Wednesday 1 January 2020

மூத்த ஊடகவியலாளர் வீ. தனபாலசிங்கம் -- நேர் முகம்


இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள கரவெட்டியில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,நெல்லியடி மத்திய மஹா வித்தியாலயம்,பருத்திதுறை ஹாட்லி கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர்.

 தனது 21 ஆம் வயதிலேயே மிக இளம் பிராயத்திலேயே அச்சு ஊடகத்துறையில் காலடி பதித்தவர்.ம1977 ஆம் ஆண்டு மெய்ப்பு நோக்கராக வீரகேசரியில் இணைந்து 1985 ஆண்டு உதவி ஆசிரியர், பின்னர் வெளிநாட்டு செய்தி ஆசிரியர்,நாடாளுமன்ற நிருபர்,வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் விமர்சகர் என பல நிலைகளை கடந்து பெற்ற பழுத்த அனுபவத்தோடு 1997 ஆம் ஆண்டு தினக்குரல்  நாளிதழ் தொடங்கியதிலிருந்தே பணியாற்றி வருகிறார். 


தினக்குரலின் முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையில்லை. 1997 ஆம் ஆண்டு முதல் அதன் செய்தி ஆசிரியராக பணியாற்றினார் 2004ஆம் ஆண்டிலிருந்து .தினக்குரலின் பிரதம ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். கொழும்பில் தனது மனைவி,இரு பெண்மக்களுடன் வசித்து வருகின்றார்.

தனது நூல் ஒன்றிற்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அண்மையில் இவர் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார்.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தபோது
வீ. தனபாலசிங்கம் அவர்கள் தந்த  நேர்முகம் :

 தங்களது நூல் அதற்கு கிடைத்த விருது பற்றி  கூறுங்களேன்?

கொழும்பில் புரவலர் பூங்கா என்றதொரு இலக்கிய அமைப்பு உள்ளது. அதன் நிறுவனர் உமர் காசிம் என்ற இலக்கிய ஆர்வலர்.கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இவரின் பூர்வீகம் குஜராத் மாநிலமாகும்.இவர் தனது இலக்கிய அமைப்பு மூலம் நலிந்த நிலையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள்,படைப்பாளிகளின் படைப்புகளை தனது சொந்த காசில் பதிப்பித்து வெளியிடுவார். பின்னர் அந்த நூலிலிருந்து கிடைக்கப்பெறும் வருவாய் முழுவதையும் அந்த படைப்பாளிக்கே அளித்து விடுவார்.  

அவர்தான் தனது  புரவலர் பூங்கா வின் மூலம் எனது இந்த நூலை வெளியி
ட்டுள்ளார். ஊருக்கு நல்லது சொல்வேன்  என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்நூலில் 2004-10 ஆம் ஆண்டுகள் வரை  தினக்குரல் இல் நான் எழுதிய தலையங்கங்களிலிருந்து 100 ஐ எடுத்து தொகுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நாமக்கலில் இயங்கி வரும்  கு.சின்னப்ப பாரதி (கு.சி.ப.) அறக்கட்டளை சார்பில் எனது இந்நூலை விருதிற்காக தேர்வு செய்துள்ளனர். அதையொட்டித்தான் எனது இந்த தமிழக பயணம்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தினக்குரல் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு பற்றி………?

இந்த கேள்விக்கான விடை என வரும்போது தனியார் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் ஊடகங்களைப்பற்றித்தான் எம்மால் கதைக்கவியலும். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் கூர்மையடையத்தொடங்கிய காலகட்டத்தில்  தனிநாடு கோரிக்கைகளை ஊடகங்கள் ஆதரிக்கவில்லை.மாறாக தனிநாடு கோரிக்கைக்கான பின்னணியில் உள்ள காரணிகளை தீர்ப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 

ஊடகங்கள் போரையும் ஆதரிக்கவில்லை போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் ஆதரிக்கவில்லை. தமிழ் பேசும் மக்கள் போரில்பட்ட அவலங்கள், அழிவுகளை அம்பலப்படுத்தி அவை எதிர்த்தன.அதே நேரத்தில் ஆளும் நிறுவனம் ஊடகத்தினரை தீவிரவாத ஆதரவாளர்கள் என ஐயுற்றது. இதன் விளைவாக ஊடகவியலாளர்கள் பலவித நெருக்குவாரங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

உண்மை நிலை என்னவெனில்  தமிழ்மக்களின் நியாயப்பூர்வ விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய  அரசியல் இணக்கத்தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதே தமிழ் பத்திரிகைகளின் அடிப்படை நோக்கமாக இருந்தது. உள்நாட்டுப்போராகட்டும் அல்லது அதற்கு பிந்திய சூழலாகட்டும் தமிழ் பத்திரிகைகளின் பணி இதுவாகத்தான் இருந்து வருகின்றது.

