நன்கு காற்றோடிக்கொண்டிருந்த
மாடியறையில் அவுது லெப்பை கணினிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு எதை எழுதலாம் என மிகத்தீவிரமாக
யோசித்துக் கொண்டிருந்தார். தலையிலிருந்து கழுத்து வழியாக இறங்கிய வியர்வை நெஞ்சின்
மயிர்க்கால்களினூடாக வழிந்து அவரின் தொப்புளை உப்பின் நச நசநசப்புடன் நனைத்துக் கொண்டிருந்தது.
அஸர்
நேரமானதால் வீட்டில் யாருமில்லை.. வெளியே கதிரொளிக்குள் செந்நிறம் இழைந்து கொண்டிருந்தது.
அன்றாடம் தன் மீது கவிழ்ந்து மூடும் மாலை நேரத்து சோர்விலிருந்து தப்புவதற்காக அவர்
எதையாவது செய்ய முயன்றுக் கொண்டே இருப்பார். படம் பார்ப்பார் அல்லது கதை வாசிப்பார்
. ஒன்றுக்கும் வழியில்லையென்றால் கடற்கரைக்கு சென்று ரப்பர் விசை போல மீண்டு கொண்டிருக்கும்
அலைகளை பார்த்தபடி அமர்ந்திருப்பார். பேச்சு துணைக்கு யாராவது கூட்டாளிகள் அமைந்தால்
உண்டு. இல்லையென்றால் அலையைப்போல தானும் தனியன்தான் என்ற கழிவிரக்கத்தின் அலைக்கழிப்பில்
மூழ்கியிருப்பார்.
கட்டுரையில்
அவர் வெற்றியடைந்து விட்டார் என அவரே அவருக்கும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும்
சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தனர். எனவே அடுத்த கட்ட நகர்வாக புனைவை தேர்ந்தெடுங்கள்
என அவருக்கு மிக நெருக்கமான இலக்கிய நண்பரொருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் சிறுகதைக்கு
முயன்று கொண்டிருந்தார்.
அவர் குடி
வந்த புதிய வீடானது பழைய வீட்டைப்போலில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் எழுதியும்
சிந்தித்தும் ஏற்படும் தலையின் அயர்ச்சியை போக்குவதற்கும் வேண்டிய தனிமை, வெளிச்சம், காற்று, வானம் நிலத்துடனான தடையற்ற தொடர்பாடலுக்கான
வசதி என எல்லாமிருந்தது.
எனினும் திட்டி
வாசலுக்குள் யானையை திணிக்கும் முயற்சியைப்போல சிறுகதையானது முதல் பத்தியைத் தாண்டி வளர மாட்டேனென தவித்து உள்ளுக்குள் நீறிக்கொண்டிருந்தது. . இயலாமையும் எரிச்சலும் மண்ட என்ன செய்வது என்று
தெரியாமல் கணினி மேசையிலிருந்து எழும்பி படுக்கையில்
கிடந்த அன்றைய நாளிதழை எடுத்து புரட்டத் தொடங்கினார்.
“வாப்பாஹ்….”
என அடித்தொண்டையிலிருந்து எழும்பிய குரல் திட்டி
வாசலிலிருந்து ஒலித்தது. அது அவரது இளைய மகனுடையது.
ஒலிச்சரடில் தோய்ந்திருந்த ஆதுரத்தின் இழையை பற்றிக் கொண்ட அவரது மனம் எரிச்சல் புகைச்சலிலிருந்து
சட்டென வெளித்தாவியது.
“வாப்பா கதவத்தொறங்கோ” என்றான். அவரது இளைய மகனின் உண்மைப்பெயர் வேறு.
ஆனால் அவர் அவனை ‘ நெய்னாக் குஞ்சு’ என்றுதான் அழைப்பார்.
இதற்கான காரணம்
அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். தனது இளைய பருவத்து சேட்டைகள், சீண்டல்கள்,
ரகசிய வரம்பு மீறல்களின் சிறு நிழலை அவர் தனது இளைய மகனில் கண்டார். அந்த நிறைவைக்கொண்டாடத்தான்
அவர் அவனை நெய்னாக்குஞ்சு என்று பெயரிட்டு அழைத்தார். அந்த பெயருக்குரிய உட்பொருளில்
தன்னைத்தானே பார்த்துக் கொண்ட தன்னிறைவு அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஏற்படும். இதனால்தான்
அவரது மூன்றுபிள்ளைகளிலும் அவன் மேல் அவருக்கு ஒட்டுதல் கூடுதலாக இருந்தது.
நெய்னாக்குஞ்சுவின் கைகளில் பிறந்து ஒரு வாரமே ஆன
பூனைக்குட்டி ஒன்று அசௌகரியமாக நெளிந்தது. அவன் அதை மார்போடு அணைத்திருந்தான். அழுக்கு
வெள்ளையும் ஒழுங்கற்ற வட்ட வடிவில் இளஞ்சாம்பல் நிறத் திட்டுகளுமாக அது இருந்தது. அதன்
கண்களில் வேட்டை விலங்கின் மூர்க்கமும் துளைக்கும் கூர்மையும் இன்னும் வந்து சேரவில்லை.
