Thursday 2 January 2020

மருத்துவமனையா ? மரணமனையா ?




தனது கருணையை வினியோகிப்பதற்காக இறைவன் இரண்டு பிரதி நிதிகளை இந்த உலகிற்கு அனுப்பினான் : அதில் ஒருவர் தாய். மற்றொருவர் மருத்துவர்.  

தூத்துக்குடியில் உள்ள  மருத்துவ மனை ஒன்றில் எனது சகோதரியை சேர்ப்பதற்காக  வண்டியில் சென்றோம். வண்டியிலிருந்து பெட்டி படுக்கைகளை கீழே இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் நெஞ்சை துளைப்பது போன்ற ஓவென்று மரண ஓலம் ஒன்று வெடித்து மருத்துவமனை முழுக்க சிதறியது.


 உயிரற்ற உடல் ஒன்று அந்த மருத்துவ மனையின் கழிப்பறையிலிருந்து வெளியே எடுக்கப்படுகின்றது. இறந்தவரின் மனைவிதான் ஓவென்று கதறியவர்
இதய நோய்க்காக உள் நோயாளியாய் தங்கி மருத்துவம் எடுத்து கொண்ட ஒருவர் மருத்துவம் முடிந்து வீடு திரும்ப இருக்கையில் மருத்துவ மனையின் கழிப்பறைக்குள் சென்றிருக்கின்றார். சென்றவருக்கு அங்கேயே மாரடைப்பு வந்து உயிர் பிரிந்து விட்டது. 

சரியாக பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள்  நடந்த நிகழ்வு இது.
 மருத்துவ மனையின் நுழைவாயிலிலியே நடந்த இந்த அமங்கல நிகழ்வினால் நாங்கள் திகைத்தோம். கண் முன்னர் நடந்த இறப்பும் ஓலமும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என  எங்களை கேட்பது போல் இருந்தது. நாங்கள் உள் நோயாளியாய் சேர்ப்பதற்காய் கொண்டு வந்த எங்கள் சகோதரியின் உடல் நிலை நெருக்கடி கட்டத்தில் இருந்தது.  வேறு வழியின்றி அதே மருத்துவ மனையில்தான் அவரை சேர்த்தோம்.

சகோதரிக்கு சிகிச்சை அளித்து வந்த தூத்துக்குடியைச்சார்ந்த நுரையீரல் நிபுணரின்  வலுவான பரிந்துரையின் பேரில்தான் இந்த மருத்துவமனைக்கு நாங்கள் வர வேண்டியதாயிற்று.

 தீவிர மருத்துவ பிரிவில் எங்கள் சகோதரி சேர்க்கப்பட்டார்.அவருக்கு நுரையீரலில் பாதிப்பு.  நாளடைவில் அது இதயத்தின் செயல்பாட்டையும் பாதித்தது . அதன் விளைவாக கால்கள் வீங்கத்தொடங்கி விட்டிருந்தன.
அவரை தீவிர மருத்துவ பிரிவில் சேர்த்து விட்டு குடும்பத்தாராகிய நாங்கள் மருத்துமனையில் அறை எடுத்து தங்கினோம். அந்த அறையின் கதவில் ATTENDANT ROOM என பவிசாக எழுதி ஒட்டியிருந்தது.

அறை வாடகை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்கள். ஆனால் மிகவும் இடுங்கிய காற்றோட்டம் இல்லாத அறை. கொண்டு வந்த அத்தியாவசிய பொருட்களை வைப்பதற்கான எந்த வசதியும் இல்லை. தீவிர மருத்துவ பிரிவானது இரண்டாம் மாடியில் இருந்தது. ஆனால் எங்கள் அறையோ முதல் மாடியில் இருந்தது. எல்லா அடிப்படை வசதிகளிலிருந்தும் இந்த அறை  தொலைவில் இருந்தது . ஒவ்வொரு தேவைக்கும் அலைய வேண்டியிருந்தது. இரவில் கதவை திறந்தால் வாடகை ஏதும் தராமலேயே கொசுக்கள் இந்த அறைக்கு குடும்ப சகிதம் வருகை தரும்.

