“ ….வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது என சொல்வது பிழை.
மகிழ்ச்சியாக இருப்பது ஒன்றே வாழ்க்கையின் வெற்றியாகும். என் வாழ்க்கை பாதை
முழுவதையும் மகிழ்விற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். வாழப்போகின்றேன்…. “
அண்மையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்
நடந்த ஜே.சி.குமரப்பா எழுதிய “ நிலைத்த பொருளாதாரம் “ நூலின்
அறிமுக விழாவில் தமிழகத்தின் பழங்குடி சிறாரிடையே கற்றலும் கற்பித்தலையுமே தன்
முழு நேர களப்பணியாக செய்து வரும் செந்தில் குமரன் பேசிய வரிகள்.
செந்தில் குமரன் நம்மாழ்வாரின் சீடர்.
நம்மாழ்வார் காந்தியின் சீடர். ஜே.சி.குமரப்பா காந்தியின் சீடரும்
காந்தியப்பொருளாதாரத்தின் தலையாய சிற்பியுமாவார்.
காந்தியோ உலகில் நிலவும் பெரிய சிறிய ஞான
மரபுகளான சனாதனம், இஸ்லாம் , கிறிஸ்தவம் , சமணம் ,பௌத்தம் போன்ற பெருமதங்கள்
கொடையளித்த ஞானத்திரட்டின் பிழிவிலிருந்து தனக்கும் இந்த நாட்டிற்கும் தேவையான
துளிகளை பருகியவர்.
````````````````````````````````````````````````````````````````````````
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு நாளில் என்
நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் இவை
நெருக்கமாக அவர் உணரக்கூடிய ஒரு நண்பர்.
அவர்கள் இருவரும் செய்வது வெவ்வேறு தொழில். சொந்த ஊர்தி , சொந்த தொழில் என அவரவர்
வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்களும் கூட. . நட்பைத் தவிர எவ்விதமான
கொடுக்கல் வாங்கல்களும் அவர்களுக்கிடையில் நடந்ததில்லை.
சிறிது கால இடைவெளி விட்டு எனது நண்பர்
தனது நண்பரை சந்திக்க நேரும்போதெல்லாம் முகமன் குசலத்திற்குப்பின் சற்று விலகி
நின்று தலையை சரித்து நண்பரது பாதணியிலிருந்து அவரது தலை வரை ஏற இறங்க
அளவெடுப்பது போல பார்த்து முடித்த பின்னர்தான் மற்ற பேச்சுக்களை அவர்களிருவரும்
தொடங்குவாராம்.
அவ்வாறான ஒரு அளவெடுத்தலில் அந்த மனிதர் என்
நண்பர் அணிந்திருந்த காலணியின் நிறம் சரியில்லை என்பதற்காக அவருடன் அவரின் மனம்
நொந்து போகும் அளவிற்கு சண்டையிட்டுள்ளார்,
ஒன்றுக்கும் மேற்பட்ட எனது நண்பர்களிடமிருந்து
இது போன்றதொரு முறையீடுகளை கேட்க நேர்ந்திருக்கின்றது. இதனால் உருக்குலைந்த மனித
உறவுகளும் புரட்டிப்போடப்பட்ட வாழ்க்கைகளும் ஏராளமான துயரங்களை தன்னுள் பொதிந்து
கொண்டுள்ளன.
இது போன்ற கொடுங்கசப்பான பட்டறிவுகள் எனக்கும்
வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் சிறிய சிறிய வித்தியாசங்களுடன் நடந்தேறியுள்ளது.
வாழ்வின் அடிப்படைகளில் ஒன்றான பொருளாதாரத்தேவைகளைக்
குறித்து எனது உற்றம் சுற்றத்திலிருந்து எனக்கு புகட்டப்பட்ட காட்டமான அறிவுரைகள்
என் வளரிளம் பருவத்தையே கீறிக் காயப்படுத்தியிருக்கின்றது. என்னுடைய
தன்னம்பிக்கை நிலை குலைக்கப்பட்டிருக்கின்றது .பல காலம் என் ஆன்மா நிலையற்று கசங்கியிருக்கின்றது.
கல் மேல் எழுதிய எழுத்து போல எனக்குள் அவை நிரந்தர வடுவை பதித்திருக்கின்றன.
சராசரி எளிய மனித மனத்தின் மீதான மிக கடுமையான வன்செயல்கள் அவை.
