23/12/2025 யாவரும்.காம் இணைய சஞ்சிகையில் முகமது இப்றாகிம் அலி எழுதியது.
| முகமது இப்றாஹிம் அலி |
பொறுப்புகள் ஒவ்வொன்றாக அவனின் மேல் செலுத்தப்படுகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தச் சுமையை சுமக்கத்தான் வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதற்குப் பின்னால் இருப்பது எல்லாம் இந்த சமூகத்தால் கட்டமைத்த விடயங்கள் தான்.
அதில் மய்யமாக பணம் தான் வாழ்வின் ஆதார இன்பம் என திரும்பத்திரும்ப கற்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனின் தேவை இருக்கிறது தான் ஆனால் அது தான் வாழ்வின் ஆதர்சம் என்று கூறுவது தான் ஏற்புடையதாக இல்லை. அப்படி இந்த வாழ்வின் இன்பம் பணம் தாண்டி பல விடயங்கள் இருக்கிறது என்று புத்தகங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அப்படி புத்தகங்களின் மூலமாக உலகை அறிந்து கொண்டு வாழும் அபூ என்ற இருபது வயது இஸ்லாமிய இளைஞனின் வாழ்வுப் பயணம் தான் இந்த நாவல் அல்லது குறுநாவல் என்றே சொல்லத் தோன்றுகிறது.
தமிழில் இஸ்லாமியர்களின் வாழ்வுப் பற்றி எழுதும் பலர், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு எண்ணம் உண்டு. இஸ்லாமிய மதம் மீறி செய்யும் விடயங்களாக உறவு பிறழ்வு, சுதந்திரம் என்று அவர்களே கற்பிதம் செய்து கொள்ளும் விடயங்கள், தர்கா வழிபாடு சார்ந்த விடையங்கள் அல்லது மந்தரித்து ஓதும் நபர்கள், காதல்கள், கலவரங்கள் என்று ஒரே குட்டையில் தான் உழல்கிறது. ஏன் ஒரு முஸ்லிமுடைய மனதைப் பிரதிபலிக்கும் அளவு எழுதப்படவில்லை என்ற குறை எனக்கு இருந்திருக்கிறது. அந்தக் குறையை இந்த நாவல் ஓரளவுக்கு நிவர்த்தி செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
காயபட்டினத்தில் வாழும் வாழ்வு எப்படியான வாழ்வு, அந்த நிலத்தில் இருக்கும் ஆண்கள் பெரும்பான்மையினர் செய்யும் வேலைகளாக இருப்பது ஒன்று சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்வது அல்லது வெளிநாடு/வெளியூர் சென்று சம்பாதித்தல். இதில் இரண்டாம் நிலைதான் அதிகபடியான முஸ்லிம்களின் நிலைமை. இது தான் பல முஸ்லிம்களின் முந்திய தலைமுறைகளின் நிலைமை கூட.
தன்னுடைய வாழ்நாளின் முப்பது ஆண்டு காலம் அந்நிய நாட்டில் உழைத்து உழைத்து முதுமையில் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது அப்போது அவர்களின் வாழ்வில் பயன் என்ன என்றே தெரியாமல் தான் இருக்கிறார்கள். இந்த சமூகத்தில் நன்மதிப்பு புகழோடு வாழவேண்டும் என்ற ஒற்றை விடயம் தான் அவர்களுக்கான அப்போதைய ஆறுதல். இது மட்டுமே ஒருவனுக்குப் போதுமானதாக இருந்து விட முடியுமா, அது என்ன பெரிய இன்பத்தை தந்துவிடப் போகிறது. நம்மிடத்தில் உதவி என்று வந்து கேட்கும்போது நம்முடைய மனம் பணம் சார்ந்த கணக்கு போடுகிறது என்றால் நாம் எப்படி வாழ்கிறோம் என்று சுய பரிசோதனை செய்து பார்த்து கொள்ள வேண்டும் என இந்த நாவலில் பல இடங்களில் வரும் கதாபாத்திரங்கள் இந்தக் கேள்விகளைத் திரும்பத்திரும்ப வாசகனிடத்தில் கேட்கிறது.
