Friday, 15 November 2019

மண் மிட்டாய்







“ கண்ண தொறந்து எங்கள பாத்த ஆண்டவன் எங் கொழந்தைட கண்ண மூடிட்டானே “ என்ற அலறல் பேறுகால வார்டையும் தாண்டி அரசு மருத்துவமனை வளாகம் முழுக்க முட்டி அலைந்தது.

“ யம்மா , இங்க கூப்பாடு போடக்கூடாது. இது ஆஸுபத்திரி. இனிமே கூச்சல் போட்டீங்கன்னா பெரிய டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவாரு “ என்ற தலைமை நர்ஸின் மிரட்டலினால் வாயைப்பொத்திக்கொண்டு குலுங்கினாள் சுப்பைய்யாவின் மனைவி. மொத்த உடலும் அவிழ்ந்து விழுந்தது போல நின்றார் சுப்பைய்யா.

 சுப்பைய்யாவின் வீடு  எங்களூரிலிருந்து எட்டு கிலோ மீற்றர் தொலைவு உள்ள திருச்செந்தூரில் இருந்தது. மண் சுவருடன் மேலே பனை ஓலையால் வேயப்பட்ட வீட்டில்தான் அவர்களின் வாழ்க்கை தவழ்ந்து கொண்டிருந்தது . 


சுப்பைய்யா தம்பதியினருக்கு திருமணம் முடிந்து பதினைந்து ஆண்டுகளாகியும் குழந்தை பேறு இல்லை. எல்லா வாய்ப்புகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்த பிறகு பிள்ளைப்பேறுக்கான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்த ஒரு கணத்தில்தான்  குழந்தை உண்டானாள் சுப்பைய்யாவின் மனைவி .

“ தெய்வமே வந்து  நம் மடிய பாத்து  போட்ட  பிச்சை “ என்று ஆனந்தக்கூத்தாடிய சுப்பைய்யா தன் மனைவி உண்டான நாளிலிருந்து தொழிலுக்கே போகவில்லை. கழிப்பறை போகும் நேரம் தவிர அவளை நார்க்கட்டிலை விட்டு இறங்கவும் அவர் அனுமதிக்கவில்லை.  தொழிலுக்கு போகாததினால் மனைவியின் நகை , வீட்டில் நின்ற ஆடு , மாடுகளை விற்றுதான் ஒரு வருடமாக குடும்பத்தின் செலவு கழிந்தது .


மாதங்களின் நிறைவில் மகன் பிறந்தான். மகன் பிறந்த மகிழ்ச்சியானது துளி நேரத்தில் நெருப்பில் பட்ட பஞ்சு போல கருகி விட்டது . பிறந்த பிள்ளைக்கு கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இறுக மூடிய இரண்டு இமைகள் மட்டுமே இருந்தன. பிள்ளையின் நிலையைக் கண்டும் எங்கே கணவர் தன்னை நிராகரித்து விடுவாரோ என்ற கலக்கத்திலும் சுப்பைய்யாவின் மனைவிக்கு நிரந்தரமாகவே மனம் பேதலித்து விட்டது.

வாழ்க்கையானது ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளை மடேர் மடேர் என அவர் தலையில் போட்ட போதும் தன்னை நம்பி நிற்கும் இரண்டு உயிர்களுக்காக தன்னைத்  தானே நிலை குலைய விடாமல் காத்துக் கொண்டார். தொடர் அதிர்ச்சியின் எல்லையிலிருந்து கட்டாயமாக தன்னை விடுவித்துக் கொண்டு தொழிலுக்கு மீண்டார்.

கையில் சல்லிக்காசு இல்லை.  செல்லக்கண்ணுவிடம் தினசரி வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று சவ்வு மிட்டாய் தொழிலைத் தொடங்கினார். வீட்டில் மிட்டாயை செய்து எடுத்துக் கொண்டு  சைக்கிளில் தினசரி காலை நேரம் எங்கள் ஊருக்கு வருவார். எல்லாம் விற்ற பிறகு இரவு ஊர் திரும்புவார். வட்டி போக மிஞ்சும் லாபத்தில்தான் அன்றைய தினம் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்,

விற்காமல் சவ்வு மிட்டாய் மீதமிருந்தால் கையிலுள்ள காசானது செல்லக்கண்ணுவின் வட்டிக்கே சரியாகப்போய் விடும். அன்றைய தினம் வயிறு காய வேண்டியதுதான்.

