Sunday 17 November 2019

Wolfskinder ( ஓநாய் சிறார் )











இரண்டாம் உலகப்போரின் இறுதியில், அன்றைய கிழக்கு பிரஸ்யாவிற்கு சோவியத் செஞ்சேனைகள் படையெடுத்தன. அப்போது அங்கு வாழ்ந்த சராசரி ஜர்மானியர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

குடும்பங்கள் சிதைந்தன. குண்டு வீச்சுக்களாலும் குளிரினாலும் உணவு உறையுள் இல்லாததினாலும் ஏராளமான பெற்றோர்களும் முதியோர்களும் கொல்லப்பட்ட நிலையில் யாருமில்லாமல் கைவிடப்பட்ட சிறுவர் சிறுமியரின் கையறு நிலையை சொல்லும் திரைப்படம்.

நோயுற்ற தங்களது பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் தங்களுக்கும் சேர்த்து உணவையும் வசிப்பிடத்தையும் தேடி அண்டை நாடான லிதுவேனியாவிற்குள் இருப்புப்பாதைகளோரமும் காடுகளிலுமாக தட்டழிந்ததால் அந்த பிஞ்சுகளுக்கு ஓநாய் சிறார் என்ற பெயர் வந்தது.


லிதுவேனிய விவசாயிகள் இந்த ஓநாய் குழந்தைகளின் உழைப்புக்குப்பகரமாக அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்தனர்.


செம்படைகளுக்கு அஞ்சி, ஓநாய் குழந்தைகளின் ஜர்மானிய பெயர்களுக்கு மாற்றாக லிதுவேனிய பெயரிட்டு அழைத்தனர் அந்த விவசாயிகள்.

ரிக் ஆஸ்டர்மானின் ( Rick Ostermann ) இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு . Wolfskinder ( ஓநாய் சிறார் ) என்ற பெயரில் வெளிவந்த ஜர்மன் மொழிப்படம் இது.

தாய் இறந்த பிறகு அண்ணனும் தம்பியும் லிதுவேனியாவிற்கு செல்கின்றனர்.

செல்லும் வழியில் மூன்று சிறார்களை படைகள் துரத்தி வருகின்றன. அவர்களிடமிருந்து தப்பும் முகமாக அனைவரும் நீர் நிலையில் குதித்து நீந்துகின்றனர். அப்போது படையினரின் குண்டடியில் சிறுவனொருவன் உயிர் விடுகின்றான்.

இந்த களேபரத்தில் தம்பியும் தொலைந்து போகின்றான்.

தம்பியின் நினைவை ஒரு ஓரத்தில் பொதிந்து வைத்து விட்டு புதியதாக வந்து சேரும் சகோதர சகோதரி உட்பட மூன்று சிறார்களுக்காக அண்ணண்காரன் பாடுபடுகின்றான்.

அதில் ஒரு சிறுவன் நாய்க்கடிக்கு ஆளாகின்றான். . இவனாவது பிழைக்கட்டும் என்ற மன ஓட்டத்தில் காயம்பட்ட சிறுவனை லிதுவேனிய விவசாயியிடம் ஒப்படைத்து விட்டு திரும்பும்போது கதறும் அந்த சிறுவனின் சகோதரியை கையாளும் இடம்.

தகப்பனுக்குரிய தளபதிக்குரிய தோரணையோடு எதிர்வரும் பெரும் சிக்கல்களை நிதானமாக எதிர்கொள்ளும் அண்ணன் காரன்.

படத்தின் இறுதியில், காணாமல் போன தம்பியை அண்ணன் மாட்டுப்பண்ணையில் சந்திக்கின்றான். இருவரும் கட்டிப்பிடித்து அளவளாவுகின்றனர்.

தம்பிக்காரன் அண்ணனுக்கு கொட்டிலில் அடைக்கலம் கொடுக்கின்றான். அங்கும் செஞ்சேனையினர் நுழைகின்றனர்.

அண்ணன் மாட்டிவிட்டானே என்ற கழிவிரக்கம்.

அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னையும் அடையாளங்கண்டு பிடித்து விடக்கூடாதே என்ற உயிரச்சம்.

உயிருக்கும் உணர்வுக்கும் இடையிலான இந்த இரு முனை குத்தீட்டி கணத்தில் தம்பிக்காரன் குழந்தைமை சொட்டும் தனது முகத்தை சமானமாக வைக்க முயற்சிக்கும் அந்த பெருங்கணமானது போருக்கு எதிரான தார்மீக உணர்வை நமது இதயத்திற்கும் தொண்டைக்கும் உள்ள இடைவெளியில் வார்த்து நிறைக்கின்றது.

திரைக்கதையிலுள்ள வலிமிக்க எல்லாப்புள்ளிகளையும் அதனதன் இயல்பான நிதானமான போக்கில் நகரவிட்டு அவை அனைத்தும் ஒருங்கே குவியும் அனல் மையமாய் மேற்படி காட்சியை இயக்குனர் அமைத்திருக்கும் இடத்தில்தான் படத்தின் ஆன்மா பேருருவாய் துலங்குகின்றது.

அதிகாரத்தை அளவுக்கதிகமாய் அருந்திய கிறக்கத்தில் போர் கூச்சலிடும் வெறுப்பு தொழும்பர்களுக்கான மறு மொழியாய் Wolfskinder ( ஓநாய் சிறார் ) கலைப்படைப்பை முன் வைப்போம்.

No comments:

Post a Comment