Thursday 2 January 2020

புதியதாய் ஒரு பூதம்---உள்முரண்களில் ஆதாயமடைய நினைக்கும் ஆதிக்க சக்திகள்






கண்ணியமும் பாரம்பரியமும் மிக்க மத்ரஸாக்களுக்கிடையேயான பிளவை உண்டாக்கும் விவாதங்கள் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருவது மனதை வேதனைப்படுத்துவதாக உள்ளது.பெரும் நிறுவனங்களை உருவாக்கும் மாமனிதர்களிடம் சில சமயங்களில் சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது .

முன்னோர்கள் ,மூத்தோர்களின் சாதனைகள்,போதாமைகள், ஆகியவற்றை பின்வரும் தலைமுறை அசை போடுவதும் ,தேவையான மாற்றங்களை மேற்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும் இயல்பானது,புரிந்துக்கொள்ளக்கூடியது,வரவேற்கக்கூடியது.


ஆரோக்கியமான விவாதங்கள் என்பவை சமூகத்தின் தொய்வையும்,தளர்வையும் சீராக்கும் உடற்பயிற்சி போன்றவை.கருத்து வேறுபடுவதற்கும்,முரண்படுவதற்கும் கூட அழகிய வழிமுறைகளையும்,ஒழுக்கத்தையும் காட்டித்தந்த மார்க்கம் இஸ்லாம். 

 எத்தகைய விமர்சனத்தைய நாம் முன் வைக்கும்போதும் அதில் நமது அதி தீவிரமான உணர்ச்சிகள் மேலிடாமல் இருப்பது சிறந்தது.அப்போதுதான் அந்த விமர்சனம் மாற்று முகாமில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும்.  இல்லையெனில் எதிர்மறை விளைவுகளே உருவாகும். ஆக்குவது கடினம் அழிப்பது எளிது

எதிரிகளின் தந்திரங்கள்

கிலாஃபத்தை தகர்த்தது உட்பட பல இஸ்லாமிய நாடுகளின் நல்லாட்சிகளை சீர்குலைக்க  அன்னிய சக்திகள் கையிலெடுத்த தந்திரோபாயங்கள் சில :

 1. வழிகெட்ட சிந்தனைகளை உருவாக்கி அதனடிப்படையில் பல குறுங்குழுக்களையும் கட்டியெழுப்புவது.

 2. ஃபிக்ஹ்,மஸாயில் அம்சங்களில் உள்ள இயல்பான கருத்து வேறுபாடுகளை முரண்களாக திரித்து ஊதிப்பெருக்குதல்.

3.ஷரீஆ விதித்துள்ள கடமைகளில் உள்ள ஒழுங்குமுறை,(தர்த்தீப்) விடயங்களை முன் பின்னாக்கி சமூக வாழ்வினுடைய ஆக்கப்பூர்வ கூட்டு முயற்சிகளை சீர்குலைத்தல்

 4.முஸ்லிம் சமூக ஆளுமைகள்,நிறுவனங்களிடையே உள்ள சின்னஞ்சிறு சிக்கல்களையும்,பேசினால் விவாதித்தால் தீர்ந்து விடக்கூடிய முரண்களையும் பூதாகரமாக்கி தீராப்பகையாக மாற்றுதல்.

மேற்சொன்ன தந்திர உத்திகளை முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்ல ,முஸ்லிம்கள் எங்கெல்லாம் சமூக,அரசியல்,பண்பாட்டுத்தளத்தில் விழிப்படைந்து வருகின்றார்களோ ,எங்கெல்லாம் தங்களது உரிமைகளைக்கோருவதில் விடாப்பிடியாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இது போன்ற கீழான குயுக்திகளை ஆள்வோரும்,ஆதிக்க சக்திகளும் பேரின வாத ஃபாஸிஸ்டுகளும் பெரும்பாலும் கடைப்பிடித்தே வருகின்றனர். 

