2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். சென்னை பெருவெள்ளத்தின்
விளைவாக ஜய்ப்பூர் – சென்னை தொடர்வண்டி இயக்கப்படவில்லை. ஆக்ராவில் தமிழ்நாடு விரைவுத்தொடர்வண்டியை
பிடித்து சென்னை வந்து கொண்டிருந்தேன்.
கல்வி வேலையாக தில்லியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த
சேலத்தைச் சார்ந்த மூன்று இளைஞர்களும் பயணித்தனர். வாசிப்பு பண்பு உள்ளவர்கள். அவர்களுடன்
பேசிக் கொண்டிருக்கும்போதே தில்லியில் பார்த்த தலையாய இடங்களில் காந்தி அருங்காட்சியகத்தையும்
சொன்னார்கள். மூளைக்குள் காரம் ஏறி புரையேறியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தில்லிக்கு
வந்து போய் இருந்தும் இப்படி ஒன்றிருப்பது தெரியாமல் போய் விட்டதே என்ற அறியாமை தந்த
துயரும் சேர்ந்து கொண்டது.
அதன் பிறகு இடையில் தில்லி போக வேண்டி வந்தாலும்
சூழல் சரியாக அமையாததினால் காந்தி நினைவகத்திற்கு போக முடியவில்லை. இவ்வருடம்
(2019) செப்டம்பர் மாத இறுதிவாக்கில் தில்லி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நல்வாய்ப்பாக
இந்த வருடம் காந்தி பிறந்ததின் 150ஆம் வருட நிறைவு.
அக்டோபர் 1ஆம் தேதி , தீஸ் ஜனவரி மார்க்( 30 ஜனவரி
சாலை )யில் உள்ள பிர்லா இல்லத்திற்கு சென்றேன். காந்தி கொல்லப்பட்ட தினம் 30ஜனவரி என்பதால்
அதையே பெயராக வைத்து விட்டார்கள்.
பழைய தில்லியில் உள்ள அஜ்மீரி வாயில் அருகே நின்று
பிர்லா ஹவுஸ் அல்லது தீஸ் ஜனவரி மார்க் என்று கேட்டாலே எந்த வண்டிக்காரருக்கும் தெரியவில்லை.
ஓலா ஒப்பந்த ஊர்தி வருவதிலும் சிக்கல் இருந்தது. ஒரு நாட்டிற்கு இத்தனை தன்மறதியும்
அலட்சியமும் ஆகாது.
இன்னும்
பத்து வருடம் கழித்து ,காந்தியின் படத்தை கையோடு கொண்டு வந்தாலும் வழி சொல்வதற்கு ஆள்
இருக்காது. அதற்கிடையில் காந்தியின் பெயரும் படமும் கூட சட்ட எதிர் சங்கதிகளாக கூட
மாற்றப்படலாம்.
காந்தியத்தின் எதிர் விசை ஆளும் நாட்டில் எதையும் ஒதுக்கி விடுவதற்கில்லை
ஒரு வழியாக ஒரு ஆட்டோக்காரர் சிக்கினார்.ஒரு மாதிரியாக
இடத்தை புரிய வைத்த பின் கிளம்பியாகி விட்டது. சஞ்சீவனி மலையும் கதையும் ஏந்திய செந்நிற
ஞெகிழி அனுமான் அவரின் முகத்துக்கு நேரே வலப்புறமும் இடப்புறமும் ஆட பேச்சு தொடங்கியது.
எங்கள் மோதி ஸாபை பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் என்றார் ஆட்டோக்காரர். குறுகுறுப்பு
படர்ந்தது.
என்ன எழுதணும்?
அவருட ஆட்சியப்பத்திதான்
ஆட்சி எப்படி இருக்கு?
அதை ஏன் கேக்குறீங்க?
நோட் பந்தி( செல்லாக்காசு ) பிரச்ன வர்றதுக்கு முன்னாடி
, காலையில பதினோரு மணி கிட்ட ஆயிரம் ரூபா வந்துரும். சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது
கையில இரண்டாயிரம் ரூபா நிக்கும். இப்போ என்னடான்னா
, மதியம் மூணு மணி ஆவுனாத்தான் ஆயிரம் ரூபா சேருது.