அதிகாரப் பரவலாக்கம் என்ற கருத்தை இலங்கை அரசு ஏற்கிறதா? சிங்களவர்களும் தமிழர்களும் கூடிவாழும் மனநிலை இனிமேலும் சாத்தியமா?
அதிகாரப் பரவலாக்கம் என்கின்ற கருத்தை பொதுவில் சிங்கள மக்களும் அரசியல் சமுதாயமும் ஏற்பதற்கு மறுப்பதே இலங்கை இன நெருக்கடிக்கான அடிப்படைக் காரணமாகும்.

இலங்கையின் பல்லின, பலகலாசார, பலமத தன்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மனோநிலை பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுக்கு இருக்கிறது. அவர்கள் அத்தகைய மனோநிலையின் அடிப்படையிலேயே சகல பிரச்சினைகளையும் விவகாரங்களையும் நோக்குகிறார்கள். இதுவே இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான பிரதான முட்டுக்கட்டையாக காலங்காலமாக விளங்கிவருகிறது.

 சிங்கள மக்களை இத்தகைய மனோ நிலையில் வைத்திருப்பதன் மூலமாக தங்களது அரசியல் இருப்பை சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் உறுதிசெய்து வந்திருக்கின்றன. இதில் மாறுதல் ஏற்படுவதை அரசியல் தலைமைத்துவங்கள் விரும்புவதில்லை. 

இத்தகைய பின்புலத்தில் கட்டிவளர்க்கப்பட்ட அரசியல் கலாசாரத்தில் அதிகாரப் பரவலாக்கல் என்பது அருவருப்பானதாக நோக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்கே தலைமைகள் தேவையே அன்றி, மக்களின் மத்தியில் இருக்கக்கூடிய தவறான சிந்தனைப் போக்குகளுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு தலைவர்கள் தேவையில்லை. இதுவே இன்று இலங்கையின் துரதிர்ஷ்டவசமான நிலைவரங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது.

 மக்கள் மத்தியில் ஆரோக்கியமான, முற்போக்குச் சிந்தனைகளை, ஏனைய சமூகங்களின் உணர்வுகளையும் மதித்து சகிப்புத்தன்மையுடன் வாழக்கூடியதாக வழிநடத்தக்கூடிய சிந்தனைகளை தோற்றுவிக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் தோன்றாத வரை இலங்கையில் உடன்பாடான மாறுதல்களுக்கு வாய்ப்பு இருக்காது என்பதே எனது அபிப்பிராயம்.
 ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அறவழிப் போராட்டங்கள் மூலமாக தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வழிவகைகள் உண்டா?

 தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முதலில் 30 வருடங்கள் (1948 ஆம் ஆண்டிலிருந்து) அமைதி வழிப் போராட்டங்களையும் அடுத்த 30 வருடங்கள் ஆயுதப் போராட்டங்களையும் நடத்தி இறுதியில் இரண்டிலுமே தோல்வி கண்டிருக்கிறார்கள். சிலர் இதை தோல்விகள் என்று ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தவறான தந்திரோபாயங்கள், கொள்கைகளைக் கடைப்பிடித்த காரணத்தினால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிற வரை தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி முறையாகச் சிந்திப்பதற்கு வாய்ப்பில்லை. 

கடந்த கால அனுபவங்களில் இருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாத்திரமே எதிர்காலத்துக்கான செம்மையான மார்க்கத்தை வகுக்க முடியும். தமிழ் மக்கள் போரின் முடிவுக்குக் பின்னரான காலகட்டத்தில் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றைக் கொண்டவர்களாக இல்லை. 
முதலில் அத்தகைய வலுவான அரசியல் சமுதாயத்தை படிப்படியாக கட்டிவளர்ப்பதற்கு தற்போது பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்புகளை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதன் காரணத்தினால்தான் அண்மைக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பங்கேற்பதில் முன்பைக் காட்டிலும் தமிழ் மக்கள் கூடுதல் அக்கறை காண்பித்ததைக் காணமுடிந்தது. 