அதன் கருவிழிகள் சாவித்துளை போல இருந்தன.
“வாப்பா !
ஜீலானி பள்ளி கிட்ட இது கார்ல அடிபட பாத்துது. என் ஃபிரண்டு ஹஸன்தான் காப்பாத்துனான்.
அவன்ட ஃப்ரண்டுலாம் இதுட வயித்துல பொடிக்கல்லாலயும் குச்சியாலயும் அடிச்சு அடிச்சு
சாவடிக்க பாத்தானுவோ. அதனாலத்தான் இத நம்மோ
ஊட்டுக்கு தூக்கீட்டு வந்துட்டேன். பாவம் வாப்பா…” . என்று சொல்லி முடித்தவனின் கண்களில்
நீர் முட்டியிருந்தது.
“சரி மொத அதக்
கீழ விடு”
வெளிப்படியில் இறக்கி விட்டான். மெல்லிய மியாவ் முனகலுடன் இளஞ்சிவப்பு
பின்னங்கால்களால் நிற்க முடியமல் பக்கத்து
வீட்டுக்காரர்கள் கொட்டி வைத்திருந்த கருங்கல் ஜல்லி குவியலில் இடறி விழுந்தது. வீட்டைக்கட்டி
முடித்து பல மாதங்களாகியும் ஜல்லியை அகற்றாத பக்கத்து வீட்டுக்காரனின் உச்சந்தலையில்
நறுக்கென குட்ட வேண்டும் போல இருந்தது அவுது லெப்பைக்கு.
சமையல் கட்டுக்குள்
போய் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கலனில் தண்ணீர் வார்த்து குட்டிப்பூனை
முன்னால் வைத்தார். மெல்ல அதன் தலையைப் பிடித்து வாயை தண்ணீரின் அருகே காட்டினார்.
பிளவுபட்ட
துளிர் இலை போல இருந்த தன் துணுக்கு நாக்கினால் ஏழெட்டு துளிகள் நக்கியது. பின்னர்
சின்ன ஊளையுடன் கூடிய “மியாவ்”. அவ்வளவுதான்.
அதற்கு மேல் நீரருந்தவில்லை. கால் கிலோ எடையளவுள்ள பூனைக்கு ஏழெட்டு துளி நீர் எப்படி போதும்
? என்ற சந்தேகத்தில் அதன் உடலை புரட்டி புரட்டிப்பார்த்தார் அவுது லெப்பை.
அடுப்பங்கரை
குளிர்பதனப்பெட்டியில் இருந்த மாம்பழக்கூழ் புட்டியை எடுத்து வந்தார். அதனை சகலை சென்னையிலிருந்து
ஆசையாய் வாங்கி வந்திருந்தார். “ நல்ல மாம்பழமே கிடைக்குதே ரசாயனங் கலந்தத போயி யாராவது திம்பாங்களா ? “ என்ற
அவுது லெப்பையின் கூடுதல் விவரப்பேச்சால் “ மச்சான் சொன்னால் சரியாத்தான் ஈக்கும்…
“ என்ற முடிவிற்கு வந்தாள் கொழுந்தியாள். குப்பையில் போட மனமில்லாமல் அன்று முதல் அது
குளிர்பதனப் பெட்டியிலேயே முடங்கியது.
இப்போது அது
பூனைக்கு உணவாகப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் மூடியைத் திறந்து மொத்தமாக சாய்த்தார்.
கொளுக்… கென மொத்தமாக படியில் விழுந்தது பழக்கூழ். பூனை அதைச் சீண்டிக் கூட பார்க்கவில்லை.
வீட்டுக்காரியின் திட்டுக்கு பயந்து பழைய பேப்பரால் துடைத்துக்கழுகினார். துடைத்து
எறியப்பட்ட காகித உருண்டையும் வாசல்படியுமாக ஈக்கள் மாறி மாறி மொய்த்துக் கொண்டிருந்தன.
இதற்குள் பூனை வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சி பெட்டிக்கு கீழ்
உள்ள கப்போர்டுக்குள் நுழைந்தது. புத்தகப்பையின் அருகே போய் வளைந்து சுருண்டு படுத்துக்
கொண்டது.
கூடையிலிருந்து
சாம்பலை அள்ளி கொட்டினாற்போல இருள் சரிந்து கொண்டிருந்தது. மஃரிப் நேரம் நெருங்கிவிட்டதால்
தான் தொழுது விட்டு வரும் வரைக்கும் பூனையை இடைக்கால ஏற்பாடாக வீட்டிற்கு பின்புறமுள்ள
தோட்டத்தில் விடுமாறு சொன்னார் அவுது லெப்பை.
