“ நீங்கோ லேப்டாப்புல ரம்ப நேரம் உக்காரக்கூடாது “
“ அப்ப என்ன செய்யனும் ? “
“ ஏங்கூட பேசணும். கத சொல்லணும்.. “
“ வேறென்ன புள்ள ? “
“ நாம பேசிக்கிட்டு இருக்கும்போது உங்க ஃப்ரெண்ட் கிட்டேருந்து போன் வந்தா
ரொம்ப நேரம் பேசுறீயோ . “
ஒரு இரவு உணவு வேளையின்போது எனது இளைய மகனுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி.
“ புள்ள வாப்பாகிட்ட உனக்கு புடிக்காத
விஷயம் என்ன ? “ என கேட்டதற்கு அவன் சொன்ன
விடைகள்தான் இவை.
```````````````````````````````````````````````````
முதுகில் விளக்கு எரியும் சிகப்பு நிற முதலை , காற்றாடியுடன் கூட சோப் நுரை ஊது
குழல் , விசை முடுக்கத்தில் ஓடும் ஒற்றை கோச்சுடன் கூடிய தொடர்வண்டி .
இவை அடங்கிய பொதியின் விலை நூறு ரூபாய்கள்.
சென்னை காசி செட்டி தெருவில் வாங்கியாகி விட்டது.
கோடை விடுமுறைக்காக நான் வீடு வந்து இறங்கியும் இறங்காமலும் இருக்கும்போது இளைய மகன் பெட்டி அருகே வந்து நின்றான்.
அவனுக்குரிய விளையாட்டு பொதியை கொடுத்து விட்டுதான் மற்ற வேலைகளைப்பார்க்க முடிந்தது.
இரண்டாம் நாள் காலையில் அவன் குளிக்க கிளம்பும்போது கையில் ரயிலின் ஒற்றை கோச்
இருந்தது. இது எதற்கு என்ற கேள்விக்கு “அதுவும் சேந்து குளிக்கட்டுமே “ என்றான்.
அவனின் விருப்பப்படியே அதுவும் வாளிக்குள் மிதந்து குளித்தது.
ஒரு வாரத்திற்குள் முதலையும் ரயில் வண்டியும் வாயைப்பிளந்து விட்டன. அறுவை
சிகிச்சையை நடத்தி அதன் உள் உறுப்புகளை கழற்றி எடுத்தான். ஏற்கனவே தலை நீக்கம்
செய்யப்பட்ட குட்டி கைவிளக்கின் உறுப்புகளோடு இவற்றையும் பொருத்தி புதிய ஒரு
விளையாட்டு உயிரினமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான்.
பள்ளி செல்லும் நாட்களில் காலையில் ‘ இன்னிக்கு ஸ்கூலா ? பள்ளியா ? என்ற
கேள்வியுடன் பின்னொட்டாக எரிச்சலும் முரண்டும் அழுகையும் கலந்த எதிர்வினையுடன்தான்
வாரத்தில் பாதி நாட்கள் படுக்கை விட்டு எழுந்திருப்பான்.
அவனுக்கு விடுமுறை நாட்களில் இந்த சிக்கல் இல்லை. நிம்மதியாக தூங்கி அவன்
நேரத்திற்கு எழுந்திருக்கின்றான்.
அவன் வயது கூட்டாளிகளுடன் கால்பந்து விளையாட்டு , சைக்கிள் ஓட்டல் , மணல் தரை
விளையாட்டு என கழிவதோடுஅருகில் உள்ள பள்ளிக்கு அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாக
தொழவும் செல்கின்றான். மக்தப் செல்லுதல் உட்பட மற்ற கடமைகளும் சராசரிக்கும் சற்று
மேலாகவே நடக்கின்றன. பள்ளிப்பாடங்களில் அவதானிப்பிற்கும் தேர்ச்சிக்கும் குறைவில்லை.
அவனுக்கு வரைந்து வண்ணம் தீட்டுவதில் விருப்பம்.