எழுத்திலும் ஒளிப்படத்திலும் உணவிலும்
இலக்கியத்திலும் சம அளவிலான தேர்ச்சியை கொடையாக கிடைக்கப்பெற்ற நமதூரை
சார்ந்த ஒரு ஆளுமை இருக்கின்றார். அவர் எனது நல்ல நண்பருங்கூட .
தற்சமயம் அவர் வெளி நாட்டில் வசிக்கின்றார்.
மிக இளம் பருவத்தில் அவரின் தலையில் ஏற்றி
வைக்கப்பட்ட வாழ்க்கை பொறுப்பு என்ற பாறாங்கல்லினால் முழு மலராய் மலர்ந்திருக்க
வேண்டிய அவருடைய வாழ்வின் அழகிய பக்கமானது வெறும் வண்ண தீற்றல்களாய் எஞ்சி
விட்டது. அவரை இயல்பாக மலர விட்டிருந்தால் நமதூரின் கிரீடத்தில் நல்லதொரு கலைஞன்
என்ற மாணிக்கம் பதிக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற வடுக்கள்தான் வாழ்க்கையின் பல்வேறு
உருளல் புரளல்களுக்கு பிறகும் நான் விரும்பியோ
விரும்பாமலோ சுமந்து கொண்டிருக்கும் வாழ்க்கை பொருளாதாரத்தின் மீதான
பார்வையை தொடர்ந்து மறு பரிசீலனை செய்ய தூண்டிக்கொண்டே இருக்கின்றது.
அப்படியான ஒரு தேடல்தான் காந்தியின் “ சத்திய சோதனை, “ ஜே..சி.குமரப்பாவின் “ நிலைத்த பொருளாதாரம் “எம்.எஃப்.ஷூமாக்கரின் “ சிறியதே அழகு “ என்ற நூல்களில் வந்து சேர்ந்தது.
````````````````````````````````````````````````````````````````````````````````````
நானும் நண்பர் ஹபீப் இப்றாஹீமும் குமரப்பாவின்
நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு செல்லும் வழியில்
தே.கல்லுப்பட்டி சென்றிருந்தோம்.. அங்கு ஒரு காந்தி ஆசிரமம் உள்ளது. அந்த
ஆசிரமத்திற்குள்தான் ஜே.சி.குமரப்பாவின் இறுதி சாம்பல் அடங்கிய கல்லறை உள்ளது.
காந்தி ஆசிரமம் என ஆசையாக பார்க்கப்போனால் ஒரு
பள்ளிக்கூடத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆசிரமத்துக்குண்டான அனைத்து
அடையாளங்களும் நிறுவனங்களும் துடைத்தழிக்கப்பட்டிருந்தது. காந்தியை இதை விட
சிறப்பாக யாராலும் இழிவுபடுத்த முடியாது.
காந்தி ஆசிரமம் என்ற பெயரைக்காட்டிலும் ஆசிரம
முகப்பு , பள்ளிக்கூட முகப்பு என அதன் நிறுவனரான உள்ளுர்க்காரரின் பெயர்
மட்டும்தான் எங்கும் துலங்கிக் கொண்டிருக்கின்றது. . குமரப்பாவின் நினைவு
படத்திற்கு கீழும் கூட அந்த நிறுவனரின் படம்தான் மாட்டப்பட்டிருக்கின்றது.
ஒரு மின் குழல் விளக்கை பொது இடம்
ஒன்றிற்கு நன்கொடையளித்து விட்டு அந்த விளக்கை சுற்றி தனது பெயரை பதிக்கும் சிறுமை போக்கு அந்த வளாகம் முழுக்க காணப்பட்டது.
தே.கல்லுப்பட்டி இன்றுமே மூலையில்
இடுங்கிக்கிடக்கும் தூசியும் சுடும் வெயிலும் சம அளவில் கலந்த பின்தங்கிய
குக்கிராமமாகத்தான் உள்ளது. அதிலும் காந்தி ஆசிரமத்தின் கடைசி எல்லையில்
வவ்வால்கள் குடியிருக்கும் மரத்தைத் தாண்டி ஜே.சி.குமரப்பாவின் கல்லறையும் அவர்
வாழ்ந்த குடிலும் இருக்கின்றன. ஆழ்ந்த தனிமையின் மைய விசைக்குள் அவை வலுவாக
பிணைக்கப்பட்டிருக்கின்றன.
