“என்னை யாரும் நேசிக்கவில்லை என்பதை என் வாழ்க்கையில் இன்றுதான் நான் முதன்முதலாக அறிகின்றேன். அவர்களுக்கு எனது படகுதான் தேவையாக இருந்தது. நேற்று வரை நான் அனைவருக்கும் மிகவும் கூடுதலாக வேண்டப்பட்டவனாக நான் இருந்தேன். ஆனால் இன்றோ ஒன்றுமில்லை என ஆகிவிட்டேன்….
“
— HKHAGOROLOI ROHU
DOOR ( it’s a long way to the sea ) என்ற அஸ்ஸாமிய படத்தில் படகோட்டி சொல்லும் வரிகள்.
இந்த படம் ஜாஹ்னூ பரூவா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிராமமொன்றில் ஆற்றினை கடந்து அக்கரைக்கு செல்ல படகும் வயது முதிர்ந்த படகோட்டியும் இருந்தனர். இந்த படகோட்டிக்கு இரண்டு ஆண் மக்கள். ஒருவன் நகரத்தில் தனது குடும்பத்தினருடன் செழிப்பாக வாழ்ந்து வருகின்றான். தந்தையுடன் உறவில்லை.
இளைய மகனும் மருமகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, அவர்களின் ஒரே ஆண்பிள்ளையை தன்னந்தனியாக படகோட்டி கிடைக்கும் வருமானத்தில் வளர்த்து வருகின்றார். நகரத்தில் இருக்கும் மூத்த மகனுக்கு பண நெருக்கடி. தந்தையின் பெயரில் இருக்கும் விவசாய நிலத்தை விற்க எண்ணுகின்றான். இதற்காக அவனும் மனைவியும் படகோட்டி முதியவரின் மீது போலியாக பாசங்காட்டி அரவணைத்து ஆவணங்களில் கையெழுத்தைப் பெறுகின்றனர். முதலில் தன் மகனின் பாசத்தை உண்மை என நம்பிய படகோட்டி தந்தை பின்னர் அது ஒரு பொய்யான தோற்றமே என அறிய நேரும்போது தகர்ந்து போகின்றார். மூத்த மகன் மூலம் பேரனுக்கு நகரத்தில் நல்ல கல்வி கிடைக்கும் என்ற கனவும் கலைந்த நிலையில் பேரனுடன் சொந்த கிராமத்திற்கு திரும்புகின்றார் முதியவர்.
இதற்கிடையில் கிராமத்தலைவரின் கடும் முயற்சிக்குப்பின்னர் அந்த ஆற்றின் குறுக்கே மரப்பாலத்தை அரசு அமைக்கின்றது. அன்று முதல் படகும் படகோட்டியும் யாருக்கும் தேவைப்படாதவர்களாக மாற்றப்பட்டு விட்டனர்.
மகனும் கிராம மக்களும் கைவிட்ட நிலையில் முதியவர் சொன்னவையே இந்த பத்தியின் முதல் வரிகள்.
தன்னலமிக்க மகன், வளர்ச்சியின் பக்க விளைவு என இரண்டு பக்கங்களிலிருந்தும் வரும் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் நிலை குலையும் ஒரு முதியவரின் கதை இது.
இந்தக்கதை திரைக்கதையாக விரியும்போது வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகவே காட்சியளிக்கின்றது. ஆறு கிராமம் படகு படகோட்டி என்ற இந்த கண்ணியை கலைக்குள் தோய்க்கும் இடத்தில் இயக்குனர் தவறியிருக்கின்றார். மூத்த மகனின் மனைவியடிமைத்தனம், அவரது மனைவியின் அகங்காரம், உறவுகளை வெறுக்கும் போக்கு, பிள்ளைகளின் மேட்டிமைத்தனம், மொத்த குடும்பத்திலும் வழிந்தோடும் தன்னலம் போன்றவை சிறப்பாக திரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
குடும்ப வளர்ச்சி, ஊர் வளர்ச்சி என்ற விதந்தோதல்களின் பலிபீடங்களில், ஒற்றை மனித ஆன்மாவைக்கூட சேதாரப்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்துவதில் இத்திரைப்படத்தின் பங்கு இன்றியமையாதது.
அணு உலையா ? ஆலைகளா ? காடழிப்பா ? நால் வழிச்சாலையா ? எதுவானாலும் மனிதர்களை பலி கொடுத்து பாரத மாதாவைக் காப்பாற்று என்ற தேச பக்தி பேயாட்டங்களுக்கு கலை தரும் மறு மொழி இப்படம்.
No comments:
Post a Comment