Thursday, 2 January 2020

போர்வையற்ற குருவிகள்






வெளி நாட்டு பணி ஓட்டத்திலிருந்து மூன்று மாதம் விலகி சென்னையில் நிற்க முடிவு பண்ணியுள்ளேன் என்று சொன்ன நண்பர் ஃபழ்ல் இஸ்மாயீல் , அந்த கால கட்டத்தில் அய்ந்து நாட்கள் உதகைக்கு போய் நண்பர்களுடன் தங்கும் தனது விருப்பத்தையும் சொன்னார்.

எல்லோரும் போய் பார்க்கும் தேய்ந்து போன சுற்றுலா இடங்களில் நாம் நம்மை காணமலடிக்கக் கூடாது என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொண்டோம்.
அவர் சொன்ன பத்து நாட்களுக்குள்ளேயே கிளம்பியாகி விட்டது.


அவர் சென்னையிலிருந்து நேராக கோவை வந்து விடுவதாகச் சொன்னார். நான் காயல்பட்டினத்தில் இருந்ததால்  தூத்துக்குடியிலிருந்து செல்லும் கோவை இணைப்பு தொடர் வண்டியில் ஏறினேன். இந்த வண்டி நாகர்கோவில் – கோவை சேவைத்தொடரோடு வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இணைக்கவும் / பிரிக்கவும் படுகின்றது.

வண்டிக்குள் ஏறியவுடன் குழாயை திறந்தேன். அவ்வளவு கரிப்பு நீர். உப்பும் இரும்பின் துருவும் கலந்த தாது மணம். தூத்துக்குடியில் என்ன கிடைக்கின்றதோ அதைத்தானே ஏற்ற முடியும் என மனது சமாதானக் கொடி யை பறக்க விட்டது.

நள்ளிரவில் கண் முழித்த போது என் உடல் படுக்கையில் அங்குமிங்கும் உருட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பேய் ஆட்டும் தொட்டில் போல தண்டவாளத்தின் குறுக்காக பெட்டி அலம்பிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு பின்னணி இசையாக காதை குத்தும் கிறீச்சொலி.

மிக மோசமாக பராமரிக்கப்படும் தொடர்வண்டி பெட்டிகள். வண்டியின் தூய்மை , நீர் நிரப்புதல் , சரியாக மூடாத சாளரக் கண்ணாடிகள் , தடுப்புகள் , எலி பெருச்சாளி வாசம் என எல்லாவற்றிலுமே சொல்லிக் கொள்ளும்படியான குறைபாடுகள் பெரும்பாலான தொடர்வண்டிகளில் காணப்படுகின்றன.

எனக்கு முன்னரே வந்து சேர்ந்து விட்டிருந்த நண்பர் ஃபழ்ல் இஸ்மாயீலும் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோத்தகிரி செல்வதற்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தோம்.
வானூர்தி நிலையத்தில் பராமரிக்கப்படும் தூய்மைக்கு அடுத்த படியாக எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த பேருந்து நிலையத்தில் தூய்மை பேணப்படுகின்றது. பயணிகள் பொறுப்பில்லாமல் தூக்கி எறியும் குடி நீர் குடுவைகள் வலையடித்த நகரும் பெட்டிக்குள் சேகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தன. இதை வேறெங்கும் கண்டதில்லை. பயணிகளுக்கு தூய்மைப்படுத்தப்பட்ட இலவச குடிநீர் வழங்குமிடமும் அதன் சுற்றுப்புறமும் மிகத்தூய்மையாக காணப்பட்டன. வெற்றிலைச்சாறு துப்பல்களோ , உணவு பருக்கைகளோ , கழிவு காகிதங்களோ என எந்த அழுக்கும், இல்லை.

கோவையிலிருந்து சரியாக 2:45 மணி நேரத்தில் கோத்தகிரிக்கு பேருந்து வந்து சேர்ந்தது. உதகைக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் பயணிக்கும் பேருந்துகளுக்கு முன்பக்க வாசல் கிடையாது. கேட்டுப் பார்த்த போது அது ஏனென்று யாருக்கும் தெரியவில்லை.