ஜே.சி.குமரப்பாவின் மிக உன்னதமான காந்திய
பொருளாதாரக் கொள்கைகள் அன்றைய விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் அரசால்
கைவிடப்பட்டது. அந்த மனத்துயரில் ஜே.சி.குமரப்பா இங்கு வந்து
சேர்ந்திருக்கின்றார். 1960 இல் இறந்திருக்கின்றார்.
அவர் வந்து குடியேறும்போது சிறு மண் குடிலாக
இருந்ததை இன்று சற்று விரிவுபடுத்தி தாழ்வாரம் அமைத்துள்ளார்கள். அந்த
குடிலுக்குள் சென்று பார்த்தபோது அவர் பயன்படுத்திய மர எழுத்து மேசை ,
தகரத்தினாலான கழிப்பறைக்கூண்டு மட்டுமே அவர் பயன்படுத்திய பொருளாக
எஞ்சியிருக்கின்றன. ஒரு சில அவருடன் சில ஆளுமைகள் சேர்ந்து எடுத்த ஒளிப்படங்களும்
சட்டகத்தினுள் உறைந்து மங்கிப்போய் தொங்குகின்றன.
அவரின் இறுதி சாம்பலின் ஒரு பகுதி
புதைக்கப்பட்டுள்ள கல்லறையை சலவைக்கல் கொண்டு மெழுகியிருக்கின்றார்கள். அந்த
கல்லறையின் மீது ஒரு மலர் வைக்கப்பட்டு இருந்தது.
``````````````````````````````````````````````````````````````````````````````````````
ஜே.சி.குமரப்பா தஞ்சையில் மிகப்பெரும் வசதியான
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் . பிரிட்டனில் கணக்கு தணிக்கையாளராக கை வழிய
சம்பளம் வாங்கி முழு அய்ரோப்பியனாகவே வாழ்ந்தவர்.
காந்திய சிந்தனைகளினால் கவரப்பட்டு அவரது
ஆசிரமத்திற்கு போன இடத்தில் சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியற்ற ஒரு இடத்தில்
காந்தியை சந்தித்து
உரையாடுகின்றார். பெரும் நீர்ச்சுழலுக்குள் அகப்பட்ட நீர்த்துளி போல காந்திய
ஈர்ப்பு புலனுக்குள் அய்க்கியமாகி விடுகின்றார் .
வசதியான குடும்ப பின்னணி , வேலை , மண வாழ்க்கை
என அத்தனையையும் பழைய துணியைக் களைவது போல கழற்றி போட்டு விட்டு தன் மொத்த
வாழ்க்கையையும் காந்திய பொருளாதார சிந்தனைகளுக்காகவே அர்ப்பணிக்கின்றார்.
குமரப்பா எழுதிய காந்திய பொருளாதார
சிந்தனைகளின் தொகுப்புதான் “ நிலைத்த பொருளாதாரம் “ ( நூல் தொடர்புக்கு: செல் : 9942118080, 9787978700 )
என்ற நூலாக வெளிவந்துள்ளது. பொருளாதாரம் என்றவுடன் வறண்ட ஒரு விஷயம் என வெருளத்
தேவையில்லை.
அந்த அளவிற்கு இந்த நூலில் குமரப்பா தான் முன்
வைக்கும் இயற்கையான பொருளாதார மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் மத , ஆன்மீக
வழிகாட்டுதல்கள் இட்டுச் செல்லும் மிக உயர்ந்த இடம் வரைக்கும் கொண்டு சென்று
பிணைக்கின்றார்.
தான் எந்த புதிய சிந்தனையையும் முன் வைப்பதாக
நூலின் எந்த இடத்திலும் அவர் உரிமை கொண்டாடவே இல்லை. இந்த நூலின் முகவுரையில்
மிகவும் பணிவுடன் “ இந்த நூலின் நோக்கம் நம்முடைய ஆன்மீக , உயர்ந்த தன்நிலையை
மீண்டும் வாழ்க்கையோடு உறவு கொள்ள வைப்பதாகும் “ எனக்கூறுகின்றார்.
பெரும் மெய்மைக்கு முன்னால் தன் தலையை தாழ்த்தும்
அவரின் இந்த பணிவுதான் இந்த நூலின் ஆன்மாவும் மையக்கருவும் கூட.
