Thursday, 5 December 2019

தேய் மொழி









ஹிந்தி மொழி 161% வளர்ச்சி கண்டிருக்கின்றது. தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் அதில் பாதியளவுதான் வளர்ச்சி பெற்றுள்ளது.

---- செய்தி

சென்னையில் ஹிந்தி மொழி பேசப்படுவது அண்மை வருடங்களாக கூடுதலாகியிருக்கின்றது. இதற்கு காரணம் வட இந்தியாவிலிருந்து இங்கு தொழிலாளர்கள் வந்து சேர்வதுதான். இதை நாம் அபாயகரமானதாக நாம் பார்க்கவியலாது. காரணம் பிழைப்பை தேடி புலம் பெயரும் தொழிலாளர்கள் அவர்களின் தாய் மொழியில் கூட தேர்ச்சி இல்லாத வறிய விளிம்பு நிலை மக்களே.

அபாயகரமான விஷயம் எதுவென்றால், தொடர்வண்டி துறை உள்ளிட்ட நடுவணரசின் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வட மாநிலத்தவரின் எண்ணிக்கை கூடுதலாகி வருவதை தற்செயல் போல பார்க்க தோன்றவில்லை.


உள்ளூர் மொழியுடன் முழுக்க முழுக்க தொடர்புடைய அரசின் வானொலி தொலைக்காட்சி நிலையங்களில் கூட பிற மொழிக்காரர்கள் நியமிக்கப்படுவது நடந்து வருகின்றது. பல்கலைக்கழகங்கள் கூட தப்பவில்லை.

ஃபாஸிஸ பா.ஜ.க. அரசானது தமிழகத்தின் உயிர் மையத்தை சிதைத்து ஹிந்தி தேசீய மயமாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் முயல்கின்றது.

நடுவணரசின் திணிப்பு ஒரு பக்கம் கிடக்கட்டும் தமிழின் சிதைவிற்கு தமிழர்களாகிய நாம் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றோம் என்பதையும் பார்க்க வேண்டும்.

சென்னையில் வேகமாக பரவி வரும் ஜீ பண்பாடு. வாங்க ஜீ போங்க ஜீ என்பதை இப்போது எல்லா இடங்களிலும் பரவலாக கேட்க முடிகின்றது.

ஆங்கில மோகத்தின் விளைவாக தமிழ் வழிக்கல்வியை புறக்கணித்ததினால் இரண்டு மொழிகளுமே சரிவர தெரியாத ஒரு சமூகம் உருவாகியிருக்கின்றது.

ஆங்கிலம் கலந்த மொழி நடையில் பேசுவது எழுதுவதை எப்போது கைவிடப்போகின்றோம் ? நல்ல தூய தமிழில் பேச எழுத முயற்சிப்பவர்களை எள்ளலோடு பார்த்து சிரிப்பதை என்று மாற்றப்போகின்றோம்?

வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதெல்லாம் நல்ல முயற்சிதான். ஆனால் தமிழ் நாட்டில் தமிழை வாழும் மொழியாக ஆக்குவதற்கான தாய் மொழியை பாதுகாப்பதற்கான சட்ட முயற்சிகள் முழுமையை எட்டவில்லையே ?

சென்னையில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் ஸபா , நடுவணரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நடுவண் ஹிந்தி இயக்குனரகம் போன்றவை பொது பணத்தில் ஹிந்தியை தொழில்முறை நேர்த்தியுடன் கற்று கொடுக்கின்றன. நம்மிடம் அம்மாதிரி அமைப்புண்டா ?

அலுவலகங்களிலும் கல்விக்கூடங்களிலும் பெரு வணிக வளாகங்களிலும்{ மால்} பொழுது போக்கு மையங்களிலும் [கிளப்] வேஷ்டி லுங்கி கட்டிக் கொண்டு போவது இழிவாக பார்க்கப்படுகின்றது.

சென்னைக்குள் குடியேறி வாழும் மார்வாரி, குஜராத்திகள் பகுதிகளுக்குள் சென்று பாருங்கள். தமிழகத்திற்குள் இருக்கும் நினைப்பே வராது. தனிப்பண்பாட்டை பேணுவது நல்ல விடயம்தான். ஆனால் அவர்கள் இங்கு வந்து எத்தனை தலைமுறையானாலும் சரி தமிழை பொருட்படுத்தாமலேயே பிறந்து வாழ்ந்து சாகவும் முடியும். இந்தியாவின் வேறெந்த பகுதியிலாவது இது போன்று நடக்குமா ?

தாய் மொழியின் பெயரால் வெறியை வளர்க்கக் கூடாது. யாரையும் விலக்கி நிறுத்தக் கூடாது . ஆனால் தாய் மொழி குறித்த தன்னுணர்வும் கூடாதென்று யார் சொன்னது ?

No comments:

Post a Comment