அது
ஸுல்தானின் ஆட்சிக்காலம் . அவர் கலைகளை போற்றுபவர் .வழமை போல அன்று அவரின் அவை
கூடும் நாள்.
அந்த அவையில்
அன்று கலைஞர்கள் கூட்டம். ஓவியம் தீட்டுவதில் தங்களுக்குள்ள திறமையை நிரூபித்துக்காட்டுமாறு கிரேக்கர்களை பார்த்து
சீனர்கள் அறை கூவல் விட்டனர். அவை
சலசலத்தது. எல்லோரும் ஸுல்தானின் முகம் நோக்கினர். ஒரு முடிவிற்கு வந்தவராய் ஸுல்தான்
பின்வருமாறு அறிவித்தார்.
நுண்கலைகளுக்காக
அரசு உருவாக்கியுள்ள கட்டிடத்தில் வந்து தங்களின் ஓவியத்திறமைகளை கிரேக்கர்களும் சீனர்களும்
நிரூபிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
ஓவியம்
தீட்டுவதற்கான பெரும் வரை பலகை பகுதிகள் இரண்டு நாட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டன.
அவை ஒன்றுக்கு ஒன்று நேர் எதிராக
அமைந்திருந்தன.
போட்டி
தொடங்கியது.
சீனர்கள்
விதம் விதமான வண்ணங்களை கொண்டு வந்து கலக்கியும் சேர்த்தும் புது வித
நிறச்சேர்க்கைகளை உண்டாக்கினர். பெரும் ஓவிய கலைஞர்களின் தூரிகைகள் விளையாடத்தொடங்கின.
கிரேக்கர்கள்
என்ன செய்தனர் ?
அவர்கள் எதையும்
வரைய தொடங்கவில்லை. அத்துடன் ஏற்கனவே அந்த வரை பலகையில் தீட்டப்பட்டிருந்த
வண்ணங்களை அழிக்கவும் செய்தனர். பின்னர் அந்த வரை பலகையை முழுவதுமாக மூடும் விதமாக
ஒரு திரையை தொங்க விட்டனர். திரைக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
வேலைகள்
மும்முரமாக நடந்தன. ஆனால் இரண்டு பக்கத்திலும் எந்த ஓசையுமற்ற ஆழ்ந்த மௌனம்
நிலவியது.
போட்டியின்
இறுதி நாள். தீர்ப்பு அறிவிக்கும் முற்பகல் நேரம் நெருங்கியது. மக்களிடையே பெரும்
எதிர்பார்ப்பும் ஆவலும் அலை மோதியது..
தங்களின் பணி
நிறைவடைந்ததை சீனர்கள் மேள தாளத்துடன் அறிவித்தனர்.
அவர்களின் வரை
பலகையில் அழகும் நுட்பமும் பொருளும் செறிவான ஓவியங்கள் உயிர் பெற்றிருந்தன.
நடுவர்களும் பொதுமக்களும் மலைத்து நின்றனர்.
பின்னர்
மன்னரும் நடுவர்களும் கிரேக்கர்களின் வரை பலகை பக்கம் திரும்பினர். தங்களுக்கு
ஒதுக்கப்பட்டிருந்த வரை பலகையின் மீதிருந்த திரையை அவர்கள் பணிவுடன் மெல்ல
அகற்றினர்.
என்ன அதிசயம்
!
சீனர்களின்
வரைபலகையில் இருந்த அத்தனை ஓவியங்களும் இவர்களின் வரைபலகையிலும் இருந்தது. இன்னும்
சொல்லப்போனால் முற்பகல் கதிரவனின் ஒளி பாய்ச்சலில் அந்த ஓவியங்கள் இன்னும்
தெளிவாகவும் பொலிவுடனும் காட்சியளித்தன.
கிரேக்கர்கள்
இத்தனை நாட்களும் செய்தது எல்லாம் அந்த வரைபலகை அளவிற்கு கண்ணாடி ஒன்றை ஆயத்தம்
பண்ணி மாட்டியதுதான்.
(மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) நீதிக்கதையிலிருந்து)
1. ஒரு இறை
நம்பிக்கையாளன் இன்னொரு இறை நம்பிக்கையாளனுக்கு
கண்ணாடி. ( நபி மொழி )
2. உலகில்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை நெறியை ஏற்றுக்கொள்ளும் தன்மையிலேயே பிறக்கிறார்கள், எனினும், அந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களே நெறி
பிறழச்செய்கின்றனர்" என்ற பொருள்படும் நபி மொழி .
இந்த இரண்டு
நபி மொழிகளையும் இணைத்து பார்க்கும்போது நிறைய உண்மைகள் நமக்கு புலப்படுகின்றன.
