Friday, 15 November 2019

நடு இரவு விருந்தாளிகளும் ஐங்கரத்தோனும்











இரண்டடி நீளமுள்ள  இரும்பு குழாயை மூன்றாவது கை போல சுழற்றிக் கொண்டு வந்தான் தமீம்.


வழமை போல சுபஹ் தொழுகைக்கு பின்னரான டீக்குடிப்பிற்காக நானும் நண்பன் தமீமும் தினமும் சந்தித்துக் கொள்வதுண்டு. அவன் ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்றான். நான் சொந்த தொழில் புரிந்து வருகின்றேன். எங்கள் இருவருக்குமான நட்பின் வருடங்கள் இருபத்தைந்து ஆகும்.


சென்னை வியாசர்பாடியில் ஒரு முட்டுச் சந்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் தங்கியிருக்கின்றேன். அதற்கு மூத்திரச்சந்து சாராயச்சந்து பீச்சந்து என ஒன்றுக்கும் மேற்பட்ட திருப்பெயர்கள். வட சென்னையின் இருள் மூலைகளில் ஒன்று. நான் தங்கும்  அறைக்கு மேலுள்ள மாடியில் ஐ.டி. இளைஞர்கள் தங்கியுள்ளனர். 


இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கு நடந்த திருட்டைப்பற்றி தமீமிடம் சொல்லியிருந்தேன். தொலைக்காட்சி பெட்டி, கைக்கடிகாரம், செல்பேசிகள், பணம் உள்ளிட்ட உள்ளிட்டவை களவாடப்பட்டிருந்தன. மொத்த மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்கள் .



குடிவந்த புதிதில் எனது அறையிருக்கும் கட்டிடத்தில் நான் மட்டுமே  தனியாக சில மாதங்கள் தங்கியிருக்கின்றேன். அப்போதெல்லாம் வராத அச்சம் கூரை மேல் உலாவும் கனவான்களின் வருகைக்கு பிறகு வரத் தொடங்கியிருப்பதை பற்றியும் அவர்களின் தொடர் எத்தனங்களைப் பற்றியும் சொன்னேன்.


இரண்டு நண்பர்கள் சொன்ன ஆலோசனைகளின் பேரில் சவுக்கார் பேட்டைக்கு சென்று  பேனா கத்தியும் நெடுந்தொலைவு வீச்சுள்ள டார்ச் லைட்டொன்றும் வாங்கி விட்டேன். மொத்த செலவு 270/=.


இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி. அதுதான் இரும்புத் தடி. ஆயுதமில்லாத ஆயுதம்.
ஹார்ட்வேர் கடையில் போய் ஜி.ஐ. பைப் இருக்கா? எனக் கேட்டேன். இருக்கே என்ற கடை உரிமையாளர் அதன் நீள விட்டங்களை பற்றி என்னிடம் கேட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. குழாய் வயர் சமாச்சாரங்களுக்கும் எனக்கும் எப்போதும் துளி தொடர்பும் இருந்ததில்லை. இத்தனைக்கும் அண்மையில்தான் வீட்டையும் கட்டி முடித்திருந்தேன்.

மூக்குத்தண்டின்  மேல் வழிந்து  நின்ற கண்ணாடியின் வழியாக அரைப்பார்வை பார்த்தவாறே  கொழா எதுக்கு பாய் என கூடுதலாக ஒரு கேள்வியைக் கேட்டார். பொய் சொல்லவும் மனமில்லை. உண்மை சொன்னால் குழாயை விற்க மாட்டாரே என்ற இரட்டை நிலையில் இரண்டுக்கும் இடைப்பட்ட பதிலாக கருதிக் கொண்டு இரண்டு கைகளையும் மேலும் கீழுமாக காட்டியவாறே, ஒரு சப்போர்டுக்கு…. என அரைப்பாதி குரலில் சொன்னேன்..அது கடைக்காரரின் காதைப் போய் சேர்ந்திருக்குமா ? என்ற சந்தேகத்தில் அவர் முகத்தையே பார்த்தேன். கடைக்காரரின் மனதிற்குள் ஏதோ உள் குருவியொன்று கூவியிருக்க வேண்டும்.  இப்போதைக்கு சின்ன சைஸ்தான் இருக்குது பாய். வேற ஸ்டாக்கில்லை என்றார். எப்போ வரும் என்ற கேள்விக்கு இப்போதைக்கு வராது பாய் என மென்மையாக தவிர்த்தார்.

அந்த பகுதியில் இதை விட்டால் வேறு ஹார்ட்வேர் கடைகள் கிட்டத்தில் இல்லை என்பதால் எனது பிரச்னையை தமீமிடம் சொன்னேன்.
எனது மன நெருக்கடியின் தீவிரத்தை புரிந்து கொண்ட தமீம் அவனது அலுவலகத்தில் மீந்திருந்த இந்த குழாயை எனக்காக கொண்டு வந்து விட்டான்.

இரவு படுக்க போகும்போது வலதும் இடதுமாக கத்தி தடி கைவிளக்கு என மேலதிகமாக மூன்று கரங்கள் இருக்கும் தெம்பில் கள்ளன் பயம் போய் நல்ல உறக்கம் வந்தது.

