Monday, 16 December 2019

வேனல் தேர்தலின் வெந்தழல் அவிக்க ....



நின்றெரியும் வெயிலில் எந்த திரைப்படத்திற்கும் போகும் மன நிலையில்லை
சில தினங்களுக்கு முன் முகநூலில் தற்செயலாய் ஒரு நிகழ்வு பற்றிய பதிவை பார்த்தேன். சென்னை மிஜோ கூட் 2019 என்ற கலை நிகழ்வு. போவதென்று தீர்மானித்தேன். வடகிழக்கின் மணி துண்டமே இங்கு வரும்போது போய்த்தானே ஆக வேண்டும்.


சென்னை எழும்பூரில் அப்படியொரு இடம் இருப்பதை இப்போதுதான் அறிய முடிந்தது. காவல் அலுவலர்கள் நட்பகம் என்று உள்ளது. ஆதித்தனார் சிலை வட்டகையின் பின்புறம் அமைந்துள்ள இ.கா.ப. அலுவலர்களுக்கான மனமகிழ்வகம். வளாகத்தின் வாயிலோடு நகரம் நின்றுவிடுகின்றது.


பின்புற திடலில்தான் மிஜோ கலை விழா.

நிகழ்வு தொடக்கம் இரண்டு மணி என போட்டிருந்ததால் நான் ஒன்றரை மணியளவில் அங்கு போய்விட்டேன். பசுமை வேலிக்குள் நின்ற மேடை மட்டும் ஏகாந்தமாக மரங்களின் புல்தரையின் இருப்புக்குள் இருப்பாக இருந்தது.

வளாகத்தினுள் உணவகமொன்று இருந்தது. பொது உணவகமில்லைதான். அலுவலர்களுக்கானது.

பொதுவாக இது போன்ற உள்ளக உணவகங்களில் தரம் நன்றாக இருக்கும் என்பதால் உணவைக் கேட்டேன். சாம்பாரின் மஞ்சள் நிறத்தில் குளிப்பாட்டப்பட்ட வட்ட கும்பாரச்சோற்றையும் வெஞ்சனங்களையும் ஒரு தட்டில் ஏந்தியபடியே என்னை கடந்து சென்றார் ஒருவர். கும்பாரம் என்னை பார்த்து ஏதோ முணுமுணுத்தது போல் இருந்தது. அங்குள்ளவர்கள் முதலில் சோறு இல்லை என்றார்கள்.பின்னர் வரவேற்பு அலுவலரின் இசைவு வேண்டும் என்றார்கள். அவர் சம்மதித்தார். ஆனாலும் சோறில்லை தீர்ந்து விட்டது என்று தயங்கினார்கள்.

சோறில்லை என்றால் என்ன ? முட்டையும் பிரெட்டும் தாருங்கள் என்றேன். உடனே ஒத்துக் கொண்டார்கள். கால்மணி நேர காத்திருப்புக்கு பின்னர். பழக்கூழ், வறுத்த இளஞ்சூட்டில் நான்குரொட்டி துண்டங்கள், பாலேடு, இரட்டை ஆம்லேட், ஆகியன வெண்பளிங்கு தட்டத்தில் வந்தன.

அடித்து வீசிக்கொண்டிருக்கும்போது கூடத்தின் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு ஒரு குழந்தை வந்து, அங்கிள், பெப்பர் சிக்கன் கேக்குறாங்க என்றவுடன் இருபது நிமிஷத்தில் கிடைக்கும் என்ற மறுமொழி வந்தது. உயரலுவலரின் பிள்ளை போலும்.

இறுதியில் தேனீருக்காக சிட்டையை போட்டேன். பாலில்லை என்றார்கள். உண்டதிற்கு முப்பதைந்து ரூபாய்கள் கொடுத்தேன். மிகவும் மலிவு.

சென்னை மிஜோ நலன்புரி அமைப்பின் தலைவரும் செயலாளரும் அங்கு வந்திருந்தார்கள். மிஜோரத்தில் இருந்தால் இந்த விழா விரிவாக நடக்குமாம்.
சென்னையை எப்படி உணர்கிறீர்கள்? எனக்கேட்டபோது,
இங்குள்ளவர்கள் உதவிகரமானவர்கள். நான் ஹிந்தி பேச மாட்டேன். நீங்களும் பேசுவதில்லை. உங்களின் மொழி, பண்பாடு உள்ளிட்ட தனித்தன்மைகளை எங்களைப்போலவே நீங்களும் பேணுகின்றீர்கள்" என்றார்.

வருகை பதிவேட்டில் பெயரை பதியச் சொன்னார்கள். எனக்கு முன் பதிந்தவர்களின் பெயரோடு ரூ250, 500 என பதிந்திருந்தது. எவ்வளவு தரவேண்டும் எனக் கேட்டபோது , நீங்கள் இரவுணவு அருந்துவதாக இருந்தால் மட்டும் காசு கட்டுங்கள் என்றனர்.

கொஞ்ச நேரத்தில் சிவப்பு தீற்றலுடன் கூடிய வெண்பனிக்குழைகள் வரத்தொடங்கினர். வில் வளைவாக கீறி விடப்பட்ட இமை புழைகள் போன்ற மனிதர்கள். ஆடைகளுக்கும் ஆட்களுக்குமான போட்டாபோட்டி. பெரும்பாலும் இணைகளுடன்தான் வந்தனர். விதம்விதமான வாசனை திரவியத்தின் மெல்லிய மிதப்பானது புலன்களை ஆற்றத் தொடங்கியது

கலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தோடு மிஜோரம் அங்கு வந்து விட்டது. அழல் அவிந்து தண்மையும் நிறைந்தது


No comments:

Post a Comment