Monday, 2 December 2019

கலாக்கார் ஆத்மீ









நேற்றிரவு 32பி எண்ணுள்ள பேருந்தில் ஐஸ் ஹவுஸிலிருந்து ஏறினேன். அடிக்கின்றார் போல குரலொன்று , ஏறுங்கப்பா... ஏற மாட்டீங்களா. டைவர் உட்டு ஏத்துப்பா ....என்ற முரட்டுக் குரல்

வேறு யாருமில்லை. நடத்துனர்தான். தலையில் கறுப்பு கைக்குட்டை கட்டி சட்டையை செருகி இடுப்பில் குஞ்சலம் ஒன்றையும் தொங்க விட்டிருந்தார்.ஆள் கொஞ்சம் மார்க்கமாக இருந்தார்.

வித்தியாசமா இருக்கீங்களே . என்றேன். ஆங்.. இன்னும் நேம் பேட்ஜ்லாம் போடணும் சார். ஹைதராபாத் பேங்ளுர்லய்லாம் எப்படி இருப்பாங்க தெரியுமா?.... என்றார்


படம் ஒண்ணு எடுத்துக்கலாமா ? என்று கேட்டதற்கு தாராளமாக.. என தலையாட்டி விட்டு பயணச்சீட்டு கொடுக்க போய் விட்டார்.

பாய் கடை ஸ்டாப், கந்தசாமி கோயிலுக்கு போறவங்கலாம் எறங்குங்க என்றவர் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தையும் கூடுதல் விவரங்களுடன் அறிவித்தார். சில்லறையை எண்ணி கொடுத்துக் கொண்டே கலைஞர் ஆட்சியில் அரசு பணியாளர்களுக்கு கிடைத்த நன்மைகளை யாருடனோஒப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தார்

யாரையும் படியில் நிற்க விடாத அதட்டல். இடையே யாருக்காவாது நூறு ரூபாய்க்கு பத்து பத்து ரூபா சில்லறை வேணுமா ? எனக் கேட்டுக் கொண்டே , பாய் உள்ள வாங்க என்றார். பின்னிருக்கையில் உள்ள ஒரு பயணிக்கு பயணச்சீட்டு வழங்கிக் கொண்டே , என்னாங்க ரம்ஜானுக்கல்லாம் பிரியாணி தருவீங்கனு எதிர்பார்த்தேன். தரவேயில்லயே.. என்ற உரிமைக்குரலில் கோரியவர் வாயில்பக்கம் நின்ற ஆளைப்பார்த்து ஹிந்தியில் பேசியினார்.

ஆப் கோ கிதர் ஜானா ஹை ? என்று கேட்டுவிட்டு அவர்கள் போக வேண்டிய பேருந்தின் எண்ணையும் சேர்த்து சொன்னார்.

இடையில் யாரிடமோ, சார் , பதினொன்னரை மணிக்கு வண்டிய டெப்போல உட்டுட்டு காச கட்டிட்டு என் வண்டிய எடுத்துட்டு பாடில இருக்குற என் வீட்டுக்கு போறதுக்கு எவ்ளோ நேரம் ஆவுஞ்சார் என அங்கலாய்த்துக் கொண்டார். அந்த அங்கலாய்ப்பிலும் ஒரு நிமிர்வு இருந்தது.

நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது.

பதினொன்றரை மணி வரைக்கும் என்னென்ன பாவனைகளுடன் எத்தனை மொழிகளில் பேசினாரோ?

No comments:

Post a Comment