Wednesday, 1 January 2020

நெருங்கி வா முத்தமிடாதே – திரைப்பார்வை






 நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு , ஊடுறுவல்காரர்கள் , டீஸல் கடத்தல் , சாதி குறுக்கிடும் காதல், அதையொட்டிய வன்செயல்கள்  என  பெரும் நிகழ்வுகளின் இழு விசையில் திரைக்கதையின் மேற்பரப்பு நகர்கின்றது.



சாகச கிளர்ச்சி , காதல் ஓட்டம் என்ற பெரு நிகழ்வுகளின் வாயிலாக பார்வையாளர்களின் உடனடி தேவைகளை நிறைவு செய்தவாறே  திரைப்படத்திற்குள் புதைந்திருக்கும் செய்தியானது கதையின் பெரு ஓட்டத்தின் விசை குறைந்த பகுதியில் நிகழ்கின்றது .

இதை கீழ்க்கண்ட இடங்களில் அவதானிக்க முடிகின்றது.
அமைதியான வாழ்வின் அன்றாட ஓட்டத்திற்கு அப்பால் விலக்கி நிறுத்தப்பட்டுள்ள  லாரி  ஓட்டுநர்களின் ஊசலாடும் வாழ்க்கையானது அவர்களை எப்பொழுதும் எதிர் நிலை மனிதர்களாகவே உருவகிக்கின்றது.

இந்த எதிர்மறை பிம்பமானது நாயகன் சந்துரு ( ஷபீர் கலரக்கல் } வின்  நேர்முறை பாத்திரம் வாயிலாக கலைத்துப் போடப்படுகின்றது.
பாலியல் வல்லுறவின் விரும்பத் தகாத தொடர் விளைவாக ஒரு பெண் பிள்ளையை [ நாயகி மாயா ] பெற்றெடுக்கிறாள்  தாய்  .

தன் உடல் , ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட அந்த வன்செயலை நிலை குலைந்து போகாமல் கடந்து போகின்றாள் தாய் { விஜி சந்திர சேகர் } .
தன் வாழ்வில் நடந்த அந்த விபத்தின் நிழல் துளி கூட தன் மகளின் மீது தெறித்து விடக்கூடாது . காதல் என்ற பெயரில் கண நேர உடல் வேட்கை எழுச்சியில் தன் மகள் அடித்துச் செல்லப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் கரிசனமாகவும் இருக்கின்றாள் .

நள்ளிரவில் காதலனுடன் வெளிச்செல்லும்போது நாயகி மாயா ( பியா பாஜ்பாய் ) விபத்தில் சிக்குகின்றாள். அவளை சந்துருவின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்க முயலும்போது பணியிலுள்ள மருத்துவர்கள் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் பிரதி வேண்டும் என கேட்கின்றனர். அச்சத்தில் மாயாவின் காதலன் காணாமல் போகின்றான்.

 வாழ்வும் தாழ்விலும் தொடரும் ஒரு புனித உறவு என தோரணங்கட்டி காட்டப்படும் மிகப்பெரும்பாலான காதல் உறவுகளின் மையத்திற்குள் நுழைந்து பார்க்கும்போது உடல் மீதான பெரு ஈர்ப்பும்  நுகர்ந்து தீர்க்கும் பதட்டமுமாக மட்டுமே அவை எஞ்சுகின்றதை இந்தக்காட்சி நிரூபிக்கின்றது.

இயக்குநர் லட்சுமி ராம கிருஷ்ணன்  தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  இது போன்ற பல காதல் , ஓடிப்போதல் சிக்கல்களை கையாண்டிருக்கின்றார். அந்த பட்டறிவின் நீட்சிதான் இங்கு காட்சியாகியிருக்கின்றது.

காதலும் சாகச கிளர்ச்சியூட்டலும் இணை கோட்டில் பயணிக்கும்போதே ஒன்றை ஒன்று மீறப்பார்க்கின்றன . இரண்டையுமே இயக்குநர் மென்மையாக சமப்படுத்தி கையாண்டிருக்கின்றார். அதனால்தான் கதையையும் ஆற அமர சுவைக்க முடிகின்றது.

ஊடுறுவல் , உளவு பார்த்தல் , குண்டு வெடிப்பு , பயங்கரவாதி என்ற சொல் பயன்பாடுகளை முஸ்லிம் பாத்திரத்தோடு மட்டுமே இணைத்துக் காட்டும் திரையுலக ஃபாஸிசத்தின் பொது விருப்பத்தையும் இந்த படம் தகர்த்திருக்கின்றது.

இடைவேளைக்கு முன்னர் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழும் முடிச்சுகள் இடைவேளைக்கு பின்னர் வேகம் வேகமாக அவிழ்ந்து விழுகின்றன. இந்த வேகத்தில் சில முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலும் இருக்கின்றன .
எடுத்துக்காட்டாக மின் கட்டமைப்புக்குள் ஊடுறுவும் பயங்கரவாதிகளின் நோக்கமும் திட்டமும் விவரிக்கப்படவேயில்லை. அதே போல நடுவண் அமைச்சருக்கும் இந்த சதிக்கும்பலுக்கும் இடையேயான உறவு எத்தகையது என்பதும் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஒரு வேளை இந்த புனிதமற்றக்கூட்டு திரையில் விரிந்திருந்தால் அது இன்றைய அரசு பொறியமைப்பிற்குள் ஊடுறுவி ஆட்டிப்படைக்கும் வெறுப்பு சக்திகளின் திரை மறைவு புதிர் கூத்துக்களை எளிய இந்தியக்குடிமகன் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

தம்பி ராமையா , பால் சரவணன் ஆகியோரின் நகைச்சுவை வசனங்களின் பல இடங்களில் இன்னமும் கவனம் தேவை.

பொதுவாக திரைக்கதைகளில் காதலையும் சாகச கிளர்ச்சியையும் காரமும் உப்பும் கூடுதலாக சேர்க்கப்பட்ட  கொத்து புரோட்டாவாக சுவைத்து பழக்கப்பட்ட தமிழ் உளவியலானது சற்றே நிதானப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் வெள்ளித் திரையின் உணர்ச்சி பீறிடல் அலைவரிசையில்தான் தமிழ் மனம் தனக்கான அரசியலை உருவாக்கிக் கொள்கின்றது.

 அந்த வகையில் “ நெருங்கி வா முத்தமிடாதே “. வை ஒரு திரைக்கதை வழியான  ஆற்றுப்படுத்தலாகவே பார்க்க முடிகின்றது.
06/11/2014

No comments:

Post a Comment