உலகிற்கு
வரும் மனித ஆன்மா ஒவ்வொன்றும் மாசு மருவின்றி தெளிவாகவும் எதையும் உள்ளது
உள்ளபடியே எதிரொலிக்கக்கூடிய ஒரு கண்ணாடித்தன்மையுடன்தான் பிறக்கின்றன.
முதலில்
பெற்றோரின் வாயிலாகவும் பின்னர் கண் , காது , மூக்கு , செவி , வாய் போன்ற அய்ந்து
புலன்களின் வழியாகவும் அவனது ஆன்மாவிற்குள் வந்து சேரும் கருத்துகள் , காட்சிகள் ,
செய்திகள் , அறிதல்கள் மூலமாகவும் அவனது ஆன்மா என்ற கண்ணாடி ஒன்று மென் மேலும்
மெருகடைகின்றது அல்லது மாசு பட்டு மங்குகின்றது .
ஆன்ம கண்ணாடி
ஒளிருவதும் மங்குவதும் வந்து சேரும் விஷயங்களின் தன்மையை பொறுத்திருக்கின்றது.
மனித ஆன்மாவை
தன் ஆன்மாவிலிருந்துதான் இறைவன் படைக்கின்றான். அனைத்து ஆன்மாக்களின் பிறப்பிடமாகிய
அந்த மூல ஆதாரத்தை அப்படியே நமது ஆன்மா என்ற கண்ணாடியில் எதிரொலிப்பதுதான் நமது
பணி.
நம் ஆன்மா
பளீரென்ற தூய்மையுடன் விளங்கும் வரைதான் அதில் நமது மூல ஆதாரத்தை அப்படியே காண
முடியும். அப்போது பல வகையான ஞானங்களும் நேர்வழியும் நல்லறிவும் மூலாதாரமாகிய
இறைவனிடமிருந்து நமக்கு கையளிக்கப்படும்.
இதைத்தான்
அஷ்ஷெய்ஹ் இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ) அவர்கள் பின் வருமாறு விளங்கச் செய்கின்றார்கள்.
அய்ந்து
புலன்களும் ஓய்வு பெறும் தூக்க வேளையில் மனித மனமானது எந்த வித சலனமுமின்றி
இருக்கின்றது. அமைதியான அந்த ஓய்ந்த தருணத்தில் வானத்தை நோக்கிய அதன் கதவுகள்
திறக்கின்றன. அப்போது விதிகள் தீர்மானிக்கப்படும் அந்த மேல் உலகில் உள்ள சில பல எதிர்கால
விஷயங்களை நேரடித்தன்மையிலோ அல்லது குறியீடாகவோ அறிந்து கொள்கின்றது மனித மனம் .
அதுதான் தூக்கத்தின் போது நாம் காணும் கனவு .
அந்தக்கனவிலும்
கூட இந்த எதிர்கால முன் கூறல்களை அந்த ஆன்மாவால் சில சமயம் சரி வர அறிந்து கொள்ள
இயலாமல் போகின்றது. காரணம் அந்த ஆன்மா விழித்திருக்கும் சமயம் அதன் மீது பதியும்
பாவக்கறைகளினால் அதன் அறியும் திறனிலும் இறைவனுடனான தொடர்பாடலிலும் குறைபாடு
ஏற்படுகின்றது.
ஆனால் தன்
மனதை எப்போதும் மாசு மருவின்றி தூய்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கும் நல்ல
ஆன்மாக்கள் கனவிலும் மட்டுமல்ல நேரடி வாழ்க்கையிலும் கூட நேர்மையான உள்ளுணர்வாலும்
மறைவான ஞானத்தாலும் வழி நடத்தப்படுவார்கள் என்கின்றார்கள் இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ).
ஆனால் நாமோ நம்முடைய
தவறுகளினாலும் பாவங்களினாலும் நமது ஆன்ம கண்ணாடியை கறை படியச்செய்து
மங்கச்செய்கின்றோம். அப்போது இறைவன் என்ற மூல மெய்மையை நம்மால் உணரவும் அறியவும்
இயலாமல் போய் விடுகின்றது.
இறைவனுடனான
தனது தொடர்பில் பலவீனமாகும்போது அம்மனிதனை பல வித துன்பங்களும் துயரங்களும்
நெருக்கடிகளும் சூழ்ந்து கொள்கின்றன.
சராசரி
மனிதனின் இந்த இயலாமையை சிரமத்தை இறைவனிடம் முறையிடும் வழியை கீழ்வரும்
வேண்டுதலில் பதிவு செய்கின்றார்கள் பேரான்மாவாகிய இறுதித்தூதர் முஹம்மத் { ஸல் }
அவர்கள்.