தங்களது அரசியல் பிரதிநிதித்துவங்களைச் சிதறவிடாது கட்டுறுதியானதாகப் பேணுவதன் மூலமே நாளடவில் வலுவான அரசியல் சமுதாயத்தை தமிழ் மக்களினால் மீண்டும் தோற்றுவிக்க முடியும். தமிழ் மக்களின் எதிர்கால உரிமைப் போராட்டங்களுக்கான அரசியல் செயன்முறைகள் அடிப்படையில் ஜனநாயக ரீதியானவையாக மாத்திரமே இருக்க முடியும். மனித குலத்தின் வரலாற்றிலே போராட்டங்கள் ஒருபோதும் ஓய்ந்துவிடுவதில்லை. 

போராட்டங்கள் தொடரவே செய்யும். போராட்டங்களின் மார்க்கங்களும் வடிவங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும். போராட்டம் ஓய்ந்துவிட்டது அல்லது முடிந்துவிட்டது என்று நாம் நினைத்தால் போராட்டம் முடிந்துவிட்டது என்று ஆகிவிடாது. நாம் போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம் என்பதே உண்மையில் அதன் அர்த்தமாகும். போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் போருக்கு அடிப்படைக் காரணியாக இருந்த அரசியல் காரணிகள் இன்னமும் அற்றுப்போய் விடவில்லை.

* தமிழகத்தில் இருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் குரலை ஈழத்தமிழர்களின் குரலாக ஏற்கமுடியுமா?

 அவ்வாறு ஒருபோதுமே ஏற்கமுடியாது. ஏனென்றால், இலங்கையில் தமிழ் மக்கள் நடத்தியது ஒரு தேசியப் போராட்டமாகும். அதற்காக வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட குரல்கள் ஆதரவுக் குரல்களாக மாத்திரமே இருக்க முடியும். தமிழகத்தில் உள்ள பிரதான திராவிட இயக்கக் கட்சிகளாக இருந்தாலென்ன, ஏனைய தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ்த் தேசியவாதக் கட்சிகளாக இருந்தாலென்ன, போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடர்மிக்க சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு கோரிக்கைகளை முன்னெடுப்பதாக இல்லை.

 இன்றும் கூட ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுகிறார்கள். ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் ஈழம் பற்றி எதையுமே பேசுவதில்லை. அதற்கான சூழ்நிலையும் அங்கு இல்லை. இன்று தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய பயனுறுதியுடைய அரசியல் இணக்கத் தீர்வொன்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய அதிகாரப் பரவலாக்கத்தையே தமிழ் மக்கள் இன்று விரும்புகிறார்கள். அதற்காகக் கூட வலுவான முறையில், அதாவது இலங்கை அரசாங்கத்துக்கு குறைந்தபட்சமாகவேனும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அரசியல் செயன்முறைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

வெளியுலகிடமிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கப்படும் இராஜதந்திர நெருக்குதல்களை மாத்திரம் முற்றுமுழு அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழ் அரசியல் சக்திகள் அவற்றின் தந்திரோபாயத்தை வகுப்பதென்பதும் நாளடைவில் பெரும் பின்னடைவைக் கொண்டு வந்துவிடும் என்ற சந்தேகமும் உண்டு. தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் 20 மைல் கடலுக்கு அப்பாலிருக்கும் தங்கள் சகோதரர்களின் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கக் கூடியதான தீவிரவாதத் தன்மையான கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்தக் கூடாது. இதுவே எமது எதிர்பார்ப்பாகும்..

 பேரினவாத அரசின் கெடுபிடிகளுக்கு நடுவே எப்படி பணியாற்ற முடிகிறது?

ஆள்வோரும் எங்களை தீவிரவாத ஆதரவாளர்கள் என்ற அய்யத்தோடு பார்த்த சூழலில் பல அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு நடுவில் பணியாற்ற வேண்டி வந்தது. நாங்கள் அரச எந்திரத்தாலும் ,தீவிரவாத குழுக்களாலும் குறி வைக்கப்பட்டோம். 2006-09 வரை தமிழ்,சிங்கள ஊடகவியலாளர்கள் 09 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எங்களில் பல பேர் அச்சுறுத்தலுக்கு பயந்து வெளிநாடு சென்று விட்டனர். எனினும் எஞ்சியோர் சமூக பொறுப்பின் அழுத்ததினால் தொடர்ந்து கடமையாற்றுகின்றோம்.

எங்களுக்கு நேரிடும் நெருக்கடிகள் பிரச்சினைகளை எங்களால் தடுக்கவியலாவிட்டலும் கூட அதை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனை வளர்த்துள்ளோம். நிஜங்களை முழுமையாக மூடி மறைக்காமல் எமக்கும் ஆபத்து வராதிருக்கும் வகையில் பெருமளவில் சுய தணிக்கையை கடைப்பிடித்து வருகிறோம்.
  இலங்கையரசானது இந்தியா,சீனா நாடுகளை எம்மாதிரி கையாள்கிறது? இலங்கையின்  வளம் அன்னிய சக்திகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளதா? சீனா ,இந்தியாவின் நோக்கங்கள் என்னென்னவாக உள்ளன ?

