம்பாசமுத்திரம் சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் வைகறை ஹோமியோ மருத்துவமனை& ஆராய்ச்சி மையத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக நான் வருகின்றேன். சராசரியாக ஒரு மாத மருந்தின் விலை முந்நூறு மட்டில்தான் உள்ளது. இதே மருந்துகளை தனியார் ஹோமியோ மருத்துவரிடம் போய் வாங்கினால் ஆயிரம் ரூபாய்கள் மட்டிலும் செலவாகும். மருத்துவர் கட்டணம் என தனியாக கிடையாது. நீண்ட கால பட்டறிவு வாய்ந்த மருத்துவர்கள் பரிகாரமளிக்கின்றனர். தூதஞ்சல் மூலமும் மருந்துகளை முன் பணம் ஏதுவும் பெறாமல் அனுப்புகின்றனர். அதற்கான தொகையை மருத்துவமனைக்கு வரும்போது கொடுத்தால் போதும். வறியவர்களுக்கு மருந்து கட்டணத்தில் சலுகையுண்டு.

எனக்கு தெரிந்தவகையில் நாட்பட்ட புற்று, இளைப்பு, வாதம், வயிற்றுப்புண், தைராய்டு, பீனிசம் உள்ளிட்ட நோய், குறைபாடுள்ளவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இங்கு தொடக்க நிலை இளம் ஹோமியோபதி மருத்துவர்கள் பயிற்சியும் எடுக்கின்றனர்.



ஹோமியோபதி மருத்துவத்தில் நீண்ட பட்டறிவும் முதிர்வும் உள்ள மருத்துவர் கே.எஸ்.சீனிவாசனால் தொடங்கப்பட்ட மருத்துவமனை இது. தற்சமயம் அகவை 90 ஐ கடந்த நிலையில் அவர் சென்னையில் வசித்து வருகின்றார்.

அவரின் மேல் மதிப்பும் அன்பும் கொண்ட வட்டாரங்களின் விரிவு மலைக்கத்தக்கது. இந்த வைகறை மருத்துவமனையின் நிறுவுதலில் வடநாட்டு சாமியார்கள் தொடங்கி தமிழகத்தின் ஐ.டி. நிறுவனம் வரை ஆதரவும் பரிவும் மிக்க ஈரக்கரங்களினால் எந்தவித ஆதாய நோக்குமின்றி செயல்பட்டு வருகின்றது.

ஜென் தோட்டத்தைப்போலவே அமைந்த மருத்துவமனை வளாகமும் சுற்றாடலும் வெண் தூய்மையோடு அமைக்கப்பட்டுள்ளன. மிரட்டும் பிரமிப்பை உருவாக்கும் எந்த கட்டிட முகப்பும் இங்கு இல்லை. அமைதிக்குள் தவழும் நெடிய மண்பாதை. இளைப்பாறும் மரபார்ந்த குடில்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை ஹானிமனின் மார்பளவு சிலையும் நினைவுத்தூண்களுமாக நிற்கும் திறந்த நிலை ஹானிமன் நினைவு தாங்கல்.


வளாகத்தின் முன்புறமும் பின்புறமும் உருவாக்கப்பட்ட  குட்டைகளும் ஓடைகளும் அவற்றை நாடிவரும் சிற்றுயிர்களுமாக அங்குள்ள ஏகாந்தத்திற்குள் பொதிந்து கிடக்கும்  நிச்சலனத்தை ஒளிரச்செய்து கொண்டேயிருக்கின்றன.


நலமானாலும் நோயானாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவற்றில் தனித்துவம் உண்டு. உலகம் முழுக்க ஒரே நோய் ஒரே மருந்து என்ற ஒற்றையாக்க தட்டைத்தனத்திலிருந்து மருத்துவத்தை விடுவித்தவர் ஹானிமன்.


நோயாளிகளின் தலையில் வைத்து திணிக்கப்படும் மருந்துக் குவியல்கள் என்பதிலிருந்து குறைவான மருந்துகளை அவர் பரிந்துரைக்கின்றார். மருந்தின் பின் விளைவுகளிலிருந்தும் நோயாளி காக்கப்படுகின்றார். செவ்வியல் ஹோமியோபதியில்  நோயாளிக்கும் மருத்துவருக்குமான உரையாடலின் வழியாக நோயைப்பற்றிய முழு அறிதலும் நோய்க் காரணிகள் பற்றிய தெளிவும் இருவருக்குமே ஏற்படுகின்றது, அதன் பிறகே பரிகாரம் மேற்கொள்ளப்படுகின்றது.


நோய்கள், அவற்றிற்கான பரிகாரங்கள் தொடர்பாக பெரு மருத்துவ நிழலுலகினர் தங்களின் விளம்பரங்கள், பொதுமக்களின் அறியாமை,அச்சம் இவற்றை உரிய விகிதத்தில் பயன்படுத்தி பொதுபுத்தியை சூழ்ச்சித்திறனுடன் கையாளுகின்றனர்.


ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் குணங்களும் கேடுகளும் உண்டு. நவீன உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமுறைகள் கலந்த கூட்டு மருத்துவ முறையே சிறந்தது என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆதாய நோக்கில் ஒரு மருத்துவமுறையினர் பிற மருத்துவ முறைமைகளை எள்ளலுடனும் ஒவ்வாமையுடனும் பார்ப்பதோடு அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கின்றனர். மருத்துவ துறை தன்னுடைய தெய்வாம்சத்தையும் சேவையையும் நீக்கி இரக்கமற்ற வணிகனைப்போலவே நோயாளிகளைக் கையாள்கின்றது.  


நோய்- மருத்துவம்- செலவு -  நிம்மதியிழப்பு -அலைச்சல் என்ற அதிர்வு மிக்க நச்சு சுழலிலிருந்து நோயாளிகளையும் அவர்களின் உற்றார்களையும் விடுவிக்கும் இந்த மருத்துவமனைக்கு 2019 ஆண்டில் கிட்டதட்ட 1400 நோயாளிகள்தான் வந்துள்ளனர். சராசரி ஆதர்வு கூட இல்லாத நிலையில் இது போன்ற மக்கள் மருத்துவ மனைகளுக்கு கிடைக்கும் புரவலர்களும் ஒருகட்டத்தில் இல்லாது போய் விடுவர்.எரி திரியின் இரைகள் போல மக்கள் தங்களை மாய்ப்பவர்களைத்தான் நேசிப்பார்கள் போலும்.


 மருத்துவமனையிலிருந்து இறங்கும்போது பெண் பயிற்சி மருத்துவர் வெற்றுக்கால்களுடன் ஹானிமன் தாங்கலிலிருந்து வெளியே வந்தார்..‘ நான் வீணே வாழவில்லை ‘ என்ற ஹானிமனின் அந்த சொற் குவையிலிருந்து ஒருவேளை அவர் தனக்கான ஈவை பெற்றிருக்கக் கூடும்.









வைகறை ஹோமியோ மருத்துஅமனை & அராய்ச்சி மையம்

No comments:

Post a Comment