இது நடந்து இருபத்தைந்து வருடங்களிருக்கும்.
அப்போது நான் பணி நிமித்தமாக ஊரிலிருந்து நாகர்கோவிலுக்கு
அடிக்கடி சென்று வந்த சமயம். பயண இடைவெளி உணவிற்காக வண்டி சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில்
பத்து நிமிடங்கள் நிற்கும்.
அடுப்பின் புகை மண்டும்ஓலை வேய்ந்த உணவகத்தில் பூடி
வடை அப்பம் தேனீர் என அருந்தி விட்டு உடல் உபாதைகளை போக்கிய பிறகு வார மாத சஞ்சிகைகள்
வாங்குவதற்காக பேருந்து நிலைய வளாக கடைகளுக்குள் நடை வருவதுண்டு.
அப்போது இயற்கை மூலிகை கடை ஒன்று கண்ணில் பட்டது.
வெள்ளை கதராடை அணிந்த முதியவர் தனித்து தன்னமைதியில் அமர்ந்திருந்தார். அவரது ஆடையின்
வெண்மை நீண்ட தாடியிலும் விரவியிருந்தது.
மற்ற கடைக்காரர்களிடம் காணப்படும் அலைபாயும் கண்கள்
அவரிடம் இல்லை. அவரின் இருப்பானது ஆழ்ந்த தவத்தைப் போல இருந்தது.
15 X 15 நீள அகலமுள்ள அந்த கடைக்குள்ளே விதம் விதமான
மூலிகை பொடி பொட்டலங்கள், வேர்கள் , கதர் துண்டுகள் சந்தன மாலை என பரப்பப்பட்டிருந்தன.
கடையின் கதவிற்கருகில் உள்ள சுவரில் இரு கையகல தாள்
ஒட்டப்பட்டிருந்தது. அதில் சீனி உப்பு பால் என நாம் உண்ணும் உணவு அனைத்திலும் நஞ்சு
என எழுதியிருந்தது.
அதை பார்த்ததும் கடையிலிருந்து வேகமாக இறங்கி விட்டேன்.
கடையில் இருந்த வெள்ளை மனிதர் இப்போது எனக்கு முட்டாள் சித்தராக காட்சியளித்தார். இதுலாம்
திங்கப்படாதுண்டா இந்த பச்ச பலாக்கா அவிச்ச வெந்த பொடியையா தண்ணில கலக்கி குடிக்கணும்
. எந்த ஒலகத்துல இருக்குறான் இந்த ஆளு என எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.
பிற ஆண் பெண் தொடர்பாடலில் உள்ள சிக்கல்களை எடுத்துக்
கூறி அதை தவிர்க்கும்படி சொன்னால் எல்லோரும் செய்யுறதத்தான் நானும் செஞ்சேன் ? என்ற
எதிர் கேள்வி, உதட்டுச் சாயம் பூசாதே உன் முகம் ஏற்கனவே அழகானதுதானே?, பாடி ஸ்பிரே
அடிக்காதே ! அத்தரை பூசு! புற்று நோய வெல குடுத்து கூப்பிடாதே , குக்கருல சோத்த ஆக்காதே
, ஏசி வேண்டாம் ஜன்னல தொறந்து உடு என்னதான் உரிமையான நெருக்கமான உறவு என்றாலும் பொது
இட பேணிக்கை என்று ஒன்று உள்ளது என எடுத்துச்சொன்னால்
உங்களுக்கு வயதாகி விட்டது , ஆலிமிடமும் கேட்டேன் அவரும் அதைத்தான் சொல்கிறார் என்றால்
அது தலைமுறை இடைவெளி என்கிறார்கள், எனது மன நிலையை ஐயத்துக்குள்ளாக்குகிறார்கள் அறிவுரை
சொல்லப்பட்டவர்கள்.
நம் அன்றாட வாழ்விலும் வாழ்க்கை சடங்குகளிலும் முளைத்து
கிடக்கும் நுகர்வு வெறிக்கு எதிராக நாம் எடுக்கும் எடுக்க முனையும் செயல்பாடுகளில்
பெரும்பாலானவை வீட்டினராலேயே பெருஞ்சல்லியமாக பார்க்கப்படுகின்றது. அலட்சியமாக கடக்கப்படுகின்றது.
அந்த வெண்தாடி தீர்க்கதரிசி இப்போது அங்கிருக்கின்றாரா
? அந்த பச்ச பலாக்கா அவிச்ச வெந்த பொடி கடையும் அங்கேதான் இருக்கின்றதா? தெரியவில்லை.
சாத்தான்குளத்தின் திசை நோக்கி கண்ணீரை காற்றுக்குள் பொதிந்து எறிவதை தவிர வேறொன்றும்
என்னால் செய்ய இயலவில்லை.
No comments:
Post a Comment