ஊரின் வட்டித்தொழிலில் செல்லக்கண்ணுதான் ஏக போகமாக இருந்தார். அடாவடிப்பேர்வழி. முறுக்கு மீசையுடன் தடித்து உருண்ட கைகால்களை கொண்ட அவரை எதிர்க்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை.


கொடுக்க வேண்டிய வட்டியை ஒரு நாள் நிலுவை வைத்தால் கூட செல்லக்கண்ணு கடன் வாங்கியவன் வீட்டின் முன் நின்று கொண்டு தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டியவாறே , “ இனிப்பு தடவுன மாதிரி பேசிகாசு வாங்கத்தெரியுதுல . வட்டி கொடுக்க மட்டும் ஒடம்பு வலிக்குதோல்லே ? “ எனத் தொடங்குவார்.

வேலை ஆகவில்லை என்றால் மிரட்டுவார் . கொஞ்ச நேரத்தில்  பச்சை பச்சையாக திட்டித் தீர்ப்பார். இவர் உதிர்க்கும் வசையின் உக்கிரத்தை தாங்கவியலாமல் வீதியில் நிற்கின்ற ஆணும் பெண்ணும் கூசியவாறே அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள் .  கடைசியில் கடன் வாங்கியவனின் வீட்டிலுள்ள பொருட்களை, வட்டியையும் முதலையும் கணக்கு பண்ணி செல்லக்கண்ணு எடுத்துக் கொண்டு போய் விடுவார்.

செல்லக்கண்ணுவின் இந்த அடாவடியினால் காய்ச்சல் , இருமல் என்று வந்தாலும் கூட ஒரு நாள் கூட ஓய்வு எடுக்க இயலாமல் உழைத்தாக வேண்டிய கட்டாயம் சுப்பைய்யாவிற்கு இருந்தது.

வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி . ஆறாம்பள்ளித்தெரு.

டேய் ...குட்டி லெப்ப  பந்த  அன்வருக்கு பாஸ் பண்ணுடா “

குட்டி லெப்பை தவற விட்ட பந்தை சுரேஷ் லாகவமாக தனது நெட்டைக்கால்களால் கொக்கி போட்டு வளைத்து எடுத்தான். சற்றும் தாமதிக்காமல் அதே வேகத்தில் பந்தை உதைத்தான்.

“ கோல்ல்ல் ... “ என எதிரணியினர் கத்த “ ஏண்டா தடிப்பயலே நான் மாடு மாதிரி கத்துறேன் நீ என்னடான்னா பந்த கவுட்டுக்குள்ள ஓட விட்டுட்டியே “ என வெறியாக கத்திய முத்து, குட்டி லெப்பையின் தலையில் குட்டினான். வலி தாங்க இயலாத குட்டி லெப்பை முத்துவின் செவுளில் அறைய முத்து திரும்ப குட்டி லெப்பையின் வயிற்றில் ஓங்கிக் குத்தினான்.


“ அடியும்மாவ் “ என்று கத்திய குட்டி லெப்பை வயிற்றை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் சுருண்டான்.

மொத்த கால்பந்து அணியும் விக்கித்து நிற்க முத்துவின் முகத்தில் கிறுக்கு கலந்த சிரிப்பு மெல்ல படர்ந்தது. அவனின் நிலைக்கு இன்னும் நான்கைந்து பேரின் வயிற்றில் குத்துவதற்கான மன நிலையில் நின்றுக்கொண்டிருந்தான். அணியில் உள்ள அனைவரும் அவன் முகத்தை பார்க்கும் துணிவு இல்லாமல் தலையை தொங்கப்போட்டனர்.

“ டேய் வெளாடுனது போதுண்டா “ என முனகிக்கொண்டே கோல் போஸ்டுக்காக நட்டிருந்த தன்னுடைய ரப்பர் செருப்பை ஈஸா  காலில் போட்டுக் கொண்டான்.

அனைவரும் குட்டி லெப்பையை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். “ டேய் தள்ளுங்கடா அவனே வயித்துல அடிபட்டு கெடக்குறான் அங்க என்னத்தடா வேடிக்க பாக்குறிய “ என சொல்லிக் கொண்டே மணி நாடார் கடையில் வாங்கிய உப்பு சோடாவை குட்டி லெப்பையின் வாயில் ஊற்றினான் அன்வர் .

