நேற்று ‘ அறம் ‘ பார்த்தேன்.
அதிகார வர்க்கத்தின் அலட்சியமும் இரக்கமின்மையும் முழு அம்மணத்தோடு அம்பலமாகும் இடம்.
ஆவணப்படப்பாங்குள்ள திரைப்படம்தான்.
படத்தின் அழகியல் அம்சங்கள் என தொழில் நுட்ப பார்வையில் சொல்லிக் கொள்ள பெரிதாக இல்லைதான். தட்டையான கதை சொல்லல்தான்.
எனினும் சமூகத்தையும் மனிதத்தையும் நேசிப்பதன் வழியாக ஒவ்வொரு மானுட அகமும் தன்னை அழகுபடுத்திக்கொள்ள வழி காட்டும் புதிய சாத்தியப்பாடு. இதுவும் கலையின் ஒரு கரமே. புதிய திசை வழி.
நாம் வாழும் காலம் என்பது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தன்னம்பிக்கையின் கழுத்தை நெறிக்கும் கொடுங்கரங்கள் நீளும் கெடு தருணம் .
நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையேயான இழுபறிப்போரில் மிக சாத்தியமான ஒரு சமரசத்தை படம் தொட்டுக் காட்டுகிறது.
அதிகாரம் சட்டம் என்ற இறுகிப்போன கற்பாறையிலிருந்து நீரின் மெல்லிய தாரையை கசிய வைக்கும் மகா எத்தனம்தான் அறம்.
கல்லிறுக்கம் கொண்ட கிழடு தட்டிய அதிகார மன அமைப்பிற்கு எதிரான நீதி போதனை.
தேச பக்தர்களால் சமூக வாழ்வில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கெட்ட சொற்களான சட்டத்தின் மாண்பு, தேச வளர்ச்சி , நவீன அறிவியலின் முழு வெற்றி போன்றவற்றின் இலக்கணங்கள் “ அறத்தினால் ‘ மறு வரையறை செய்யப்படுகின்றன.
கெட்டி தட்டிய அதிகார வர்க்கத்தினருக்கும் அதிகாரக்குஞ்சுகளுக்குமான அரிச்சுவடி பாடம் “ அறம் “.
No comments:
Post a Comment