நாங்கள் வந்த பேருந்தின் ஓட்டுனர் பயண நேரம் முழுக்க எதிரே தென்படும் மனிதர்களுக்கும் இரு சக்கர ஊர்தி ஓட்டிகளுக்கும் மலை கிராம வாசிகள் நிறைய பேருக்கும் கைகாட்டிக்கொண்டே சென்றார்.

பல சமயங்களில் எதிரே வரும் நாற்சக்கர ஊர்திகளின் ஓட்டுனர்கள் கூட இவருக்கு முகப்பு விளக்கை போட்டு அணைத்து வழிப்புன்னகை ஒன்றை கொடுத்துக் கொண்டே இருந்தனர். அத்தனை அறிமுகம்.

அவர் பயணப்பாதையையும் தொலைவையும் மனித மனங்களையும் முகங்களையும் கொண்டு நிரப்புவர் போலும்.

ஒரு வழியாக கோத்தகிரி வந்து சேர்ந்த போது நண்பகல் ஆகிவிட்டது.
யூகலிப்டஸ் மணமும் இளநீல ஆகாய வெளிச்சமும் குளிரும் கழுத்திலிருந்து கால் வரை போர்த்திய பதுகர் இன பழங்குடியினருமாக கோத்தகிரி தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

பேருந்து நிலையத்தில் இருந்த மலையாளி உணவகத்தில் கட்டஞ்சாயாவிற்கு சொல்லி விட்டு அமர்ந்தோம். பின்னாம் புறத்திலிருந்து  எதிர்பாராமல் கிடைக்கும் முதல் தழுவல் போல இரும்பு நாற்காலியின் கால்களுக்கிடையே கிடந்த குளிரானது ஊர்ந்து உடலில் பரவியது.  நீ எனக்குள் வந்து விட்டாய் என நெருக்கமான செய்தி ஒன்றை கூறியது.

கிட்டதட்ட ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு உதகை செல்லும் பேருந்து வந்து சேர்ந்தது.  நேர அட்டவணையில் இருபது நிமிடத்திற்கு ஒரு வண்டி என இருந்தது. தீபாவளி சமயமாக இருந்ததால் நெரிசலை சமாளிக்க இங்குள்ள பேருந்துகளை சம தளத்திற்கு கொண்டு சென்று சிறப்பு பேருந்துகளாக இயக்கிக் கொண்டிருந்தனர். இதனால் ஒவ்வொரு பேருந்திலும் பல மடங்கு கூட்டம்.
அரை மணி நேர பயணத்திற்கு பிறகு பேரார் வந்து சேர்ந்தோம்.

 கோத்தகிரி – உதகை செல்லும் வழியில் கிட்டதட்ட நடு வழியில் இருக்கின்றது பேரார்.சிறிய மலைக்கிராமம். நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையின் முடிவில் இரண்டு மூன்று கட்டிடங்கள் இருந்தன.
கட்டிடங்களுக்கு அப்பால் இயற்கையானது தனது முடிவற்ற சாத்தியங்களுக்கான வாயிலை நம் முன் படீரென திறக்கின்றது.

நண்பர் ஃபழ்ல் இஸ்மாயீலின் நண்பர்களான அமானுல்லாஹ்விற்கும் அவரது மூத்த அண்ணன் ரஹ்மத்துல்லாஹ்விற்கும் சொந்தமான கட்டிடங்கள் அவை. அவற்றின் முன்பு வெள்ளைப்பூண்டு அம்பாரமாக குவிந்து கிடந்தது.

 பனி பொழிய பொழிய இந்த வகை வெள்ளைப்பூண்டுகளின் காரம் ஆழ்ந்த சுவை மிக்கதாக இருக்கின்றது. அன்று மதியம் அமானுல்லாஹ் எங்களுக்காக வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த மதிய உணவின் குழம்புகளில் காரச்சுவைக்காக தனியாக மசாலாவோ வற்றலோ சேர்க்கப்படவில்லை. பூண்டின் காரமே போதுமானதாக இருந்தது.