இவங்க பட்ஜட் போட்டவுடனேயே டிவிக்காரங்க கேமிராவ
தூக்கினு வந்து ரிக்சாக்காரரிடம் பட்ஜட் எப்படினு கருத்து கேக்குறாங்க.
அவருக்கு என்ன தெரியும். எங்கிட்ட கேளுங்கன்னு மீடியாக்கரரங்கள
பாத்து சொன்னவுடனேயே மைக்கும் கேமிராவும் என் பக்கம் திரும்பிச்சி.
என் கருத்த கேட்ட கொஞ்ச நேரத்துல இடத்த காலி பண்ணிட்டு
போய்ட்டாங்க. அவங்க எதிர்பாத்தது கிடைக்கல
மோதி ஸாஹப் எப்படியோ அப்படித்தான் மீடியாக்காரங்களும்
அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லணும்.
மோதியின் பிரஸ் மீட்டுல போய் நீங்க இஷ்டத்துக்கலாம்
கேள்வி கேக்க முடியாது. மொதல்லயே உங்க கேள்விய எழுதிக் கொடுக்கணும்.
பெருமை அடிக்கிறத தவிர இவருக்கு என்ன தெரியும்? பொருளாதாரம்
தெரியுமா? அயலுறவு தெரியுமா? அரசியல்தான் தெரியுமா? தெரிஞ்சாத்தானே பதில் சொல்றதுக்கு?
பிர்லா இல்லமும் வந்து விட்டது. அவர் ஆட்டோக்காரர்
என்பதும் எனக்கு மறந்தே விட்டது. பேசியதற்கும் மேலாக கட்டணம் கொடுத்தேன்.
அடுத்த நாள் காந்தி ஜயந்தி என்பதால் பிர்லா இல்லத்தில்
மெலிதான விழாக்கோலம். காந்தி ஜயந்திக்கான கொண்டாட்டங்களுக்காக குழந்தைகள் பல்வேறு ஒத்திகைகளில்
ஈடுபட்டிருந்தனர். பள்ளி மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் சாரை சாரையாகவும் உதிரியாகவும்
அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்தனர்.
காந்தியின் இறுதி 144 நாட்கள் இங்குதான் கழிந்திருக்கின்றன.
செப்டம்பர் 9, 1947 முதல், 30,ஜனவரி,1948 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை இந்த இல்லத்தில்
வசித்துள்ளார்.
கண்ணாடி, தடி,பைக்கடிகாரம், கரண்டி, சிறு கத்தி,
மெத்தை… என காந்தி பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள். அவரின் கடைசி
நாட்கள், தருணங்கள், உரையாடல்களை நிழற்படமாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். கோட்ஸேயின்
குண்டு துளைத்து காந்தி வீழும் காட்சியும் வரையப்பட்டு ஓவியமாகவுள்ளது. அம்புடன் துளைத்து வீழும் வெண்புறாவை மனு பென் ஆபா பென் என்ற இரு தேவதைகள் தாங்கி பிடிப்பதைப்போல
தோற்றம்.
1971 ஆம் வருடம் இந்த பிர்லா இல்லத்தை கையகப்படுத்திய
நடுவணரசு 1973 ஆம் ஆண்டு காந்தி ஸ்மிருதி எனப் பெயர்மாற்றி பொதுமக்களின் பார்வைக்காக
திறந்தது.
தான் கொல்லப்படும் தினத்தன்று தனது அறையிலிருந்து
மாலை நேர பிரார்த்தனைக்காக காந்தி நடந்து சென்ற பாதையை காலடித்தடங்களாக சிமிட்டியில்
வடிவமைத்து தனியாக பராமரிக்கின்றனர். கொஞ்சம் தொலைவு அந்த பாதைகளில் நடந்தேன். அங்குள்ள
நிர்வாகிகள் அந்த பாதையை விட்டு அகலும்படி என்னை கேட்கும் வரை . அந்தியின் பொன் துகள்களுக்குள்
தோய்ந்த ஜனவரி 30 இன் குருதித் துளிகள் காலுக்கு கீழே நதி போல ஓடுவதான நினைவு.