மருத்துவமனையில் சேர்த்த முதல் நாள் சகோதரியின் உடல் நிலை தேறுவது போல் அறிகுறிகள் தென்பட்டன. மகிழ்ச்சியாக இருந்தது.
அவருக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்த மருத்துவர் அடுத்த நாளே பொங்கல் விடுமுறை என்று வெளியே சென்று விட்டார். இத்தனைக்கும் அந்த மருத்துவரின் மனைவிக்கு சொந்தமான மருத்துவமனை அது.
நோயாளியான சகோதரி செவிலியர்களின்( நர்ஸ் ) பொறுப்பில் விடப்பட்டார். 

அந்த செவிலியரிடம் எந்த கருணையும் எஞ்சி இருக்கவில்லை. நோயாளியின் உறவினர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தனர். தீவிர மருத்துவ பிரிவின் பக்கமே நெருங்க விடாமல் விரட்டி அடித்து கொண்டிருந்தனர்.

நோயாளிக்கு கொடுக்கச்சொல்லி  செவிலியரின் கையில் உணவு பாத்திரத்தை கொடுத்து விட்டு வருவோம். நீண்ட நேரம் கழித்து நாங்கள் நோயாளியை பார்க்க போகும்போது அந்த உணவு பாத்திரம் அப்படியே இருக்கும்.இது பல தடவை நடந்தது. அந்த மருத்துவ மனையை விட்டு வெளியேரும் வரை வேறு வழியின்றி நாங்கள்தான் நோயாளிக்கு உணவை ஊட்டினோம்.

 இவர்களின் இந்த இரக்கமற்ற அலட்சிய  நடத்தைக்கு காரணம் என்ன ? மருத்துவ மனை நிர்வாகம் அவர்களுக்கு கொடுக்கும் அற்ப சொற்ப ஊதியமா ? அல்லது மண்ணின் மணமா? எது என தீர்மானிக்க முடியவில்லை.
 தங்கும் மருத்துவர் ( ரெசிடெண்டியல் மெடிக்கல் ஆஃபீஸர் ) ஒருவரும் அங்கிருந்தார். அவரோ ஒரு பயிற்சி மருத்துவர். அவருக்கு தமிழும் சரியாக தெரியாது. அவருடைய தாய் மொழி ஹிந்தி. நாங்கள் ஒன்று கேட்க அவர் ஏதோ ஒன்று சொல்ல முயற்சித்தார். யாரிடமும் கோபப்படக்கூடிய சூழ் நிலையில் நாங்கள் இல்லை.

நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்தின் பட்டியலை அவ்வப்போது தந்து கொண்டே இருந்தனர். அந்த பட்டியலில் செவிலியருக்கான முக மூடியும் கையுறையும் தலா இரு சோடிகள் எழுதப்பட்டிருக்கும். இது தினசரி நடந்தது.
இத்தனைக்கும் எங்கள் சகோதரியுடன் சேர்த்து அந்த தீவிர மருத்துவ பிரிவில் பல நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு இருந்ததோ ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள்தான். அவர்களுக்கு இத்தனை முகமூடிகளும் கையுறைகளும் தேவையில்லை. மேலதிகமானவற்றை கடைந்து கஞ்சியாக்கி குடித்தார்களா அல்லது அவை மருத்துவமனையின் மருந்து விற்பனை கடைக்கே மீண்டும் அனுப்பினார்களா ? யாருக்கு தெரியும் ?

ஒன்றரை நாள் இப்படியாக கழிந்தது. மேலே சொன்ன குறைபாடுகளை நாங்கள் பெரியதாக நினைக்கவில்லை. நோயாளி தேறி விடுவார். ஓரிரு நாளில் நாமும் வீட்டிற்கு சென்று விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் நாங்களும் சும்மா இருந்து விட்டோம்.