இந்த பருவத்தில் வெள்ளைப்பூண்டிற்கான தேவை கூடுதலாக இருப்பதால் விளைந்தவற்றை மறு நடுகைக்காக  விதைகளாக சேமித்திருப்பதாகவும் சொன்னார் ரஹ்மத்துல்லாஹ்.

வெள்ளைப்பூண்டுடன் சிவப்பு முள்ளங்கி , முட்டைக்கோஸும் பயிரிடப்பட்டிருந்தன.

ரஹ்மத்துல்லாஹ்வின்  குடும்பம் மிகப் பெரியது.  நிறைய பெரியப்பாக்கள் சித்தப்பாக்கள்  என அவர்கள் வசம் முன்னர் பல நூறு ஏக்கர்கள் இருந்திருக்கின்றது. குடும்பங்கள் விரிந்து செல்ல அவை பல கை மாறி இன்று இவர் வசம் இருப்பது என்னவோ 15 ஏக்கர்கள்தான்.

ரஹ்மத்துல்லாஹ்வின் தந்தை வழி பாட்டனின் பிறப்பிடம் திருப்பூர். பிழைப்பு தேடி 1910 வாக்கில் இங்கு குடியேறியுள்ளனர்.

விவசாயத்திற்கென நிலங்களை வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து குதிரையில் இங்கு வந்த அவர் குதிரையை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விட்டு அடர் வனத்திற்குள் சென்று விட்டு சில மணி நேரங்கழித்து திரும்ப வந்திருக்கின்றார்.

நின்றிருந்த குதிரையின் கழுத்தும் வயிறும் சிறுத்தையினால் குதறப்பட்டுக் கிடந்திருக்கின்றது. அந்த அளவு உயிரிகள் நிறைந்த இந்த காட்டுப்பகுதியில் இன்று எஞ்சியிருப்பது காட்டெருமை , காட்டுப்பன்றி , கரடி , மர நாய் , யானை போன்ற உயிரிகள்தான். சிறுத்தையெல்லாம் எப்போதாவது ஒரு தடவை வந்து போகுமாம் .

மலையும் மேகங்களும் அடர்ந்த சோலைக்காடுகளும் அதனுள் வாழ்ந்திருக்கும் எண்ணற்ற பன்மய உயிரிகளும் , ஆதிவாசிகளும் என இயல்பாக இயங்கிக் கொண்டிருந்த நீலகிரியின் மலைகள் வெள்ளையரின் வருகைக்கு பின்னரே சிதைவுறத் தொடங்கின.

இந்திய சமவெளிகளின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க இங்கிலாந்தின் தட்ப வெப்ப நிலை தேவைப்பட்ட வெள்ளையர்களுக்கு மஞ்சு கொஞ்சும் நீலகிரியின் மலைகள் கை கொடுத்தன.

மனிதனும் ஊர்திகளும் செல்வதற்கான முதல் தடம் என்று வெட்டப்பட்டதோ அன்றே நீலகிரி மலைகள் தங்களின் இயல்பை இழக்கத் தொடங்கின.
உருளைக்கிழங்கு , தேயிலை , காஃபி , யூகலிப்டஸ் , இஞ்சி , ஏலம் , என்பன பயிரிடப்படுகின்றன. இவைகளுக்கான நீர் வளமானது மழையையும் சோலைக்காட்டையும் ஊற்று நீர் கிணறுகளையும் நம்பியே இருக்கின்றது.