புல்லின் பசுந்தரையில் நிற்கும் மண்டபம். அதனுள்
நாதுராம் கோட்ஸேயால் காந்தி சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில்
நினைவுக்கல்லொன்று நடப்பட்டுள்ளது. காந்தி கொல்லப்பட்ட காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிக்குழந்தைகள் மண்டபத்தின் முன் அமர்ந்து கண்களை
மூடி உருக்கமாக பஜனை பாடிக் கொண்டிருந்தனர். நான் கசிந்து நின்றேன். இந்தியாவின் துணைக்கண்டத்தின் உலகத்தின் மாபெரும் விசை மையம்.
நம்பிக்கையின் அமைதி வழியின் மையச்சுழலானது அதன் எதிர் நச்சு சுழலால் வன்முறையால் வெறுப்பால்
ஒடுக்கப்பட்ட இடம்.
ஜனவரி 30, 1948 அன்று காந்தியின் தசை வடிவை வீழ்த்தியதின்
வழியாக ஹிந்துத்வ ஃபாஸிஸம் அனிச்சையாகவே தன்னை வரலாற்றின் குருதி கவுச்சியடிக்கும்
இருள் மூலைகளில் தன்னை நிரந்தரமாக அமர்த்திக் கொண்டது.
வன்முறை ஒறுப்பு, அகம் புறமான நேர்மை, தனி மனிதனின்
அகச்சனநாயகம், அரசின் பொது சனநாயகம், ஆன்ம விசாரணை, எளிய மக்களை மனங்கொண்ட பொருளாதாரம், தீண்டாமை ஒழிப்பு,
இந்திய மண்ணில் சிறுபான்மைக்குரிய மதிப்பும் அந்தஸ்தும் நிரம்பிய இடத்தை பெறுவதற்கான
யத்தனம் , இயற்கை மருத்துவம், நுகர்வு வெறுப்பு, எல்லா மனிதர்களுக்குமான நீதி, மதத்தை
அதன் வெறித்தனத்திலிருந்தும் கீழ்மையிலிருந்தும் விடுவித்தல் , வாழ்க்கைக் கல்வி என
அவர் தன் உயிரொழுக வாழ்நாள் முழுக்க போராடியதன் பெறுபேற்றை காந்தி அடைந்த இடம்.
காந்தி எந்த உன்னதங்களுக்காக வாழ்ந்தாரோ அந்த உன்னதரை
வீழ்த்தியதின் வழியாக ஹிந்துத்வ ஃபாஸிஸம் தன்னை அனைத்து கீழ்மைகளின் பிறப்பிடம் என்பதை
மறு உறுதி செய்த நாள்.
காந்தி நினைவகத்தில் வருகையாளர்களுக்கான குடிநீர்
வசதி கூட இல்லை. வரவேற்பறையில் இருந்தவர்களிடம் குடிநீர் கேட்டதற்கு மூன்று மூலைகளை
நோக்கியும் மாறி மாறி கைகாட்டுகின்றார்கள். ஒரு வேளை அங்கெல்லாம் தோண்டினால் நீர் கிடைக்குமாகயிருக்கும்.
இங்கிருந்த காதி விற்பனையகத்திற்குள் நுழைந்து சிறிய
ராட்டையும் பைக்கடிகாரமொன்றும் வாங்கிக் கொண்டேன். புற வாழ்வில் காந்தியை நினைவுபடுத்திக்
கொள்வதற்கான சாதனங்கள்.
சட்டைகள் வாங்கலாம் எனப்பார்த்தால் அரசின் முழு தள்ளுபடி
கிடையாது. பகுதிதான் தருவேன் என்றார்கள். வேண்டாம் என வந்து விட்டேன். ராஜ்காட்டின்
காந்தி தர்ஷனிலுள்ள காதி விற்பனையகத்திலும்
இதே சிக்கல்தான். அரசின் தள்ளுபடி 30%. ஆனால் 20%மேல் தரமாட்டேனென்றார்கள்.
வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டேன். வீட்டில் வந்து அணிந்து பார்த்தேன். உரத்த திரைச்சீலையை
அணிந்தது போன்ற உறுத்தல். பருத்திக்குள்ள தழுவும் இன்பமில்லை. டெரிகாட்டன் செயற்கை இழை பருத்தியினால் ஆன திரைச்சீலை போல் இருந்தது. காதி மோகத்தில் கண்ணை
மூடிக் கொண்டு வாங்காதே என மேல் சொல்லுகின்றது.