குறுங்கதை வடிவில் எளிய
எடுத்துக்காட்டுகள், தத்துவம் ,
அழகியல் போன்றவற்றுடன் எல்லாவற்றிற்கும்
மேலாக மனித குலத்தின் மீதான குமரப்பாவின் எல்லையற்ற அன்பானது இந்த நூல்
வாசிப்பை எளிமையாகவும் ஒரு இனிய பட்டறிவாகவும் ஆக்குகின்றது .
`````````````````````````````````````````````````````````````````````````````
இந்த நூலை வாசிக்கும்போது மற்றெந்த முஸ்லிம்
ஊர்களைப்போலவே நமதூரின் பொது எண்ண ஓட்டத்தின் மீது கசடு எண்ணைப்படலம் போல
பதிந்துள்ள வாழ்க்கை மீதான மதிப்பீடுகள் பலவற்றிற்கும் சேர்த்து விடை
சொல்வது போல இருக்கின்றது.
அவர் எழுதிய பொருளாதார அடிப்படை விஷயங்கள்
இந்தியா என்ற மொத்த நாட்டுக்குமான பெரிய விஷயங்கள் என்றாலும் நாம் அதன்
அடிப்படையிலிருந்து ஒரு துளியை மட்டும் எடுத்து நம்முடைய நிகழ் காலத்தோடு உரசிப் பார்க்கலாம்.
“ நவீன பொருளாதார முறைகள் வாழ்க்கையை தேக்க
நிலைக்கு குறைத்து வாழ்தலை வெறும் உயிரோடு இருத்தல் என்ற நிலைக்கு கொண்டு வந்து
விட்டன.
பிற விலங்குகளிடமிருந்து மனிதனை
வேறுபடுத்தும் வாழ்க்கையின் ஆழ்ந்த அம்சங்களைப் பற்றிய எண்ணங்களுக்கு
தற்போது நிலவுகின்ற பொருளாதார கருத்தில் சிறிதும் இடமில்லை.
மாறாக மனித , ஆன்மீக மதிப்பீடுகளைப்பற்றிக்
குறிப்பிடுவதையே ஏளனமாக எண்ணும் ஒரு அபாயகரமான போக்கே நிலவி வருகின்றது.
தற்போதுள்ள மதிப்பீடுகளில் உள்ள முரண்பாடுகள்
எப்படிப்பட்டதெனில் ரோஜா தோட்டத்திற்குள் செல்லும் ஒரு பொற்கொல்லன் மலர்களை உரைகல்
மூலம் சோதித்து பார்ப்பதற்கு ஒப்பாகும்.
கெடு வாய்ப்பாக பணமே அரியணையில்
ஏற்றப்பட்டுள்ளது. எல்லாமே மனிதனுடைய ஆளுமையைச் சுற்றி வராமல் பணத்தையே
மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றது. நம் வாழ்வில் மதிப்புகளை எடை
போட பணத்தை விட வேறு முக்கியமான தராதரங்கள் உள்ளன.
மனிதன் வெறும் ரொட்டியினால் மட்டும் உயிர்
வாழவில்லை . மாறாக முழுமையான நிலையை சென்றடைய மனிதனுக்கு
அவனுடைய உடல் , மனம் , ஆன்மா ஆகிய அனைத்திற்கும் தடையேதுமின்றி தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அனைத்தினாலுமே வாழ்கின்றான் “
பண அடிப்படையை மட்டுமே கொண்ட மதிப்புகள்
மாற்றப்பட்டு பல்வகையான பண்பாட்டு மதிப்பீடுகள் ஏற்கப்பட்டு அவை பொது மக்களின்
வாழ்க்கையை தீர்மானிக்கும்படியான நிலையை ஏற்படுத்த வேண்டும் “
குமரப்பா சுட்டிக்காட்டும் மனித வாழ்வின் மீதான
மதிப்பீடு என்பது ஒரு தனி மனிதனிலிருந்து கசிந்து சமூகம் முழுவதிற்கும்
பரவுகின்றது.