ஏ.எல்.எஸ். மாமா அவர்களின் கோடை கால மாலை நேர ஓவிய வகுப்பில் அவனை சேர்த்து
விட தீர்மானிக்கப்பட்டது.
சேரும் முன்னர் அவன் கேட்ட முதல் கேள்வி ‘’ அங்க அடிப்பாங்களோ ? விளாட
உடுவாங்களா ? “ .
ஏ.எல்.எஸ். மாமா அவர்களின் ஓவிய வகுப்பில் அவனுக்கு தண்டனைகள் நெருக்கடிகள் என எதுவும் இல்லை. வீட்டு பாடமாக
படம் ஒன்றைக் கொடுத்து அதை மட்டும் வரைந்து வரச்சொல்வார்.
சில நாட்கள் உற்சாகமாக அங்கு சென்று வந்தான். ஒரு நாள் மதியம் வீட்டுப்பாட
படத்தை வரைய சொன்னபோது “ ட்யூஷன்லயும் ஸ்கூல்லயும்தான் ஹொம் வொர்க் போடச்சொல்றோனு
பாத்தா இங்கயும் போடச்சொல்றாங்களே “ என்றான்.
நாங்கள் போட்டுள்ள விடுமுறைக்கால
செலவு பட்டியலின்படி ஒரு நாள் சுபஹ் தொழுகைக்கு பின்னர் அரை வெளிச்ச நேரத்தில் இரண்டு மகன்களுடன் கடற்கரை
சென்றோம். மெதுவாக கடலுக்குள் நுழைந்தோம். கடலும் நாங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம்
ஆகிக்கொண்டோம். முதலில் அச்சமூட்டிய அலைகள் கொஞ்ச நேரத்தில் உற்ற நண்பனாகவும் குழந்தையாகவும் மாறியதோடு
மட்டுமில்லாமல் எங்களிடம் பல கதைகளையும்
சொல்லிக்கொண்டே இருந்தன.
பெரு நீரின் ஓயாத இயக்கத்தில் பட்டுபோல் தேய்ந்திருந்த வெண்மையும் கரு நீலமும்
கொண்ட கடல் மணல்தான் ஒன்றரை மணி நேரமும் எங்களுக்கு அழுக்கு நீக்கியாகவும்
படுக்கையாகவும் விளையாட்டு திடலாகவும் இருந்தது.
மதிய வேளையும் இரவு படுக்கை வேளையும் பிள்ளைகளுக்கு கதை சொல்லுவதற்காக முன்
பதிவு செய்யப்பட்ட நேரம். அந்த நேரத்தில் வேறு வேலைகளை செய்ய விட மாட்டார்கள்.
அந்த நேரங்களை பல வகையாக சமாளிக்க வேண்டி வரும் .
நான் சிறு வயதில் படித்த கதைகள் , இப்பொழுது படித்த கதைகள் போன்றவற்றை சொல்லி
சொல்லி கொஞ்ச நாட்களை ஓட்டியாகி விட்டது.
பின்னர் உண்மை நிகழ்வுகளை சுவையாக
சொல்வது. அது போன்ற நிகழ்வுகள் வற்றி போகும் போது மனதில் தோன்றியதை பிரமிப்பும்
கற்பனையும் கலந்து அடித்து விடுவது. குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் முறைகளுக்கு
வேலை இல்லை என்பதால் இந்த முறை எளிதானது.
சில சமயங்களில் மனம் வறண்டிருந்தால் ஒரு கதையும் தோன்றாது. அந்த மாதிரி
நேரங்களில் கை கொடுப்பது நல்ல படங்கள்தான்.
இந்த கோடையில் மடிக்கணினியில் அப்படிப்பார்த்த படங்கள் இரண்டு.
ஆமிர்கான் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த “ தாரே ஜமீன் பர் “
படம். கற்றல் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் உலகத்திலுள்ள இயல்புகள் , சிக்கல்கள் ,
மீட்சி பற்றி உரையாடும் திரைக்காவியம்.
