Saturday, 7 December 2019

என் வாப்பா





மே 1, 2018

என் வாப்பா இன்று உயிரோடு இருந்திருந்தால் அவர்களுக்கு வயது 101.


அன்னார் மண்வாசத்தை தொடங்கி 21 வருடங்கள் கரைந்து விட்டன.
சென்னைக்கு பேருந்தில் சென்று இறங்கிய உடன் அன்னாரின் இறப்பு செய்தி எட்டியது.. நான் அன்று திரியும் மனிதனாக இருந்ததால் எனது இருப்பிடத்தை பற்றி உம்மா வீட்டாருக்கு தகவல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனது பணியிட நண்பர்களின் வழியாகவே எனது வாழ்வின் மிக முக்கியமான பிரிவுச் செய்தி என்னை வந்தடைய நேரிட்டது. அடுத்த பேருந்தில் ஊர் போய் சேர்ந்தபோது நள்ளிரவாகியிருந்தது.

வெளியூர் பயணங்களில் நான் கூடுதலாக அலைந்து கொண்டிருந்த காலம் அது. நள்ளிரவில்தான் பெரும்பாலும் வீடு திரும்புவேன். நான் எப்போது ஊர் திரும்பும்போதும் அகால செய்திகள் எதுவும் இருந்திடக்கூடாதே என்ற பதட்டம் மனதிற்குள் மெல்ல அதிரும். காரணம் அன்று செல்பேசி இல்லைதானே. பாய்வதற்காக பதுங்கி நிற்கும் விலங்கைப்போல பயணம் முடிந்து நான் ஊர் வந்து சேரும் வரைக்கும் நல்லதுகெட்டதுகளின் குவியல் காத்து நிற்கும்.


வாப்பாவின் இறப்பை தாங்கி நின்ற என் உம்மா வீடானது அந்த நள்ளிரவிலும் தனக்கேயுரிய முழு மௌனத்தில் நின்று கொண்டிருந்தது.
கோபம் என்று வந்தால் வாப்பாவுக்கு முன்னுக்குத்தான் நிற்கும். எனது அறியாத பருவத்தில் முதிராத இளமைகளில் வேகமாக அவர்களின் கோபத்துடன் உராய்ந்திருக்கின்றேன். அப்போது மனதிற்குள் மூளும் பகை உணர்வின் உயரத்தில் அவர்களை கசப்பான எதிராளியாக உணர்ந்திருக்கின்றேன்.

கோபம் தவிர்ந்த காலங்களில் வாப்பா மிகவும் நிதானமான மனிதர். தீர்க்கமான ஆலோசனைகள். ஆழ்ந்த பார்வை. எந்தவொரு முரண்பாட்டையும் இதமாக மனதுடனும் அறிவுடனும் உரையாடி பேசி கடக்கும் திறன். எங்களின் வாழ்க்கைக்குள் ஏற்பட்ட மிக நெருக்கடியான தருணங்கள் ஏற்படுத்தும் உளச்சிக்கலை கொந்தளிப்பை ஆழ்ந்த மௌனத்தின் நிலையில் சமன் செய்து மதியின் வழியாக சமாளிப்பார்கள்.

நான் பொதுவாக பிறப்பு இறப்பு தினங்களை கொண்டாடுபவன் அல்ல. முழு மன உடல் நலத்துடன் மே ஒன்றாம் தேதியின் புலரியில் தனது அன்றைய தினத்தை துவங்கிய சில மணித்துளிகளில் அன்னார் திடுமென விடை சொன்ன விதத்தினால் என்னால் மே 1 ஐ மறக்கவே முடியவில்லை. என் வாழ்வின் ஆதார புள்ளிகளான பெற்றோர்களை கண்ணீருடன் அல்லாமல் நினைவுகளின் ஓடைப்பரப்பில் கடக்க இயலுவதேயில்லை.

வருடங்களின் கணக்கில் அரை நூற்றாண்டை நான் கடந்து விட்டிருக்கும் நிலையில் நானும் ஒரு வாப்பா என்றான நிலையில் என் வாப்பாவின் அனைத்தையும் (அன்னாரின் கோபம் உட்பட) நான் எனக்கு உரியதாகவே உணருகின்றேன்.

No comments:

Post a Comment