அதே போல பெரு வணிக நிறுவனங்கள் , கொள்ளை ஆதாயம்
பார்க்கும் சக்திகள் தங்களின் வணிக பொருட்களையும் , சேவைகளையும் மக்கள் நடுவே
விற்பதற்காக கவர்ச்சியான விளம்பரங்களை நவீன தொழில்
நுட்ப உதவியுடன் திட்டமிட்டு உருவாக்கி ஊடகங்களில் திரும்ப திரும்ப
பரப்புகின்றனர்.
அதன் வழியாக ஒரு புதிய வாழ்க்கை முறையையும்
மதிப்பீட்டையும் உருவாக்குகின்றனர்.
இதன் பின்னர் என்ன நடக்கும் தெரியுமா ? பழைய
மதிப்பீட்டின்படி வாழ்பவர்கள் வாழ்க்கைக்கு தகுதியவற்றவர்கள் என்ற பதிவை ஒட்டு
மொத்த மக்களின் மனதில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிக்கின்றனர்.
இதை எளிதாக புரிய ஒரு எடுத்துக்காட்டு :
மின்சாரம் வருவதற்கு முன்னர் மின்விசிறி என்று
ஒன்று இல்லை. பனை ஓலை விசிறிதான். மின்சாரம் வந்த பிறகு முதலில் சொகுசுப் பொருளாக
அறிமுகமான மின்விசிறி பின்னர் அத்தியாவசியப் பொருளாகிப்போனது. பின்னர் மின் விசிறி
இல்லாத வீடுகள் பொருளாதாரத்தில் தாழ்ந்து போனவர்கள் ஏழைகளின் வீடுகள் என்றானது .
மின் விசிறிக்கு நடந்ததுதான் இன்று மின் வங்கி
( இன்வெர்ட்டர் ) , குளிர் சாதனக்கருவிகள் விஷயத்திலும் நடக்கின்றது. இவை இல்லாத
வீடுகள் வாழ்க்கைத்தரத்தில் தாழ்ந்தவர்கள் என்ற நிலை மெல்ல படர்ந்து வருகின்றது.
இந்த எதிர்மைகளை பின்வருமாறு விரித்துக் கொண்டே
போகலாம்.
காங்கிரீட் வீடு X கட்டை குத்து வீடு
சிமிண்ட் தள வீடு X டைல்ஸ் ஒட்டிய வீடு
அரசு பள்ளி x தனியார் பள்ளி
அரசு மருத்துவமனை x தனியார் மருத்துவமனை
சைக்கிள் X பைக்
உள்ளூர் தொழில் X வெளி நாட்டு
வருவாய் ...................
உன்னதமான மனித வாழ்க்கையை வீடுகள் ஓடுகள்
வாகனங்கள் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் வழியாக அளந்து பார்க்கும் அவலம்.
இந்த விலை ஏறிய சாதனங்களையும் சேவைகளையும்
வாங்குவதற்கும் நுகர்வதற்கும் நடப்பான சராசரி வருமானம் போதாது. கூடுதல் வரும்படி
வேண்டும். அந்த வரும்படியையும் எட்டி பிடிக்க ஆளாய் பறக்க வேண்டும். இந்த
வரையறைக்குள் வர இயலாதவர்கள் , வர மறுப்பவர்களைக்குறித்து குடும்பத்திலும்
சமூகத்திலும் தரம் தாழ்ந்த சித்திரம் அனிச்சையாக எழும்.
இப்படியான போலியான , திணிக்கப்பட்ட தவறான சமூக
மதிப்பீடுகளினால் ஏற்படும் பின்விளைவுகள் நம் சமூகத்தின் அடித்தளத்தை தொடரான
மெல்லிய நில நடுக்கம் போல நிரந்தரமாக அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றது.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
மனித வாழ்க்கையின் உன்னதம் , அதன் உயரிய இலக்கு
, அதன் பல வண்ணங்கள் , கொண்டாட்டங்கள் , எளிமை , களிப்பு பற்றிய எல்லா
புரிதல்களின் மீதும் புகையடித்து கரி பிடிக்கச்செய்யும் பணத்தாள்
மதிப்பீட்டை பற்றி புரிய உதவும் அருமையான உரைகல் இந்த நூல்.
பழையது அனைத்தும் முற்றிலும் சிறந்தது என்றோ
புதியவைகளும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் முழுவதும் தீங்கானது என்றோ இந்த நூலில்
ஒரு போதும் அவர் வாதிடவில்லை. எத்தகைய மாறுதல்களும் வளர்ச்சிகளும் தொழில்
நுட்பங்களும் மனிதத்தை கொண்டாடுவதாகவும் இயற்கையை விட்டு விலகாததாகவும் இருக்க
வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.