அடுத்தது உலகப்புகழ் பெற்ற இரானிய திரை இயக்குநர் அப்பாஸ் கியோரஸ்தமி 1971 ஆம்
ஆண்டு இயக்கிய BRAED & ALLEY என்ற கறுப்பு வெள்ளை குறும்படம். வீட்டிற்கு போகும் வழியிலுள்ள
நாயைக்கண்டு அஞ்சும் சிறுவன் அதை எப்படி கடந்து போகின்றான் என்பதை சில நிமிடங்களில்
மிக இயல்பாக பதிந்துள்ளார். இது இவரின் முதல் படமும் கூட.
சிறுவனை நாய் மிரட்டுவது . சிறு செயல்
ஒன்றின் மூலம் சிறுவன் நாயை கடப்பது அது அவனுக்கு வசப்படுவது பிறகு அந்த நாய்
பாதையில் வரும் வேறு சிலரை மிரட்ட குரைப்பது என்ற குறியீட்டுக்காட்சிகளின் வழியாக
வாழ்வின் போக்கையும் அது எதிர்கொள்ளப்படும் முறையையும் மிக குறைந்த நேரத்தில் சொல்லியுள்ளார் கியோரஸ்தமி.
இதற்கு முந்திய தருணங்களில் பிள்ளைகளுடன் படம்பார்க்கும்போது { தங்கமீன்கள்
, The Colour Of Paradise } அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் .
அந்த படங்களில் வரும் தந்தை – மகள் உறவு , பாட்டி – பேரன் உறவில் உள்ள
நெகிழ்வான தருணங்கள் காட்சியாக விரிந்து அன்புக்கு
ஏங்கும் பிள்ளைகளின் உணர்வுகளுக்குள் சென்று லேசாக அசைத்து விட்டிருக்கும் போல.
````````````````````````````````````````````````````````````````````````````````
ஒரு நாள் அஸர் நேரம். வீட்டிற்கு வெளியே லாரி வந்து நின்றது. தொடர்ந்து கதவை
திறக்கும் ஒலி கேட்டது. உடனே நான் அவசர அவசரமாக கதவை திறந்து பார்த்தேன்.
இப்படி நான் பார்ப்பதற்கு காரணம் வீடு கட்டுவதற்காக கல் , மணல் , ஜல்லி கொண்டு
வந்து வீட்டுப்படியை மறைக்கும் அளவிற்கு தட்டி விட்டு போய் விடுவார்கள். அதன்
பிறகு உயரம் நீளம் தாண்டி மலை ஏறி சாகசங்களை செய்து கை கால்கள் பழுதில்லாமல்
வீட்டிற்குள் வந்து சேர வேண்டியிருக்கும்.
அன்று வந்து நின்ற வண்டியில் மணல் வந்திருந்தது. நான் நிற்பதை பார்த்தவுடன் “
இப்ப எடுத்துருவாங்க மோல்ளி “ என்றபடியே இடைஞ்சல் இல்லாமல் கொட்டிவிட்டு சென்றனர்.
மணல் குவியலைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் உருண்டை
உருண்டையாக கிடந்தது. அவை களிமண் கட்டிகள்.
வீட்டிற்குள் குரல் கொடுத்தேன் .
மாடியில் விளையாடிக்கொண்டிருந்த இளைய மகனும் , மனைவி வழி பேத்தியும் இறக்கை
முளைத்த பந்து போல ஓடி வந்து அவற்றை அள்ளினர்.
களிமண் , நீர் , பிஞ்சு கைகள் சேர்ந்தன. சிறிது நேரத்தில் வண்ண வண்ணமாக அம்மி
குழவி , சப்பாத்திக்கல் , காளான் , மோதிரம் , உரல் உலக்கை , விறகு அடுப்பு போன்றவை
உயிர்பெற்று மாடியில் உட்கார்ந்திருந்தன .