நானூறு சதுரடி
உள்ள அந்த தோட்டத்தில் மா, முருங்கை, பொன்னாங்கண்ணி, கடுகு இதர காய்கறிச்செடிகள் அப்போதுதான்
துளிர்த்திருந்தன. வீடு மறுகட்டுமான வேலை நடந்து முடிந்து ஒரு மாதமே ஆனபடியால் ஏற்கனவே
போட்டிருந்த மரக்கறி வகைகளெல்லாம் அழிந்து விட்டிருந்தன.
பூனைக்குட்டி
அந்த செடி கொடிகளுக்கிடையே புகுந்து செல்ல மாலை நேரத்து விளையாட்டை மறந்து நெய்னாக்குஞ்சும்
அதன் பின்னாலேயே திரிந்தான். அவரின் கண்களுக்கு இரு பூனைகளாகத் தெரிந்தன. பல்லுக்குப்படாமல்
சிரித்துக் கொண்டார். இரவு பகலின் மிச்ச மீதியால் பிணையப்பட்ட அந்த சந்திப்பொழுது அவுது
லெப்பையின் மனதிற்குள் வினோதத்தை நிறைத்தது. தனது எச்சத்தை இரவுக்குள் விட்டு விட்டு பகல் விடைபெற்றது.
பூனைகள் மீதான
உம்மாவின் வெறுப்பும் ராத்தாவின் விருப்பும் ஒன்று சேர்ந்து நெய்னாக்குஞ்சுவை மருட்டிக்
கொண்டிருந்தது.“கிளியைப் போல பூனையும் பேசினால் எவ்வளவு ஜாலியாக
ஈக்கும். அது பேசாட்டி என்ன? நான் பேசுறத அது
புரிஞ்சா போதும்” என
தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டில்
வசிக்கும் பெண்மணி மங்களூர்க்காரி. நைட்டியை
மீறும் உடல் பெருக்கம். மிக அபூர்வமாகத்தான் வீட்டிற்கு வெளியே அவளை பார்க்க முடியும்.
அவள் மீது வெங்காயத் தோல் வாடை வீசுவதாக நெய்னாக்குஞ்சு பலமுறை அவன் உம்மாவிடம் சொல்லியிருக்கின்றான்.
துளு கலந்த
தமிழில் பிள்ளைகளை திட்டும் அவளது சிரட்டைக் குரலால்தான் அப்படியொருத்தி இருக்கிறாள்
என்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நினைவிற்கு வரும். அவளது கணவருக்கு ரயில்வேயில் வேலை. அதனால் அவர் இங்கேயே வீடெடுத்து
தங்கி விட்டார். பெற்ற
மக்களை விட கூடுதல் பாசத்துடன் பூனைக்குட்டிகளை தன் வீட்டில் வளர்த்து வந்தாள். வீட்டில் வழிந்து கொண்டிருக்கும் பூனைகளை கணவர் முகமுயர்த்தி பார்ப்பதோடு
சரி. ஒன்றும் சொல்லமாட்டார்.
பூனைகளுக்கென மாடியில் தனி படுக்கை, கழிப்பறை என கட்டியிருந்தாள்
அவள். அந்த பூனைகளுக்கு அரபு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளில் பெயர் சூட்டியிருந்தாள்.
அதில் ஒரு
பூனைக்குப் பெயர் பீகிள். அதன் இரண்டு கால்களிலும் வாலிலும் பொன்னிற சடை இருக்கும்.
சடையையும் அதன் பூச்சைக் கண்ணையும் சேர்த்து பார்க்கும்போது சடைக்கள்ளனின் நினைவு வருவதாக அவுது லெப்பையிடம்
அவரின் பெண்டாட்டி ஆகிமல் புலம்பிக் கொண்டிருப்பாள்.
அடைமழை பெய்த
ஒரு நள்ளிரவில் ஆகிமல்லின் பழைய வீட்டின் காலதரில் எட்டிப் பார்த்த சடையனுக்கு வறுத்த
சேமியாவின் மினுமினுப்புள்ள சடைமுடி. பெரிய வட்டக் கண்கள். ஒரு வீட்டின் மேல் அவன்
கண்கள் பதிந்து விட்டால் அங்கு களவு போவது நூறு சதவிகிதம் உறுதி. அதே இரவில்
இன்னொரு வீட்டின் சுவற்றை பிடித்து ஏறும்போது கையோடு கல் பெயர்ந்து வர மல்லாக்க விழுந்து
பின்னந்தலை பிளந்து இறந்தும் போனான் சடைக்கள்ளன்.
ஏற்கனவே அவுது
லெப்பையின் மூத்த மகள் தமிழம்மா பூனையை வளர்க்கும் தனது ஆசையை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருந்தாள். “ஸ்கூல் லீவுல மங்களூர்க்காரிட வீட்ல ஒரு நாளய்க்காவது தங்கி பீகிளோட
விளையாடனும். அதுக்கு பொடிமீன் கருவாடுலாம் வாங்கி போடனும்” என முணுமுணுத்துக் கொண்டிருந்த
நெய்னாக்குஞ்சு, தனது சேமிப்பு பெட்டகமான பனை ஓலைப் பெட்டியை தலைகுப்புறக் கொட்டி அதில்
உள்ள சில்லறைக் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தான்.