மறு நாள் முக்கிய மருத்துவர் வந்து பார்த்து விட்டு நோயாளி உடலானது மருத்துவத்திற்கு மிக குறைவாகவே ஒத்துழைக்கின்றது . நீர் இறங்கவில்லை என ஒற்றை வரியில் கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.ஆதங்கத்திலும் தவிப்பிலும் இருந்த எங்களின் மன நிலை மேலும் கலங்கியது.

மருத்துவமனையில் சேர்க்கும் வரை தெளிவான நினைவுடன் இருந்தார்  சகோதரி. இதய செயல்பாட்டு குறைவினால் ஏற்பட்ட கால் வீக்கத்தை தவிர வேறு பிரச்சினைகள் அவரின் உடலில் இல்லை.

ஆனால் மருந்துகள் உடலில் ஏறத்தொடங்கிய இரண்டாம் நாளன்று அவரின் தன்னுணர்வில் தடுமாற்றம் ஏற்பட்டது. கேட்கும் திறனும் குறைந்தது. சிறு நீரகமும் செயலிழந்தது.

முக்கிய மருத்துவரிடம் விளக்கம் கேட்கலாம் என காத்திருந்தோம். ஆனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. செவிலியர்களிடமும் நெருங்கவே முடியவில்லை. பசித்திருக்கும் காவல் நாய் போல பாய்ந்தனர்.

முக்கிய மருத்துவர் எப்போது வருவார் என மருத்துவ மனை பணியாளர்களிடம் கேட்டால் ஆளுக்கொரு நேரத்தை சொன்னார்கள். இதற்கிடையில் எங்கிருந்தோ மாய வேகத்தில் வந்த மருத்துவர் எங்களின் நோயாளியை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பார்த்து விட்டு வெளியே வந்தார். காத்திருந்த எங்களை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அவர் பாட்டிற்கு வேகமாக வெளியில் சென்று விட்டார்.

இதை இப்படி விட்டால் சரி வராது என முடிவெடுத்து மருத்துவர் வரும் வழியிலேயே நாங்கள் மாலையில் இருந்து இரவு வரை மணிக்கணக்கில் காத்து கிடந்தோம்.

ஒரு வழியாக மருத்துவர் வந்தார். எங்களை கடந்து சென்றார். ஒன்றும் சொல்லவில்லை. வழியில் வைத்து கேட்க வேண்டாம். அவரின் தனியறையில் சென்று கேட்கலாம் என முயற்சித்தோம். ஆனால் பணியிலுள்ள செவிலியர் எங்களை விடவில்லை. மருத்துவர் புற நோயாளிகளை பார்த்து விட்டுதான் தீவிர மருத்துவ பிரிவிற்கு செல்வார் என கூறினர்.

புற நோயாளிகளை மிக நிதானமாக கவனித்து விட்டு ஒரு வழியாக வெளியே வந்தார் மருத்துவர். வந்தவர் நேராக தீவிர மருத்துவ பிரிவிற்கு சென்றார். நாங்களும் அவரின் பின்னாடியே சென்று வெளியில் காத்திருந்தோம்.போன வேகத்திலேயே வெளியே வந்து விட்டார்.

 வேகமாக எங்களை கடந்து செல்ல முயற்சித்தவரை நாங்கள் வழி மறித்தோம். நான் கொஞ்ச நேரத்தில் உங்களை கூப்பிடுகின்றேன் எனக்கூறி விட்டு தனது தனியறைக்குள் மீண்டும் சென்று விட்டார்.

எஞ்சியிருந்த புற நோயாளிகளயும் பார்த்து முடித்த பிறகு எங்களில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்தார்.

“நோயாளிக்கு மருத்துவம் பலனளிக்க மறுக்கின்றது. எனவே அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்”  என குளிர்ந்த காற்று நிறைந்த அந்த அறையில் மெதுவான குரலில் சொல்லி முடித்தார்.