இந்திய நிலவரம்


இப்போது தமிழகத்தில் நாம் காண்பது எதிரிகளின் 4 வது வகை உத்தியாகவேப்படுகின்றது.,அவர்கள் விரித்த இந்த வஞ்சக வலையில்  நாமாக போய் விழுந்து விடுவோமோ எனத்தோன்றுகின்றது.ஃபாஸிச பா.ஜ.க வினருக்கு எதிராக முஸ்லிம்கள் தங்களது வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொடுத்தனர்.

 இந்த உதவிக்கு கைமாறாக முஸ்லிம் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு பற்றி ஆய்ந்து முடிவெடுப்பது,கல்வி உட்பட பல அடிப்படைத்துறைகளில் அரசின் நிதி ஒதுக்கீட்டையும்,திட்டங்களையும் முஸ்லிம் சமூகத்திற்கு  முறையாக கொண்டு சேர்ப்பது என்ற மிகக்குறைந்த திட்டத்தை வாக்களித்தது காங்கிரஸ் கட்சி.
இந்த வாக்குறுதிகளை குறிப்பாக இட ஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றச்சொல்லி இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு பல முனைகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்தே முஸ்லிம்கள் விஷயத்தில் இரட்டை வேடம் போட்டே பழகியுள்ள காங்கிரஸ் அரசு இவ்விடயத்திலும் பல குரலில் பேசி வருகின்றது.முஸ்லிம்களின் உயிர் வாழும் உரிமையை வெறித்தனமாக மறுத்து வரும்  ஃபாஸிச பா.ஜ.க இந்த இட ஒதுக்கீட்டை மிகத்தீவிரமாக எதிர்ப்பதோடு. நடுவணரசையும் மிரட்டுகின்றது. 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்போய் அது பெரும்பான்மை ஹிந்துக்களின் வாக்குகளை பா.ஜ.க.வின் பக்கம் கொண்டுபோய் சாய்த்து விடும் என்ற பொருளற்ற பயப்பிராந்தியில் நடுங்குகின்றது காங்கிரஸ் அரசு.எனவே மனதளவில் தான் வெறுக்கின்ற முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை எப்படி சிதறடிப்பது ? என ஆளும் வர்க்கம் சிந்திக்கவே செய்யும்.

இது போன்ற சந்த்ர்ப்பங்களில் ஆள்வோர் சில குறுக்கு வழிகளையும்,பின் வாசல் தந்திரங்களையும் பாவிப்பதுண்டு. அண்ணா ஹஜாரே குழு,கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் இவ்வழிகளை ஆள்வோர் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. அதே போல் சின்னாட்களுக்கு முன் அச்சு ஊடகங்களில் ஒரு செய்தி வந்திருந்தது. அது நமது அச்சத்தை உறுதிப்படுத்துவது போல இருக்கின்றது.  

புதிய பூதம்

அகில இந்திய உலமா&மஷாயிக் வாரியம்(ALL INDIA ULAMA &MASHAIKH BOARD, AIUMB) என்கிற புதிய பிரிவினைவாதிகள் கிளம்பியுள்ளனர்.இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலம், முராதாபாத்தில் ஒரு  மாநாட்டை சூஃபி மஹா பஞ்சாயத் என்ற பெயரில் நடத்தியுள்ளனர். 

இக்கூட்டத்தில் இவ்வாரியத்தின் பொது செயலாளர் மௌலானா ஸெய்யத் முஹம்மத் அஷ்ரஃப் கச்சோச்சவி என்பவர் உட்பட பலர் உரையாற்றியுள்ளனர். அவற்றின் சாராம்சங்கள் பின் வருமாறு:

1.’’இந்திய மத்ரஸாக்களுக்கு ஸவுதியிலிருந்து வரும் பணத்தை{PETRO DOLLARS}   கண்காணிக்கும் விதமாக நடுவண் மத்ரஸா  வாரியம் ஒன்றை நிறுவ வகை செய்யும் சட்டமொன்றை இயற்ற வேண்டும்.