அடுத்த நாள் அக்டோபர் 02 . காந்தி பிறந்த நாள்.
150வது நிறைவு வருடம். ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
காந்தி ஜயந்தியன்று அவரின் சமாதியானது தலைவர்களின்
கொசுக்கடி தொல்லையாலும் பூமாலை சாற்றல் பசப்பல்களுடனும் நிரம்பி வழியும்.நம்மைப்போன்ற
சராசரி இந்தியனுக்கு , நாட்டுத்தந்தை அவரது பிறந்த நாளில் எட்டாத்தொலைதான்.
அக்டோபர்03 அன்று காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி சென்றேன். சமாதிக்கும் போகும் பாட்டையின் இருமருங்கிலும் முன்னாள்
தலைமையமைச்சர்களின் சமாதிகள் ஓய்ந்து போய் கிடந்தன . ஓரிருவரைத்தவிர யாருமில்லை.
கொத்தோ குர்ச்சு என வாயைக் குவித்தவாறே பெங்காலி
பேசியபடி வந்த சுற்றுலாப் பயணிகளுடன் வெளி நாட்டவர்களும் காந்தி சமாதியை நோக்கி வந்த
வண்ணமிருந்தனர்.
கொட்டி விரிக்கப்பட்ட பசும்புல் தரைக்கு மேலே வானம்
தனது அரசை வலுவுடன் நிலை நாட்டியிருந்தது. ராஜ்காட்டின் எல்லா மருங்குகளிலும் பேணப்படும்
அதீத தூய்மைக்குள் திணிக்கப்பட்ட அதிகார அமைதிக்கு நடுவே காந்தி சமாதி இருந்தது. மனக்குவிப்பை
சிதறடிக்க தேவையான எல்லாம் சமாதியை சுற்றி இருந்தன.
சமாதியை
விட்டு வெளியேறி சாலையைக்கடந்தால் காந்தி தர்ஷன் வளாகம் செந்நிறங் கொண்டு நிற்கின்றது.
1969இல் கொண்டாடப்பட்ட காந்தி பிறப்பின் நூற்றாண்டையொட்டியும் காந்தி கொல்லப்பட்டு
இருபத்தியோரு வருடங்கள் கழித்தும் திறக்கப்பட்டிருக்கின்றது
இவ்வளாகம்.
இங்கு காந்திய
இலக்கியங்களின் பதிப்பகம், காதி துணி, கைவினைப்பொருட்கள் உற்பத்தி & விற்பனையகங்கள்
உள்ளன. தண்டி உப்பு பயணத்தில் காந்தி ஏறிச்சென்ற ஓடம் கோட்டோவியம் போல நிறுத்தப்பட்டிருந்தது.
ஒருபோதும் மாய்க்கவியலாத கனத்த வரலாற்று நினைவுகளுடன் காந்தியாரின் உடல் தாங்கிய இறுதி
ஊர்வல ராணுவ வண்டியும் நிற்கிறது. காந்தி அரசியல் சமூக வாழ்க்கையோடு தொடர்புடைய ஒளிப்படங்கள், சுடுமண் சிற்பங்கள், சிலை என அமைத்துள்ளனர்.
36 ஏக்கரில் நிற்கும் காந்தி தர்ஷன் பன்னாட்டு கண்காட்சியின்
நோக்கம்: நவீன உலகின் பின்னணியில் காந்தியின் மெய்ம்மை, வன்முறையின்மையின் நற்செய்தியானது
இந்தியாவின் வாழ்விலும் நவீன உலகின் பிற நாடுகளிலும்
அது எப்படி ஊடுறுவியுள்ளது என்பதை விளக்கிடுவதுதான்.