இந்த தளவாட பொருட்களை வைப்பதற்காக மீதமுள்ள களிமண்ணில் ஒரு வீட்டையும் கட்ட
வேண்டும். வீடு ரெடி. ஆனால் சிறியது. பொருட்களை வைக்க இயலாது. பெரிய வீட்டிற்கான
ஆலோசனை நடக்கின்றது.
இந்த களிமண் விரல்களுக்கு மேலும் ஒரு கலையும் தெரியும். ரப்பர் பட்டைகளில்
சிறு சிறு அணிகலன்களை கண நேரத்தில் செய்து தள்ளுகின்றனர்.
அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் திருநெல்வேலி நகரத்தைச்சேர்ந்த ஆனந்த
பெருமாள் ( செல் : 9443444478 ) என்ற நம்மாழ்வாரின் மாணவரைப்பற்றி ஒரு செய்தி வந்திருந்தது.
நம்முடைய தினசரி வாழ்வில் கழிவுகளாக நாம்
நினைக்கின்ற பனை
ஓலை, வேப்பங்கட்டை
தேங்காய் சிரட்டை ஓடுகளில் இருந்து அணிகலன்கள், அலங்கார விளக்கு, மெழுகுவர்த்தி கூடு, படங்கள்
மாட்டும் சட்டம், தலைவர்களின் உருவங்கள், கலை பொருட்கள் என விதம் விதமாக செய்து தள்ளுகின்றார்.
இப்படி உருவாக்கப்படும் பொருட்களின் வழியாக குப்பை
குறைக்கப்படுகின்றது . சூழல் காக்கப்படுகின்றது . புதிய பொருள் வாங்குவது
குறைகின்றது . அதன் மூலம் நுகர்வும் பண விரயமும் குறைக்கப்படுகின்றது .நுண் கலை
பெருகுகின்றது. நாம் அன்றாடம் காணும் மிக எளிய பொருட்கள் மீது நமக்கு அழகியல்
உணர்வு உண்டாகி அதன் மூலம் வாழ்வானது வண்ணத்துளிகளால் மெல்ல நிறைகின்றது.|
அவரை தொடர்பு கொண்டு பேசினேன். நான் இந்த கலையை அனைவருக்கும்
சொல்லிக்கொடுக்க ஆயத்தமாக உள்ளேன். இருபது பேர் வரை சேர்த்துக் கொண்டு எனக்கு
தகவல் தெரிவியுங்கள் என்றார். ஆவலாகத்தான் இருக்கின்றது. ஊரை விட்டு கிளம்புமுன்
நடக்குமா என தெரியவில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் இது போலவும் இதை விடவும் சிறப்பாகவும் கூட கோடை
விடுமுறைகளை குழந்தைகளுடன் குடும்பத்தினர் கழித்திருக்கலாம். இது ஒரு தனியாளின்
சொந்த கதை . இதை ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விகளும் வரலாம்.
கல்வியின் தனியார் மயம். இதன் விளைவாக அது மாணவர்களிடையே குறிப்பாகவும்
சமூகத்தில் பொதுவாகவும் உண்டாக்கும் சமூக பொருளாதார உளவியல் இழப்புகள்.... என பட்டியல்
போட முடியாத அளவிற்கு சீர்குலைவுகள்.
தனியார்மயக் கல்வியானது பெற்றோர்களிடமிருந்து அடிக்கும் கட்டணக்கொள்ளையின் வலி
தெரியாமல் இருக்க மாணவர்களின் சிந்தனைத்திறன் , சுதந்திரம் , படைப்பாக்கத் திறன் ,
களிப்பு , ஓய்வு என அனைத்தையும் கலைத்து இல்லாமல் ஆக்குகின்றது. இவற்றிற்கு ஆகும்
நேரத்தை தனது மதிப்பெண் வேட்டைக்காக சிறப்பு வகுப்புகள் , தனிப்போதனை என்ற பெயரில்
பிடுங்கிக் கொள்கின்றது.
களிப்பும் ஓய்வும் மாணவனிடமிருந்து அகற்றப்படும்போது அந்த இடத்தை வேகமாக
வெறுமையும் , தன்னம்பிக்கை இன்மையும் , வாழ்வின் மீதான அச்சமும் , சக மனிதன் மீதான
அவ நம்பிக்கையும் வந்து நிரப்பிக் கொள்கின்றது.