“ மச்சான் எழும்பி நின்னு முன்னக்க குனிஞ்சி  ரெண்டு பெரு வெரலால கால் பாதத்த தொடுடா . வயத்து வலி சரியா போயுடும் “ என்றான் அகமது .

வட்டமிட்டிருந்த நண்பர்கள் குழுவிலிருந்து விலகிசென்ற மூர்த்தி, ஹாஜி காக்கா வீட்டின் பக்கம் சென்றான். அவர் வீட்டு மடையின் வெளிப்புறக்குழாய் குட்டி கதலி வாழைப்பழத்தை போல நீட்டிக்கொண்டிருந்தது. அதில் வாயை வைத்து நன்கு மூச்செடுத்து “ஊய்ய்ய் “ என ஊளையிட்டான் .

இதற்கெனவே காத்திருந்தது போல முன் வாசல் கதவை படீரென திறந்து “ஏண்டா  எருமப்பயலே “ என ஒற்றை செருப்பை எடுத்துக் கொண்டு பனியன் போடாத மேனியுடன் பாய்ந்தார் ஹாஜி காக்கா .  வெள்ளை வெளேர் என்று

இருந்த அவரது உடம்பில் குட்டி பப்பாளிப்பழத்தைப்போல இருந்த தொங்கு சதைகள் அவரது திடீர் ஓட்டத்தின் வேகத்தில் தாறுமாறாக ஆடின. 

மூர்த்தி எதிர்த்த சந்துக்குள் ஓடினான். பின் தொடர இயலாத கடுப்பில் ஒற்றை  செருப்பை எடுத்து அவன் மேல் ஹாஜி காக்கா வீச அது குறி தப்பி பனங்கிழங்கு விற்கும் பாட்டியின் வட்ட பெட்டியினுள் போய் விழுந்தது.

கிழவிக்கும் ஹாஜி காக்காவிற்கும் புதியதாக மூண்ட சண்டையை தெருக்காரர்கள் தலையிட்டு விலக்க வேண்டியதாயிற்று.

கால்பந்து , கபடி , புளியங்காய் பறிப்பு , நாயடித்தல் , காக்கை முட்டை எடுத்தல் என வாலிப வயது கடமைகளில் ஈஸா , அகமது , மூர்த்தி , குட்டிலெப்பை , அன்வர் , சுரேஷ் , முத்து என்ற பதினைந்து வயது  இளசுகள் கூட்டம் தவறாமல் ஒன்று சேர்ந்து விடுவர்.

இந்தக் குழுவிற்கு முத்துதான் தலைவன் . கறுத்து உயர்ந்த வலிய உருவம் , வட்டத் தொட்டி போல இருக்கும் கண்கள் , விரிந்த தாடை எலும்புடன் கேடய முகம் என காண்போரை மிரட்டும் அவனின் இந்த உடல் அமைப்பு தானாகவே தலைமைப்பதவியை அவனுக்கு பெற்றுத்தந்தது.

ஒரு வீட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த குட்டி லெப்பை தன் வயிற்றை நீவி விட்டுக் கொண்டிருந்தான். வலி பாதியாக குறைந்திருந்தது.

“ட்ர் ட்ர் ட்ர்...
சவ் ரவ் முட்டேய்.. “ 

கொட்டாப் புளி போல இருந்த மர திருகையை சுழற்றியவாறு மறு கையில் ஆள் உயர மூங்கில் கழி ஒன்றை சுமந்து கொண்டு வந்தார் சுப்பைய்யா .

வெளுத்த டவலை தலையில் சுற்றிக் கொண்டு வந்த  சுப்பைய்யாவிற்கு ஒன்றாம் எண்ணை லேசாக வளைத்தது போல இளங்கூன் முதுகு . கறுப்பான ஒல்லிக்குச்சி போன்ற அவரது உடலும் மூங்கில் கழிக்கு துணை போல வளைந்து வளைந்து  நடந்து வந்தது.

அவருடைய மரத்திருகையின் ட்ர் ட்ர் ட்ர் ஓசையில் அடித்தவன் , அடி வாங்கியவன் என அனைத்து பேதங்களும் உருகி மொத்த கால்பந்து குழுவும் சுப்பைய்யாவை சுற்றி வளைத்துக் கொண்டது.

இனிப்பின் பிசுபிசுப்பால் கறுத்து பள பளப்பாக மின்னிய மூங்கில் கம்பின் உச்சியில் மொத்த சவ்வு மிட்டாயையும் சுற்றி அதன் மேல் பாலித்தீன் உறை போட்டு மூடியிருந்தது.

