உலகெங்கும் நடைமுறையிலிருக்கும்
பெரும் போக்கான ( main stream )
விஷயங்களில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அந்த சலிப்பு என்பது நீண்ட
காலமாக ஒரு விஷயத்திலேயே புழங்கியதால் ஏற்பட்டதல்ல. மாறாக அவை ஏற்படுத்தும் கேடு
பாடுகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுபட ஏதேனும் மாற்று வழியை தேடுகின்றனர்.
அதன் விடையாக
மாற்று பண்பாடு , மாற்று அரசியல் , மாற்று ஊடகம் , மாற்று சினிமா , மாற்று கலை
இலக்கியம் என நதி போல குமிழ் விட்டு பெருக்கெடுக்கின்றது. இதில் மாற்று முறை
மருத்துவமும் தப்பவில்லை.
அலோபதி உட்பட
அனைத்து மருத்துவ முறைகளும் இறைவன் மனித குலத்திற்கு அளித்த அருட் கொடைகள்தான்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இங்கு பிரச்சினை
என்பது தனிப்பட்ட மருத்துவர்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையை மட்டுமோ
சார்ந்தது அல்ல. மொத்தமாகவே அலோபதி மருத்துவமுறையை பயன்படுத்தி மக்களை சுரண்டும்
போக்கைத்தான் கேள்விக்கு உள்ளாக்க
வேண்டியுள்ளது.
ஏனெனில்
மற்றெந்த மருத்துவ முறையையும் விட அலோபதி
மருத்துவத்தை முறை கேடாக பயன்படுத்தி மனித குலத்திற்கு இழைக்கப்படும் தீங்கு
கூடுதல் என்பதால் அதுவே இங்கு பேசு பொருளாக மாறியுள்ளது. அலோபதியை
சிறைப்பிடித்திருக்கும் தீய வளையத்தைத்தான் நாம் குற்றஞ்சாட்டுகின்றோமோ தவிர
அலோபதி மருத்துவ முறையை பழிப்பது நோக்கமல்ல.
அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும்
பெரும்பாலான ஆங்கில மருத்துவர்களுக்கும் இடையே ஒரு புனிதமற்ற கூட்டு நிலவுகின்றது.
பல
மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் மருந்தின் உயர்ந்தபட்ச சில்லறை விற்பனை விலையிலிருந்து 25 % -- 50 % க்கும்
அதிகமான தரகு ( commission ) கொடுக்கின்றனர்.
இன்னும் சில
மருந்து நிறுவனங்கள் மகிழுந்து ( car ) , வீடு
, சுற்றுலா போக்கிடம் ( resort ) என மிக விலை உயர்ந்த அன்பளிப்புகளை மருத்துவர்களுக்கு
அள்ளிக்கொடுக்கின்றனர்.
மருந்து
நிறுவனங்களின் விற்பனை பேராளர்களின் ( medical rep ) நேரடி வாக்கு மூலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள்
இவை.
மருந்து
நிறுவனங்களின் கொள்ளைக்கு அரசின் சட்டங்களில் உள்ள ஓட்டையை காரணம் காட்டுவது
சரியல்ல. ஏனெனில் மருந்தை வாடிக்கையாளராகிய நோயாளியிடம் கொண்டு சேர்ப்பது
மருத்துவர்கள்தான்.
எனவே
மருத்துவர்கள் அனுமதிக்காமல் நோயாளிகளை சுரண்ட மருந்து மாஃபியாக்களால் ஒரு போதும்
முடியாது என்பது தெளிவு.
நோய் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பமான ஸ்கேனை
பரிந்துரைக்கும் மருத்துவருக்கும் ஸ்கேன் மையத்திலிருந்து தரகு கொடுக்கப்படுகின்றது.
ஈ .சி.ஜி , டாப்ளர் சோதனை அல்றா ஸவுண்ட்
சோதனை ........ உள்ளிட்ட எண்ணற்ற சோதனைகளுக்கும் இது பொருந்தும்.
{ எ.கா }
எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கான கட்டணம் : 8000/=. இதில் மருத்துவருக்கு அந்த மையம்
கொடுக்கும் தரகு 3000/=. ( இது சென்ற வருடத்து சென்னை மா நகர கட்டண நடப்பு )
இதில் நேரடி
அனுபவம் உண்டு.
இவை
மருத்துவரின் சேவைக்கு கொடுக்கப்படும்
சன்மானமா ? அல்லது கிடைத்த லாபத்தில் பங்கா ? அல்லது தொடர்ந்து பணம் கறக்கும் பலி
ஆடுகளை அனுப்பி வைப்பதற்கான ஊக்கத் தொகையா ?