வான் மழை பெய்யும்போது அதை தன்னுள் இழுத்து உறிஞ்சிவைத்துக் கொள்ளும் சோலைக்காடுகள் , மலைக்குட்டைகள் , நீரோடைகளின் விளைவாகத்தான் நீலகிரி மலையிருந்து  பைக்காரா , சிகூர் , பவானியாறு , பாண்டியாறு , சிறுவாணி , போன்ற நதிகள் சமவெளிக்கு உயிர் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

பன்னூறாண்டுகள் பழைமையான உச்சி காண முடியா நெட்டை மரங்களின் விரல்கள் மழை முகில்களில் வருடும்போது மடுவிலிருந்து பால் இறக்கித் தரும் பசு போல மேகக் கூட்டம்  மழையை பொழிந்து தள்ளுகின்றது.

மலையின் சோலைக்காட்டு பரப்பை அழித்து அவை வேளாண் நிலப்பரப்புகளாகவும் பச்சை நிற பாலை வெளிகளாகவும் மாற்றப்படுப்போது நிகழும் பேரழிவுகளுக்கு பொறுப்பாளிகள் யார் ?

மலையென்பது அங்கு வசிக்கும் பன்மய உயிரிகளுக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே உரித்தானது. அவர்களுக்கே மட்டுமே அந்த மலையை சேதாரமில்லாமல் நுகரவும் கையாளவும் தெரியும்.

மலைகளின் இருப்பை உயிர் இயக்கத்திற்கான அதன் பங்களிப்பை புரிந்து கொள்ள இயலாத சமவெளி மக்கள் அங்கு போய் குடியேருவது என்பது நலமான உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழைவதைப்போலத்தான். சமவெளி மக்களுக்கு நுகர்ந்து எறிய மட்டுமே தெரியும்.

வெள்ளையர்கள் தொடங்கி வைத்த இந்த பொருந்தாக் குடியேற்றத்தின் இன்றைய விளைவை ஒரு பறவைப் பார்வையில் பார்க்க வேண்டுமென்றால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை தொடர் வண்டியில் ஏறி பயணித்தால் போதும்.