மஃரிபை தொழுது
விட்டு வந்த அவுது லெப்பை கருணையும் ஒளியும் மிக்க முகத்துடன் தொப்பியைக் கழற்றியவாறே வீட்டிற்குள் வந்தார். எப்போதும் தொழுகைக்கு அவசர
அவசரமாக கிளம்பும் அவர் திரும்ப வரும்போது மட்டும் நிதானமடைந்து வருவார். நிதானத்தையும்
அமைதியையும் நிரந்தரமாக்கும் ஒரு தொழுகையை அவுது லெப்பை எப்போது தொழுவார் ? என தொண்டை
வரை வந்த கேள்வியை அவுது லெப்பையின் சிடுசிடுப்புக்கு அஞ்சி விழுங்கிக் கொண்டார் பள்ளி
முக்கில் கண்ட அவரின் சிறு பருவத்து நண்பர் மம்மர்.
“வாப்பா,
…ராத்தா பூனயப்பாத்தா சந்தோசப்படுவாதானே” எனக் கேட்ட நெய்னா குஞ்சிடம், “ ராத்தா சரி.
உம்மா என்ன சொல்வான்டு தெரியலயேமா. உம்மாவும் சாச்சியும்
சம்மதிச்சா இது இங்க இரிக்கட்டும். இல்லன்னா அத வெளிய உட்டுருவோம் நம்பளுக்கு அதுட
உயிரக்காப்பாத்துன நன்மயாவது கெடய்க்கும் “
என்றவுடன் … “ ஏன் வாப்பா பூன நம்மளோடயே ஈக்கட்டுமே" என அவரைக் கெஞ்சினான். “ நான் என்ன வாப்பா செய்யட்டும். எனக்கும்
ஆசதான். சாச்சிக்கு அலர்ஜி ஈக்குரதுனால பூன முடியால அவளுக்கு கஷ்டம் வந்திரக்கூடாதும்மா “ என்றவுடன் நெய்னாக்குஞ்சின் முகம் வாடியது.
ஒரு தட்டில்
சிறிய மீன் துண்டும் ஆணமும் கொண்டு வந்து வாப்பாவும்
மகனும் பூனைக்கு கொடுத்தனர். அது தட்டை முகர்ந்து பார்த்து விட்டு தலையை வலப்புறமாக
திருப்பிக் கொண்டு விலகியது. பூனையை தன் இரு கைகளாலும் பிடித்து அதன் தலையை மெதுவாக
பிடித்து குனிய வைத்து மீன் தட்டில் வைத்தார் அவுது லெப்பை. ஒரு தடவை மட்டும் அது ஆணத்தை நக்கி விட்டு “மியாவ்”
என்றது. மீன் துண்டை கடிக்க அதற்கு பல் போதவில்லை. தட்டை எடுத்து செடிகளுக்குள்
வீசி எறிந்தார் அவுது லெப்பை. நன்கு இருட்டிவிட்டபடியால் பூனையை வீட்டின் முன்புறமுள்ள
காம்பவுண்டுக்குள் விட்டார்கள்.
வெளியே எங்கோ
சென்றிருந்த அவுது லெப்பையின் மனைவி வீடு வந்து
சேர்ந்தபோது மணி இரவு ஏழாகி விட்டிருந்தது. ஆகிமல்லுக்கும் அவுது லெப்பைக்கும் திருமணமாகி
கால் நூற்றாண்டு கழிந்து விட்டிருந்தது. ஆகிமல் என்னவோ அந்த இருபத்தைந்து வருடங்களையும்
ஆற்றில் ஓடும் நீரைப்போல கடந்து விட்டாள்.
தொடக்கத்தில் அவுது லெப்பை மண வாழ்க்கையில்
ஒட்டாமல்தான் இருந்தார். காரணம் அவருக்கு ஆகிமல் மேல் என்றில்லை மொத்த இல்லற வாழ்க்கையின்
மீதே ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தது. அவருக்கு ஒன்றுக்கு
மூன்றாக பிள்ளைகள் பிறந்த பிறகுதான் சுழலுக்குள் சிக்குண்ட நீர்த்துளி போல வாழ்க்கைக்குள்
வைத்துக் கட்டப்பட்டார். தனது திருமண வாழ்க்கை என்பது சரியாக உண்டு தீர்க்கப்படாத பலாச்சுளைகள்தான்
என்ற நினைவேக்கம் எப்போதும் அவருக்கு உண்டு.
அவுது லெப்பை
ஸ்டோர் ரூமுக்குள் புகுந்து ஏதோ உழப்பிக்கொண்டிருந்தார். ஒற்றைத்தலை வலிக்கான மருத்துவக்
குறிப்பொன்று முந்தைய தின பேப்பரில் வெளிவந்திருக்கிறது என்ற தகவலை அவரின் களக்காட்டு நண்பர் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.