நோக்கமெல்லாம் அழகாகத்தான் இருக்கின்றது.ஆனால் காந்தி
வாழ்ந்து உயிர் கொடுத்த தனிமனித விசாரணை, சமத்துவம்,
மத ஒற்றுமை, வெறுப்பு எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சன நாயகம், வன்முறையின்மை, நிலைத்த
பொருளாதாரம், அதிகார பரவலாக்கம் போன்ற துறைகளுக்கான ஆய்வு மையங்கள், விவாத அரங்குகள்
என எதையும் காணோம். திண்டுக்கல்லில் நடுவணரசின்
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் காந்தி கிராமிய நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தை
தவிர . இந்த பல்கலைக்கழகமும் வேறெந்த கலைக்கல்லூரியை விட எவ்விதத்திலும் மேம்பட்டதல்ல என காந்தியவாதிகள் விமர்சிக்கின்றனர். நாட்டில் காணப்படும் மற்ற முன்னெடுப்புகள்
அனைத்தையும் நிகழ்த்தி வருவது உள்ளார்ந்த ஒளி வழி நடக்கும் இந்த சமூகத்தின் தனி மனித
காந்திகளால்தான்.
காந்தியை, கடந்த காலத்திற்குள் ஒளிர்ந்திடும் பொன்
நாயகராக புதிய தலைமுறைக்கான அருங்காட்சியக அந்தஸ்துடன் மட்டுமே உறைய வைத்திடும் ஏற்பாடாகவே
இந்த காந்தி ஸ்மிருதி, காந்தி தர்ஷன், காந்தி தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்க்க
வேண்டியுள்ளது.
காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனராக இருக்கும்
முனைவர் அழகன் அண்ணாமலை அவர்கள் மதுரைக்காரர். நான் போன சமயம் அவர் விடுப்பில் இருந்தார்.
அருங்காட்சியகத்திற்குள் குருதி சாட்சிய காட்சிக்கூடமானது
1948, ஜனவரி30 தினத்தின் இருள் மண்டிய கணங்களை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டே
இருக்கின்றது.
புத்திந்திய ( புதிய இந்திய ) சிற்பிகளில் ஒருவரும்
பெருங்கவியும் காந்தியின் முன்னோடிகளில் குருக்களில் ஒருவரான ரபீந்திரநாத்தாகூர், காந்திக்கு
எழுதிய மடல் சட்டகம் , காந்தி தன் கைப்பட நூற்ற நூல்கண்டுடன் நேரு உள்ளிட்ட காந்தியின்
பெரும் சீடர்கள் நூற்றவைகளும் சிட்டையாக முடியப்பட்டிருந்தன. தேசத்தின் பேரிழைகள்.
காந்தி கொல்லப்படும்போது உடனுறை சாட்சிகளாக இருந்த
அவரின் பைக்கடிகாரமும் குருதிக்கறை படிந்த அவரின் ஆடையும் , அவரை துளைத்த தோட்டாவும் காட்சிப்படுத்தப்படும்போது
, காந்தியை வீழ்த்திய கரங்களை இயக்கிய மனதின் விசை என்ன? அது என்ன சித்தாந்தத்தால்
வளமும் உரமும் பெற்றது ?என்பதையும் சேர்த்தே காட்சிப்படுத்த வேண்டும்.
சென்ற நூற்றாண்டில் ஹிட்லரின் வெறுப்பு நாஜிஸத்தால்
மானுடத்தின் முகத்தில் பளிச்சென தெறிக்கப்பட்ட
யூதக்குருதியானது ஹோலோகாஸ்ட்
( பெருங்களப்பலி ) அருங்காட்சியகமாக நிறுவப்பட்டுள்ளது.. அதில் யூதர்களை நாஜிகள் பேரழிவிற்கு
ஆட்படுத்தியதை வெறும் படங்களாகவும் பொருட்களாகவும்
குறுக்கி ஆவணப்படுத்தி விட்டு யூதர்கள் நின்று விடவில்லை. அருங்காட்சியக இணையதளத்தை
திறந்தவுடன் நம் முகத்தில் வந்து அறைகின்றது what is anti Semitism? ( செமித்திய எதிர்ப்பு
என்றால் என்ன ?) What conditions and
ideas made the Holocaust possible?( பெருங்களப்பலியை சாத்தியப்படுத்திய எண்ணங்களும் நிலவரங்களும் எவை?) என்ற கேள்விகள்.
மேலும் வாசிக்க வாசிக்க வெறுப்பின் மூலஸ்தானத்தின் முன் நாம் கொண்டு போய்நிறுத்தப்படுகின்றோம்.