மிட்டாய் கேட்பவர்களுக்கு அதன் அடியில் இருந்து மாட்டின் ஒற்றைக் காம்பை மெல்ல நீவிக்கொடுப்பது போல பக்குவமாக இழுத்து பிய்த்தெடுத்து கொடுப்பார் சுப்பைய்யா. பருத்த தலையும் இழுத்த வாலுமாக இருக்கும் சவ்வு மிட்டாய் திரட்டை தொலைவில் இருந்து பார்க்கும்போது குட்டைச் சடை பெண் போலவே இருக்கும்.

ஐந்து , பத்து , காலணா என சில்லறைக்கு ஏற்ப சுப்பைய்யாவின் சவ்வு மிட்டாயானது மயில் , மான் , கைக் கடிகாரம் என உருப்பெற்று கால்பந்து அணியினரின் கைகளிலும் வாயிலுமாக இழுபட்டுக் கொண்டிருந்தது.

மயில் வாங்கிய கையோடு காசு கொடுக்காமல் மெல்ல நழுவினான் மூர்த்தி. அத்தனை பரபரப்பிற்கும் இடையில் இதைக்கவனித்த சுப்பைய்யா “


ஏல களவாணிப்பயலே! காசத் தராம எங்கல ஒளிக்குற “ என பழுப்பேறிய ஓட்டைப்பல்லைக்காட்டி அவனைப் பார்த்துக் கத்தினார்.

“ கையில காசு கொண்டு வர்ல அண்ணாச்சி. எங்க அம்மாட்ட போய் வாங்கிட்டு வாரேன் “

“அதச் சொல்லிட்டு போவேண்டியதுதானே . ஏம்புல திருடனப் போல போறே. சரி சரி வெரசாப் போய் காச வாங்கிட்டு வாலே “

எல்லாரும் வாங்கி முடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முத்து,  சுப்பையாவின் அருகில் போய் கையை நீட்டினான்.

“ எவ்வளவுக்கு தம்பி ? “

அடி வயிற்றிலிருந்த கிளப்பிய கேலி சிரிப்புடன் “ ஓசிக்குத்தான் “

“ கடக்காரன் எனக்கு சும்மாவா சீனியும் , எஸன்சும் தாரான். ? “

“ அப்போ தர மாட்டியாலே ? “ என்றவாறே தன் அழுக்கு கையை அந்த மிட்டாய் உருண்டையில் தேய்க்க போனான் முத்து .

அவனது கையை தட்டி விட்ட சுப்பைய்யா  “ தம்பி  மரியாதையா பேசு . என் வயச நாலால வகுத்தா கூட ஒன் வயசு வராதுப்பா   “

“போடா “ என்று கத்தியபடியே அவரின்  தலைப்பாகையை பிடித்து வலுவுடன் சுண்டி இழுத்தான் முத்து . அவனின் முரட்டு இழுப்பில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல் குவியலில் பொக்கை வாயைப்பிளந்தவாறே மிட்டாய் கம்புடன் போய் விழுந்து உருண்டார் சுப்பைய்யா. 

மிட்டாய் உருண்டையை சுற்றியிருந்த பாலித்தீன் உறையை காற்று அடித்துக் கொண்டு போக  ஆற்று மணல் அப்படியே படலம் போல மிட்டாய் முழுக்க அப்பிக் கொண்டது.

வியாபாரத்திற்கு புறப்படும் அவசரத்தில் எதுவும் சாப்பிடாமல் வந்திருந்த சுப்பைய்யாவிற்கு  தலை கிறு கிறுவென சுற்றியது. தலை சுற்றல் குறைந்து சற்று நிதானித்தபோது மண் அப்பிய மிட்டாய் உருண்டைதான் அவர் கண்ணில்பட்டது .

 மண்ணாகிப்போன முதலும்  கட்ட முடியாத வட்டியும்  மானத்தை சந்திக்கு இழுக்கும் செல்லக்கண்ணுவின்  சுடு சொற்களும் உடல் நலமில்லாத மனைவி மகனின் முகங்களும் மிட்டாய் உருண்டையின் மேல் மாறி மாறி தோன்ற சுப்பைய்யாவிற்கு நெஞ்சு அடைத்தது .   நாதியற்ற உணர்வில் அவரின் கண்களில் நீர் பெருகியது .