நான்கைந்து நாட்கள் நிம்மதியாக கழிந்தது. திடீரென்று ஓரிரவில் பாலித்தீன் பேக்கிற்குள் ஏற்பட்ட சலசலப்பில் விழிப்பு தட்டியது. தூக்கத்தில் புதைந்திருந்த மூளை சுதாரித்தது. \மேல் மாடிக்கு கள்ளர்கள் வந்த நேரமும் இரண்டே காலிலிருந்து இரண்டே முக்கால் மணிக்குள் இருக்கும் என  மாடியிலிருந்த ஊறுகாய் பரணி சாடையுள்ள கனத்த பையன் களவு போன அன்று காலை சொல்லியிருந்தது உடனடியாக நினைவிற்கு வந்தது.

டார்ச்சை எடுத்து அடித்தேன். நீண்ட வெண்\தூண் போல ஒளிக்கற்றை பாய்ந்தது.  துணி ஸ்டேண்டில் தொங்க விடப்பட்டிருந்த பாலித்தீன் பையின் கைப்பிடியில் வெளிச்ச வட்டம் விழுந்தது.  மெல்ல எலி எட்டிப்பார்த்தது. பாலித்தீன் பைக்குள் பேரீத்தம்பழமும் வேர்க்கடலையும் இருந்தது.  பிதுங்கிய கண்களுடன் நடுங்கும் சிற்றுடல். நான் படுக்கையிலிருந்து துள்ளி குதித்து எழும்ப எலி என்னை நோக்கி ஓடி வர டார்ச்சின் தலைப்பகுதி கழன்று கட்டிலின் மேல் விழுந்து விட்டது. திடுமென சூழ்ந்த இருளுடன் எலி பாய்ச்சல் பற்றிய பயமும் சேர்ந்து கொள்ள அறை லைட்டை போட்டேன். நான் பயந்த அதே இடைவெளியில் எலியும் நிச்சயமாக பயந்திருக்கும்தானே?


வாசல் கதவையும் இரும்பு கிராதியையும் விரிய திறந்து வைத்து விட்டு அறை முழுக்க தேடினேன். கேஸ் சிலிண்டரின் விளிம்பில் கறுப்பு நூலின் அசைவு தெரிந்தது. இப்போது என் கையில் தமீம் தந்த இரும்புத் தடி இருந்தது. சிலிண்டரை நகர்த்தினேன். எலி குதித்து ஜன்னல் பக்கம் போக முயற்சித்தது. அந்த வழியாகத்தான் அது உள்ளே வந்திருக்கின்றது.

கையிலுள்ள இரும்புத்தடியால் எலியின் கொழுத்த விலாவில் செல்லமாக ஒரு தட்டு தட்டியதில் புரண்டு விழுந்த எலி உடனே  நிமிர்ந்து சிறிய திகைப்பிற்குப் பின்னர்  திறந்திருந்த முன்வாசல் வழியாக தன் உடலை இஅழுத்துக் கொண்டு ஓடி விட்டது. ஓங்கி அடித்தால் அந்த அர்த்த ராத்திரியில் அதைப்போட்டு யார் கழுவுவது ? என்ற முன்னுணர்வில் எலியைக் கொல்ல முனையவில்லை. உம்மாடி…..  வாசல் வழியா ஓடிட்டதுனாலே இனிமே ஜன்னல் வழியா வராது என்ற நிம்மதியில் கதவுகளை தாளிட்டு விட்டு விளக்குகளை அணைத்து விட்டு படுத்தேன்.

எலிப்பதட்டம் மனதிற்குள் மெல்ல தணிந்து தூக்கம் சொட்டத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் ஜன்னல் பக்கம் கர கரவென ஒலி கிளம்பியது. ஜன்னலின் கண்ணாடி சட்டத்திற்கும் இரும்பு வலைக்குமான இடைவெளியை காகித உருண்டைகளால் அடைத்திருந்தேன். இரண்டு காகித உருண்டைகளுக்கு நடுவே தலை தட்டப்பட்ட ஆங்கில எழுத்தான M வடிவில் எலி உட்கார்ந்து நிதானமாக என்னைப் பார்த்து கொண்டிருந்தது. நான் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து அதை நோக்கி செல்வதை எந்த சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தது.

தடி தக்கடாவெல்லாம் எடுக்க நேரமில்லை. கைவிரல்களினால் கண்ணாடி சட்டத்தில் தட்டினேன். எலி இருளுக்குள் கரைந்து போனது.

ஒவ்வொரு இரவும் ஒரு மணியிலிருந்து மூன்றரை மணிக்குள் ஜன்னல் வழியாக எலியார் வரவும் நான் விரட்டுவதுமான விளையாட்டு தொடர்கின்றது.

ஒரு வழியாக யோசனை பண்ணி, படுக்கப் போகும்போது ஜன்னலின் கண்ணாடி சட்டத்தை சாத்தி விடுகின்றேன். எலியும் வருவதில்லை சேர்ந்தாற்போல  காற்றும் வருவதில்லை.
இரும்புக்குழாயினால் எலியைத் தாக்கிய செய்தியை தமீமிடம் இதுவரை சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக நள்ளிரவு ஊடுறுவலை தடுத்தேன் என அவனிடம் சொல்லலாமா ?

No comments:

Post a Comment