 உதகையிலிருந்து  குன்னூர் வரை படர் தேமல் போல பச்சை வெளிகளை ஆகிரமித்துள்ள கட்டிட வெள்ளைகள். எங்கும் போக வழியின்றி அங்கேயே அலையடித்துக் கிடக்கும் ஞெகிழி கழிவுகளும் குப்பைகளும் பசுமை பட்டறிவையே உங்களின் சுவை உணர்விலிருந்து துடைத்தெறிந்து விடும்.
இது அப்படியே தொடரும் பொழுது நீலகிரி மலைக்கும் சமவெளிக்கும் உள்ள வேறுபாடு வெறும் உயரத்தின் அளவையில் மட்டுமே இருக்கும்.

```````````````````````````````````````````````````````````````````````````````````````
உதகையின் குளிரை அதன் முழு வேகத்தில் எங்கள் உடல் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டபடியால் நீண்ட பயணத்திற்குப் பிறகு தேவைப்படும் குளியலைக்கூட அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டி வந்தது. குளிரின் இதமான அணைப்பால் பயணக்களைப்பு துளி கூட இல்லை.

நாங்கள் தங்கி இருந்த வீட்டின் கூரை முழுக்க மரத்தினால் ஆனது. குளிரை மரம் உள்ளே கடத்தாது என்பதால் இந்த ஏற்பாடு. ரஹ்மத்துல்லாஹ் சகோதரர்களின் குடும்பம் முதலில் இங்கேதான் தங்கியிருந்திருக்கின்றார்கள். பின்னர் அவர்கள் உதகை  நகரத்திற்குள் சென்று குடியேறிவிட்டனர். 

இந்த வீட்டில் சமைக்க ., நீரை சூடாக்கிக் கொள்ளும் வசதிகள் இருந்தபடியால் நீரின் இரட்டை குளிர்ச்சியிலிருந்து விடுதலை கிடைத்தது.

மதியம் மூன்றரை மணிக்கு வானை பார்க்கும்போது வான் முட்டும் மரங்களுக்குள்ளும் இளஞ்சாம்பல் மேகங்களுக்குள்ளும் கதிரவன் தளர்ந்து கிடந்தது. சுடும் வெம்மை கூசும் வெளிச்சம் போன்றவை இல்லாமல் தன் பொருள் இழந்து பகல் நேரத்து நிலவு போல காட்சியளித்தது.

பசுமைக்கு மேல் இருள் கவிழ்ந்திறங்கும் போது குளிரின் விறைப்பும் கூடிக்கொண்டே வந்தது. குளிர் பொறுக்கவியலாமல் ஆறு மணி வாக்கில்  வீட்டிற்குள் நுழையும்போது அங்கிருந்த மின்கம்பத்தின் உச்சியில் வந்தமர்ந்த ஒரு ஊர்க்குருவி துள்ளலுடன் அரை வட்டம் முழு வட்டமடித்துக் கொண்டிருந்தது.

நான் அப்போது அனைத்து வித குளிராடைகளையும் போட்டிருந்தேன். உடலில் ஒட்டியிருக்கும் இறகுகளைத் தவிர வேறெந்த மேலாடைகளும் இல்லாத சின்ன குருவி மேன்மேலும் நிறைந்து வழிந்து கொண்டேயிருக்கும் இந்த குளிரிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்கின்றது ? ஒரு வேளை சிர்க்...  சிர்க்...  என்ற ஒற்றை ஒலி மூலம் தன்னைச்சுற்றி குவியும் குளிரை சுரண்டி சுரண்டி பிய்த்து போட்டிருக்குமோ ?

வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லாஹ் எங்கள் கையில் நீண்ட ஜெர்மானிய டார்ச் லைட்டை  திணித்தார். ஒரு கிலோ மீற்றர் வரை சிதறாத நெடுங்குழாய் போன்ற ஒளிப்பாய்ச்சல்.

எதற்கு இது ? எனக்கேட்ட போது இரவில் காட்டெருமைகள் வந்து பூண்டுக்குவியலை மிதித்து துவைத்து விடக்கூடாது. அப்படி எதுவும் அவற்றின் நடமாட்டம் தெரிந்தால்   லைட்டை அடித்து ஹை ஹை என கூப்பாடு போட்tடால் போய் விடும் என்றார்.

எருமை மட்டும்தான் இங்கு வரும் என்றவுடன் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கடந்த வாரம் இங்குள்ள மலைக்கிராமமொன்றில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் ஓசையைக் கேட்ட வயதான பெண்மணி திறந்து பார்த்தவர் அப்படியே வீட்டுக்குள் ஓடிச்சென்று மயங்கி விழுந்து இறந்து விட்டிருக்கின்றார். வாசலில் நின்றது ஓங்கி வளர்ந்த ஓர் யானை. ஒரு ஆளை எதிர்பார்த்த இடத்தில் பேருருவத்தைக்கண்ட அதிர்ச்சி. சாவு தும்பிக்கைக்குள் ஒளிந்து வந்திருக்கின்றது.

நமது வாழுமிடத்திற்குள் நமக்கு பழக்கமில்லாத எந்த ஒரு அன்னிய மனிதனாவது காலங்கெட்ட காலத்தில் வந்தால் ஏற்படும் பதற்றம்  பிற உயிரிகளின் விஷயத்தில் பொதுவாக ஏற்படுவதில்லை. நச்சு உயிரிகள் மட்டும் இதற்கு விதி விலக்கு. பொதுவாக பிற உயிரிகள் இயற்கையின் ஓட்ட லயத்தில் இணைந்தவை. தங்களின் இயல்பை அவை மீறுவதில்லை.

இந்த ஒரு எண்ண ஓட்டம்தான் குளிரின் மையத்தினுள் அமர்ந்திருந்த உடலையும் மனதையும் ஏதாவது ஒரு காட்டு உயிரியின் வருகைச் சலனத்திற்காக ஏங்க வைத்தது.. முழு இரவும் காத்துக் கிடந்தும் எதையும் கேட்க முடியவில்லை. அறை தொடங்கி அந்த வெளி முழுக்க அலைந்து திரிந்த தனது ரீங்காரத்திற்கு மட்டுமே குளிர் இசைவு தெரிவித்திருந்தது. ஒற்றைத் திளைப்பு தவம் என்பதும் ஒரு வகை ஆழ்ந்த இன்பமே.