அந்த பேப்பருக்காகத்தான் அவர் அந்த அறையை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தார். அவுது லெப்பையை அவரின் பதினெட்டு
வயதிலிருந்தே அதாவது முப்பது வருடங்களாகவே ஒற்றை தலைவலி நசுக்கிக் கொண்டிருந்தது.
“ டியா தமிழு, நேத்திக்கு பேப்பர் எங்க
போய் தொலஞ்சுது. படிச்ச பொறவு அத அவிச்சிட்டியா ? “ செய்தித்தாள் கிடைக்காத கடுப்பில் இருந்த அவுது லெப்பையின்
எரிந்த குரலுக்கு,” உம்மாக்குதான் தெரியும்
வாப்பா “என உள்ளறையிலிருந்து பதில் சொன்னாள் தமிழ்.
“ஊர்சுத்தி உ,ம்மா வந்து தொலைஞ்சாவா இல்லியா? கரண்ட்
பிடிச்சு இழுக்கிற மாதிரி அடிக்கிற அவட கமுக்காடு நாத்தம் ஒன்னே என்ட ஒத்த தலவலிக்கு
போதும். வேற மருந்தே தேவயில்ல” எனத்திட்டியவாறே தூசியை இரு கைகளாலும் தட்டியபடி
அறையை விட்டு வெளியே வந்தார்.
வட்டத்தாம்பாளத்தில்
உப்புக்கரைசல் நீரை துளித்துளியாக விட்டு கோதுமை
மாவை பிசைந்துக் கொண்டிருந்த ஆகிமல், தாம்பாளத்தின்
அருகில் கிடந்த சிவப்பு பிடி போட்ட கத்தியை
விட்டெறிந்தாள். டிவி ஸ்டேண்டின் கால்களில் போய் தட்டி அரை வட்டமடித்து நின்றது கத்தி.
“நல்ல திமிரு…. இந்த நாத்தத்தோட இருவத்து மூணு வருஷம் ஓட்டியாச்சா
இல்லயா….. நாத்தமடிக்காத வேற எவளயாவது போய் பாக்க வேண்டியதுதானே” என ஆங்கரித்தாள்.
மெல்லிய “மியாவ்
“ உடன் பக்க வாட்டு வாசல் வழியாக வந்த, வயிறு மெலிந்து நீண்டிருந்த குட்டிப்பூனையின்
ஓசையானது ஆகிமல்லின் ஆங்காரத்தைக் கலைத்து போட்டது. பேச்சு திடுமென நின்றது. பூனையை
முறைத்தாள் ஆகிமல்.
சற்று நேரம்
நிலவிய மௌனத்தின் நடுப்புள்ளியாக பூனையின் “மியாவ் “ஒலி சுழன்றது. கிணற்றிலிருந்து
ஒலிக்கும் பாதாள உலகின் கீச்சுக் குரல் போலிருந்தது.
“அட்ரா டேய் அட்ரா” என தெருவிலிருந்து கூச்சல்
எழுந்தது. பூனை திடுக்கிட்டு ஆகிமல்லின் பக்கம் ஓடி வந்தது. வெளியே சிறுவர்கள் கால்பந்து
விளையாடிக் கொண்டிருந்தனர்.
“இது எங்கேயிருந்து
வந்துது சனியம் ,ச்சீ போ "என துரத்த முனைந்த ஆகிமல்லின் புடவையை பிடித்திழுத்த நெய்னாக்குஞ்சு,
“ உம்மா அத தொரத்தாதேம்மா” எனக்கெஞ்சினான்.
“ஒனக்குள்ள பாலயே நீ சொட்டுப்போலத்தான் குடிக்கிறா.
மீதிலாம் திரைஞ்சுதான் போவுது. இதுல வேற பூனய்க்கு
பாலக்கொடுத்து வளக்க போறியாக்கும்”
“உம்மா ! நான் இனிம பால் ஒழுங்கா குடிச்சா பூனய
நீ வளக்க உடுவாத்தானே? ” என கறாவினான்.
அவுது லெப்பை கட்டை விரலை மூக்கில் விட்டு நிதானமாக குடைந்து கொண்டிருந்தார். “ போ அந்தப்பக்கம். பூனயும் பாலும். அத நீ கொண்டு
போய் வெளிய உடலனா நானே அத தூக்கி வெளிய வீசறனா
இல்லியானு பார்” என ஆகிமல் கத்தி விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள். இது ஒன்றும் விளங்காதது போல் பூனைக் குட்டி மெல்ல
போய் கப்போர்டில் சுருண்டு கொண்டது.
முகம் தொய்ந்த
நெய்னாக் குஞ்சும், ஆதமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து
கப்போர்டிற்குள் கைவிட்டு பூனைக் குட்டியை வாரியெடுத்தார்கள். ஆகிமல்லின் ராத்தா வீட்டு
பேரனான ஆதமிற்கும் நெய்னாக் குஞ்சிற்கும் வயதில் சில மாதங்கள்தான் வித்தியாசம். ஆதம்
தனது சரிந்து கிடந்த நீல நிற கண்ணாடி ஃபிரேமை
வலது புறங்கையால் சரி செய்து கொண்டே , “நாமோ
இதுக்கு பேர் உடுவோமாடா ?” எனக் கேட்டான்.