பசியின் வேகமும்  ஆதரவற்ற உணர்வும் அவமானமும் சரிவிகித கலவையில் வயிற்றிலிருந்து கிளம்பி நெட்டுக்குத்தாக நெஞ்சைக்கடந்து அவரின் தலையில் சுடு நீர் போல நிரம்பியது.

மிட்டாய் கம்பும் தலைப்பாகையும் மண்ணின் மீது கிடக்க மொட்டைத்தலையோடு வெறி பிடித்த வேகத்தில் தரையிலிருந்து எழுந்து நின்றார் சுப்பைய்யா .  அவரின் கைகளும் கால்களும் நடுங்கின. கை நிறைய ஆற்று மணலை அள்ளியெடுத்து மீண்டும் தரையில் எறிந்தார்.  “ ஏல கேட்டுக்கலே, அடுத்த வாரத்துக்குள்ள ஓன் வாயில மண் விழுதா இல்லியான்னு பாருல “

 “ போடா கெழட்டுப்பயலே “ என்று அலட்சியமாக சொல்லியவாறே அவரின் திசை நோக்கி காறி உமிழ்ந்து விட்டு நிதானமாக நடந்து போனான் முத்து . அவன் போன திசையையே கண்கள் பளபளக்க பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பைய்யா

````````````````````````````````````````````````````````````````````````````````````````````

கடிகார ரிப்பேர் கடை முன்பு நின்ற  வேப்பமரத்தடியில் முந்தின தினம் பேசியபடியே காலை ஏழரை மணிக்கு முதலில் வந்து சேர்ந்தான் முத்து . கொஞ்ச நேரத்தில் சுரேஷும் வந்து விட்டான் .
 “டேய் சுரேசு , மத்தவனல்லாம் எங்கடா “

“ வந்துக்கிட்டு இருக்கிறானுவோ மச்சான் “

ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து பேரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் நான்கு சைக்கிள்கள் இருந்தன. முருகன் சைக்கிள் கடையில் அரை நாள் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இஸ்மாயில் காக்கா கடையில் ஏழு உளுந்து வடை ஏழு பருப்பு வடை என தாளில் பொதிந்து வாங்கி வந்த அகமது,  அந்த பொட்டலத்தை  முத்துவின் கையில் கொடுத்தான்.

“  குளிச்ச பின்னாடி நல்ல பசிக்கும் “ என சொல்லியவாறே வடை பொதியை சைக்கிளின் ஹேண்டில் பாரில் தொங்கிய பையினுள் போட்டான் முத்து. 

  “ ஆளுக்கொரு சைக்கிள்ல ஏறுங்கடா. ஓராள் மட்டும் டபுள்ஸ் ஏறிக்க நான் முன்னால போறன் “ என்று சொல்லியவாறே முத்து சைக்கிளை பேய் மாதிரி மிதிக்கத் தொடங்கினான் .

தாயிம்பள்ளி , ஓடக்கரை தாண்டி வீரபாண்டியன்பட்டினம் எல்லையில்  கிட்டதட்ட மூன்றரை கிலோ மீற்றர் பயணத்திற்குப்பிறகு  காட்டு மொகுதூம் பள்ளி வந்து சேர்ந்தது. திருச்செந்தூர் செல்லும் தார் சாலையிலிருந்து வலது பக்கம் ஒற்றையடி பாதை விலகி சென்றது.

பாதையின் முடிவில் குளத்தைக்கண்டதும்  சைக்கிள்களை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே குளத்தோரம் உள்ள மணல் மேட்டில் சாய்த்தனர் .

ஒரு வாரமாக பெய்த மழையில் குளம் நிரம்பி தாம்பாளத்தில் ஆறப்போட்டிருந்த பச்சை ஹல்வா போல பார்ப்போரை ஈர்த்தது. பச்சை ,
மண் நிறங்களில் தவளைகள் குளத்திற்கும் கரைக்கும் இடையே தம் வசதி போல தாவிக் கொண்டிருந்தன.