சன்மானத்திலும்
, லாப பங்கிலும் , ஊக்கத்தொகையிலும் நிறைவடையாத பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ
மனையிலேயே மருந்துக்கடைகளை வைத்துள்ளனர். இதில் சில விதி விலக்குகளும் உண்டு.
தொடர்புடைய
மருத்துவர் எழுதித் தரும் மருந்தானது இந்த மருந்துக் கடையை விட்டால் வேறு எங்கும்
கிடைக்காது. இதன் நோக்கம் மருந்தின் முழு லாபமும் தங்களின் பைக்கே வந்து விட
வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன ?
ஆங்கில மருந்தின் வெளிப்படைத்தன்மை ,மூலக்கூறு ,
மூலப்பொருள் சேர்மான விவரம் ( composition
, formula ) , உற்பத்தி
& காலாவதி தேதி – போன்ற விஷயங்கள் மாற்று முறை மருந்துகளில் கடைப்பிடிக்கப்படுவது
இல்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.
.
சித்த
மருத்துவம் , ஆயூர் வேதம் போன்றவை இந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த வாழ்வியல்
அனுபவங்களிலிருந்து தோன்றி வளர்ந்தவை . அவை குடும்ப பாங்கானவை என்பதால் பொதுவாக
குற்றஞ்சாட்டப்படுவது போல் பெயர் , உற்பத்தி
விவரங்கள் இல்லாமல் சில மருத்துவர்களிடம் அவை கிடைக்கக்கூடும். பாட்டி
வைத்தியத்திற்கும் , வர்ம முறைக்கும் மூலக்கூற்றையும் , உற்பத்தி முறையையும் கேட்க
முடியுமா ?
ஆனால் ஹோமியோபதி
மருந்துகள் , ஹம்தர்த் தவா கானா , டாபர்
நிறுவனங்களின் யூனானி மருந்துகள் , கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் ஆயுர் வேத மருந்துகள்
,இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் கூட்டு மருந்துகள் போன்றவை அனைத்தும் வெளிப்படைத்தன்மையோடும் ,மூலக்கூறு & மூலப்பொருள் சேர்மான விவரம் ,
உற்பத்தி & காலாவதி தேதி போன்றவற்றுடன்தான் சந்தையில் கிடைக்கின்றது.
ஆங்கில
மருந்துகளின் வானாளாவிய விலையுடன் ஒப்பிடும்போது மாற்று முறை மருந்துகளின் விலை
அப்படி ஒன்றும் குடும்பத்தின் மொத்த பொருளாதாரத்தை தகர்க்கக் கூடியதாக இல்லை.
மருத்துவம்
பார்க்க வீட்டையும் ,வயலையும் , நகையையும் , சொத்துக்களையும் விற்று அழித்த பெருமை
, கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் காசு வாங்கிய அவலம் ஆங்கில மருத்துவத்தை
விட்டால் வேறு மருத்துவ முறைகளுக்கு உண்டா ?
ஆதாரத்தை
தேடுவதற்கு வேறு எங்கும் போக வேண்டாம். பெரிய சிறிய அலோபதி மருத்துவமனைகளின்
வாயிலில் காத்து கிடக்கும் கவலை தோய்ந்த முகங்களிடம் சென்று பேச்சு கொடுத்தாலே
போதும்.அருவி போல் கொட்டும். இதிலும்
நேரடி அனுபவம் உண்டு.
மருத்துவம் உரிய குணத்தை தராமல் போகும் நிலை
ஆங்கிலம் மருத்துவம் உள்ளிட்ட எல்லா மருத்துவ முறைகளுக்கும் சில சமயங்களில் ஏற்படுவதுண்டு.
ஆனால் ஆங்கில மருத்து முறையில் பெரும் பண விரையத்திற்குப் பின்னர்தான் மருத்துவம்
பலனளிக்காத செய்தியை நாம் உணரவே முடியும்.
ஏன் ! நோயாளியின் சடலத்தை தீவிர மருத்துவ
பிரிவில் வைத்து ஏமாற்றி பணம் பறித்த அலோபதி மருத்துவ மனைகளும் உண்டு.
இன்று உலகு
முழுக்க ஆங்கில மருத்துவம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது என்பதற்காகவே அதில் உள்ள கேடு பாடுகளை விமர்சிக்கக்கூடாது
என்றில்லை. மனித குலத்தின் மீதான கரிசனத்தின் அடிப்படையில்தான் எந்த மருத்துவ
முறையையும் அணுக வேண்டும் .
நமது தாய் நாட்டில் கல்வியை மட்டுமல்ல
மருத்துவத்தையும் எல்லா மக்களுக்கும்
இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்த பெருமை கிறிஸ்தவ
மிஷனரிகளைச் சாரும். இன்று கேரளத்தில் அமிர்தானந்த மயி அறக்கட்டளையின் சார்பில்
நலிந்த பிரிவினருக்கான உயர்ந்த மருத்துவ சேவையை வரை முறைக்குட்பட்ட கட்டணத்தில் அளிக்கின்றனர்.