அந்த சொற்களை கேட்ட நொடியிலிருந்து எங்கள் அனைவரின் மனத்துணிவு ,நிம்மதி அனைத்தும் மாடியிலிருந்து கொட்டப்படும் மண் போல பொல பொல என உதிர்ந்து விட்டது. சும்மா பேசிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தவளை கொண்டு போய் மருத்துவம் என்ற பெயரில் படித்த நாகரீக கொலைகாரர்களிடம் ஒப்படைத்து விட்டோமே ? என்ற குற்ற உணர்வு எங்களை வேட்டையாடியது. அப்போது நாங்கள் இருந்த  செத்த மன நிலையில் எந்த விளக்கத்தையும் யாரிடமும் கேட்க இயலவில்லை.

சகோதரியின் உடல் நிலையை அந்த முக்கிய மருத்துவர் ஒரு நாளைக்கு முன்னதாகவே எங்களிடம் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். மேல் மருத்துவத்தைப்பற்றி உடனடியாக முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அந்த மருத்துவ கொலையாளி தனது மனதில் வேறு ஒரு கணக்கை போட்டு வைத்திருந்ததை எங்களால் உணர முடியாமலே போய் விட்டது.

எதிரியை பணம் வாங்கிக்கொண்டு கொல்லும் கூலிப்படைகளை பற்றி நமக்கு தெரியும். ஆனால் நம்மைக்கொல்லவே நம்மிடம் பணம் வாங்கும் நவீன கூலிப்படைக்கு இந்த மருத்துவமனையை விட வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா ?

உயிருக்கு போராடும் சகோதரியை நாகர்கோவிலிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். போகும் முன்னர் மருத்துவ கட்டண கணக்கை தீர்க்க வேண்டுமே ?

எனவே மருத்துவ கட்டண விவரப்பட்டியலை கொண்டு வாருங்கள் என மருத்துவமனை வரவேற்பாளரிடம் கேட்டோம். நொடிப்பொழுதில் விவரப்பட்டியல் எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. வழமைபோலவே கட்டணங்களை வைத்து தீட்டியிருந்தார்கள். விவரப்பட்டியலை வாசித்து பார்த்ததில் செய்யாத மருத்துவத்திற்கும் சேர்த்து கட்டணம் தீட்டப்பட்டிருந்தது. 

இது என்ன ? என்று நாங்கள் கேட்கவும் சுதாரித்துக்கொண்டார்கள்.

சென்னையில் ஓடும் புற நகர் மின் தொடர்வண்டியின் பாதையில் பலர் அடிபட்டு விழுவார்கள். அடிபட்டவர்கள்  கடுமையான காயங்களுடன் தன்னுணர்வு இழந்து கிடப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள். அவர்கள் அடிபட்டு விழுவதற்காகவே காத்திருந்தது போல சிலர் ஓடோடி வருவர். விழுந்து கிடக்கும் ஆளின் கையிலிருக்கும் கடிகாரம் ,செல் பேசி,  சட்டைப்பையில் இருக்கும் பணம் ஆகியவற்றை வேக வேகமாக சுருட்டிகொள்வார்கள்..

பாதையில் அடிபட்டு கிடப்பவரிடம் திருடும் கொடூரமான போக்கிரிகளுக்கும் இந்த 24 மணி நேர கொலை கொள்ளை மருத்துவமனைகளுக்கும் என்ன வேறுபாடு ?

தூத்துக்குடியில் 4 நாட்கள் நாகர்கோவில் மருத்துவமனையில் 3 நாட்கள் ஆக மொத்தம் 07 நாட்கள் உயிரை தக்க வைப்பதற்காக வலி மிகுந்த போராட்டத்தை நடத்தி இறுதியில் தோற்று விட்டாள் என் சகோதரி.

மற்ற கட்டுரைகளை எழுதுவது போல் இந்த கட்டுரையை எளிதாக நான் எழுதிட இயலவில்லை. துயர் மிகுந்த அந்த 07 நாட்களுக்குள்  நிறைந்திருக்கின்ற ஒவ்வொரு கணமும் இந்த கட்டுரையை எழுதும்போது என்னுள் மீண்டும் நிகழ்கின்றது.