காட்டு மொகுதூம் பள்ளியில் வருடத்திற்கு ஒரு தடவை பெரும் ஏற்பாடுகளுடன் நடக்கும் கந்தூரி விழாவிற்கு ஊரிலிருந்து சாரி சாரியாக ஆண்களும் பெண்களும் நடந்தே வருவார்கள் . மற்ற நாட்களில் உடல் நலன் தேறுவதற்கு நேர்ந்து கொண்டு தங்குபவர்களைத் தவிர வேறு யாரும் பெரிதாக வருவதில்லை. அதனால் அங்கு எப்பொழுதும் அமைதி நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் . தர்காவை ஒட்டியவாறே நிற்கும் வேப்பமரத்தில், அதன் நிரந்தர வாசிகளாகிய குருவிகளும் காகங்களும் எழுப்பும் ஓசையில்  நிறைந்த அமைதியின் மேற்பரப்பில் சிறு சலனம் அலைந்து கொண்டே இருக்கும்.

“தொம்மடீர் “ என ஓசையுடன் குளத்திலிருந்து நீர் தெறித்து  தூண்டில் கொக்கி போல வளைந்து மீண்டும் குளத்திற்குள்ளேயே விழுந்தது. முத்துவின் கண வேக பாய்ச்சலில் குளத்தின் அமைதியானது பேரமளியாய் மாறியது.

அவனைத் தொடர்ந்து மள மள வென சட்டையையும் லுங்கியையும் பனியனையும் கழற்றி எறிந்த மற்ற நண்பர்கள் அரை டிரவுசருடன் குளத்திற்குள் பாய்ந்தனர்.

மூர்த்தி மட்டும் கரையிலேயே நின்று கொண்டிருந்தான்.

“ ஏண்டா , தடி மாடு மாதிரி நிக்கிறே. குதியேண்டா “ என முத்து கத்தினான்.

 “குளிரும் மச்சான் “

“ நல்லதாப்போச்சி . நீ தண்ணிக்குள்ள எறங்காதே ஒன் அழுக்குலாம் எறங்கி தண்ணி நாறீடும் “

இதைக்கேட்டு அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. தொண்டைக்கு கீழே பலூன் மாதிரி புடைக்க வைத்துக் கொண்டிருந்த தவளைகளை வேடிக்கை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.
அவன் அறியாத வண்ணம் குளத்திலிருந்து மெல்ல எழும்பி பின்பக்கமாக வந்த முத்து,  தண்ணீருக்குள் மூர்த்தியை ஒரே தள்ளாக தள்ளினான்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன மூர்த்தியின் வாய்க்குள் தண்ணீர் போகவே அவனுக்கு மூச்சு திணறியது . பின்னர் ஒருவாறாக சமாளித்துக் கொண்டு முத்துவைப்  பார்த்து அசிங்க அசிங்கமாக திட்டி தீர்த்தான்.

திட்டும் படலம் நடந்து கொண்டிருக்கவே  நீந்திக் கொண்டிருந்த  ஈசாவின் காலைப்பிடித்து குளத்தின் அடிப்பக்கத்தை நோக்கி முத்து இழுக்க அவன் இவனை அடிக்க என குளத்து நீரின் திவலைகளும் ஆரவாரமும் நாலாபுறமும் கலந்து தெறித்துக் கொண்டிருந்தது.

ரொம்ப நேரம் குளித்ததினால் வெளுத்து விறைத்த தனது கை விரல்களை பார்த்த அகமது , “ டேய் ரொம்பக்குளிச்சா உடம்புல ரெத்தம் செத்துருண்டா  வீட்ல தேடுவாங்கடா . வாங்கடா போவோம்  “ என குரல் கொடுக்க ஒன்றன் பின் ஒன்றாய் நண்பர்கள் கரையேறினர்.

முத்துவின் சைக்கிள் ஹேண்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்த வடை பொதியை காக்கை கூட்டம் ஆளுக்கொன்றாய் பிய்த்து எடுத்து சிதறடித்துக் கொண்டிருந்தன.

காக்கை கூட்டத்தை விரட்டத்தொடங்கிய சுரேஷ் “ டேய் முத்த எங்கடா “ என மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

 “ நம்மள தண்ணிக்குள்ள தள்றதுக்காக எங்கயாவது புதருக்குள்ள ஒளிச்சிக் கெடப்பான் இல்லன்னா நம்மள பைத்தியக்காரனாக ஆக்குறதுக்காக தண்ணிக்குள்ள மூச்சு பிடிச்சிக்கிட்டு கெடப்பாண்டா “ என மற்றவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

எல்லோரும் தலை துவட்டி லுங்கி சட்டைகளை அணிய கால் மணி நேரமாகி விட்டது. முத்து வரவில்லை என்றதும் பதட்டம் மெல்ல பரவியது .

