Friday, 6 December 2019

தோப்பிலும் புத்தக கண்காட்சி அழைப்பும்






உலையிலிருந்து வழியும் நெருப்புக் குழம்பின் உக்கிரத்துடன் பேட்டையின் தெருக்களில் வெயில் ததும்பிக் கொண்டிருந்தது. வீரபாகு நகரின் கோவில் பூசாரியிடம் வழி கேட்டபோது இலக்கை சொன்னார்.

ஒரு வழியாக தட்டுத் தடுமாறி அவர் இருந்த தெருவிற்குள் நுழைந்தோம்.
மதில் வளைவிற்குள் கண்ணாடி போட்ட கட்டை உருவம் வாயிலில் நின்றது.


பழுப்பு நிற சட்டக கண்ணாடியிலும் கண்ணாடிக்குள் உருளும் கூர் கண்களிலும் தோப்பிலின் பெயர் எழுதியிருந்தது. அவர் நின்றிருந்த வாசலின் அருகே ஆங்கில எழுத்துக்களில் தோப்பில் முஹம்மது மீறான் என எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

வாங்கோ… என்றார். தென்னை, இதர மரங்களினால் வளாகத்திற்குள் வந்திருந்த கேரளம் அரைவாசி தமிழ்மயப்பட்டிருந்தது.

மெல்ல நடந்தவாறே நாற்காலிக்கு திரும்பினார். மனிதர் புது நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கின்றார். எழுது பலகையில் குமிழ்முனை பேனாவினால் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தாள்கள் கிடந்தன.

அவரின் பாதங்களில் இருந்த வீக்கத்தை சுட்டிக்காட்டி சுகரா என்றதற்கு இல்லே… இருந்து இருந்து கால தொங்கப்போட்டு எழுதுனதால உள்ள வீக்கம் என்றார்.
தோப்பிலின் முதுகுக்குப்பின்னால் உள்ள படச்சட்டத்திலிருந்து அன்னாரின் வாப்பா பார்த்துக் கொண்டிருந்தார்.

உரையாடல் பல்வேறு புள்ளிகளில் லேசாக தொட்டு தொட்டு சென்றது. நோன்பாதலால் கூடுதல் பேசிட இயலவில்லை. காயல் புத்தக கண்காட்சிக்கான(2018) அழைப்பை அளித்தோம்.

வாங்கிய கையோடு சொன்னார், “ கேரளத்துல எங்க போனாலும் தமிழ் நாட்டு முஸ்லிம்னு சொன்னா நீங்க காயல்பட்டினமான்னு கேக்குறாங்க. ஒங்க ஊரப்பத்தி எழுதுங்க. எழுதுறதுக்கு அவ்ளோ இருக்கு…. என்றவரின் கரம் பிடித்து பிரார்த்தனைகளுடன் விடை பெற்றோம்.

மதில் வளாகத்திற்குள் தூசுடன் தலை திருப்பியவாறே எம் 80 பைக் நின்றிருந்தது. தோப்பில் உடையதுதான். இப்போது அதை அவர் ஓட்டுவதில்லையாம். ஆனாலும் அது அவரை சுமந்த ஓர்மைகளுக்குள் ஆழ்ந்திருக்கக் கூடும்.

No comments:

Post a Comment