வாழ்வும் இறப்பும் வல்லவன் விதித்தபடிதான் நடக்கும். ஆனால்  இயற்கை சுழற்றும் இந்த இரு முனை பிரம்பை மருத்துவக்கொலையாளிகள் கன்னக்கோலாக  மாற்றுவதுதான் கொடுமையானது.

நமது உடல் , நமது நோய் , தகுந்த மருத்துவ முறை , திறமையும் மனித நேயமும் நிறைந்த மருத்துவர்கள் குறித்த அறிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நமதூரில் இயங்கும் மருத்துவ தன்னார்வ நிறுவனங்களிடம் இது பற்றிய பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இதன் மூலம் விவரமறியாத எளிய மக்கள் சாத்தானின் சாவுத்துறை பிரதி நிதிகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

என் சகோதரி வாழ்வின் இறுதித்துளி வரை தன் நோயுடன் நடத்திய போராட்டமானது ஆங்கில மருத்துவ முறை , மாற்று முறை மருத்துவம் பற்றிய எனக்கிருந்த  மனப்பதிவை மேலும் உறுதியாக்கியுள்ளது.

அது பற்றிய கருத்துக்களுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
உயிருக்கு நெருக்கடியான கட்டம், நோய் முற்றிய நிலை ,விபத்து , அறுவை மருத்துவம் போன்றவற்றிற்கு அலோபதிதான் சிறந்த மருத்துவ முறையாகும்.
ஆனால் நமக்கு வரும் எல்லா நோய்களுக்கும் ஆங்கில அலோபதி மருத்துவத்தை மட்டுமே நாம் நாடுவது என்பது சரியான அணுகு முறை இல்லை.  நோய்களை அது உடனடியாக தீர்க்கின்றது என்கின்ற வாதத்திலும் முழு உண்மை கிடையாது.  அது சர்வ ரோக நிவாரணியும் இல்லை.

 ஆங்கில அலோபதி மருத்துவர்களில் மனித நேய மிக்கவர்கள் இருக்கலாம். ஆனால் இந்த மருத்துவ முறை மிக அதிகமான பணச்செலவு பிடிக்கக்கூடியது ஏழை எளியவருக்கு எட்டாதது . இதற்காக சொத்தையும் நகையையும் விற்றவர்கள் கடன் பட்டவர்கள் ஏராளம் . இவ்வளவு பணத்தை இழந்த பிறகும் பெரும்பாலானோருக்கு முடிவு சுபமாக அமைந்ததில்லை. அத்துடன் இவை வேண்டாத பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகும். இது ஆங்கில அலோபதி மருத்துவர்களே பல முறை ஒத்துக்கொண்ட விஷயமாகும்.
பெரும்பாலான சமயங்களில் நோயை விட இந்த மருத்து முறை கொடுமையானதாக இருக்கின்றது.

எனவே நாம் மாற்றுமுறை மருத்துங்களையும் நாட வேண்டும். மாற்றுமுறை மருத்துவமானது செலவு குறைந்தது.அதன் மருந்துகளும் எளிதில் கிடைக்கக்கூடியது. சிறிய பெரிய பக்க விளைவுகள் இல்லாதது. நோயை முற்ற விட்டு ஆங்கில மருத்துவத்தின் கூரிய பற்களுக்குள் சிக்கி அரைபடுவதை விட நோயின் தொடக்கத்திலேயே மாற்றுமுறை மருத்துவத்தை அணுகி விடுவதுதான் சிறந்த வழிமுறையாகும்.

சேவை உள்ளமும் அர்ப்பணிப்பும் மிக்க மைக்ரோ காயல் உள்ளிட்ட மருத்துவ தொண்டு நிறுவனங்கள் இந்த விஷயங்களை கையில் எடுத்தால் நமதூரின் மருத்துவ துயருக்கு நல்லதொரு  தீர்வு பிறக்கும் இன்ஷா அல்லாஹ் !

03/02/2013

            

No comments:

Post a Comment