பூனைக் குட்டியை
தனது மடியில் கிடத்திய நெய்னாக் குஞ்சு மெல்ல அதிருமாறு தனது இரண்டு தொடைகளையும் ஆட்டியவாறே
“ஷோஃபி இனி ஒம்பேரு ஷோஃபி “ என்றவாறே அதன் தலையைத் தடவினான். பூனைக்குட்டி கண்களை சுருக்கி
மீசையை விடைத்தது. அதன் மீசை முடியை தன் புறங்கையால் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்
நெய்னாக் குஞ்சு. அவனும் ஆதமும் தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த பூனை தொடர்பான கதைகளை
நினைவுபடுத்திக் கொண்டனர்.
“குருவி காக்கய்லாம் கூடு கட்டுதே பூன ஏன் அத மாரி
ஊடு கட்ட மாட்டீக்குது. அப்படி கட்டுனா நாம அதுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்கலாம்பா”
என்ற ஆதத்தின் ஆதங்கத்திற்கு” நாம பூனய்க்கி
வீடு கட்ட படிச்சு கொடுத்தா என்ன? யான , நாய் கிளிக்குலாம் மனுசன் என்னத்தய்லாமோ பழக்கி கொடுக்குறாந்தானே அதப்போல பூனயும் படிக்குந்தானே”
என பதில் சொன்னவன் சிறிய யோசனைக்கு பிறகு “அதுகளுக்கு
புரியுற மாதிரி சொல்லி கொடுக்க நம்பளுக்கு தெரியாதே” என்றவாறே அசட்டுச்சிரிப்பொன்று சிரித்தான்.
அவுது லெப்பை
நெய்னாக் குஞ்சை பார்த்து தலையை வலப்பக்க ஓரமாக உயர்த்தி கண்ணை சிமிட்டவும் பூனையைக்
கொண்டு போய் அவரின் படுக்கையறையில் விட்டான். அது இப்படியும் அப்படியும் பார்த்து விட்டு
“மியாவ்” என லேசாக முனங்கியவாறே கட்டிலின் கீழே போய் படுத்துக் கொண்டது. “ கொஞ்ச நேரம் அத படுக்க விடுங்கப்பா” என்றவாறே அவுது
லெப்பை கட்டிலில் சாய்ந்து கொண்டார்.
நெய்னாக்குஞ்சும் ஆதமும் சேர்ந்து அதை மீண்டும் மீண்டும்
கூப்பிட்டு பார்த்தார்கள். “மீ” என பாதி முனகி விட்டு அது தலையை சாய்த்து கொண்டது.
“அதுட வால பிடிச்சி இழுடா வந்துரும்” என்று ஆதம் சொன்னவுடன் “டேய் அத அநியாயம் பண்ணாதீங்கடா.
தானா வரும்டா” என்ற அவுது லெப்பைக்கு ஷோஃபி தன் தாயை தேடுவது போல மனதில் பட்டது. அதனால்தான்
அது வேறு கரங்களிலிருந்து தன்னை துண்டித்து கொள்ள விழைகின்றது. கட்டிலின் அரை இருட்டிற்குள்
தனது தாயின் நிழலை தேடுகிறது போலும் என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
இரவு உணவை
முடித்த பின்னர் நெய்னாக்குஞ்சு ஷோஃபியை மாடியிலிருந்து பஞ்சுப்பொதியை போல இரு கைகளிலும்
ஏந்தி வந்தான். தன்னோடு அதை தூங்க வைக்க போவதாக அதன் முகத்தை பார்த்தவாறே சொன்னான்.
ஆகிமல் முந்துவதற்கு முன்னால் அவுது லெப்பை வாயை திறந்தார். ஏற்கனவே தாயின் நினைவில்
வாடும் ஷோஃபிக்கு இனியும் சுடு சொற்கள் வேண்டாம் என அவர் நினைத்திருக்கக் கூடும்.
“நெய்னா! அத
எடுத்து முன்னக்க காம்பவுண்டுல உடுறா . சுபுஹுக்கு
பெறவு வீட்டுக்குள்ள எடுத்துருவோம்”என்றார். அவரின் முன் மொழிவை எல்லாரும் ஏற்றுக்
கொண்டனர்.
பிளாஸ்டிக் கிண்ணமொன்றில் குடிப்பதற்கான தண்ணீருடன் காம்பவுண்டிற்குள் ஷோஃபியை விட்ட பின்னர்
முன்னறையின் கனத்த மரக் கதவை சாத்தினாள் தமிழ். இரவு விளக்கின் நீல ஒளியானது இளந்திரவமாகி அறையெங்கும் சிந்தி கிடந்தது.