 உலகமயமாக்கலின் பின்னணியில் உலகின் எல்லா வளங்களும் வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் விழுந்து கொண்டிருக்கின்றன.அந்த வகையில் இலங்கை ஒன்றும் விதி விலக்கல்ல. சீனா,இந்தியா,அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்டவைகளுக்கு இலங்கையில் கால் பதிப்பதென்பது பிராந்திய செல்வாக்கு விரிவாக்க நோக்கில்தான். சீனா ஒன்றும் புதியதாக இங்கு வந்து விடவில்லை. அவர்கள் காலங்காலமாக இங்கு உள்ளனர். பொருளாதார வல்லாதிக்க சக்திகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா உள்ளது.இந்தியாவும் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

 சீனாவை கட்டுக்குள் வைக்க அமெரிக்கா இந்தியாவை ஊக்கப்படுத்துகின்றது. சீனாவும் இந்தியாவும் தங்களுக்குள் எல்லைப்பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை பெரிதுபடுத்த விரும்புவதில்லை.எடுத்துக்காட்டாக ,இந்தியாவின் எல்லைப்புர மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா ஊடுருவியபோது இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அதை வெறும் ஊடக கட்டுக்கதை என ஒதுக்கித்தள்ளினார். காரணம் இரு நாடுகளின்  நிலையான வளர்ச்சிக்கும் அமைதி தேவைப்படுகிறது. ஆனால் இரு நாடுகளின் பகையானது பனிப்போர் வடிவில் உக்கிரமாக இலங்கையில் வெளிப்படுகிறது.

சீனா எதையும் செய்யும் வல்லமை படைத்தது.அது தனது முதலீட்டை இலங்கையில் பாய்ச்சுகின்றது. தனக்கு இயன்றாலும் இயலாவிட்டலும் இந்தியா அதற்கு ஈடு கட்ட முனைகிறது. இலங்கையின் ஆளும் வர்க்கம் இவ்விரண்டு நாடுக்களுக்கிடையேயான முரண்களை புத்திசாலித்தனமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுகின்றது. .எனினும் இந்தியாவைவிட  சீனாவிடம்தான் நெருக்கம்காட்டுகின்றது இலங்கையரசு . தமிழர் பகுதியில் 50,000 வீடுகளை கட்டித்தருவதற்கு இந்தியா முனைகின்ற போதிலும் இலங்கையரசு அதற்கு பல முட்டுக்கட்டைகளை போடுகிறது..இந்தியாவால் இலங்கையில் செயல்படுத்தப்படும் திட்டங்களனைத்தும் இந்திய அரசு இலங்கையரசுக்கு கொடுக்கிற நெருக்கடியின் விளைவாக மாத்திரமே நடக்கின்றது. 

இலங்கையரசின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்னவென்றால் இலங்கையின் ஆளும் வர்க்கம் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் வாழும் 7 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களையும் இலங்கைத்தமிழர்களையும் ஒன்றாகவே அச்சவுணர்வுடன் பார்க்கின்றது.அதை தனது இறையாண்மைக்கானக்கெதிரான ஒரு அறைகூவலாகவே கருதுகிறது..அந்த அறைகூவலின் நீட்சியாகத்தான் இலங்கைத்தமிழர்களையும் பார்க்கின்றது.எனவேதான் ராஜ பக்‌ஷே கூறினார் ’’சீனா எங்களது நண்பன் இந்தியாவோ எங்களது உறவினர் ’’.

அய்.நா.உட்பட அய்ரோப்பிய நாடுகள் இலங்கை  போர்க்குற்ற விடயத்தில் இதயத்தூய்மையோடு நடக்கின்றனவா?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போருக்கு போர்த்தளவாடங்கள் கொடுத்ததே இந்த நாடுகள்தான்.உலக சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா,அய்ரோப்பிய ஒன்றியம்,இந்தியா போன்றவற்றின் நலன்கள் இலங்கையில் உறுதிப்படுத்தப்படுமானால் இலங்கை மீதான போர்க்குற்ற நெருக்குதல்கள் தணியும். தமிழர்களுக்காக இந்த சக்திகள் குரல் கொடுக்கின்றன என யாராவது நம்பினால் அது முட்டாள் தனமே.

சிங்களவர்-தமிழர்-முஸ்லிம் சமூக உறவுகள் போருக்கு பிந்திய சூழலில் எப்படியுள்ளது?