மனிதர்களின் வாழ்வில் உள்ள கடினங்களை
நீக்குவதற்கு பொறிகளையும் கருவிகளையும் பயன்படுத்துவது வரவேற்கப்படுகின்றது. ஆனால்
அவை மென்மேலும் தேவையற்ற கருவிகளை நமது அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வந்து
பல்வேறு புதிய சிக்கல்களை கொண்டுவருவதையே குமரப்பா எதிர்க்கின்றார்.
இயந்திரங்களின் வரவு சிரமங்களை நீக்கலாம் .
ஆனால் அவை நமது வாழ்விலிருந்து மனிதத்தை நீக்கி விடக்கூடாது.
“வாழ்க்கையில் மகிழ்வுதான் நோக்கம்” என்பதை
அற்ப பொருட்களையும் வசதிகளையும் அடைவதும். கீழான இச்சைகளின் அழுக்கு குளத்தில்
ஆன்மாவை முக்கி எடுத்தலும்தான் என தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.
குமரப்பாக்களும் செந்தில் குமரன்களும் சொல்ல
வருவதை அங்கோலா பழங்குடியினரின்
சொற்களில் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
கை
கால்
கன்னம்..
. இது
உன்
அடையாளங்கள் இல்லை...
ஏன்
உன்
பெயரும்
உன்
அடையாளம் இல்லை.
நீ முழுமை.
அந்த
முழுமை தான்
உன்
அடையாளம்.
அதை
உணர்...
அதில்
மகிழ்,
அதை
மகிழ்வி...!
உனக்கான
உன்னத
வாழ்வை
நீ
முழுமையாக
வாழும் போது
மட்டும் தான்
உனக்கே
அறியாமல்
அந்த
மகிழ்தல்
நிகழும்.
அதற்கு
உன்னை
உனக்கு
பிடித்தமான
விஷயங்களில்
மூழ்கடிக்க வேண்டும்...
அப்போது
வாழ்தலின் போதே
ஒரு
மரணம் நிகழும்.
அது
உனக்குள்
ஒரு
பேரமைதியை
தரும்.
( நன்றி : நண்பர் நியாஸின் முக நூலிலிருந்து
)
இரவையும் பகலையும் கொண்ட ஒரு தினமானது தனக்கும்
தன்னோடு வாழும் அனைத்து மனிதர்களுக்கும் மிக எளிதாக இருக்க வேண்டும். உணவையும்
உடையையும் உடல் நலனையும் கல்வியையும் களிப்பையும் அனைத்து மனிதர்களும் இன்றிமையாத
அளவிற்கு பெற்றிருக்க வேண்டும்.
மனித மனதின் ஆற்றல் அளப்பரியது. விரிவடைந்து
கொண்டே செல்லும் அதன் படைப்பாற்றல் திறனை அவனின் அறிவுடனும் செயல் திறனுடனும்
இணைத்தல். இந்த இணைப்பை அவனே விரும்பி நிகழ்த்தும் வாய்ப்பையும் சூழலையும்
உருவாக்கிக் கொடுத்தல். மகிழ்ச்சியான நல்லிணக்க சூழலில்
நடைபெறும் இந்த ஒத்திசைவின் விளைவாக தனக்கும் மொத்த
சமூகத்திற்கும் அவன் புதிய நலவுகளை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பான்.
இதைத்தான் காந்திய பொருளாதாரம் நாடுகின்றது.
``````````````````````````````````````````````````````````````````````````````````````````
பேராசைகளும் முடிவற்ற பொருளியல் இலக்குகளும்
அபார வெற்றி குவியல்களுக்கான உரிமைக்கோரல்களும் முட்டுச்சந்தில் சென்று தலையை
உடைத்து திரும்பும் காலமிது.
சாம்பலில் பூக்கும் மலர்கள் ஒருபோதும்
வாடுவதில்லை..
என் கைகளிலும் மனதிலும் மூளையிலும் செருகப்பட்ட
கசட்டெண்ணெய் படலங்களையும் புகை கரி மூட்டத்தையும் ஒரு போதும் என் பிள்ளைகளுக்கு
நான் கைமாற்றப்போவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
26/08/2016
No comments:
Post a Comment