ஷோஃபி மெல்ல
தனது அரைத்தொண்டையிலிருந்து “மியாவ்” என்றது. தூங்க முயன்ற அவுது லெப்பையின் மூக்கிற்குள்
தலையணை உறையின் கோழையும் எண்ணெய் பிசுக்கும் கலந்த மக்கும் வாடை நிரம்பியது.
“தட்… தட்” என்ற
மெல்லிய ஓசை கனத்த கதவிலிருந்து புறப்பட்டு அவுது லெப்பையின் காதுகளில் அதிர்ந்தது.
படுக்கையை விட்டு எழுந்திருத்த அவர் லுங்கியை வலது கையில் பிடித்தவராக மெல்ல எழுந்து
முன்னறை வாசலின் தட்டி கதவை திறந்து பார்த்தார். ஷோஃபி
தன் உடலை பிறை வடிவில் வளைத்து தனது விலாவினால் கதவை இடித்துக் கொண்டிருந்தது. தட்டி
கதவை திறந்த ஓசையைக் கண்டு மேலே பார்த்தது.
அவுது லெப்பை படுக்கையைனருகில் இருந்த செல்பேசியை எடுத்து வந்து அதிலிருந்த டார்ச்சை எரிய விட்டார். நேராக ஷோஃபியின் கண்களில் வெளிச்சம் பாய்ந்தது. பச்சை நிற குளத்தில் மிதக்கும் நீள்வட்ட இளஞ்சாம்பல் நிற துணுக்கு போலிருந்தது அதன் கருவிழி. தன் அரிசி பற்களை காட்டி “மியாவ்” என்றது.
அவுது லெப்பை படுக்கையைனருகில் இருந்த செல்பேசியை எடுத்து வந்து அதிலிருந்த டார்ச்சை எரிய விட்டார். நேராக ஷோஃபியின் கண்களில் வெளிச்சம் பாய்ந்தது. பச்சை நிற குளத்தில் மிதக்கும் நீள்வட்ட இளஞ்சாம்பல் நிற துணுக்கு போலிருந்தது அதன் கருவிழி. தன் அரிசி பற்களை காட்டி “மியாவ்” என்றது.
டார்ச் லைட்டின்
ஒளிக்கற்றை வழியாக ஏறி வந்த அந்த மிதக்கும் கருவிழி துணுக்கு ,தன்னுடன் பச்சை பாசி
படிந்த குளத்தையும் சேர்த்து கொண்டு வந்தது. அவுது லெப்பை தட்டி கதவை மூடுவதற்குள்
அது அவரின் கண்களின் வழியாக மூளைக்குள் போய் புகுந்து விட்டது. கண் அயரும் வரைக்கும்
பிள்ளையைப்போல கறாவிக் கொண்டிருந்த ஷோஃபியினின் ஓசையை சிறு பதட்டத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
படுக்கையில்
போய் கிடந்த அவுது லெப்பை இரவு முழுக்க அந்த
பச்சை குளத்தின் பாசி படலத்தில் மீண்டும் மீண்டும் வழுக்கி விழுவதாக கனவு கண்டார்.
கனவின் அச்சத்தை போக்க இரவின் கருமைக்குள் தன்னை இறுகக் பொதிந்துக் கொண்டார் அவுது
லெப்பை.
சுபுஹு தொழுகைக்கு
எழும்பிய அவுது லெப்பை தமிழையும் எழுப்பி விட்டார். அரவங்கேட்டு ஆகிமல்லும் எழுந்து
விட்டாள். நெய்னாக் குஞ்சு, பழுப்பு நிற குட்டி
ஜட்டியோடு பாதி பின்புறம் தெரிய கவிழ்ந்து கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். “அவன்
மட்டும் சுபுஹு தொழாமல் தூங்குறானே எங்களையெல்லாம் மட்டும் எழுப்பி உடுறியளே” என்ற
தமிழின் முறைப்பாட்டுக்கு, அவனுக்கு பத்து வயதான பிறகு எழுப்பி விடுவதாக சமாதானம் சொன்னார்.
தமிழ் வெளி
விளக்கை போட்டு தட்டிக்கதவை திறந்தாள். தன்
தலையை வலதும் இடதுமாக திருப்பி பார்த்தவள்,” வாப்பா
ஷோஃபிய காணல அது எங்க போய்க்கும்?”
“ஆமா அப்படி
எங்கயாவது போய்ட்டா நல்லதுதானே” என்றவர் மீண்டும் ஒரு குட்டி தூக்கத்திற்காக முன்னறையின்
சோஃபாவில் சாய்ந்தார்.
காலையில் இட்லி
கொண்டு வரும் வெள்ளையம்மாள் கதவை தட்டிய பிறகுதான் இரண்டாம் தூக்கத்திலிருந்து வீட்டிலுள்ள
அனைவரும் விழித்தனர். நெய்னாக்குஞ்சு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் ஒரு
பூனைக்குரிய பிறை வளைவுடன் சுருண்டு கிடந்தான்.
மாடிக்கு சென்ற
அவுது லெப்பை அங்கிருந்து காம்பவுண்டுக்குள் சிறிய அவநம்பிக்கையுடன் எட்டிப் பார்த்தார்.