``````````````````````````````````````````````````````````````````````````````````````````
றஹ்மத்துல்லாஹ்வின் வயலில் பணி புரியும் ப்ரியா என்ற தலித் பெண்மணி. அவர் சமவெளியைச் சார்ந்தவர். தோட்ட வேலைகளுக்காக மலையை நோக்கி குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர். மிகவும் மன சாட்சியுள்ள கடின உழைப்பாளி.
உங்களுக்கு தரப்படும் கூலியெல்லாம் போதுமானதாக இருக்கின்றதா ? எனக் கேட்டதற்கு , ஓனரு எங்கள முழுசா கவனிச்சுக்கிறாருங்க நாங்க அவரு வயல் விஷயத்துல முழுசா கவனிச்சுக்குறோம் என மிக இயல்பாக சொன்னார்.
அவர் எங்களை மிகவும் வற்புறுத்தி தனது லைன் வீட்டிற்கு அழைத்துச் சென்று .தேநீர் தந்தார்.

மறு நாள் மதிய வாக்கில் நண்பர் அமீர் அப்பாஸ் கன்னியாகுமரியிலிருந்து வந்து சேர்ந்தார். நெடும் பயணம். வந்து சேர்ந்தவுடன் வெந்நீரில் குளித்து விட்டு உதகை நகரத்தை நோக்கிய பயணத்திற்கு எங்களுடன் கிளம்ப உடனே ஆயத்தமாகி விட்டார். மனிதர் கம்பாக நின்றார். எங்களைப்போலவே அவருக்கு நீலகிரியின் குளிரானது களைப்பை உடலில் ஏற விடவில்லை .

உதகை நகரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உதகை மைசூர் சாலையில்  முத்தோரை பாலாடா பகுதியில் 25 ஏக்கரில் அமைந்திருக்கும் பழங்குடி ஆய்வு மையம் & அருங்காட்சியகம் , ( Tribal Research Centre & Tribal Museum ) சென்றோம்.

இந்த நிறுவனம் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழக அரசின் ஆதி திராவிடர் & பழங்குடி நலத்துறையின் கீழ் இது பராமரிக்கப்படுகின்றது.
தென்னிந்தியாவின்  தோடர்கள் , காணிக்காரர்கள் , குரும்பர்கள் , கோதர்கள் பணியர்கள் உள்ளிட்ட 36 பழங்குடியினர்கள் , அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பழங்குடியினர் உள்ளிட்டோரின் வாழ்வு & பண்பாட்டு சித்திரங்கள்  3,000 காட்சிப்பொருட்களில் நம் முன் இறைந்து கிடக்கின்றது.

இரும்பு , மூங்கில் , புல் , மரம் போன்றவற்றில் செய்யப்பட்ட அன்றாட வீட்டு தளவாடங்கள் , சமையல் கலன்கள் , உழவு , வேட்டை , இசைக் கருவிகள் , வீடுகளின் மாதிரிகள் , மூலிகைச் செடிகள் , விதைகள் , சிறு தானியங்கள் போன்றவற்றின் வகை மாதிரிகள் .

இவை அனைத்தும்  மானிடவியல் , தொல்லியல் சார்ந்த முதனிலைச் சான்றுகள். அந்த துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் அரிய சேகரம்.

மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கை தடங்களை ஆவணப்படுத்தப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்க்கும்போது  பிறிதொரு கோணத்தில் எதிர்மறை எதிர்வு குரல் ஒன்று ஒலித்தது .  சமவெளி மனிதரின் வாழ்க்கை முறையை மலைக்கு மேல் வலிந்து போர்த்திய பின்னர் மலையினுடைய மக்களின் வாழ்க்கையை அருங்காட்சியகத்தின் சுவர்களுக்குள் சுருக்கி பதப்படுத்திய மம்மி  போல ஆக்கி விடுவார்கள் என தோன்றியது.  

