நான் அன்றிரவு பள்ளிவாசலுக்கு இஷா தொழச் செல்லும்போது
கட்டைக் குரலில் கரகரப்புடன் ஒரு குரல் கேட்டது. ஒரு சாயலுக்கு தகரத்தை தரையில் வைத்து
இழுத்தது போலவும் அந்த குரல் இருந்தது. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே
என்பதுதான் அந்த குரல்.
அந்த குரலுக்குரியவர் தெருவின் ஓரத்தில் நின்றுக்
கொண்டிருந்தார். குள்ளமான தடித்த கருத்த உருவம்.. சட்டை அணியவில்லை. அரையில் இற்று
வெளிறிய லுங்கி.
நான் தொழுது விட்டு திரும்ப வரும்போது அவர் தலையில்
தொப்பி இருந்தது. அக்குளில் சிறிய கம்பொன்று இருந்தது. பள்ளிவாசலை பார்த்தபடி சல்யூட்
அடித்துக் கொண்டு நின்றிருந்தார்.
திரும்பவும் அவரை தெரு முக்கில் பார்த்தேன். கையில்
இருந்த சில சில்லறை நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். தடாலென என் காலில் விழுந்து விட்டார்.
அவரை மெல்ல கண்டித்து எழுப்பி உங்களுக்கு எந்த ஊர் என்றேன். பாண்டிச்சேரி. எனக்கு மூளை
சரியில்லை என்றவர் மீண்டும் ஒரு தடவை அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று
அதே பாணி குரலில் முழங்கியதுடன் கூடுதலாக முஸ்தபா முஸ்தபா என்றார்.
அல்லா ஒருவனுக்கே சரி அதென்ன முஸ்தபா ? என நான் கேட்டதற்கு
அந்த முழக்கத்தைத்தான் எனக்கு விடையாக தந்தார்.
மறுநாள் சுட்டெரிக்கும் மதிய வெயிலில் அவர் வந்தார்.
நேற்று அரையில் இருந்த அந்த லுங்கி கோவணமாக மாறியிருந்தது. அதே கரகர குரல். முழு அம்மணமாக
நின்றிருந்தார். காலை வளைத்து வளைத்து வந்த அவரிடம் கரடியின் களை வந்திருந்தது.
வேறு வேலையாக சென்றுக் கொண்டிருந்த நான் அவரை அக்கணத்தில்
கடந்து விட்டேன். ஆனால் கொஞ்ச தொலைவு சென்றதும் அவரின் அம்மணம் என் மனதிற்குள் பெருகியது.
வலியும் கூடவே வளர்ந்தது.
பொதுவெளியில் ஆடைகள் எதுவுமற்ற ஒரு வளர்ந்த மனிதனைப்
பார்க்கும்போது உண்மையில் அதை பார்க்கும் நாம்தான் அம்மணமாகி விடுகின்றோம்.
மனம் அழிந்த ஒரு மனிதன் தனது அம்மணத்தின் வழியாக
தன்னைத்தானே வதைத்துக் கொள்கின்றானா ? அல்லது தன்னை தற்போதைய நிலைக்குள் தள்ளி விட்ட
சமூகத்தை தண்டிக்கின்றனா ?
No comments:
Post a Comment