காம்ப்வுண்டின் கருமை நிற பெயிண்ட் அடித்த இரும்பு வாசலுக்கருகில் ஷோஃபி உடலை வளைக்காமல்
நீட்டமாக படுத்து கிடந்தது.
“ச்சூ ச்சூ”
என வாயைக் கூட்டி குரலெலுப்பிய பின்னரும் அது அசையாமல் கிடக்கவே தண்ணீரை தெளித்தார்.
அசைவில்லை. கூர்ந்து பார்த்தார். அதன் வாயை சுற்றி நகரும் செங்கோட்டைப் போல கட்டெறும்புகள்
மொய்த்து கொண்டிருந்தன.
“ பாவம் ஷோஃபி!
நிபந்தனையில்லாத விடுதல. இனிமே அதுக்கு எந்த வலியுமில்ல. ஆனாலும் அதுக்காக அது
குடுத்த வெல ஜாஸ்திதான். இங்க மலிவான பேரம்னு எதுவுமேயில்லை” என வாய்க்குள் முனகினார்
அவர்.
தகவலை சொல்ல
அவுது லெப்பை கீழே வரும்போது நெய்னாக் குஞ்சு அப்போதுதான் எச்சில் வாயுடன் படுக்கையிலிருந்து
எழுந்து உட்கார்ந்திருந்தான். அவனருகில் அன்றைய
செய்தித்தாளின் பெண்கள் இணைப்பிதழை வாசித்துக் கொண்டிருந்த தமிழிடம் நெய்னாக்குஞ்சு
தான் கண்ட கனவை சொல்லத் தொடங்கினான்.
, ஷோஃபி என்ட கனவுல வந்துது. நம்ம காம்பவுண்டுலதானே உட்டோம்.
அது அங்கேயிருந்து பெருசா வளர்ந்து காங்கீரீட் வரைக்கும் அதுட தல முட்டிக்கிட்டு நின்டுது.
அதுட வாலு கதவு வழியா பூந்து ஹால் முழுசா நெறஞ்சுட்டுது. அந்த வாலு நெறய குட்டி போட்டுது.
அது அவ்வளவும் வாலாத்தான் இருந்துது. எல்லா வாலும் நெளிஞ்சு ஜன்னல் சொவருலாம் தாவிச்சுப்பா.
மியாவ் மியாவ்னு எல்லா வாலும் கத்த ஆரம்பிக்கவும் காதே செவிடாயிரும்போல இருந்துது.
எல்லாமே ஒரிஜினல் பூனய போல மியாவ்னுதான் கத்திச்சி. ஆனால் புள்ள அழுவுற மாதிரி இருந்துது..
சத்தம் தாங்க ஏலாம நான் ஊட்ட உட்டு வெளிய வந்தா பத்து ஷோஃபி நிக்குதுப்பா. எல்லா பூனய்ளும்
சிரிச்சுக்கிட்டே இருந்துது . என்னய நானே பூனதான்னு
நெனச்சிக்கிட்டேன். ஜாலியா இருந்துச்சுப்பா. ஆனா டக்குனு முழிச்சுட்டேம்பா. தமிளு! நாம நெனச்சா பூனயா ஆக முடியுமாப்பா ? “ எனக் கேட்டு
கொண்டிருந்தான்.
அவர்களிருவரும்
தன்னிடம் எதுவும் கேட்டு விடக்கூடாதே என்ற பதட்டத்தில் நைசாக கடந்து சென்று அடுப்பங்கரைக்குள்
நுழைந்தார் அவுது லெப்பை. அங்கும் நெய்னாக்குஞ்சின் குரல் சன்னமாக அவரை தொடர்ந்தது.
தேநீர் போட்டுக் கொண்டிருந்த ஆகிமல்லிடம் ஷோஃபிக்கு நடந்ததை சொல்ல, ஹாலுக்குள் எட்டிப்
பார்த்த அவளின் கண்கள் ஒரு கணம் வெட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் மின்னி இயல்பாகியது.
அவுது லெப்பையின்
மூளைக்குள்ளும் மின்னல் கீற்று இழையோட கணினி மேசையின் முன்னர் போய் உற்சாகமாய் அமர்ந்தார்.
அந்த மின்னலுக்குள் பச்சை நிற குளத்தில் மிதக்கும் நீள்வட்ட இளஞ்சாம்பல் துணுக்கு ஒளிர்ந்து
கொண்டிருந்தது..
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
சொல் விளக்கம்:
அஸர்
– மாலைத் தொழுகை
வாப்பா
– தந்தை
மஃரிப்
– சந்தி காலத் தொழுகை
சாச்சி
– சித்தி
ஆணம்
– குழம்பு
மெத்தை
– மாடி
கறாவுதல்
– நச்சரித்தல்
சுபஹ்
– அதிகாலைத் தொழுகை
தட்டி கதவு
– மரக்கதவில் உள்ள சிறு சாளரம்
No comments:
Post a Comment