நாங்கள் சென்றிருக்கும்போது ஸ்வீடனைச் சேர்ந்த இளம் பெண்ணொருத்தி மட்டுமே வந்திருந்தார். உதகையின் ஏனைய சுற்றுலாத் தலங்களில் வந்து குவியும் கூட்டங்களில் ஒரு சதவிகிதம் கூட இங்கு வந்து போவதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை.

அரசின் ஏனைய துறைகளைப் போலவே அலட்சியத்திற்கும் மந்தப்போக்கிற்கும் உள்ளாகி  மடிந்திருக்க வேண்டிய இந்த அருங்காட்சியகம் இன்று இந்த அளவு சேகரிப்பை கொண்டிருப்பதற்குக் காரணம் இதன் முன்னாள் இயக்குனராக இருந்த ஏ.சி. மோகன்தாஸ் என்ற குடிமைப்பணி அலுவலர்தான்.

ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் நீலமலையின் முடி தொடங்கி தாழ்வரை வரை பரவியுள்ள பழங்குடி குடியிருப்புக்களில் கீழ் நிலை அலுவலர்களுடன் ஜீப்பில் அலைந்து திரிந்து கொண்டு வந்து சேர்த்தவை. ஒரு வித வெறியோடு செயல்பட்டிருக்கின்றார் மோகன்தாஸ்.

இன்று இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் பல மொழி பார்வையாளர்களுக்கு விளக்கி சொல்லிட ஆங்கிலந்தெரிந்த துறை சார் வழிகாட்டிகள் என யாருமில்லை.

காட்சிப்பலகங்கள் , கூண்டுகளுக்கான விளக்குகள் இருந்தும் அவை சரியாக எரிய விடப்படுவதில்லை. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த பாபு என்பவர் கூட அங்குள்ள தோட்ட பராமரிப்பாளர்தான். ஆனால் மனிதர் எங்களுக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் விளக்கினார்.

அரசினதும் அதன் அலுவலர்களினதும் தொடர் அலட்சியத்தினால் இந்த அரிய அருங்காட்சியகம் பாழ்பட்டு விடக்கூடாது.
`````````````````````````````````````````````````````````````````````````````````
உதகையில் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களும் பெரிதாக பசியையும் உணரவில்லை. கிட்டதட்ட ஒரு வேளை முழு உணவை எடுத்தால் அது முழு நாளைக்கும் போதுமானதாக இருந்தது. தேநீர் மட்டுமே அடிக்கடி தேவைப்பட்டது. எங்கள் மூவருக்குமே இது பொது பட்டறிவாக இருந்தது.
மலையின் தெளிந்த காற்றும் நீரும் வயிற்றுக்கான உணவாக மாறுகின்றதா 
அல்லது உணவை வேறெந்த வகையிலாவது அது மாற்றீடு செய்கின்றதா ?
காற்றை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழும் ஒரு சோதனை முயற்சியில்  தேங்காய் பழச் சாமியார் என்றழைக்கப்பட்ட தமிழாசிரியரும் பெரியார் கொள்கையாளரும் இயற்கை வழி மருத்துவருமான திரு. ராமகிருஷ்ணன் தன் இன்னுயிரை நீத்தார் .

அன்னார் திருநெல்வேலி மாவட்டம் சிவசைலத்தில்  நல்வாழ்வு ஆசிரமம் ஒன்றை  நிறுவி தீரா நோய்களுக்கெல்லாம் இலவச இயற்கை மருத்துவம் செய்து வந்தவர் .

இமய மலைச் சாரல்களில் வாழும் துறவிகளின் வாழ்க்கையின் ஒரு முடிச்சு மெல்ல அவிழ்வது போல உள்ளது. இதில் உள்ள சாத்தியப்பாட்டைக் கண்டுதான் ராமகிருஷ்ணன் உற்சாக மேலீட்டால் எல்லை கடந்து விட்டார். 

அவர் ஒரு நிதானமான சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தால் இதில் உள்ள திரை விலகியிருக்கும். அவர் ஏற்கனவே வாழைப்பழத்தையும் தேங்காயையும் மட்டுமே உண்டு உயிர் வாழ முடியும் அது ஒரு முழு விகித உணவு என்பதை நிரூபித்தவர்.

தூய காற்றும் தெள்ளிய நீரும் பசியை தொலைக்கவோ குறைக்கவோ முடியும் என நிரூபிக்கப்பட்டால் வயிற்றுக்கான தொல்லை பிடித்த போராட்டச் சுமையும் குறையுமே.

இறைவன் நாடினால் அத்தகையதொரு வாழ்க்கை முறைக்குள் லயித்து விட வேண்டும் என்ற விருப்பம்தான். ஆனால் அந்த விருப்பத்தை அதற்கு முன்னர் என் மனதிற்கும் வாய்க்கும் புரிய வைக்க வேண்டும்.