“ தண்ணிக்குள்ள மூச்சு புடிச்சுக்கிட்டு இருந்தாலும் மூணு நிமிஷத்துக்கு மேல இருக்க முடியாதேடா “ என குட்டி லெப்பை சொன்னதும் “ டேய் சுரேஷ் நீ நல்ல நீச்சலடிப்பால்லே . என்னாச்சுனு உள்ள போய் பாருடா “ என அனைவரும் சொல்ல “ யம்மாடி நா மாட்டேன்பா “ என அவன் ரோட்டைப்பார்த்து ஓடினான்.

பச்சை ஹல்வா தட்டு போல செல்லமாக காட்சியளித்த குளமானது அனைவரின் கண்களுக்கும் இப்போது இருண்ட பெரும் பள்ளம் போல தெரிந்தது.

குளத்தைப் பார்க்க பிடிக்காமல் “ முத்தேய் முத்தேய்  “ என கத்தியவாறே புதர் , மரம் என ஆளுக்கொரு திசைக்கு சென்று தேடினர். அவர்களுடன் சேர்ந்து அந்த விளிகளும் வெறுமையின் கனத்துடன் திரும்பி வந்தன.

முத்துவின் உடைகள் குளத்தங்கரையின் மண் மேட்டில் பந்து போல சுருட்டியவாறே இருக்க நடந்து முடிந்த விபரீதம்  உடனே புரிந்து விட்டது. அனைவரின் அடிவயிறும் கலக்கியது.

பயத்தின் உருள் பிரட்டலில் சுரேஷ் மயங்கி விழ ஈசா தன்னையறியாமல் உளறத் தொடங்கினான். செய்வதறியாது திகைத்த நண்பர்கள் சுரேஷையும் ஈசாவையும் அங்கேயே விட்டு  விட்டு சைக்கிள்களில் ஏறி ஊர் நோக்கி பறந்தனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் பள்ளித்தெருவின் முனையில் வேன் வந்து நின்றது. ஆறு பேர் தாங்கலாக முத்துவின் உடல் இறக்கப்பட்டது.

வயிறு உப்பியிருக்க வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் மண் கலந்த நீர் மெல்லிய கோடு போல வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் திறந்தபடியே இருக்க ஒரு கண்ணில் ரத்தக்காயமாக இருந்தது. மீன் கடித்திருக்கும் போலும். கைகளும் கால்களும் வெவ்வேறு திசையில் கோணியிருந்தன.

முத்துவிற்கு வலிப்பு நோய் இருந்திருக்கின்றது. குளத்தின் ஆழத்தில் நீந்தும்போது வலிப்பு வந்து  தண்ணீரும் மண்ணும் வாய்க்குள்ளே நிறைய சென்றதால் மூச்சு திணறி இறப்பு நேர்ந்திருப்பதாக பின்னர் வந்த போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொன்னது .

இறுதிச்சடங்குகளுக்காக அன்று மாலை முத்துவின் வீட்டின் முன் ஆட்கள் திரளாக நின்றிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முத்துவின் நண்பர்களும் நின்றிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியே மிட்டாய் கம்பை தூக்கிச் சென்ற சுப்பைய்யா முத்துவின் நண்பர்களை கண்டார். தினமும் அவரைக்கண்டதும் ஓடி வரும் பையன்களின் கூட்டம் இன்று முகங்களில்

சோகத்தை அப்பியபடி மௌனமாக நிற்பதைப்பார்த்ததும் அவருக்கு குழப்பமாக இருந்தது. அதை தீர்ப்பது போல மெல்ல சுப்பைய்யாவை நோக்கி நடந்து வந்த அகமது அவரின் காதுகளில் நடந்தவற்றைப் பற்றி கிசுகிசுத்தான்.

தான் உதிர்த்த ஒரு சொல்லின் விளைவாக முடிந்து போன முத்துவின் அகால இறப்பு  செய்தியை  தாங்க இயலாத சுப்பைய்யா ஒரு வீட்டின்படியில் தளர்ந்து போய் அமர்ந்தார். மிட்டாய் உருண்டை மணல் குவியலில் மீண்டும் விழுந்ததைப்போல உணர்ந்தார்.

அன்றைய தினமும் ஒரு வெள்ளிக்கிழமையாகவே இருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
















No comments:

Post a Comment