Monday, 2 December 2019

மூன்று பிரிவுகள்






கடந்த மூன்று நாட்களில் மூன்று மனிதர்களின் பிரிவுகள்

அணுக்கமான தோழமைகளின் உயிர் உறவுகள் இவ்வுலகிலிருந்து விடுதலையாகியிருக்கின்றார்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அணுகியிருக்கின்றது இறப்பு.

வீதியில் ஹாயாக திரியும் கோழிக்குஞ்சின் மென்மயிர் கழுத்தில் கூர் நகங்கொண்டு கொத்தி பிடிக்கும் பருந்தைப்போல ஒருவரை கைப்பற்றியிருக்கின்றது.

சில மணித்துளிகள் நீடிக்கும் நில அதிர்வு போல ஆழிப்பேரலை போல நாட்களின் கணக்கில் இன்னொரு மனிதரை தனது விரல் நுனியில் வைத்து சுழற்றி பறித்திருக்கின்றது.


மூன்றாவது மனிதர் மாதக்கணக்கில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை நண்பர்களுடன் காணச் சென்றிருந்தபோது இறப்பானது முழு உருவங்கொண்டு அவரின் படுக்கையை சுற்றி அமர்ந்திருந்தது. சரியாக சொல்வதானால் அது அணிலாக இருந்தது. அதன் கூரிய பற்களில் சிதைபடும் பழத்தை போல இறப்பு அவரை மிக சாவதானமாக கொறித்து கொண்டிருந்தது.

இறப்பின் மூலம்
வாழ்வை அலங்கரிப்பவனே !

இறப்பானது உனது திரு முன்பு என்னை கொண்டு வரும்போது மழைத்துளியை உள்ளிழுத்துக் கொள்ளும் மண் போல காற்றை தனது மென் விரல்களில் தீண்டியள்ளும் காற்று போல கொண்டு வரும்படி அதனிடம் சொல்லி வை கண்ணே றஹ்மானே !!

No comments:

Post a Comment