Sunday, 15 December 2019

ஜின்னின் இரு தோகை -- அனாரின் கவிதைகள்





நீ சொற்களின் கதவுகளை திறந்து விடுகிறாய்
ஆன்மாவின் சுவரிலிருந்த
ஒரே ஒரு ஜன்னலையும்

------------
உதிர்ந்து விழும் ரகசியத்திற்கும்
அள்ளிச்செல்லும் வாசனைக்குமிடையே
வண்ணத்து பூச்சி
நிறங்களின்
நடனத்தை தொடங்கியது

முழு உடலும்
பெரிய வண்ணத்து பூச்சியாகி
கண்ணாடி உள்ளே
ததும்பிக் கொண்டிருந்தேன்
------------------
என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன
தீப்பிழம்புகள் கொண்ட வானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது
-------------
தனிமையின் குருதி
இறப்பின் தனிமை
வசிய அழைப்புகளின் நறுமணம்
காட்டு நிலவின் மந்தாரம்
அடவி இருள் எனவும்
------------
எதனாலும் வரைந்து
முடித்து விட முடியாத அரூபத்திடலை
வரைவதற்கான
ரகசிய வண்ணம் வளரும்
உப்புத் தீ தூரிகை ஆகிறாய்
--------------
காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்
என்னை எங்கு கொண்டு
ஒளித்து வைக்க முடியும்?

ஜின்னின் இரு தோகை ( காலச்சுவடு வெளியீடு) தொகுப்பிலிருந்து
-----------------------
 நீ கடந்து சென்ற பிறகும் கூட திறந்து கொண்டே  செல்லும் கமுக்க சாளரங்களைக் கொண்ட மாயப்பகடை உன் வரிகளுக்குள் எப்போதும் உருண்டுக் கொண்டே இருக்கின்றது. உன்னை எங்கும் கொண்டு போய் ஒளித்து வைக்க முடியாது. காரணம் உன்னிலிருந்து பிறக்கும் வண்ணங்கள் அருவத்திலிருந்து பிறந்தவை. அதனாலேயே அவை அருவத்திற்குள்ளேயே மீள்கின்றன.

பெருஞ்சொல்லொன்றின் வலதும் இடதுமான உப்புத்தீ தூரிகைதான் நீ.

No comments:

Post a Comment