2.இந்திய முஸ்லிம்களில் 80% மானோர் ஸுன்னி முஸ்லிம்களாகிய நாங்கள்தான். ஆனால் தேவ்பந்திகளும் , வஹ்ஹாபிகளும் அவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலான விகிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான வக்ஃப் வாரியம்,மத்ரஸாக்களை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மிக கூடுதலான அரசியல் செல்வாக்கைப்பெற்றுள்ளனர். எங்களுக்கு சொந்தமான வக்ஃப் சொத்துக்களையும்,மஸ்ஜிதுகளையும் அவர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது.அரசானது கடும்போக்குடையவர்களுக்கே செவிமடுக்கின்றது.  ஜம்யிய்யத்துல் உலமாயே ஹிந்த் அமைப்பும் கடும்போக்குடையதுதான்.

3.ஸுன்னி ஸூஃபிகள் அமைதியை நேசிக்க கூடியவர்கள்,சகிப்புத்தன்மையுடையவர்கள், தீவிர தேசப் பற்றாளர்கள்.ஸுஃபிசம் எல்லோரையும் அரவணைக்கும் போக்குடையது.அது முஸ்லிம்,முஸ்லிம் அல்லாதவர்களிடையே எவ்வித பாகுபாட்டையும் காட்டுவதில்லை. அவர்கள் நினைவிடங்களில் அனைத்து சமூகத்தினரையும் வேண்டுதல் செய்ய அனுமதிக்கின்றனர்.ஆனால் தேவ் பந்திகளோ தங்களைப் பின்பற்றுவர்களை   ஸூஃபி தர்காக்களுக்கு போவதை தடுக்கின்றனர்.

4.சிறிய கூட்டத்தினரான வஹ்ஹாபிகளின் தீவிரவாதம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளனர். யாராவது உங்களை பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்க முனைந்தால் அவர்களை காவல்துறையிடம் ஒப்படையுங்கள்.  நமது உரிமைகளை கோருவதற்கான நேரமிது. வஹ்ஹாபி தீவிரவாதத்திற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எக்காலத்திலும் ஆதரவளிக்க மாட்டோம் ,தாயகத்தின் ஒருமைப்பாட்டிற்காக உழைப்போம் என உறுதியேற்போம். ’’    

பிரபல வார இதழ் ஒன்று இரண்டு ஒரே தோற்றமுடைய சித்திரங்களை வெளியிட்டு அவற்றிற்கிடையே உள்ள 6 வித்தியாசங்களை கண்டுபிடிக்குமாறு வாசகர்களிடம் கோரும்.அவ்விரண்டு சித்திரங்களிடையேயும் மிக நுண்ணிய வேறுபாடு மாத்திரமே காணப்படும்.

அதே போல் இவர்களின் கோரிக்கைக்கும்ஃபாஸிச  ஹிந்துத்வ அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை ஒரே ஒரு வேறுபாட்டைத்தவிர. அதுதான்  ஆட்களின் பெயர்களில் உள்ள பெயர் வித்தியாசம்.அத்வானி சொல்வதை மௌலானா அஷ்ரஃப் சொல்லியுள்ளார்.

இதில் நமக்கு பல அய்யங்கள் எழுகின்றன. இவர்களின் கோரிக்கையை மிக சாதரணமாக கவனிக்குமிடத்து  சில விஷயங்கள் புலனாகின்றன.

 1.மத்ரஸா வக்ஃப் வாரியத்தில் ஸூஃபி பிரிவு முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு  எனத்தொடங்கி  இறுதியில் கல்வி,வேலைவாய்ப்பிலும் எங்களுக்குரிய பங்கைத்தர வேண்டும் என முடிப்பர். இதன் விளைவாக முஸ்லிம் சமூகத்திற்கான மொத்த இட ஒதுக்கீட்டு கோரிக்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி அதை முஸ்லிம் சமூகத்திற்கு எட்டாக்கனியாக மாற்றுவது.முஸ்லிம்களுக்குள்ளேயே கொள்கை அடிப்படையில் பல்வேறு பிளவுகளையும்,பிரிவுகளையும் உண்டாக்கி குருதி சிந்த வைப்பது. 

 2.காவல்துறையின் கைக்கூலிகளாக ஆட்காட்டிகளாக செயல்படுவது. 