வணிகத்தையும்
லாபத்தையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் மார்வாடி குஜராத்தி பனியா
சமூகமானது அனைத்து மக்களுக்குமான இலவச அலோபதி , ஆயூர் வேத மருத்துவ நிலையங்களை
நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு மார்வாடி ஆயுர் வேத வைத்திய சாலையின்
கட்டணம் வெறும் இரண்டு ரூபாய்களே .
நமதூரில் பொது
மக்களின் பணத்திலும் ஏராளமான மனித உழைப்பிலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட
மருத்துவமனையானது இன்று முடங்கிப் போயுள்ளது.
நம்மவர்கள் நடத்தும் பல மருத்துவமனைகள் சுறு
சுறுப்பாக இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் கட்டணம் என வரும்போது கொள்ளை அடிக்கும்
பிற மருத்துவ மனைகளுக்கும் இவற்றிற்கும் பெரும்பாலும் எந்த வேறுபாடும்
இருப்பதில்லை. அத்துடன் மருத்துவ சேவையிலும் கனிவும் பண்பும் அன்பும் ஆறுதலும்
தென்படுவதில்லை.
கிறிஸ்தவ ,
ஹிந்து மிஷனரி மருத்துவமனைகளின் அரசியலையும் பின்னணி நோக்கங்களையும் ஒதுக்கி
விட்டு பார்க்கும்போது அவர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கின்றது.
தற் காலத்தில்
அற்புதமான அலோபதி மருத்துவ முறையை பிடித்தாட்டும் கேடுகளின் கூட்டணி மிக வலுவானது.
----
மருந்துகளையும் மருத்துவ கருவிகளையும் பெரும் முதலீட்டிலும் கொள்ளை லாப நோக்கிலும்
தயாரிக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள்
__ பொது சுகாதார முறையின் கீழ் வரும் அரசு
மருத்துவ மனைகளையும் சேவைகளையும் முடக்கிப்போடத் துடிக்கும் உலகமயமாக்கமும் அதன்
அடியொற்றி நடக்கும் இந்திய அரசின் கொள்கைகளும்
---- அலோபதி மருத்துவ
கல்வியை பணம் காய்க்கும் மரமாக பார்க்கும் உள்ளூர் அரசியல்வாதிகள்
___ மருத்துவ
கல்லூரிகளை கொழுத்த வணிகமாக மாற்றியுள்ள கருப்பு பண முதலைகள்
-----
இயந்திரமயமான , நுகர்வு வெறி நிறைந்த மக்களின் மன நிலையும் ,
வாழ்க்கை முறையும்
----
மருத்துவம் என்பது சேவைத்துறைதான் என்பதை மறந்த மருத்துவர்கள்
என பல
கட்டங்களுடைய சிக்கல் இது.
ஏதாவது ஒரு
இடத்தில் வேகத்தடை போட்டாக வேண்டும்.
தீர்வை
அரசுகளிடமும் அரசியல் வாதிகளிடமும் கறுப்பு முதலைகளிடமும் பன்னாட்டு பெரு வணிக
நிறுவனங்களிடமும் எதிர்பார்ப்பதை விட மக்களிடமிருந்தும் மருத்துவர்களிடமிருந்தும்
தொடங்குவதுதான் எளிதானது.
தாயும்
மருத்துவரும் இறைவனின் பேராளர்கள் என சொல்வதுண்டு.
அதனால்தான்
நமதூரைச் சார்ந்த குழந்தைகள் நல அலோபதி மருத்துவர். காலஞ்சென்ற ஆனந்தன் அவர்கள் இன்றளவும்
நினைவு கூரப்படுகின்றார்.
மதம் , சாதி ,
தான் பயின்ற மருத்துவ முறை போன்றவற்றை கடந்த மனித நேயர் அவர்.
அவ்வளவு
எளிதில் ஊசி போட சம்மதிக்க மாட்டார். 10 , 20 ,25 பைசாக்கள் விலையுள்ள மாத்திரைகளையே
பரிந்துரைப்பார். நோயாளிகளோடு உடன் வருபவர்களின் நெருக்குதலுக்கு ஆட்படவே
மாட்டார்.
மாற்றங்களை நாடும் இன்றைய சூழலில் நமக்கு தேவை ஆனந்தன்களும் மக்கள்
மயப்பட்ட மாற்று மருத்துவ வழிகளும் வலுப்படுத்தப்பட்ட பொது சுகாதார முறைகளுமே !!
15/04/2013
No comments:
Post a Comment