இந்த நாவலின் மய்யப் புள்ளியாக இருக்கும் இருபது வயதுடைய ‘அபூ’ விற்கு பலர் வாழும் வாழ்வான பிறந்தோம் உழைத்தோம் இறந்தோம் என்ற சுழற்சி வாழ்வை வாழ்வே கூடாது என்ற இறுக்கமான பிடிப்பு இருக்கிறது. அப்பா உழைத்துக் கொண்டிருந்தவரை அவர் எதுவும் கூறாமல் இருந்தார், ஆனால் அவரின் வீழ்ச்சி இவனுக்கு அழுத்தம் தரத் துவங்குகிறது, அதுவெல்லாம் இயல்பு தானே, அது பொறுப்புகள் தானே, பிறகு ஏன் இவன் இப்படி பொறுப்பற்றவனாக வாழ வேண்டும் என்று நமக்கு தோன்றும். அதுவெல்லாம் இந்த பொதுபுத்தி உருவாக்கியவை தான், ஏன் இப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வியை நாமும் கேட்கப்போவதில்லை அப்படி கேட்போரையும் ஒரு விரோதம் நிறைந்த மனதோடு தான் பார்க்கிறோம், நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் பார்த்தேன் ஆனால் இந்த மனப்போக்கை உருவாக்கியது இந்த சமூகம் தான் என்று உணரும்போது அதை மறுபரிசீலனை செய்து அபூவின் செயல்கள் மீதும் ஓர் அறம் இருக்கிறது என்று தான் ஒப்புக்கொள்கிறேன்.
எந்த மதமாக இருந்தாலும் அந்த மதம் சார்ந்த மரபு என்பது ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்றார் போல அது ஒரு வடிவத்தில் நிலைகொள்கிறது, இதை அந்தந்த மதங்களின் செயல்பாடுகளை வைத்து பிரித்து உணர்ந்து கொள்ளலாம்.
அந்தந்த நிலம் சார்ந்து இஸ்லாமிய மதத்திற்க்கும் சில மரபுகள் இருக்கிறது – ஆனால் இஸ்லாம் அப்படி கூறுவது கிடையாது – அந்த நிலமரபின் தொடர்ச்சியை ஓர் இஸ்லாமியன் பின்பற்றுகிறானோ இல்லையோ அது சார்ந்த கேள்விகளை மட்டும் எழுப்பக்கூடாது என்று இருக்கிறது.
அப்படி கேள்விகள் எழுப்பும்போது அது சார்ந்த தர்க்கங்கள் நடக்காமல் அந்த ஜமாத்(ஒவ்வொரு ஊருக்குள் இருக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பு) அதைக் கண்டிக்கிறது, அவனை வெளியேற்றுகிறது, அவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கிறது, தோளுக்கு தோழனாக இருந்தவர்கள் அந்நியர்களாக மாற்றம் கொள்கிறார்கள். அப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் ஓர் உரையாடல்தான், அதற்கு கூட இடம் தர மறுக்கிறார்கள்.
அப்படித்தான் அபூவின் வாழ்வில் அவன் வெறும் ஜே. பி யின் கேசெட்டை வைத்திருந்தான், இஸ்லாமிய மார்கம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பும் உரைகள் தான் அவை. அது அவன் மட்டும் கேட்டு அறிந்து கொள்ளும் விடயங்கள் தான் எனினும் அந்த ஜமாத் அவனின் பெற்றோருக்கு நெருக்கடியை உருவாக்கி அவனை அந்த நிலத்திலிருந்தே வெளியேற்றுகிறது.
இம்மாதிரியான சந்தர்ப்பமே போதும் அவர்களுக்கு அவனை ஒரு வேலையில் கட்டிப் போட்டு விடலாம் என்ற நம்பிக்கையை நிலைநிறுதுவதற்கு, அப்படித்தான் அபூவின் வாழ்வு புதிய நிலத்தை நோக்கி நகரத்துவங்கியது.