3.அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான ஹிந்துத்வ ஃபாஸிஸ்டுகளும் அடிக்கடி கோரும் மத்ரஸாக்களை கண்காணிப்பது என்ற கோரிக்கையை இவர்கள் வழிமொழிந்திருக்கின்றனர்.
 இந்தியாவை பொருத்தவரை ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்றது தேவ்பந்த் உலமாக்கள்தான். 

அது மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களின் ஷரீஅத் பாதுகாப்பு ,சமூக உரிமைகள் தொடர்பான அரசின் சட்டங்கள் விஷயத்தில் தேவ்பந்திற்கும், ஜம்யிய்யத்துல் உலமாயே ஹிந்திற்கும் தலையாய பங்களிப்பு இருக்கின்றது.எனவே இவர்களை உற்பத்தி செய்யும் கலாசாலைகளை குறி வைத்து தனிமைப்படுத்தி ஒழிப்பது என்ற பெரிய எஜமானர்களின் இலக்கை நிறைவேற்றும் அம்புகளாக இந்த புதிய மஷாயிஹ் அணி எய்யப்பட்டிருக்கின்றது என்கிற அய்யம் பலமாகவே எழுகின்றது.


நிறைவாக……

எனவே நாம் நடக்கின்ற அனைத்து விஷயங்களின் பின்னணியில் உள்ள விஷமங்களையும்,சதிகளையும் கவனத்தில் கொள்ளாமல் முழுவேகத்துடன் எதிர்வினையாற்றுவதென்பது பல நேரங்களில் எதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும்,தற்கொலைப்பாதையாக மாறுவதற்கும் உள்ள வாய்ப்புகள் மிக அதிகம்.

சமூக சீர்திருத்தம்,ஒழுக்கவிழுமியப்பேணல்,ஏகாதிபத்திய சுரண்டல் எதிர்ப்பு விடயங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து எழும் குரல்களையும்,அல்லாஹ்வை அவனது தூய்மையான,உயர்வான குணங்களுடன் சமூகத்திற்கு அடையாளங்காட்டிடும் நன்முயற்சிகள் அனைத்தையும் வஹ்ஹாபிஸம் என முத்திரை குத்தி இழிவுபடுத்தி முஸ்லிம் சமூகத்திலிருந்தே அக்குரல்களை தனிமைப்படுத்துவது என்பது அய்ரோப்பியர்களுக்கு கைவந்த கலை. 

ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி ,ஸெய்யத் அஹ்மத் ஷஹீத் ரேபரேலி தொடங்கி இன்று வரை இம்முத்திரை குத்தும் வேலையை அவர்கள் திறம்பட செய்து வந்துள்ளனர்..இந்த குற்றச்சாட்டிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ளும் முயற்சியிலேயே செயல்வீரர்களான உலமாக்கள்,இயக்கங்களின் நல்ல பல செயல்திட்டங்கள் முடங்கிப்போக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்தியாவை பொருத்தவரை ஹிந்துத்வ அறிவு ஜீவிகள் தர்காக்களைகொண்டாடும் திரிபுக்குட்பட்ட ஸுஃபித்துவ மரபை போற்றுகின்றனர்.காரணம்  ஓரிறைக்கொள்கை அங்கே கலப்படமடையத்தொடங்குகின்றது.தூய ஓரிறைக்கொள்கையானது அவர்களின் சாதீய,சமூக மேலாதிக்கத்திற்கு சாவு மணியாக விளங்குகின்றது.

முஸ்லிம் சமூகத்தை மொத்தமாக இன அழித்தொழிப்பிற்கு ஆட்படுத்த முடியாது போகும்போது உள்வீட்டுக்கலகத்தை வஹ்ஹாபிஸம்xஸுஃபிசம் என்ற எதிர்சூத்திரம் மூலம் துவக்கி பின்னர் இறை நம்பிக்கையை பலகீனப்படுத்தி அழிக்கப்பார்க்கின்றனர்.

எனவே இந்த வலையில் நாம் மாட்டாமல் கவனமாக செயல்பட வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நுண்ணறிவையும்,விவேகத்தையும், பொறுமையையும் வழங்குவானாக! ஆமீன்!!

--------------------------

அக்டோ[பர்,  2011



No comments:

Post a Comment