அவர்கள் செய்த
நீண்ட வேண்டுதலின் ஒரு பகுதியை பாருங்கள் :
.... இறைவா என் புகழை உயர்த்துமாறும் என் பாவச்சுமையைக் கீழே இறக்குமாறும் என்
பணிகளை சீராக்குமாறும் என் மனத்தை
தூய்மையாக்குமாறும் என் கற்பைக்காக்குமாறும் என் உள்ளத்தை ஒளிறச்செய்யுமாறும் என்
பாவங்களை மன்னிக்குமாறும் உன்னிடம் நான் வேண்டுகின்றேன்... ஆமீன் ( நூல் : ஹாகிம் , தப்ரானி ,
மேற்கோள் நூல் : இறைவனிடம் கையேந்துங்கள் , தாருஸ்ஸலாஹ் வெளியீடு. தொலைபேசி :
9444316031 / 9171846184) ..
தூய்மையாக்கப்பட்ட
ஒளிரும் ஒரு மனதிற்கு கிடைப்பது என்னென்ன ?
அந்த ஆன்மாவை
அழுத்திக்கொண்டிருந்த அதன் தலையிலுள்ள பாவச்சுமை இறக்கப்பட்டு பின்னர் மன்னிப்பின்
மூலம் அந்த சுமை அழிக்கப்படுகின்றது. பின்னர் அந்த ஆன்மாவிற்கு கற்பொழுக்கமும் உயரக்கூடிய புகழும் மேலதிக
பரிசுகளாக கிடைக்கின்றன.
எனவேதான் ஆன்ம
தூய்மைக்கு இஸ்லாம் பல வழிமுறைகளையும் வழிபாடுகளையும் பேணச் சொல்கின்றது. அவற்றில்
முக்கியமான இடத்தை பெறுவது நோன்பாகும்.
பராமரிப்பு
பணிகளின்போது சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுவதைப்போல அய்ந்து புலன்களின்
வழியாக ஆன்மாவிற்குள் நடக்கும் போக்குவரத்தை நோன்பு காலத்தில் இறைவன் வலுவாக
மட்டுப்படுத்துகின்றான்.
நோன்பின் கால
கட்டத்தில் உண்பதற்கும் குடிப்பதற்கும் துய்ப்பதற்கும் பார்ப்பதற்கும்
பேசுவதற்கும் உணர்வதற்கும் பெரும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பல ஓடைகளின்
வழியாக தன் மீது வந்து நிரம்பிக் கொண்டே இருக்கும் நுகர்வுகளின் பாய்ச்சல் மட்டுப்படுத்தப்படும்போது மனித
ஆன்மாவானது நிதானத்தையும் அமைதியையும்
பெறுகின்றது.
அப்போது மனம்
என்னும் கண்ணாடி தன் இயல்பான உள்ளொளியை மீட்டுக் கொள்கின்றது. அந்த நேரத்தில்
தன்னையும் அனைத்து உலகங்களையும் படைத்து காக்கும் எஜமானனின் வல்லமையையும்
பேரன்பும் நிறைந்த காட்சியையும் கண்டு உணர்ந்து கொள்கின்றது.
மேலும் அதன் வழியாக
அது பாதுகாப்பையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்வதோடு தனது கடமைகளை
விருப்பத்துடன் அறிந்து நிறைவேற்றுகின்றது.
நிலவின்
ஆட்சியும் மின் விளக்குகளின் ஆக்கிரமிப்பும் இல்லாத ஒரு ஒரு இரவுப்பொழுதை அத்துவானக்காட்டிலோ
மலைப்பகுதியிலோ நாம் கழிக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் இரவு தன்னை திறந்து
காட்டும். கும்மிருட்டு விலகி வானத்திலிருந்து மெல்லிய வெளிச்சம் மெல்ல கசிந்து
பரவும்.
அது போலவே
எதிர்மறையான வெளிப்புற உட்புற தாக்கங்களிலிருந்து விடுதலை பெறும் மனது இறைவனுடனான
தனது ஆதி நிலை உறவை மீட்டுக்கொண்டு
உயர்ந்த நிலையை அடையும்.
இந்த மீட்பு
முயற்சியில் நமக்கு உதவி புரிவதற்காகவே புனித ரமழான் காலத்தையும் அதனை ஒட்டிய
வணக்க வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்கு
கொடையாக வழங்கி உள்ளனர்.
யா அல்லாஹ் !
நீ மட்டுமே தூய்மையானவன். உனது அருளும் ஆற்றலும் இல்லாமல் நன்மைகள் புரியவோ
தீமைகளிலிருந்து விலகவோ எங்களால் முடியாது. உன்னிடமே நாங்கள் தூய்மையை
வேண்டுகின்றோம். ஆமீன்!!!!
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
06/07/2015
No comments:
Post a Comment