போருக்கு பிறகான சூழலில் சிங்கள தமிழ் பிளவு  இரு துருவமாக கூர்மையடைந்துள்ளது. வெற்றிக்களிப்பில் மிதக்கும் சிங்கள சமூகத்திடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்ற விரக்தி உள்ளது. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயும் அய்யுறவுகள்{apprehensions] உள்ளன. தீவிரவாத இயக்கங்களின் தவறான நடவடிக்கைகளும், அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியுமே இதற்கு காரணம்.

தமிழர்-முஸ்லிம் சமூகங்களிடையே அடையாள தனித்துவ வேறுபாடு இருந்தாலும் பொதுவாக ஒத்து போகக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளன.அப்படி ஒத்துப்போகக்கூடிய விடயங்களில்  இணைந்து பணியாற்றும்போது தனித்துவ வேறுபாடுகளில் உள்ள முரண்கள் தணிந்து விடும்.

தமிழர்களிடையே கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் எந்த அளவில் நடைபெறுகின்றன?

வடக்கிலும்,கிழக்கிலும் பெரிதாக இல்லாவிட்டலுங்கூட உள்நாட்டு போருக்கூடாகவுமே கொழும்பில் அத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றே வந்திருக்கின்றன.அந்த நேரத்தில் வாரத்தில் 5 நூற்கள் வெளிடப்பட்டிருக்கின்றன..

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் பறி போகின்றது,தமிழ் ஊர் பெயர்கள் சிங்கள பெயர் மாற்றம் பெறுகின்றன என செய்திகள் வருகின்றனவே?

கிளிநொச்சியில் ராணுவத்தளபதி ஒருவரின் பெயர் வீதியொன்றிற்கு வைக்கப்பட்டுள்ளது. ராணுவ கட்டமைப்பு விஸ்தரிப்பு,வளர்ச்சி திட்டம் போன்றவற்றினால் தங்களின் பாரம்பரிய நிலத்தின் தனித்துவம் அழிந்து விடுமோ என தமிழ் பேசும் மக்கள் அஞ்சுகின்றனர்.

தமிழக ஊடகங்களுக்கு உங்களுடைய செய்தி என்ன? 

இலங்கை இனப்பிரச்சினையில் இங்குள்ள ஊடகங்கள் பரபரப்பு அணுகுமுறையிலேயே செய்திகளை வெளியிடுகின்றன. இனப்பிரச்சினையின் அடிப்படை கூறுகளை கண்டு கொள்வதில்லை.அங்குள்ள மண்ணின் பருண்மை நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதுமில்லை. தமிழ் ஊடகங்களின் இத்தகைய போக்கை சிங்கள ஊடகங்கள் சிங்களவருக்கெதிரான பன்னாட்டு சதியாக சித்தரிக்கின்றனர்.

 மொத்தத்தில் தமிழக ஊடகவியலளருக்கு நிதானமான அணுகுமுறையும் செயல்பாடும் தேவை. இலங்கை இனப்பிரச்சினையில்  எங்களுக்காக தமிழகத்திலிருந்து குரல் கொடுப்போர் அங்கு வாழ்விடங்களை இழந்த மக்கள் அவற்றை மீளப்பெறுவது தொடர்பில் குரலெலுப்பினால் நன்றாக இருக்கும். இலங்கையில் சிங்கள முற்போக்கு சக்திகள் என ஒன்றில்லை. தமிழகத்திலிருந்து எழும்பும் ஈழம் தொடர்பான தனி ஈழம் என்பன போன்ற உச்ச பட்ச கோரிக்கைகள் இலங்கையிலுள்ள பேரினவாதிகளை ஊக்குவிக்கின்றது.

அவை எங்களுக்கு துன்பத்தை தருகின்றன. பொதுவாகவே இங்கிருந்து எங்களுக்காக உயர்ந்த குரல்களை நாங்கள் குறைத்து பேச வரவில்லை. ஆனால் ஈழப்போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய நடுவணரசை நெருக்கடி கொடுத்து ,ஒரு நியாயமான தீர்வை தமிழர்களுக்கு தர வைக்கும்  முயற்சியில் தமிழக ஊடகங்கள் தோல்வியடைந்துள்ளன. 

ஒரு ஊடகவியலாளனான எனக்கென சில வரம்புகள் உண்டு.எனவே நான் இனப்பிரச்சினைக்கான அறுதியான தீர்வைப்பற்றி கூறவியலாது. அங்கு எங்களுக்கிருக்கும் நெருக்கடியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
--------------------------------------------------

அக்டோபர் 2011


No comments:

Post a Comment