அல்லாஹ்விடத்தில் மட்டுமே தன்னுடைய அடிபணிதல் என்று வாழும் அபூவுக்கு சென்னையின் நூல் மொத்த வியாபாரக்கடையில் இருப்பு கொள்ளவில்லை, கண்கள் காணும் அநியாயம் ஒரு புறம் இருக்க அந்தக் கடை முதலாளிகள் மனிதநேயம் அற்று செய்யும் செயல்களை இவனால் சகித்துக் கொண்டு வாழமுடியாமல் மீண்டும் ஊருக்கே திரும்பியதும், அங்கிருந்து வேறொரு நிலத்துக்கு நகர்கிறான். அது அவனுக்கு பல புதிய திறப்புகளைத் தருகிறது, இந்த திறப்புகளின் ஊடாக அ
வன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாற்றம் கொள்கிறான். அவனை சுற்றி நடக்கும் அரசியல் புரிதல் கிடைக்கிறது, களத்தில் அவன் இறங்கி செய்யும் செயல்பாடுகளால் அவனுக்கு பல இடையூறுகள் முளைக்கத் துவங்குகின்றன. அதிலிருந்து தப்பிக்க ஊர் ஊராக அவனின் வாழ்வு ஒரு நாடோடியைப் போல பயணம் கொள்கிறது. இதற்கு எல்லாம் முடிவாக அவனின் வாழ்வில் வரும் ஓர் பேரிழப்பு அவனின் மேல் பொறுப்புகளை சுமக்கத் துவங்குகிறது. இந்தப் பொறுப்புகள் அவனின் விருப்பமாக மாறுதல் அடைதல் தான் அவன் கண்ட வாழ்வின் பொருளாகிறது.
இந்த நாவலின் தலைப்பான 'கசபத்' என்ற அரபி சொல்லின் பொருளாக சம்பாதித்தது, பெற்றது என்று வருகிறது. எல்லோருடைய வாழ்விலும் அவரவருக்கு என்று இருக்கும் கசபத் என்பது அவர்களின் வாழ்வை எந்தளவுக்கு இன்பத்தில் வைத்திருக்கிறது, அதுவெல்லாம் அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டது என்றாலும் அவர்களுக்கு மட்டுமே உரியதா? அதனால் அவர்கள் பெற்றவை எவை, இழந்தவை எவை? என்று அவரவர்கள் கேள்வியை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நாவலின் கடைசி அத்தியாயத்தில் அபூ அவனின் வாழ்வில் பெற்ற கசபத் என்னவென்று அவனின் நண்பர்களுக்கு எடுத்துரைக்கும்போது அவர்கள் உணர்வது என்ன? நாம் உணர்வது என்ன? என்று சில முக்கிய கேள்விகளை எழுப்ப முடியும். இது தான் இந்த நாவல் தரும் மய்ய சாரம்.
வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்தக் நாவலை(குறுநாவல்) சாளை பஷீர் எவ்வாறு கையாண்டு இருக்கிறார் என்று பார்க்கும்போது எந்த பெரும் குழப்பங்களையும் வாசகனுக்குத் தராமல் நேர்கோடு தன்மையியே நகர்த்துவதும், தன்னிலையில் இந்தக் கதையைக் கூறவது ஒரு விதமான சுயசரிதைத் தன்மையை தருகிறது என்றாலும் அவர் கையாண்டிருக்கும் மொழியும் ஆங்காங்கே வரும் படிமங்களின் விவரணையும் இருள் சார்ந்த பார்வைகளும் வாசகனின் வாசிப்பின்பதிற்கு தீனிபோடும் பல விடயங்கள் இருந்தது.
பல இன்பங்கள் இருந்தாலும் சில நெருடல்கள் இருக்கத்தானே செய்யும். எனக்கு சில நெருடல்களாக இருந்தது இதில் தெளிவாக குறிப்பிடப்படாத காலம் தான். ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு இது எப்போது நடக்கிறது என்று யூகித்துக் கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆனால் அது நேரம் எடுத்துக் கொள்ளும்போது இடையில் வரும் ஒரு கதாபாத்திரமான “இஸ்மாயில் காக்கா” வின் விவரணை இந்த காலம் என்ற குழப்பத்தை தருவதுதான் எனக்கு நெருடலாக இருந்தது.
மற்றொன்றாக நான் பார்ப்பது இன்னும் அபூவின் வாழ்வை எழுதி இருக்கலாமே, இடையில் விடப்பட்ட ஒரு நீண்ட காலம் பற்றி ஓரிரு வரிகளில் கடந்து எனக்கு உவப்பாகப் படவில்லை, விடுபட்ட கால வாழ்வு வேறொரு நூலாக வரலாம் என்றும் உள்ளுக்குள் தோன்றினாலும் இங்கு அதனின் தேவை இருக்கிறதோ என்று தான் மனதில் உறுத்தலாக இருக்கிறது. சாளை பஷீர் அவர்கள் மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.
(கட்டுரையாளர் முகமது இப்ராஹிம் அலி – சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர். ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com)

No comments:
Post a Comment