எந்தவித மறை திரை இல்லாமல் முழு அம்மணத்துடன் நிற்கின்றது நாஜியம்.
நாதுராம் கோட்ஸே , வினாயக தாமோதர் சாவர்க்கர், ஹிந்து மஹா ஸபை, ஆர்.எஸ்.எஸ்,
ஹிந்துத்வம், கலாச்சார தேசியம், ஒரே நாடு ஒரே….. ஒரே….. என்ற ஒற்றை சொல் நுனிகளுக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கரிய மானுட வெறுப்பை இழுத்து வந்து காட்சி மாடத்திற்குள்
உட்கார வைத்திருக்க வேண்டும்.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்த நாட்டையாண்ட காங்கிரஸ்
கட்சிதான் இதை செய்யத்தவறியதற்கு முழுமுதல் பொறுப்பு. நூற்றுக்கணக்கான பள்ளிகுழந்தைகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக
காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர். எல்லா தலைமுறையினருக்கும் ஹிந்துத்வம்
என்பது நாட்டுப்பற்று இல்லை. அது சக மனிதனின் தசையினாலும் பச்சை குருதியினால் பிசைந்து
சுடப்படும் ஒரு கொலைப்பணியாரம் என்பதை மொத்த
உலகும் அய்யமற புரிந்திருக்கும்.
காந்தி கொலைத்திட்டத்தின் சூத்திரதாரியும் சனநாயகத்தின்
அடிமுடி வைரியுமான சாவர்க்கருக்கு, ஃபாஸிஸ்டுகளால்
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் படம் வைக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுப்பிழையை விபத்தை கெடுபேற்றை இயல்பாக்கி பொறுத்துக் கொண்ட அபத்தம் நமக்குள் நிகழ்ந்திருப்பது
என்பது சமகால உண்மையாகும்.
நாட்டுத்தந்தை பட்டத்திலிருந்து காந்தியை பதிவியிறக்கம்
செய்து கோட்ஸேயை அந்த இடத்தில் இவர்கள் கொண்டு வைப்பதற்கான சடங்குகள் வட இந்தியாவில்
ஆங்காங்கே நடக்கத் தொடங்கி விட்டன. உறுபசியுடன் கொண்ட வேட்டை விலங்கைப்போல எதிர்காலம்
எல்லாவித சாத்தியப்பாடுகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றது.
இங்கு தமிழகத்தில், ஹிந்துத்வத்திற்கான அறிவுத்தள
மேடையை பொது ஏற்பை உண்டாக்கிடும் வகையில் வலதுசாரி
இலக்கிய மோசடியானது தனது யத்தனத்தை தொடங்கியுள்ளது.
தன்னை எப்படியாவது
கொன்று விடும்படி ஹிந்து மஹா ஸபை, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு போய் காந்தி மன்றாடியதற்குப்
பிறகே கோட்ஸே பெரிய மனது பண்ணி வேறு வழியில்லாமல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றியது
மாதிரி ஜெயமோகன் முன்மொழிய வெவ்வேறு தளங்களில் ஆசானின் பக்தாள்ஸ் அதற்கு பொழிப்புரை
எழுதிக் கொண்டிருக்கின்றனர். இட்டுக்கதைகளை உருட்டுத்திணையளவிற்கு நூல்களாக்கி மாய்ந்து
மாய்ந்து எழுதி வரலாற்றுண்மைகளாக மாற்றும்உருள் புரள் ரஸவாதிகள்.
காந்தியின் 150ஆவது பிறந்த வருடக் கொண்டாட்டத்தை
எவ்வித கூச்சநாச்சமுமின்றி முன்னெடுக்கும் நாட்டுத்தந்தையை கொன்றவர்களின் தலைமுறையினர் , அவர் கொல்லப்பட்ட தினத்தை
வசதியாகவும் கள்ள மௌனத்தோடும் கடந்து செல்கின்றனர்.
பாபுஜீ
உங்கள் வாழ்வு மட்டுமல்ல உங்கள் இறப்பும் செய்திதான்
------------------------------------
படங்களின் தொகுப்பு;
No comments:
Post a Comment