```````````````````````````````````````````````````````````````````````````````````````````
மலை ரயில் பொம்மை ரயில் என செல்லமாக அழைக்கப்படும் உதகை – மேட்டுப்பாளையம் இடையே ஓடும் இந்திய தொடர்வண்டித்துறையின் பாரம்பரியச் சின்ன ரயிலில் பயணித்தோம். யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியத் தலம் என்று அறிவிக்கப்பட்ட ரயில் தொடர்.
குன்னூர் வரை டீசல் பொறியில் இயக்குகின்றனர். 

குன்னூரிலிருந்து கல்லாறு வரை மிகவும் செங்குத்தான பாதையாக இருப்பதால் பற்சக்கர பாதை போடப்பட்டுள்ளது. அங்கிருந்து நீராவி பொறியில் மூன்று கரங்கள் கொண்ட இருப்புப் பாதையில் இயக்குகின்றனர். மலை உடும்பு போல தொடர் வண்டியானது பற் சக்கர பாதையை பற்றியபடி மெல்ல தாவி இறங்கிக் கொண்டிருந்தது. தொடர்வண்டித் துறை தனது ஆதி நினைவுகளை மீட்டுக் கொள்ளும் இடம்.

முதியவர்களுக்கு விடும் சொட்டு மருந்து போல பக்கவாட்டு மூடிகளை திறந்து திறந்து அடுத்தடுத்த நிலையங்களில் நீராவி பொறிக்கு எண்ணெய் விட்டுக் கொண்டிருந்தனர்.

நிலக்கரி நீராவியில்  இயங்கும் இந்த பொறியைக் கண்டவுடன் காயல்பட்டின தொடர்வண்டி நிலைய தண்டவாளத்தின் இரு மருங்கிலும் இறைந்து கிடக்கும் கரித்துண்டுகளும் நீல நிறத்தினாலான தலைத்துண்டு கட்டிய ஓட்டுனரும் பொறியின் தீ நாக்கு குகைக்குள் கரியை அள்ளி அள்ளி தள்ளிக் கொண்டே இருக்கும் உதவியாளரும்தான் நினைவிற்கு வந்தனர்.

 உதகையை விட்டு பிரிந்து மலை இறங்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கு  நின்றிருந்த கோவை செல்லும்  வண்டியில் ஏறி அமர்ந்த உடனேயே அடி வயிற்றிலிருந்து பசி மேலெழும்பத் தொடங்கியது.
வயிற்றுக்கு எப்படித்தான் தெரிந்ததோ நாங்கள் மலையிறங்கி விட்டோம் என்று ?




























22/11/2016



1 comment:

  1. கட்டுரையை படிக்கும் போதும் உங்களோடு சேர்ந்து உதகை பயணித்த அனுபவம்..... மிக அருமை

    ReplyDelete