என் வீட்டு கோடை விடுமுறையின்போது என் பிள்ளைகளின் வழியாக நான்
உணர்ந்தவை இவைகள்தான் :
1.
பெற்றோர்களுடன் தங்களுக்கு பேசவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய இருக்கின்றது என
நினைக்கின்றனர்.
2.
இன்றைய பள்ளிக்கூடங்களையும் போதனை முறைகளையும் கனமாகவும் மனதிற்கு நெருக்கடி
தரக்கூடியதாகவுமே பிள்ளைகள் கருதுகின்றனர்.
3.
ஒவ்வொரு நொடியும் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்குகின்றனர். கண்டிப்பு கூட
அன்பின் வழியாகவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
4.
அவர்களின் கல்வி என்பது பள்ளிக்கூடங்களின் கரும்பலகை , பாட நூல்கள் ,
குறிப்பேடுகளோடு மட்டும் சுருங்கி விடுவதில்லை.
5.
விளையாட்டு , கதை , நிகழ்வுகள் கேட்டல் , பலதரப்பட்ட மனிதர்களை பார்த்தல் ,
புதிய இடங்களுக்கு செல்லுதல் , பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லுதல் , புதிய சங்கதிகளை செய்து பார்த்தல் , நீர் , நிலம்
, செடி ,கொடி , மரம் , பறவை , தீங்கில்லாத சிறு விலங்குகள் , பூச்சிகள்
போன்றவற்றோடு நேரடி தொடர்பை வைத்துக்கொள்ளுதல்.
இது போன்ற செயல்பாடுகள் வழியாக அவர்கள் வாழ்வை இந்த பிரபஞ்சத்தை அவைகளுக்கே
இடையே உள்ள இணைப்புக்கண்ணியை இவை அனைத்தையும் இயக்கும் மூல ஆற்றலைப்பற்றி தொடர்ந்து
புரிந்தும் கற்றுக் கொண்டும்
இருக்கின்றனர்.
6.
அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருந்தால் கூட அதை தொடர்ச்சியான ஒழுங்கில்
திணிப்பதை அவர்கள் ஏற்பதில்லை.
7.
விடுமுறை நாட்களில்
குழந்தைகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தாலே அவர்களின்
விருப்பங்கள் என்னென்ன என்பதை புரிந்துகொள்ளலாம்.
8.
பள்ளி விடுமுறை
நாட்கள்தான் படைப்பாற்றல் செழித்து மலரும் ஆகக்
கூடிய நாட்களாக திகழ்கின்றன.
9.
பொதுவாக நாம் குழந்தைகளுக்கான கட்டுப்பாட்டை பற்றி மட்டுமே
தெரிந்து வைத்திருக்கின்றோம். விடுமுறைக்காலம் என்பது குழந்தைகளின் சுதந்திரம் என்றால் என்ன என்பதையும் பெற்றோர் புரிந்து கொள்ளும் தருணமாகும்.
நிறைவாக....
முக நூலில் நவீன் என்ற அன்பர் எழுதிய வரிகளோடு
இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்.
“ ....... பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே
ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீகேஜி.,
மூன்று வயதில் எல்.கே.ஜி.,
நான்கு வயதில் யு..கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை.
கருவறையில்
இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும்
எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை.
எல்லா
நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின்
ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது.
இலை
உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி
அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை..
ஏழு
வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட
ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு
நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான்.
அந்த
நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும்
அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் முக்கியத்துவம் உண்டு.
ஒவ்வொரு
பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது
என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.... “
பின்லாந்தின் அன்றாட நிகழ்வானது ஒரு சராசரி இந்தியனின் கனவாக மட்டும்தான்
நீடிக்க முடியுமா ?
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
12/05/2015
No comments:
Post a Comment