இயக்குனர் Jang Gyu-Sung
ஆசிரியர் X மாணவர்,
மாணவர் X மாணவர்களுக்கிடையே ஏற்படும் முரண்கள், சிக்கல்களை
அணுகும் படம்.
கிட்டதட்ட அறவே விவாதிக்கப்படாத கோணத்திலிருந்து
கதை திறக்கின்றது. குழந்தைமையின் சிக்கலை பேசினாலும் அதனிடையே பாலியல் சிக்கல்களும்
நேரடியாக விவாதிக்கப்ப்படுவதால் இது முற்றிலும் பெரியவர்களுக்கான படமே.
குழந்தைத்தனமான ஆசிரியை, தகப்பனையும் இழந்து சரிவர
தாயின் அன்பும் கிடைக்காத மனதளவில் முதிர்ந்த மாணவி, புதியதாக வந்த அழகான கலை ஆசிரியர்
என கதை மையங்கொள்கிறது.
மாணவியும் ஆசிரியையும் போட்டி போட்டுக் கொண்டு கலை
ஆசிரியரை நேசிக்கின்றனர்.
பல இடங்களில் பருத்திக்காயிலிருந்து வெடித்த பஞ்சு போல மென்மையாக
அழகாக இருவருக்குமிடையே சிறு சிறு உராய்வுகள் ஆங்காங்கே வெளிப்படுகின்றது . மாணவியின்
நேசத்தில் சில நெருடல்களை உணரும் கலையாசிரியரோ இருவரிடமும் இயல்பாகவும் அன்பாகவும்
இருக்கின்றார்.
ஒரு கட்டத்தில் நேசப்போட்டியின் விளைவாகவும் மாணவர்களை
தண்டிப்பது தொடர்பாகவும் ஏற்படும் மன அழுத்தத்தினாலும் ஆசிரியை பணியை விட்டு விலகிச்செல்கிறார்.
அவரின் பணி விலகலை ஏற்க மறுக்கும் தலைமையாசிரியர் தற்காலிகமாக விலகி செல்ல ஆலோசனை சொல்கிறார்.
விடை கொடுக்கும் முகமாக அன்பிற்காக ஏங்கும் மாணவியை
காணச் செல்கின்றார் ஆசிரியை.
கலையாசிரியர் வருவதற்கு முன்னர் ஆசிரியையின் அன்பிற்காக
தான் பலமுறை முயன்றதாகவும் ஆனால் அவரோ அதை உதாசீனப்படுத்தியதாகவும் அழுது கொண்டே சொல்கிறார்
மாணவி. தான் சரிவர நடக்காததிற்காக மாணவியிடம் மன்னிப்புக் கோரி விட்டு விடை பெறுகின்றார்
ஆசிரியை.
ஊரைவிட்டு கிளம்பி செல்கையில்அவரின் பிரிவிற்காக
ஏங்கும் மாணவர்களின் குறுஞ்செய்தி செல்பேசியில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றது.
போகும் வழியில் ஆசிரியையின் ஊர்தி சிறிய விபத்துக்குள்ளாகிறது. அவருக்கு தண்டம் விதிக்க
முனையும் காவலர் ஆசிரியையின் அடையாள அட்டையை பார்த்து விட்டு அவரிடம் தான் அவரது முன்னாள்
மாணவர் என அன்பு பொங்க கூறி தண்டம் விதிக்க மறுத்து ஆசிரியை மீதான பாசத்தில் பணிகின்றார்.
மாணவர்களின் அன்பு எல்லா முனைகளிலும் வளைத்து பிடிக்க
தனது பணி விலகை கைவிட்டு பள்ளிக்கு திரும்புகின்றார் ஆசிரியை.
கலையாசிரியர். ஆசிரியை, மாணவிகளிடையேயாயன மீள்சந்திப்பில்
மாணவி செய்யும் முத்தாய்ப்பான குறும்பானது ஒரு முடிவிலியான அன்புச் சுழலுக்குள் மூவரையும்
தள்ளுகிறது.
பிஞ்சு மனதின் தவிப்பு , அன்பிற்கான ஏக்கத்தில் உண்டாகும்
சிடுக்குகள் போன்றவற்றிற்கான தீர்வு எதனையும் வலியுறுத்தாமல் பிரச்னைகளின் ஆழத்தை இறகின்
வருடலோடு துழாவி நிறைகின்றது படம்.
தன் அன்பு நிராகரிக்கப்பட்ட இடத்தில் அந்த சிறுமி
விடும் கண்ணீரின் மணித்துளியானது நமது புலன்களுக்குள் என்றென்றைக்குமாக கரைந்திறங்கி
விடுகின்றது
No comments:
Post a Comment